November 22, 2007

நந்திகிராம் பகடை காயின் நான்கு முகங்கள்!


நந்திகிராமில் மத்திய அரசின் இரசாயண தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையை அடுத்து. நந்திகிராம மக்கள் விரும்பவில்லையென்றால் அரசு தொழிற்சாலையை வேறு பகுதிக்கு மாற்றிவிடும் என்று அறிவித்த பின்னரும். மமதா பானர்ஜியும் - இசுலாமிய அமைப்புகளும் - நக்சலிசவாதிகளும் பெரும் அவதூறுகளையும் - வன்முறையையும் கட்டவிழித்து விட்டு சி.பி.எம். மற்றும் இடதுசாரி கட்சி ஆதரவாளர்களை அந்த கிராமத்திலிருந்து விரட்டியடித்தனர். இவர்ளது வன்முறையால் 3000க்கும் மேற்பட்ட மக்கள் நந்திகிராமத்திற்கு வெளியே அகதிகளைப் போல் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். எவ்வளவு நாளைக்கு கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேலாக அவ்வாறு தங்கியிருந்தனர். சொந்த கிராமத்திலிருந்து பாலஸ்தீன மக்களைப்போல் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் நந்திகிராமத்தை மாவேயிஸ்டுகள் - சுசி - நக்சலிச வாதிகள் - மமதாபானர்ஜி - இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகள் - பா.ஜ.க.வினர் என மொத்தமாக கூட்டுச் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்தனர். பூமி பாதுகாப்பு குழு என்ற பெயரில் எதிரும் புதிருமானவர்கள் நண்பர்கள் ஆனார்கள். நந்திகிராமத்தை மேற்குவங்கத்திலிருந்து அனைத்துவிதத்திலும் துண்டித்து விட்டனர். அரசு இயந்திரம் 9 மாதமாக செயல்பட முடியவில்லை. பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை. அரசு அலுவலகங்கள் செயல்பட முடியவில்லை. நலத்திட்டங்கள் முற்றிலுமாக முடங்கியது. காவல்துறையினர் ஊருக்குள் நுழைய முடியவில்லை. இப்படி பல தொல்லைகளை கொடுத்தவர்கள் நக்சலிசவாதிகளை வெளியிலிருந்து ஆயுதங்களோடு நக்திகிராமத்திற்குள் வரவழைத்து இடது முன்னணி அரசுக்கு எதிரான போர்களமாக இதனை மாற்றி விட்டனர். அரசின் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இவர்கள் இசைந்தபாடில்லை. மேலும் இந்தப் பிரச்சனையையொட்டி மேற்குவங்க அரசு போலீசாரோடு நுழைந்த பின்னணியில் 14 பேர் உயிரிழக்க நேரிட்டது. இதற்காக இடது முன்னணி வருத்தம் தெரிவித்தது. இதில் போலீசாரின் துப்பாக்கி சுட்டிக்கு பலியானர்கள் 8 பேர் மட்டுமே. மற்றவர்கள் நக்சலைட்டுகளின் தாக்குதலால் பலியானவர்கள். இதை தொடர்ந்து நந்தி கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகளை எட்டி உதைத்த பூமி பாதுகாப்பு கமிட்டியினர். இடது முன்னணிக்கு ஆதரவானவர்கள் அனைவரையும் கிராமத்தை விட்டே துரத்தினர்.
இந்த பின்னணியில் மாநில அரசே மத்திய அரசை மத்திய படையை அனுப்பும்படி கேட்டுக் கொண்டது. மத்திய அரசும் மாற்றந்தாய் மனப்போக்கோடு நடந்தக் கொண்டது.
இந்திய வரலாற்றில் எதிர் கட்சிகள்தான் வழக்கமாக மத்திய பாதுகாப்பு படையை கோரும். ஆனால் மேற்குவங்கத்தில் மாநில அரசே கோரியது. காங்கிரஸ் இடது முன்னணி அரசுக்கு எதிராக என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற மனப்போக்கோடு நடந்துக் கொண்டது. இதைத்தான் மத்திய அமைச்சரிடம் உணர முடிந்தது.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு படை நந்திகிராமத்திற்கு நுழைய கூடாது என்றவர்கள் பூமி பாதுகாப்பு குழுவினர்.
மத்திய அரசே கூட கைவிட்ட நிலையில் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும். இறுதி முடிவை மக்களிடமே விட்டு விட்டது. 9 மாதம் அகதிகளாக இருந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்பினர். பூமி பாதுகாப்பு குழுவினரை சந்தித்தனர். சொந்த கிராமத்திற்குள் சி.பி.எம். மற்றும் இடது முன்னணியின் கொடிகளோடு நுழைந்த வெற்றிக் கொடியை ஈட்டினர். கிராமத்தில் அமைதியை நிலைநாட்டினர்.
மேற்குவங்க ஆளுநர் இதைத்தான் அவர்கள் ரீ கேப்சர் செய்து விட்டார்கள் என்று கூறினார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை! ஒரு கிராமத்து மக்கள் திரும்பவம் தங்களது இருப்பிடத்திற்கு வருவதே தவறா? அல்லது என்ன நடந்தாலும் மாநில அரசு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று கவர்னர் விரும்புகிறாரா என்று தெரியவில்லை? மேலும் இந்த விசயத்தில் மாநில கவர்னர் தனது எல்லையை மீறி தலையிட்டது ஜனநாயக விரோதமானது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் சட்டம் அறிந்த உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மாநில சுயாட்சி குறித்து ஓங்கி முழங்குபவர்கள் கவர்னரின் அதிகார வரம்பு மீறலை கண்டித்துள்ளது நல்ல செய்தி.
மமதா பானர்ஜி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தலைவிரி கோலமாய் நாடகம் ஆடினார். ஆனால் இதுவரையில் தனது ராஜினாமா கடித்தை சபாநாயகருக்கோ. ஜனாதிபதிக்கோ அனுப்பி வைக்கவில்லை என்பதுதான் உண்மை. இதுதான் மமதா?
பாஸிஸ்ட் புகழ் அத்வானி நந்திகிராமத்திற்கு ஓடோடி வருகிறார். அவருக்கு மாவோயிச புரட்சிவாதிகள் ரத்தனகம்பளம் விரித்து வரபேற்பு தருகின்றர். நக்சலிச பயங்கரவாதிகளை எதிர்ப்போம் என்று தினந்தோறும் ஊளையிடும் அத்வானி அவர்களத கூட்டத்திற்கு உள்ளேயே போய் ஆதரித்து பேசுகிறார். பா.ஜ.க. சங்பரிவாரம் பாசிசம் இந்தியாவில் நாங்கள்தான் உறுதியாக எதிர்க்கிறோம் என்று வேடம் போடும் நக்சலிசவாதிகள் அத்வானியின் பேச்சுக்கு மகுடி ஊதுகிறார்கள். மொத்தத்தில் பாசிசமும் - பயங்கரவாதமும் ஒரே கூட்டணியின் இரு முகங்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக நிரூபித்துள்ளனர்.
இவர்களோடு தற்போது சேர்ந்துக் கொண்டுள்ளது சிறுபான்மை மத அடிப்படைவாத பாசிசம். அவர்கள் நந்திகிராமப் பிரச்சனையையும் - தஸ்லீமா நஸ்ரினையும் இணைத்து கொல்கத்தாவில் ஊர்வலம் நடத்தி வெறியாட்டம் போட்டுள்ளனர். நகரத்தையே ஸ்தம்பிக்க செய்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது நோக்கம் தஸ்லீமாவை மேற்குவங்க அரசு ஆதரிக்க கூடாது. உடனடியாக மேற்குவங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி வன்முறையாட்டம் போட்டுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். பல பேருந்துகளை கொளுத்தியுள்ளனர். இடதுசாரி கட்சி அலுவலகங்களை கொளுத்தியுள்ளனர். மொத்தத்தில் நகரத்தையே தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். மாநில காவல்துறையால் இதனை அடக்க முடியவில்லை அவ்வளவு வெறியாட்டம்! பின்னர்தான் மத்திய படை அழைக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது.
மொத்தத்தில் என்ன புரிகிறது. 30 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு எதிராகவும் - இடது முன்னணி ஆட்சிக்கு எதிராகவும் பாசிஸ்ட்டுகள் - பயங்கரவாதிகள் - சிறுபான்மை மத அடிப்படைவாத பாசிஸ்ட்டுகள் - மமதா குழுவினர் இந்த நான்முக கூட்டணி மேற்குவங்கத்தை சீர்குலைவின் உச்சத்திற்கு தள்ளியுள்ளது. இதுபோல் வேறு மாநிலத்தில் இதுபோன்ற நம்பவங்கள் நடந்ததாக வரலாறு உண்டா? இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? கம்யூனிச விரோதிகள் - ஏகாதிபத்திய சக்திகள்! இவர்களது முகமூடி தற்போதே கிழிந்து விட்டது. இருப்பினும் மேற்குவங்க மக்கள் இவர்களை குப்பைக் கூடையில் வீசியெறிவார்கள்.
நாட்டு நடப்பை அலசும் நியாய தராசுகளே நீங்கள் எந்தப் பக்கம்?

No comments: