November 24, 2007

மனித உரிமை ஆணையத்தின் எட்டப்(ப) பார்வை!

மார்க்சிஸ்ட் கட்சியையும் அதன் தலைமையிலான இடது முன்னணியையும் தாக்குவதற்கு அறிவு ஜீவி வட்டாரத்தில் ஒரு படையே கிளம்பியிருக்கிறது. மேலோட்டமான சில சிந்தனைகளை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட்டுகள் குறித்து அவநம்பிக்கை பிரச்சாரம் செய்ய முயன்ற இவர்கள், இப்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
வன்முறை மட்டுமே ஒட்டுமொத்த அரசியல் இலக்காகக் கொண்ட நக்சலைட்டுகளின் பிடியில் ஒரு வட்டாரமே சிக்கிக்கொண்டாலும் பரவாயில்லை, இடதுமுன்னணியின் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டதுபோல் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட்டுகள் சொல்கிற எந்த விளக்கத்தையும் கேட்க மாட்டோம் என்ற, "கொள்கை உறுதியோடு இவர்கள் தங்களுடைய பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.இந்தப் படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் இணைந்துவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏற்கெனவே நந்தி கிராமத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை ஆணையம் துவங்கியிருக்கிறது.
புத்ததேவ் அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திர பாபு, நந்தி கிராமத்தையும் குஜராத்தையும் ஒப்பிட்டு, கருத்துக் கூறியிருக்கிறார். குஜராத்தில் சட்டம் ஒழுங்கை மீறி மாநில அரசின் ஆசீர்வாதத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மதவெறிக் கலவரத்தையும், நந்தி கிராமத்தில் மக்களை வன்முறையாளர்கள் பிடியிலிருந்து மீட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் ஒப்பிடுவதற்கு இவருக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?குஜராத்தில் நடந்தது இந்துத்துவா கூட்டத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை அரசியல். சிறுபான்மை மக்கள் - குறிப்பாக இஸ்லாமிய மக்கள் - பெரும்பான்மையினருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற "பாடத்தை" போதிப்பதற்காக அந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் கொலை செய்யப்பட்டனர்.
அந்தக் கொலைகளுக்கு அரசாங்கப் பதவிகளில் இருந்தவர்களே கூட எப்படியெல்லாம் வழிகாட்டினார்கள், எப்படியெல்லாம் காவல்துறை கைகட்டிக்கொண்டு இருந்தது என்பது குறித்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன. ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து நெருப்பில் வீசுகிற அளவிற்கு மதவெறி போதை தலைக்கேறிய அந்தக் கூட்டம் கொலைவெறியாட்டம் நடத்தியது.
2002ம் ஆண்டு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தங்களுடைய இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அகதிகள்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.நந்தி கிராமத்திலோ மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு ஆபாசக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு அந்த வட்டாரத்தைக் கைப்பற்றுவதற்கு சதி செய்தன. அந்தச் சதியின் ஒரு கூறாகவே அப்பட்டமான வலதுசாரிக் கட்சிகளான பாஜக, மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றோடு அதிதீவிர மாவோயிஸ்டுகளும் சேர்ந்துகொண்டார்கள்.
தீவிரவாதம் குறித்து மேலும் கீழும் குதிக்கும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வகையறாக்கள் கொஞ்சமும் கூச்சமின்றி இந்த அதிதீவிரவாதிகளின் ஒத்துழைப்பை நாடினர். அதேபோல், கம்யூனிஸ்ட்டுகளையும் மற்ற இடதுசாரிகளையும் ஒட்டுக்காகக் கையேந்துபவர்கள் என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் நக்சலைட்டுகள் இந்தக் கும்பலோடு உறவு வைத்துக்கொள்ள தயங்கவில்லை.
அறம் வழுவிய இக்கூட்டணியால் சுமார் நான்காயிரம் மக்கள் அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நில உரிமை பாதுகாப்புக்குழு என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட அந்தக் கூட்டணி, இந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டப்பட்டவர்களில் தலித்துகள், முஸ்லிம்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இக்கூட்டத்தால் சுமார் 30 இடது முன்னணி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இக்கூட்டத்தினரிடமிருந்து எண்ணற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை - மாநில காவல்துறை அல்ல - மத்திய ரிசர்வ் காவல்படை கைப்பற்றியிருக்கிறது.வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவம், தங்களது தொழில்களில் அமைதியாக ஈடுபடவும் இடது முன்னணி அரசு தன்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது.
அந்த முயற்சிகளுக்கு துணையாக இருப்பதற்கு மாறாக, சில தொண்டு நிறுவனங்களும் - தங்களுக்கு வருகிற அந்நிய நிதிகளுக்கு விசுவாசமாக - நந்தி கிராமம் பிரச்சனை குறித்து நாடு முழுக்க திசைதிருப்பும் பிரச்சாரங்களை செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட பிரச்சாரங்களுக்கு சிலர் இரையாவது இயற்கைதான். ஆனால் பகுத்தறிவோடு பிரச்சனைகளை அணுக வேண்டிய மனித உரிமைகள் ஆணையம் இரையாகலாமா? நந்தி கிராமம் பிரச்சனை குறித்து ஆணையத்தின் விசாரணை முழுமையாக முடிந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாவதற்கு முன்பே அதன் தலைவர் இப்படி குஜராத்தையும் நந்தி கிராமத்தையும் ஒப்பிட்டது என்ன நியாயம்?
மேலோட்டமான தனிமனித உரிமை பேசிக்கொண்டு ஒட்டுமொத்தமான ஜனநாயக உரிமைகளை புதைகுழிக்கு அனுப்ப முயல்கிறவர்களின் குரலை ராஜேந்திர பாபுவும் எதிரொலித்திருப்பது வேதனையானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட.
விரைவில் உண்மைகள் வெளியாகும். உள்ளங்கள் அதில் தெளிவாகும் - தேசிய மனித உரிமை ஆணையத் தலைவருக்கும்.
அ.குமரேசன்

No comments: