November 22, 2007

நந்திகிராமத்தில் நடப்பதென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திறந்த மடல் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நந்திகிராமத்தில் நடந்துள்ள நிகழ்வுகள் சம்பந்தமாக உண்மைச் சித்திரத்தை உங்கள்முன் அளிப்பதற்காகவே இக்கடிதத்தை எழுதுகிறோம்.
நந்தி கிராம மக்களுக்கு உதவி செய்து, அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக மேற்கு வங்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதா லும், ஒருதலைப்பட்சமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதாலும், இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டிய கட்டாயத்தை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கு எதிராகவோ அல்லது அப்பாவி மக்களுக்கு எதிராகவோ வன்முறைச் சம்பவங்கள் எது நடந்திருந்தாலும், அதை யார் புரிந்திருந்தாலும் அவர்கள் கட்சி வித்தியாசமின்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எங்களுக்கு எந்தக் கருத்து மாறுபாடும் கிடையாது என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோன்று “நில ஆர்ஜிதத்திற்கு எதிராக விவ சாயிகள் மேற்கொண்ட அமைதியான எதிர்ப்பின்’’ ஒரு பகுதிதான் நந்திகிராம நிகழ்ச்சிகள் என்பதும் கெடுநோக்குடன் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரமேயன்றி வேறல்ல என்று கூறி அவற்றை மறுதலிக்கிறோம். நந்திகிராம நிகழ்ச்சிப்போக்கு கள், ஆயுதந்தாங்கிய கும்பல் வன்முறை மூலமாக அப்பகுதியைக் கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக் கைகள் என்பதையும், அவற்றிற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் எவ்வித லஜ்ஜையுமின்றி ஆதரவளித்து, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளதும் ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளன. இடது முன்னணியும், மேற்கு வங்க அரசும் எந்த ஒரு திட்டத்தை அறிவிக்கும்போதும், அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றபிறகு தான் அத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை கொள்கையாகக் கொண் டுள்ளன.
ஆயினும், இத்திட்டம் குறித்து மேலும் ஆழமான வகையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில்தான், ‘நந்திகிராமப் பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக மாநில அரசால் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிற தென்றும், அங்கிருக்கும் மக்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட இருக்கிறார்கள் என்றும், அங்குள்ள அனைத்துப் பள்ளிகளும், மருத்துவ மனைகளும், கோவில்களும், மசூதிகளும், கல்லறைகளும் நிர்மூலமாக்கப்பட இருக்கின்றன என்றும்’ ஒரு பொய்ப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இவ்வாறு இழிவான பிரச்சாரத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மேற்குவங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், எஸ்யுசிஐ, நக்சலைட்டுகள், ஜமி யத்-இ உலாமமா-இ ஹிண்ட், பாஜக, மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி பெறும் அரசு சாரா நிறு வனங்கள் ஒன்றி ணைந்து பூமி பாதுகாப்புக் குழு என்று ஒரு மேடையை ஏற்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர்.கலவரக்காரர்கள், ஆயுதங்களுடன் தங்கள் அராஜக வேலைகளில் இறங்கினார்கள். அங்கிருந்த பாலங்களையும் சாலை இணைப்புகளையும் தகர்த்தார்கள். இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்ட்டு கட்சியினர் அந்தப் பகுதிக்குள் கள்ளத்தனமாக நுழைந்து பூமிப்பாதுகாப்பு இயக்கத்தாருடன் இணைந்து கொண்டார்கள். பின்னர் அங்கு ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.
ஜனவரி 4, 5 தேதிகளில் நந்திகிராமம் மற்றும் கெஜூரி பகுதியை உலகத்துடன் இணைக்கும் அனைத்து சாலைகளையும் துண்டித்தார்கள். ஒரு 25 கே.வி. மின்சார துணை நிலையத்தையே தீக்கிரையாக்கினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தல அலுவலகங்கள் கொளுத்தப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் ஆதரவாளர் களும் புகலிடங்களில் முகாமிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் இரு மாவட்டக் குழு உறுப் பினர்கள், இரண்டு வட்டாரக் குழு செயலா ளர்கள், ஆறு மண்டலக் குழு உறுப்பினர்கள், 16 வட்டாரக்குழு உறுப்பினர்களும் மற்றும் 56 கட்சி உ றுப்பினர்களும் அடங்குவர்.
200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாமிலும், உறவினர் இல்லங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். பின்னர் வன்முறை யாளர்கள் தங்கள் அராஜக நடவடிக்கைகளை அப்பகுதியில் விரிவாக்கினர். மேற்கு வங்க முதல்வர் நந்திகிராமப் பகுதியில் கட்டாயப்படுத்தி எவரிடமிருந்தும் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். அமைக்கப்படவிருந்த பெட்ரோ கெமி கல் தொழிற்சாலை வேறிடத்திற்கு மாற்றப்படுவ தாகவும் அறிவித்தார்.
ஆயினும் வன்முறையாளர்கள் தங்கள் அராஜக நடவடிக்கைகளைக் கைவிடவில்லை, தொடர்ந்தனர். நந்திகிராமத்தில் வன்முறையாளர்களின் வெறியாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர்கள் 27 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வன்புணர்ச்சி, கொலை, கொள்ளை, தீக் கிரை முதலான சம்பவங்கள் தொடர்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியலில் எதிர்ப்பு காண்பிப்பது என்பது நம்முடைய ஜனநாயக நடைமுறைகளின் ஒரு பகுதி தான். ஆனால், ஜனநாயகப்பூர்வமாக நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற முடியாதவர்கள், அப்பகுதிகளை வன்முறை மூலமாக ‘’கைப்பற்றுதல்’’ என்னும் இழிவான நடைமுறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
கடந்த பதினோரு மாதங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நந்தி கிராமத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்கள் மேற்கு வங்க ஆளுநரைச் சந்தித்து தங்கள் அவலநிலை குறித்து எடுத்துரைத்துள்ளனர். உயர்நீதிமன்றத் திலும் மனுச்செய்துள்ளனர். ஆயினும் அவர்களி டமிருந்து எந்த பிரதிபலிப்பும் அவர்களுக்குக் கிடைத்திடவில்லை. நந்தி கிராமப் பகுதிக்கு உண்மை கண்டறிவ தாகச் சொல்லிச் சென்ற குழுக்களும் இவர்கள் பற்றி எவ்விதக் குறிப்பும் அளித்திடவில்லை, இவர்களை மனிதப்பிறவிகளாகவே அவை கருதிடவில்லை.சமீபத்தில் மத்திய ராணுவ துணை பிரிவுகள் நந்திகிராம பகுதிக்கு வந்தபின் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
நிவாரண முகாம்களில் தங்கியிருந்தோர் மீண்டும் தங்கள் இல்லங்களுக் குச் சென்றுள்ளனர். மத்திய ராணுவ துணை பிரிவினரும் காவல்துறையினரும் இணைந்து நந்தி கிராம பகுதியை பாதுகாத்து சுற்றி வந்துகொண் டிருக்கின்றனர். இப்போதைய உடனடித்தேவை என்பது அங்கு அமைதி திரும்புவது என்பதேயாகும். அமைதியை விரும்பும் அனைத்துப் பகுதி மக்களும் நந்தி கிராம பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம். நாட்டின் அனைத்து மக்களும் முன்பு வாழ்ந்ததுபோலவே அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்திட முன்வர வேண்டும்.
தமிழில்: ச. வீரமணி

No comments: