அதெல்லாம் கெடக்கட்டும்னா.. ..நீங்க பேப்பர் வாங்கறேளா..இந்த Srilanka issue வுக்காக ஒரு பையன் உயிர மாச்சுண்டதாதகவல் வர்றதே.. நீங்க சித்த என்னன்னு கேட்டு எழுதப்படாதா..நன்னாஇருக்கு போங்கோ..
January 31, 2009
அனானியின் பின்னூட்டத்திற்கு சந்திப்பின் கண்ணோட்டம்
அதெல்லாம் கெடக்கட்டும்னா.. ..நீங்க பேப்பர் வாங்கறேளா..இந்த Srilanka issue வுக்காக ஒரு பையன் உயிர மாச்சுண்டதாதகவல் வர்றதே.. நீங்க சித்த என்னன்னு கேட்டு எழுதப்படாதா..நன்னாஇருக்கு போங்கோ..
January 22, 2009
எமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள்
வ.உ.சி. நூலகம் சார்பில் வெளியான எமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள் எஸ். சங்கரன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 2004 இல் வெளிவந்தது. இப்புத்தகம் குறித்த அறிமுகத்தையும் - எனது விமர்சனத்தையும் இங்கு பகிர்ந்த கொள்கிறேன்.
காதல் கோமாளிகள் என்ற குறுநாவலின் மூலம் ஜோலா பிரஞ்சு தேசத்தின் உயர் நடுத்தர வர்க்கத்தின் போலியான வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறார். ஆக்டோவ் மூரட் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து புனையப்பட்ட இந்நாவலில் பல ஆண் - பெண் கதாபாத்திரங்கள் வந்துச் செல்கின்றன.
இவர்கள் அனைவரும் சமூகத்தில் தங்களை உயர்ந்த இடத்தில் உள்ளவர்களாக கருதிக் கொண்டவர்கள் என்பதுதான் வேடிக்கையானது. ஆக்டோவ் மூரட் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய மாளிகையைச் சுற்றிச் சுற்றியே கதை முழுவதும் நகர்கிறது. இந்த இடத்தை ஆக்டோவ் மூரட்டிற்கு - கம்பார்டன் அறிமுகப்படுத்தும் போது, "ரொம்ப வசதியான இடம், பெரிய மனிதர்கள் மட்டுமே தங்கும் இடம்" என்று கூறுவதோடு பெண் சம்பந்தப்பட்ட சமாச்சாரமே இங்கு கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார். அப்படி எதுவும் இங்கே நடக்கக்கூடாது என்று கூறுவதோடு, பிரான்சில் வெளியில் எல்லாம் கிடைக்கக்கூடியதே என்பதையம் அவர் சொல்லத் தவறவில்லை.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல் தளத்தில் தங்கியிருக்கும் மூரட் பெண்கள் விசயத்தில் அலை பாயும் மனதைக் கொண்டவர். அங்கே உண்மையான காதலர்களை காண்பது அரிதிலும் அரிதுதான். காதலையும், காதலர்களையும் தீர்மானிப்பது பணமாக இருந்தது. பணத்திற்காகவும் - அதிகமான வரதட்சணைக்காகவும் காதலை இழந்தவர்களை காண முடியும். அதில் ஒருவர்தான் மூரட்டின் நன்பர் கம்பார்டன். காஸ்பரின் என்ற பெண்ணை காதலித்தாலும் அவரை கைவிட்டு 30 ஆயிரம் பிராங்க் வரதட்சணைக்காக ரோசை கைப்பிடித்தவர்.
வரதட்சனை என்பது ஏதோ தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டும்தான் இருக்கிறது என்பதை பொய்யாக்கியது எமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள் நாவல். அநேகமாக உலகம் முழுவதுமே இப்படிப்பட்ட பல கட்டங்களை தாண்டித்தான் வரவேண்டியுள்ளது போலும், ஆம் வரதட்சணை என்பது கூட முதலாளித்துவம் பெற்றெடுத்த அம்சம்தானே!
அடுத்து இந்நாவலில் முக்கிய இடம் பெறுவது ஜாசரண்ட் குடும்பம், ஜாசரண்ட்டுக்கு இரண்டு பெண்கள் முதல்மகள் ஹால்டென்ஸ், இரண்டாவது மகள் பெர்த் பருவமடைந்த இந்த இரண்டு பேரையும் பத்திரமாக நல்லவொரு இடத்தில் கரை சேர்க்க வேண்டும் என்ற கவலை தாய் ஜாசரண்ட்டுக்கு. அவர்கள் குடும்பத்தில் வாட்டும் வறுமை ஒருபுறம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது மகள்களை பெரிய இடத்து வாலிபர்களிடத்தில் எப்படியெல்லாம் பேசி அவர்களை கைக்குள் கொண்டு வரவேண்டும் என்பதை தாயே தினந்தோறும் டியூசன் எடுக்காத குறையாக அர்ச்சித்துக் கொண்டேயிருப்பாள். இதில் ஒவ்வொருவரிடமும் ஒரு அனுபவத்தை கற்றுக்கொள்ளும் மகள்களின் செயல் பரிதாபத்தை வரழைப்பதாக இருந்தாலும் அக்கால சமூகத்தில் நிலவிய குடும்ப சூழ்நிலையை கண்முன்னே கொண்டு வருகிறது. இவர்கள் குறி வைக்கும் ஆண்கள் ஒவ்வொரும் குறி தவறிக் கொண்டே வருவார்கள் இதனால் பல நேரம் தாய் ஜாசரண்ட் மணம் வெறுத்துப் போய் மகளின் கையாகாலத தனத்தை திட்டித் தீர்ப்பாள். இறுதியில் இளைய மகள் பெர்த் அகஸ்ட்டியை கைப்பிடிப்பாள். இருப்பினும் இவர்களது மனவாழ்க்கையில் திருப்திகரமாக அமையவில்லை. பெர்த்தின் ஆடம்பரமான செலவுகள் அகஸ்டியை வாட்டியெடுப்பதும், அவளது செயல்களால் அவன் நிம்மதியிழப்பதும்... அவனது ஆண்மையை அவள் சந்தேகப்படுவதும் - சண்டையும் - சர்ச்சையுமாகவே இருக்கும்.
இந்நிலையில் ஆக்டோவ் மூரட் காத்திருந்த கிளிபோல அவளை கொத்திக் கொள்வதும்... அவனுடனான கள்ளக்காதல் வெளிச்சத்திற்கு வருவதால் அவனது கணவன் கொலை வெறியோடு அலைவதும்... இதனால் மனம் உடைந்து நொறுங்குகிறாள் பெர்த் அவள் மட்டுமல்ல. அவளது அம்மா ஜாசரண்ட்டும்கூடத்தான். பின்னர் பாதிரியாரிடம் சென்று உண்மைகளை கூறி பாவ மன்னிப்பு பெறுகிறாள் பெர்த்...
அந்த உயிர் குலக் குடியிருப்பில் இருந்த மேரியின் வாழ்க்கையும் ஆக்டோவ் மூரட்டிடம் சரணாகதியானது. மேரிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. இருந்தாலும் ஆக்டோவின் மீது அளவு கடந்த அன்பை பொழிந்தாள் மேரி. மேரிக்கும் அவரது கணவருக்கும் எட்டாம் பொருத்தமே நிலவியது (தினந்தோறும் சண்டைகள் நடந்துக் கொண்டேயிருக்கும்) இது கண்டு ஆக்டோவ் இரங்கினாலும்... மேரியை தன் வசப்படுத்திக் கொண்டான். மேரியும் ஆக்டோவுக்காக உண்மையான அன்பை செலுத்தினாள்.
இதேபோல் அந்த உயர்குல குடியிருப்பில் வேலை பார்த்து வந்த வேலைக்கார பெண்மணிகளின் லீலைகளும்... அங்கு வந்த உயர்குலச் சீமான்களின் கொட்டமும்... சகிக்க முடியாதது. இருந்தால் என்ன அந்த மாளிகையின் உள் அழகை யார் பார்க்கப் போகிறார்கள்? வெளியழகுத்தான் அதற்கு பெருமை சேர்த்துக் கொடுக்கிதே! அப்புறம் என்ன?
இருந்தாலும் ஆக்டோவ் வாலரிக்கும், ஜுசருக்கும் வலை வீசினான். ஆனால் இறுதி வரை வாலரி மாட்டவேயில்லை. ஜுசரோ ஆக்டோவிற்கு இடம் கொடுத்தாள். உறவு கொள்வதைத் தவிர வேறு எதை வேண்டுமானும் செய்துக் கொள் என்று தனக்கென ஒரு வரையறையை வைத்துக் கொண்டாள்.
இந்நிலையில் காஸ்பரினை காதலித்து கைவிட்ட கம்பார்டன் ஒரு கட்டத்தில் அவளோடு இணைந்து நிற்பதை ஆக்டோவ் காண்கிறான்.... இப்படித்தான் இந்த நாவல் முழுவதும் கதைகள் ஊடும் - பாவுமாக விரவிக் கிடக்கிறது. மொத்தத்தில் உயர் குலச் சீமான்களின் போலியான உணர்வற்ற - நடைபிணமான வாழ்க்கை எவ்வாறு அர்த்தமற்றதாகவும் - அவலம் நிறைந்ததாகவும் இருந்தது என்பதை கண்முன்னே கொண்டு வருகிறார் எமிலி ஜோலா...
ஓரிடத்தில் அந்த மாளிகையைப் பற்றி கூறும் போது... யார் வீடு கட்டினாலும் வெளியழகை மட்டும்தான் பார்த்துப் பார்த்து கட்டுகிறார்கள். ஆனால் உள்ளே அழகாக இருப்பது பற்றி கவலைப்டுவதில்லை என்று சொல்லிச் செல்வதே.... இந்த நாவலின் அச்சாணியாக சுழன்று சுழல்கிறது. ஒவ்வொருவரின் காதலும் எப்படி கோமாளித்தனமாக இருக்கிறது? அதில் அன்பும் உணர்ச்சியும் அற்ற காதலாக இருப்பதை நன்றாக படம் பிடித்துள்ளார் எமிலி ஜோலா.
கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பொதுவாக்கி விடுவீர்கள் என்று பேசும் முதலாளித்துவ கூலி தத்துவவாதிகளைப் பார்த்து மார்க்ஸ் இவ்வாறு கேட்பார்: முதலாளித்துவம் அதனை ஏற்கனவே செய்து விட்டது என்று, அதாவது அனைத்தையும் வியாபார பொருளாக பார்க்கும் உங்களுக்கு பெண்களையும் அவ்வாறே பார்க்கத் தோன்றுகிறது என்று முகத்தில் அறைவார். எப்படி இந்த முதலாளித்துவ சமூகம் உறவுகளை சிதைக்கிறது - பணம் படுத்தும் பாடு எப்படிப்பட்டது என்பதையும் இங்கே அன்பை தேடுபவர்களுக்கு கிடைப்பதோ ஏமாற்றமே! என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. வாழ்த்துக்கள் ஜோலா!
தமிழில் இந்நாவலை மொழிபெயர்த்த எஸ். சங்கரன் பாராட்டுக்குரியவர். இருந்தாலும் மொழி நடையில் இன்னும் தளர்ச்சியிருக்க வேண்டும். ஒரு இறுக்கத்தை ஏற்படுத்துவது போன்ற உணர்வு மேலிடுகிறது. 80 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தை நல்ல முறையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளது வ.உ.சி. நூலகம், ஜீ.1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை - 14, தொலைபேசி : 044-08476273, 9840444841 விலை ரூ. 30.
January 21, 2009
நயவஞ்சகமே, உன் பெயர்தான் முதலாளித்துவமா?
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் |
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், புதிய தகவல் தொழில்நுட்பப் பொருளா தாரத்தில் இதுநாள்வரை வெளியில் தெரி யாது நடைபெற்றுவந்த ஊழல்களில் மாபெரும் கொள்ளையாகும். நிறுவனத் தின் கணக்குகள் பல ஆண்டுக் காலம் எவ்விதமான ஆய்வுக்கும் உட்படுத்தப் படாமல் மிகைப்படுத்தப்பட்டு காட்டப் பட்டிருப்பது நம்பமுடியாததாகும். இதன் பிரதானமான உரிமையாளர், நிறுவனத் தின் வருவாய் மற்றும் லாபம், கணக்குப் புத்தகங்களில் மிகப்பெரிய அளவில் மிகைப்படுத்திக் காட்டப்பட்டு வந்திருக் கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதானது, இந்நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் கொள்ளை நடந் திருப்பதை மூடி மறைக்கும் விதத் திலேயே இருந்திருக்கிறது. தமிழில்: ச. வீரமணி |
January 20, 2009
மூட நம்பிக்கைக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும்: குஷ்பு
தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம்
Saturday, 17 January, 2009 12:58 PM
.
விழுப்புரம், ஜன.17: விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிப்புதுப் பாட்டு கிராமத்தில் நேற்று இரவு தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ளது பள்ளிப்புதுப் பட்டு கிராமம். இந்த கிராமத்தில் பழங்காலத்தில் காலரா நோய் பரவியதாகவும், அப்போது சிவன் தவளை உருவும், அம்மன் சிறுமி உருவும் எடுத்து அவர்களுக்கு திருமணம் நடத்தினால் காலரா நோய் குணமாகும் என்றும் மேலும் பரவாமல் இருக்கும் என்றும் கூறியதைத் தொடர்ந்து தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதாக கூறப்படுகிறது.
January 08, 2009
காவியம் படைத்த அரசியல் கவிஞன்!
மில்டன் அரசவைக் கவிஞர் அல்ல; அரசியல் கவிஞர்! ஆங்கிலக் கவிகளில் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றிருப்பவர் ஜான் மில்டன். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்கு துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது.
மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. ‘மில்டனைப் போல் எழுதுகிறாயே!’என்று பிற எழுத்தாளர்களை பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.
மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும்.
இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ்டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம்,இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.
உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்கு கிறித்துவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான ‘இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்’எழுதுவதற்கு கருவானது.
கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களை கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார். அதில் குறிக்கத்தக்கது லூசிடாஸ் (Lycidas),கோமாஸ் (Comus)..
அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலக பயணத்தை துவக்கினார். பிரான்ஸ்,இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது’ என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்த சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாக கருதினார் மில்டன். இந்த சந்திப்பை தனது ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.
The broad circumference
Hung on his shoulders like the moon, whose orb
Trhough optic glass the Tuscan artist views
At evening, from the top of Fesole,... (Book 1, 286-290
‘டஸ்கன் கலைஞனால் தொலை நோக்கி வழியே முன்னிரவில் துழாவப்பெறும் சந்திரன் போல், சாத்தான் கேடயத்தின் அகன்றவட்டம் அவன் தோளில் தொங்கியது.” - (கம்பனும் மில்ட்டனும், எஸ். ராமகிருஷ்ணன், பக்.54)
கலிலியோ கண்ட உண்மை கடவுளுக்கு எதிரானது என்றுக் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைத்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அவர் கண்ட உண்மையை தனது படைப்பிலும் கொண்டு வந்ததன் மூலம் மில்டன் மக்களை மாயையிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவிற்கு பங்காற்றினார் என்பதை உணர முடியும்.
இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க மதத்தை முன்னிறுத்தி, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த முதலாம் சார்லஸ் மன்னராட்சியில் சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தலைவிரித்து ஆடின. இப்பின்னணியில் 1639இல் இலண்டன் திரும்பும் மில்டன் ஒரு பள்ளிக்கூடத்தை துவக்குகிறார். குறிப்பாக அக்காலக் கல்வி மதத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தனது அதிருப்தி தெரிவித்த மில்டன்1944 இல் ‘கல்வி’ (Of Education) குறித்து சிறந்த கட்டுரையொன்றை வெளியிடுகிறார். கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.
சார்லஸ் மன்னராட்சியின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. இதை எதிர்த்து தூய்மைவாதிகளும் - புரோட்டஸ்டான்ட்கிருத்துவர்களும் தங்களது எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர். மதம் தங்களது தனிப்பட்ட விருப்புரிமைக்கு உட்பட்டது அதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க முடியாது என்று பல இடங்களில் கலகம் எழுந்தது. ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பின்னணியுடன், ஆட்சி அதிகார எந்திரத்தை கையில் வைத்திருந்த கொடுங்கோலன் சார்லஸ் மன்னன் புரோட்டஸ்டான்ட் மக்களை வேட்டையாடினான். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைகளை கண்ட மில்டன் மக்களுக்கான அரசியல் களத்தில் இறங்கி,தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக பல அரசியல் பிரசுரங்களை எழுதி குவித்தான். இது ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அந்த நேரத்தில்தான் சார்லஸ்மன்னன் பத்திரிகை உரிமைக்கு வேட்டு வைக்கும் புதிய சட்டத்தை கொண்டு வந்தான். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் எந்த துண்டுப் பிரசுரமும் வெளிவராது என்ற நிலையே நிலவியது.
மன்னராட்சியின் இந்த பத்திரிகை தடைச் சட்டத்தை எதிர்த்து ‘ஏரோபிஜிடிகா’ (Areopagitica)என்ற தலைப்பில் பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஒரு பிரசுரத்தை வெளியிட்டார் மில்டன். ‘ஒரு நல்ல புத்தகத்தை தடை செய்வது ஒரு மனிதனை கொல்லுவதற்கு ஒப்பாகும்’ என்று அதில் வலியுறுத்தியிருந்தார். நவீன காலத்தில் பத்திரிகை ஒடுக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட முதல் குரல் மில்டனின் குரல் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் படைகள் திரட்டப்பட்டு மன்னராட்சிக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தம் தொடுக்கப்பட்டது. இதற்கு மில்டனும் தனது எழுத்தாற்றல் மூலமாக துணை நின்றார்.1644இல் சார்லஸ் மன்னனின் ஆட்சி முடிவுக்கு வந்து கொல்லப்பட்டான். பின்னர் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் முதல் ஜனநாயக அரசு இங்கிலாந்தில் அரியணை ஏறியது. இவரது அமைச்சரவையில் லத்தீன் மொழிக்கான செயலாளராக மில்டன் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் மில்டன், ‘கொடுங்கோல் மன்னர்களும் அவரது நீதிபதிகளும் கொல்லப்பட வேண்டியவர்களே’ என்ற தலைப்பில் எழுதிய அரசியல் பிரசுரம் மிகவும் புகழ்பெற்றது.
ஆலிவர் கிராம்வெல்லின் ஆட்சி குறுகிய காலமே இருந்தது. அவரது மறைவுக்குப் பின், 1658-இல் 2-ஆம் சார்லஸ் மன்னன் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து பழமைவாதத்தின் பிடிக்குள்சென்றது. குடியரசு ஆட்சிக்கு முழுக்கு ஏற்பட்டது. இந்நிலையிலும் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்ட மில்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாம் சார்லஸ் மன்னன் ஆட்சியில் மில்டன் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்படுவார் என மக்கள் அஞ்சினர். மில்டன், ‘தான் இனிமேல் கவிதைகள் படைக்க விரும்புவதாக’ கூறியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் விடுதலையாகி இருக்காவிட்டால் மில்டன் என்ற மகா கவியை இந்த உலகம் இழந்திருக்கும்.
1667 ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு கண் பார்வையையும் இழந்து விட்டார் மில்டன். இதனால் மிகவும் மனம் வருத்தமுற்ற மில்டன் தனது உலகம் இருண்டு விட்டதை உணர்த்தும் வகையில் “ஆன் ஹிஸ் பிலைன்ட் லெஸ்” (On His Blindness) என்ற கவிதை மூலம் வருந்துகிறார். கண்ணிருக்கும் போது செய்ய வேண்டிய பல கடமைகள் செய்ய முடியாமல் போனதே என்பதற்காக!
இருப்பினும், இதில் மனம் தளராத மில்டன்,தனது உதவியாளர் மூலம் தான் சொல்லச் சொல்ல பல்வேறு கவிதைகளை படைக்கிறார். இந்தக் காலத்தில்தான் ‘இழந்த சொர்க்கம்’(Paradise Lost) என்ற புகழ்மிக்க காவியத்தை1667-இல் படைத்தார் மில்டன். 12 காண்டங்கள் என்று சொல்லத்தக்க வகையில், 12புத்தகங்களாக 10,565 வரிகளைக் கொண்டஆங்கில மொழி நடையில் - கவிதை உலகில் ஒரு புது நடையை வழங்கி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார் மில்டன்.
குறிப்பாக இழந்த சொர்க்கம் காவியம் - பைபிள் கருவை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், அதில் அவரது புனைவு என்பது ‘கடவுளை வென்ற சாத்தான்’ என்ற பொருளுடக்கத்தை கொண்டு எழுதப்பட்டது. குறிப்பாக சாத்தானை ஒரு ஹீரோவாக மையப்படுத்தி புகழ்ந்துரைத்த முதல் இலக்கியம்தான் மில்டனின் இழந்த சொர்க்கம். இதற்காகவே இந்த புத்தகத்தை அன்றைக்கு மக்கள் தொடுவதற்கே அஞ்சினர். இதுவும் சாத்தானின் வடிவமே என்று அவதூறு கிளப்பினர் பழமைவாதிகள்.
விண்ணுலகில் சாத்தானுக்கும் - கடவுளுக்கும் சண்டை மூளுகிறது. கடவுளின் சேவர்களில் ஒரு பகுதி தேவர்கள் கூட சாத்தான் பக்கம் சாய்ந்து கடவுளுக்கு எதிராக போரிடுகின்றனர். இந்நிலையில் தோல்வியுள்ள சாத்தான் கூட்டத்தினர் மீளாக உறக்கத்தில் இருக்கையில்,புதிய உலகை படைக்கிறார் கடவுள். அதில் ஈடன் தோட்டத்தில் ஆதாமையும் - ஏவாளையும் படைக்கிறார். இந்த தோட்டத்தில் உள்ள அறிவுக் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் அவர்களுக்கு கட்டளையிடுகிறார். இதை அறிந்து கொண்ட சாத்தான் விண்ணுலகிலிருந்து கடவுளால் படைக்கப்பட்ட புதிய உலகிற்கு வந்து ஈடன் தோட்டத்தில் உள்ள ஏவாளை மயக்கி அந்த அறிவுக் கனியை உண்பதற்கு தூண்டுகிறார். ஒரு கட்டத்தில் சாத்தான் ஒரு பாம்பின் உடலுக்குள் புகுந்து கொண்டு,ஏவாளிடம் சென்று மனிதனைப் போல் மிக அழகாக பேசுகிறது. பாம்புக்கு எப்படி பேச்சு வந்தது என்று ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பிய ஏவாளிடம் தான் அந்த அறிவுக் கனியை உண்டதாக கூறியதோடு, ஆதாம் அதை உண்பதற்கு தூண்டுகிறது. அது பாவம் என்று ஏவாள் மறுக்க, இல்லை; ‘பாம்பான நான் இந்தக் கனியை உண்டதால் மனிதனிப் பேச்சு திறமை கிடைக்கப்பெற்றேன். அதையே நீங்கள் சாப்பிட்டால் தேர்வர்களின் நிலைக்கு உயரலாம்’ என்று நயமாக பேசி தன்னுடைய வாதத் திறமையால் ஏவாளை அந்த அறிவுக் கனியை (ஆப்பிள்) சாப்பிட வைக்கிறார். அவ்வளவுதான்; இந்த கனியை சாப்பிட்ட பின் தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை ஏவாள்,ஆதமிடம் சொல்ல அவனும் ஏன் இதைச் சாப்பிட்டாய் என்று கேள்வி எழுப்பினாலும்,மனைவியின் அன்புக்கு கட்டுப்பட்ட ஆதாமும் அந்த கனியை சாப்பிடுகிறான். இந்த செயலின் மூலம் கடவுளின் திட்டத்தை முறியடிக்கிறான் சாத்தான். கனியை சாப்பிட்டதால் நிரந்தரமாக மனித குலம் பாவத்திற்கு உள்ளாகிறது. இதனால் அவர்கள் சொர்க்கத்தை நிரந்தரமாக இழக்கிறார்கள்; பாவத்திற்கு ஆளாகிறார்கள். பின்னர் ஆதாமும் - ஏவாளும் கடவுளிடம் இறைஞ்சுவதால் கடவுளின் குமாரன் மனித குலத்தில் பிறந்து அந்த பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாக கதை முடிகிறது. இதுதான் இழந்த சொர்க்கத்தின் மிகச் சுருக்கமான கதையம்சம்.
இந்த காவியத்தில் பல இடங்களில் சாத்தான் தனது அணிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக கூறப்படும் கவியம்சங்கள் மிக அற்புதமானவை.
What though the field be lots? All is not lost.
(களத்தை இழந்தோமல்லது; அனைத்தையும் இழந்தோமன்று) என்று கூறி நம்பிக்கை யூட்டுவதையும்,
Better to reign in Hell then serve in Heaven
(பொன்னுலகத்தில் தொண்டு புரிவதைக் காட்டிலும், நரகத்தில் ஆட்சி புரிவதே மேல்) என்று நயமாக எடுத்துரைத்து தனது அணிக்கு பலம் சேர்க்கிறார் மில்டன்.
400 வருடத்திற்கு முன் மதவாதிகளின் அரியாசனங்கள் கோலோச்சிய நேரத்தில், ‘சாத்தான் கடவுளை வென்றதாக’ காவியம் இயற்ற வேண்டும் என்றால் எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும் மில்டனுக்கு. அது மட்டுமல்ல; இந்த கதை குறித்து விமர்சகர்கள் கூறும்போது, ‘இதன் மூலம் சாத்தான் கடவுளை எதிர்த்து போராரிடுவது போல் மக்கள் மன்னர்களை எதிர்த்து போரிட வேண்டும்’ என்று தூண்டுவதாக வர்ணிப்பர்.
மில்டனின் ‘இழந்த சொர்க்கம்’ ஆங்கில கவிதை உலகில் முடி சூட முடியாத உயர்த்தில் இருக்கிறது என்றால் மிகையாகாது. மேலும் மில்டன் பார்வைகளை இழந்திருந்தாலும், தனது அறிவுக் கூர்மையால் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை கொண்டு வந்தார். இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு காவியம்‘மீண்ட சொர்க்கம்’ (Paradise Regained).
இது தவிர ஆங்கிலத்தில் சொனாட்டோ என்று சொல்லக் கூடிய 14 வரிகளைக் கொண்ட கவிதைகள் பலவற்றை எழுதி அதில் தனக்கென தனியிடைத்தை பிடித்துக் கொண்டவர் மில்டன்.
தனது இறுதி நாட்களில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மில்டன் என்ற மகத்தான கவி நவம்பர் 8, 1674 இல் மரனமடைந்தார்.
400 ஆண்டுகள் கடந்த பின்பும் மில்டனின் படைப்புகள் மனித குலத்திற்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டுவதாக உள்ளது. குறிப்பாக கலை கலைக்காகவே என்று இயங்குபவர்கள் மத்தியல் கலை மனிதனுக்காக என்றும் அது மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கோடு படைப்புகளை வழங்கியவர் மில்டன் என்பதில் மனித குலம் பெருமைப்படத்தக்கது. இதில் இறுதியாக குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் எஸ்.ராமகிருஷ்ணனின் கம்பனும் - மில்டனும்,தொ.மு.சி.யின் வள்ளுவனும் - மில்டனும் போன்ற படைப்புகள் தவிர, தமிழில் மில்டன் குறித்து போதுமான அளவிற்கு அவரது படைப்புகள் தமிழாக்கம் செய்யப்படவில்லை என்பது தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு குறையாகவே உள்ளது. அவரது 400வது ஆண்டில் இதில் ஒரு சில படைப்புகள் வெளிவந்தால் அது அவருக்கு செய்யும் சிறப்பாகும்.
கே. செல்வப்பெருமாள்
January 06, 2009
தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயம்!
இதற்காக விரிவான அளவில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திற்கு முன்வரக்கூடிய பெரும் பகுதியினரை அணி திரட்டுவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீவிரமாய் செயலாற்றி வருகிறது. அமைப்புகள் உருவாவதும், அமைப்புகள் காணாமல் போவதும் சமகாலத்தில் நிகழக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுகள் என்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வர்.
இந்நிலையில் வளர்ந்து வரும் தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.) கும்பல். தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது ஏதோ வாக்கு வங்கி அரசியல் நடத்துவதற்காக துவங்கப்பட்டதாக கொச்சைப்படுத்துகிறது. இவ்வாறு குற்றம் சுமத்துவது ஆட்சியாளர்கள் அல்ல. அவர்கள் கூட இவ்வாறு சொல்லத் துணிய மாட்டார்கள். சொல்வது புரட்சியை (தமிழகத்திலோ - இந்தியாவிலோ) கொண்டு வருவதற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அமெரிக்காவில் வாங்கி வந்திருக்கும் ம.க.இ.க. தொடை நடுங்கிகள்தான். (பார்க்க வினவு-ஏகலைவன் கமெண்ட்)
உண்மை என்ன? இவர்களது சுய முகம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய அவசியமான ஒன்று... இந்த ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. தொடை நடுங்கி நக்சலிச) புரட்சியாளர்களின் உண்மை முகம் என்ன என்று யாருக்கும் தெரியாது? நான் தொடர்ந்து குற்றம் சுமத்தும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இவர்கள் யாருக்கும் சொந்தப் பெயர் இல்லை. எல்லாம் போலிப் பெயரில் - போலி முகமூடியுடன் செயலாற்றுவதுதான்.
அது தலைமை முதல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள் வரை.... சரி இதில் உள்ள மற்றொரு ரகசியத்தையும் இங்கே சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஏதோ இவர்கள் பார்ப்பனீத்தை எதிர்ப்பதற்கு பிறந்தவர்கள் போல் பேசுவார்கள்... ஆனால் அது நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புவதற்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களது தலையே ஒரு பார்பனீயத் தலைமைதான். குறிப்பாக வல்லபேச என்கின்ற பார்ப்பனர் மருதையனாகவும், ரெங்கராஜன் என்கின்ற பார்ப்பனர் வீராச்சாமியாகவும் மாறியது ஏன்? அதுவும் மருதையன், வீராச்சாமி எல்லாம் தலித் அடையாளத்துடன் கூடிய பெயர்கள் என்பதை மறக்கக் கூடாது? இதுதான் மர்மம். ஏதோ தாங்கள் எல்லாம் தலித் மக்களின் நண்பர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலி மனோபாவம். உத்தப்புரத்திலாகட்டும்... கல்கேரியாகட்டும்... எந்தக் கிராமத்திலாவது தலித் மக்கள் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் போது அங்கே களத்தில் நின்று போராடிய வரலாறு இவர்களுக்கு உண்டா? இல்லை! மாறாக பிரச்சாரத்திற்காக சிதம்பரத்தை எடுப்பார்களே தவிர களத்தில் இறங்க மாட்டார்கள் இந்த போலி புரட்சியாளர்கள்.
இதேபோல்தான் இவர்கள் கியூபாவையும், கியூப புரட்சியும் எப்படி நடந்தது என்று போகிற போக்கில் கேள்வி எழுப்புவார்கள். தங்களை நக்சலிசத்தின் உண்மை வாரிசாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் கியூப வழியில் கடந்த 30 ஆண்டு காலமாக களத்தில் என்ன செய்தார்கள்? புதிய ஜனநாயகம் பேசி சிறு பத்திரிகைகளோடு மோதுவதும் - சி.பி.எம்.க்கு எதிராக அவதூறு பேசி ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரிவதைத் தவிர! இவர்களது தொழில் பேசுவது நக்சலிசம் ஆனால் சீர்குலைப்பது வர்க்கப் போராட்டத்தை!
அடுத்து இந்த தொடை நடுங்கி புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தை பன்னித் தொழுவம் என்று தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கி என்பார்கள்! இதன் மூலம் இவர்கள் செய்வது என்ன? இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் என்று திட்டுவதுதான். கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்களோ அங்கெல்லாம் செயல்படுவார்கள்! இது இவர்களுக்கு பொறுந்தாது! ஏனென்றால் இவர்கள் சி.ஐ.ஏ.-வால் உருவாக்கப்பட்ட சீர்குலைவு என்.ஜீ.ஓ. கம்யூனிஸ்ட்டுகள். அதனால்தான் இவர்கள் நக்சலிசம் பேசி - அதற்காக தங்களது போராடிக் கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் தியாகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருப்பவர்கள்!
இந்த மகஇக என்.ஜீ.ஓ.க்கள் தற்போது இணையத்தின் மூலம் புரட்சியை நடத்துவதற்கு கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தங்களது அணிகளுக்கு இணையத்தில் எப்படி செயல்படுவது என்று வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 டசன் ம.க.இ.க. போலி புரட்சியாளர்கள் தற்போது இணையத்தில் செயலாற்றி வரும் புதிய எழுத்தாளர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை இணையத்தில் இருந்தும் - எழுத வருவதிலிருந்தும் வெளியேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதாவது இணையத்திலும் ஆள் புடிக்கிறேன் பேர் வழி என்று கிளம்பி... எல்லாத்துக்கும் நான் சொல்றதுதான் சரி! என்கிற பார்ப்பனீய பாசிச மனோபாவத்தில் அடாவடி அடித்துக் கொண்டிருக்கும் வினவு மற்றும் ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. தொடை நடுங்கிகளை அடையாளம் காண்பீர்! இவர்கள் தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயத்தின் மறுவடிவ புரட்டர்களே என்பதை!
புத்தகம் பேசுது... புத்தகம் பேசுது.... புத்தகம் ஏதோ பேசத் துடிக்குது!
புத்தகம் பேசுது...புத்தகம் பேசுது...புத்தகம் பேசுது...
புத்தகம் ஏதோ பேசத் துடிக்குதுஉன்னிடம் வந்து இருக்கத் துடிக்குது...
ஆ... ஆ.... இ.... ஈ.... படி படிஅது முன்னேற்றத்தின் முதல்படி...