தெற்காசிய பகுதியின் முக்கிய நாடுகள், குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), மற்றும் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் கொடிகட்டி பறக்கின்றன. நேபாளத்தில் நிலப்பிரபுத்துவ மன்னராட்சியிட மிருந்து ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில், நவீன உலகில் இத்தகைய முதலாளித்துவ இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் மக்கள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. ஏகாதிபத்திய காலனி ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் தற்போது சரிவாதிகரிகளிடம் சிறைப்பட்டு கிடக்கின்றன. எனவே, அந்த வியாதி இந்தியாவில் பரவாமல் இருக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது பர்மாவில் நிலவும் சூழல்கள் குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது.
உலக மீடியாக்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது பர்மா-மியான்மர். (இராணுவ ஆட்சியாளர்கள் பர்மாவை இனவாத போக்குடன் மியான்மர் என பெயர் மாற்றி விட்டனர்.) ஜனநாயகத்தை மீட்பதற்கான நீண்ட நெடிய போராட்டம் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டு களாக அடக்குமுறை இராணுவ ஆட்சியின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் பர்மா ஜனநாயக சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. இல்லற வாழ்வை துறந்த லட்சக்கணக்கான புத்த துறவிகள் தற்போது உழைக்கும் மக்களுடன் இணைந்து ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏன் இந்த திடீர் போராட்டம்
அரிசி உற்பத்தியில் ஆசியாவின் அட்சயப் பாத்திரமாக விளங்கியது பர்மா. அரிசி மட்டுமா? ‘பர்மா தேக்கு’ என்றால் உலகப் புகழ் பெற்றது. வளம் பொருந்திய தேக்கு மரங்களை ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா. அத்தோடு இயற்கை எரிவாயுவில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடு. 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவையும், 3 பில்லியன் பீப்பாய் பெட்ரோலிய எண்ணை வளத்தையும் தன்மடியில் சுமந்து கொண்டிருக்கும் நாடு பர்மா!
இராணுவ ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்க்கை மற்றும் இராணுவத்திற்கான செலவு அதிகரிப்பு, போராடுபவர்களை ஒடுக்குவதற்கான நவீன ஆயுதங்களை வாங்குவது போன்ற நாசகர - சர்வாதிகார கொள்கையின் விளைவாக ஜெனரல் தான் ஷா தலைமையிலான இராணுவ அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை 500 சதம் உயர்த்தியுள்ளது. இதுதான் தற்போதைய போராட்டத்திற்கான வித்தாக மாறி ஜனநாயக எழுச்சி கொண்டுள்ளது.
அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் பர்மிய மக்கள், இந்த திடீர் விலை ஏற்றத்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்ததாலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்துக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்ததாலும் நிலைகுலைந்து போயுள்ளன. வாழ்க்கையின் எல்லைக்கே துரத்தப்பட்ட பர்மிய மக்கள், இராணுவ ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனைகளை துச்சமாக நினைத்து தெருக்களில் இறங்கி சவால் விடுகின்றனர்.
போராட்ட பாரம்பரியம் மிக்க பர்மிய மக்கள்
குறிப்பாக ‘88 ஜெனரேஷன்’ என்று அழைக்கக்கூடிய போராட்டப் பாரம்பரியம் மிக்கவர்கள் இராணுவ ஆட்சியாளர் களின் விலை உயர்வுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்டோர் வீதியில் இறங்கி கண்டனம் முழங்கினர். சும்மா இருக்குமா அரசு? போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவியதோடு, அவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 அன்று நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் புத்த துறவிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது எதிர்பையும், கண்டனத்தையும் தெரிவித்து விலை உயர்வுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி, ஆங் சான் சூ குயி-யின் படங்களை ஏந்திக் கொண்டு பர்மா முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
அமைதியான முறையில் போராடியவர்களுக்கு எதிராக ஆங்காங்கே துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்று குவித்தது இராணுவ அரசு. பல்வேறு இடங்களில் தடியடி நடத்தி போராடியவர்களை சிறையிலும் தள்ளியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பர்மா தலைநகர் ரங்கூன் மற்றும் மாண்டலேவில் செப்டம்பர் 24 அன்று லட்சக்கணக்கான புத்த துறவிகளும் - உழைக்கும் மக்களும் - மாணவர்களும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கண்டன பேரணிகள் நடைபெற்றது. இது உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த பேரணியில் முன்னணியில் நின்றவர்கள் லட்சக்கணக்கான புத்த துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பத்திரிகைகள் இதனை ‘ஜனநாயகத் திற்கான காவி புரட்சி’ என்றே வர்ணித்தது!
ஜெனரல் தான் ஷா தலைமையிலான அடக்குமுறை இராணுவ அரசு இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளதோடு, 1000த்துக்கும் மேற்பட்ட புத்த துறவிகளையும், 5000த்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர் களையும் சிறையில் தள்ளியுள்ளது. பல்வேறு புத்த மடாலயங் களுக்குள் அதிரடியாக நுழைந்து அங்கே ஆயுதங்கள் பதுக்கி வைப்பட்டிருப்பதாக கூறி அமெரிக்க பாணியில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மேலும், முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தனது அடக்குமுறை தர்பாரை நடத்தி வருகிறது. 1988 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் போது 3000 பேரை கொன்று குவித்து பர்மாவை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது போல், இம்முறையும் அதே பாணியை பின்பற்றி ஒடுக்குமுறையை ஏவியுள்ளது. துப்பாக்கி ஏந்திய இராணுவ ஒடுக்குமுறையாளர் களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை சுட்டுத் தள்ளுமாறு நெஞ்சை நிமிர்த்தி போராடி வருகின்றனர்.
உலகின் கவனத்தை திருப்பிய இன்டர்நெட்
நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சியின் உயர்ந்த அம்சமான இணையதளம் - இமெயில் - வலைபதிவு - செல்போன், கையடக்க மொபைல் கேமிரா போன்றவற்றின் வளர்ச்சியை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது உழைக்கும் வர்க்கம். பர்மாவில் நடைபெறுவது என்ன? என்பதை உலகம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. லட்சக்கணக்கான மக்களின் எழுச்சியும் - இராணுவ ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையும் உலக மக்களை பர்மாவின் பக்கம் திருப்பியது. இதனை உணர்ந்து கொண்ட இராணுவ அரசு அதற்கே உரிய குணத்தோடு பர்மாவிலிருந்து இயங்கும் அனைத்து இணையதளம் மற்றும் செல்போன் சேவைகளை ரத்து செய்துள்ளதோடு, தன்னுடைய ஒடுக்குமுறை களையும் தீவிரப்படுத்தியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஜப்பானிய பத்திரிகை நிருபர் கென்ஜி நாகாய் துப்பாக்கி சூட்டில் பலியானதும் சர்வதேச கண்டனத்திற்கு உள்ளானது. உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் பர்மாவுக்கு எதிராக தங்களது கண்டனக் கணைகளை தொடுத்தன.
இந்த சம்பவங்களை உற்று நோக்கிய சர்வதேச சமூகம் பர்மாவில் நடைபெறும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு வகைகளில் நிர்பந்தித்து வருகிறது.
அமெரிக்காவின் ஜனநாயக வேடம்
இதனை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் பர்மாவில் நுழைய தங்களை ஜனநாய கத்தின் காவலர்களாக காட்டிக் கொள்கின்றனர். பனாமா, ஆப்கானிஸ்தான், ஈராக் என பல்வேறு நாடுகளில் அமெரிக்கா வழங்கி வரும் ஜனநாயக சேவை எத்தகையது என்பதை உலகம் நன்கு உணர்ந்துள்ளது. மேலும், தற்போது பாகிஸ்தானில் ஜனநாயகத்தை புதைகுழிக்கு அனுப்பிய முஷாரப்பின் பின் அமெரிக்காவின் கையிருப்பதையும் உலகமறியும்.
பர்மாவின் இயற்கை வளங்கள் மீது கண் வைத்து காய்நகர்த்தும் நாடுகள் ஒரு புறமும், பர்மிய மக்களுக்கு ஜனநாயக ஒளி பிறக்க வேண்டும் என்று விரும்புகிற நாடுகள் மறுபுறமும் என இருமுனைகளில் செயலாற்றுகின்றன.
தற்போது பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபை இப்ராஹிம் கம்பாரியை தூதுவராக அனுப்பி வைத்து அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்களிடமும், ஜனநாயக போராளி ஆங் சான் சூ குயி-யிடமும் பேச்சுவார்த்தை களை நடத்தி வருகிறது. மறுபுறத்தில் அமெரிக்கா பர்மா மீது அழுத்தமான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டி வருகிறது. அதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மிய உழைக்கும் மக்களை மேலும் பட்டினி போட்டு பணிய வைப்பது என்பதுதான். அல்லது சர்வாதிகாரி தான் ஷா இராணுவ அரசு அமெரிக்காவின் சொல்லைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக மாற வேண்டும் என்பதுவே அதன் உள்நோக்கம். அல்லது பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு பதிலாக தங்களது கைப் பாவையை கொண்டு வரவேண்டும் என்ற ஜார்புஷ் மற்றும் கண்டலிசா ரைசின் விருப்பம்.
மேலும், தென் கிழக்கு ஆசிய நாடான பர்மா புவி அரசியல் ரீதியாக மிகவும் கேந்திரமான பகுதியாக விளங்குகிறது. குறிப்பாக, சீனாவின் 2210 கிலோ மீட்டர் எல்லையை அது பகிர்ந்து கொண்டுள்ளது. மறுபுறம் இந்தியா, தாய்லாந்து உள்ளதால் அமெரிக்காவின் இராணுவப் பார்வை அங்கு விரியாமல் இருக்குமா? இந்திய - அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தை பயன்படுத்தி யுத்த தந்திர ரீதியாக சீனாவிற்கு எதிரான நிலையெடுத்து வருவதை இடதுசாரிகள் கண்டித்து வரும் நிலையில், தற்போது அது பர்மாவை பயன்படுத்தி தன்னுடை எதிர்கால இராணுவ திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. மேலும் பர்மா 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை கொண்டுள்ள ஒரு நாடு என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது! பெட்ரோலிய வளத்திற்காக ஒரு ஈராக் என்றால் இயற்கை எரிவாயுவிற்காக பர்மா தேவைப்படாதா? ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய் வழி இயற்கை வாயுத் திட்டத்தை புதைகுழிக்கும் அனுப்பத் துடிக்கும் அமெரிக்காவின் சூட்சமம் இங்குதான் உள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவின் உதட்டளவிலான ஜனநாயக சேவை என்பது நிலைகுலைந்து வரும் தன்னுடைய டாலர் பொருளாதாரத் தோடு தொடர்புடையதே என்று அறுதியிட்டுக் கூறலாம்.
ஏகாதிபத்திய எடுபிடி எழுத்தாளர்கள் அமெரிக்காவை ஜனநாயக காவலராக சித்தரிப்பதோடு, சீனாவை ஜனநாயக எதிரியாகவும் காட்டி வருகின்றனர். சீன மற்றும் பர்மாவின் வரலாற்றை படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக புரியும். இந்த இரு நாடுகளுக்கும் 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே நல்லுறவு இருந்து வருவதை காண முடியும். மேலும், பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து 1948 ஜனவரியில் விடுதலைப் பெற்ற பர்மாதான் உலகிலேயே முதன் முதலில் சோசலிச சீனாவை ஆதரித்த கம்யூனிஸ்ட் அல்லாத முதல் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று ரீதியாக நல்லுறவை வைத்துக் கொண்டுள்ள சீனாவிற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை முதலாளித்துவ எடுபிடிகள் தொடர்ந்து செய்து வருவது அமெரிக்க வழியிலான ஜனநாயகத்தை காப்பதற்கே தவிர பர்மாவின் நலனுக்காக அல்ல!
விடுதலைப் போரிலிருந்து இராணுவ ஆட்சியை நோக்கி...
பர்மாவை தனது காலனியாக வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்திடமிருந்தும், ஜப்பானிய பாசிஸ்ட்டுகளிட மிருந்தும் அந்நாட்டு கம்யூனிஸ்ட்டுகளும், தேச பக்தர்களும் இணைந்து நின்று வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தியதன் விளைவாக 1948 இல் பர்மா சுதந்திர நாடாக மாறியது.
அந்நாட்டின் விடுதலைக்காக பாசிஸ்ட்டு எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் பல்வேறு தேச பக்த சக்திகளை ஒன்றிணைத்து களம் கண்டு போரிட்ட பர்மா கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் ஆங் சான் மற்றும் அவரது சகாக்கள் 1947 இல் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியில் ஆங் சானோடு இணைந்து பணியாற்றிய யூ நூ சுதந்திர பர்மாவின் முதல் பிரதமரானார்.
விடுதலைப் பெற்ற பர்மாவின் முதல் பிரதமராக வரவேண்டிய ஆங் சானை ஒழித்துக் கட்டிய ஆளும் வர்க்கம் அந்நாட்டில் வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் போராளிகளையும், ஜனநாயக உரிமைகளுக்காக களம் கண்டவர்களையும் கருவறுப்பதற்கான தொடர் சதி வேலைகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக யூ நூ தலைமையிலான கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான அரசியல் நிலைமையை பயன்படுத்திக் கொண்ட பர்மா இராணுவத் தளபதி நீ வின் 1962 இல் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.
ஜெனரல் நீ வின் தலைமையிலான இராணுவ சர்வாதிகார அரசு ‘பர்மா சோசலிஸ்ட் திட்ட கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை ஏற்படுத்தியதோடு ‘பர்மிய வழியிலான சோசலிசம்’ என அலங்காரமான பெயரில் பல கட்சி செயல்பாடுகளையும், சட்டமன்றம், நீதிமன்றம் போன்றவற்றை முடக்கியதோடு, சர்வதேச சமூகத்திடமிருந்தும் பர்மாவை துண்டித்துக் கொண்டு, அனைத்து தொழில்களையும் தேசவுடைமையாக்கிக் கொண்டு (இராணுவ உடைமையாக்கிக் கொண்டு) முன்னேறப்போவதாக கூறி, பர்மா கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.பி.) சட்ட விரோதம் என தடை செய்து, அவர்களை வேட்டையாடவும் செய்ததோடு, பல கட்சி ஜனநாயக நடைமுறையை சவப்பெட்டிக்குள் தள்ளியது. மொத்தத்தில் ஆட்சிமன்றம், நீதிமன்றம், பத்திரிகை சுதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்தது.
தொடர்ந்து இராணுவ வீரர்களின் படை பலத்தை அதிகரித்ததும், அவர்களுக்கு சலுகைகள் மேல் சலுகைகளை வாரி வழங்கியும் அடக்குமுறை - சர்வாதிகாரத்தின் மூலம் ஆட்சியை தக்க வைத்து வந்தது. இதன் மூலம் அனைத்து வழியிலும் பர்மா சுதந்திர காற்றை சுவாசிப்பதிலிருந்து நிறுத்திக் கொண்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அம்மக்களை படுகுழியில் தள்ளியது. இராணுவ அதிகாரிகளின் கைகளில் கொண்டு வரப்பட்ட நிறுவனங்கள் முறையாகவும், திறமையாகவும் நிர்வகிக்காமல், ஊழலுக்கு இரையாகி முடங்கிப் போனது.
இந்நிலையில், மேலும் ஒரு தாக்குதலை தொடுத்தது நீ வின் அரசு. அதாவது, பர்மா ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் உழைக்கும் மக்கள் சிறுகச் சிறுக சேகரித்து வைத்த சேமிப்பு தொகை அனைத்தும் மொத்தமாக பறிபோனது. குறிப்பாக 1960 இல் 670 டாலராக இருந்த தனிநபர் வருமானம் 1989 இல் 200 டாலராக குறைந்தது. அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் திகழ்ந்த பர்மா மோசமான ஆட்சியின் காரணமாக அந்நாட்டு மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியது. இதன் விளைவாக ஏற்பட்டதே 1988 எழுச்சி.
இந்த எழுச்சியை ஒடுக்குவதற்கு சக்தியற்ற நீ வின் பதவி விலகி அந்த இடத்தில் தனது கைப்பாவைகள் பலரை பதவியில் அமர்த்தினார். இருப்பினும் மக்களின் தொடர் போராட்டம் மற்றும் எழுச்சியின் விளைவாக 1989 இல் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு ஆட்சியை கைப்பற்றியது. இந்தக் குழு பர்மாவில் அமைதியையும் - வளர்ச்சியையும் நிலை நாட்டப் போவதாக கூறிக் கொண்டு ‘அரசு அமைதி - மற்றும் வளர்ச்சிக் கவுன்சில்’ என்ற பெயரில் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவின் (ஜூன்டா) ஆட்சியாக தன்னை மாற்றிக் கொண்டு புதிய வடிவம் எடுத்தது. அதன் தற்போதைய சர்வாதிகாரிதான் ‘ஜெனரல் தான் ஷா’.
1988- 89களில் பர்மாவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் வீறு கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஆங் சாங் சூ குயி-இன் தாயாரின் உடல் நிலை பாதிப்படைந்ததைக் கேள்வியுற்று சூ குயி தன்னுடைய கனவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பர்மாவிற்கு திரும்பினார். ஆங் சான் சூ குயி-யின் தந்தை ஆங் சான் பர்மிய மக்களின் அடையாளம். அந்த பாரம்பரியத்தில் வந்த ஆங் சான் சூ குயி-யை சந்திக்க மக்கள் சாரை சாரையாக வந்தனர். அத்தோடு நாட்டில் நிலவும் அடக்குமுறை, சர்வாதிகாரம் மற்றும் தங்களது துன்ப துயரங்களை விளக்கியதோடு, அவருக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
பர்மாவின் அப்போதைய குழப்பமான அரசியல் நிலையும், போராட்ட சூழலும்தான் ஆங் சான் சூ குயி-யை களத்திற்கு இழுத்து வந்தது. உழைக்கும் மக்களோடும், போராடும் மாணவர்களோடும் கரம் கோர்த்த ஆங் சான் சூ குயி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜனநாயகப் பாதையில் பர்மாவை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கினார். இதற்கு நாடு முழுவதும் பலத்த ஆதரவு கிடைத்தது. அத்தோடு தனது ஆதரவாளர்களைக் கொண்டு என்.எல்.டி. - நேஷனல் லீக் பார் டெமாக்ரசி (ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். பல்வேறு ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இரத்தக் கறை படிந்த 88
இதைத் தொடர்ந்து வீறு கொண்டு எழுந்த போராட்ட பேரலையை ஒடுக்குவதற்கு திட்டமிட்ட இராணுவ அரசு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி 1988 அன்று (8.8.1988) 3000க்கும் மேற்பட்ட போராட்ட வீரர்களை துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கியது. ஜனநாயக ரீதியான அமைதி வழியிலான போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது இராணுவ சர்வாதிகார அரசு. இதில் 500க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களும், தேச பக்தர்களும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு பலியாகினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டே விரட்டியடிக்கப் பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆங் சான் சூகுயி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கணவர் மற்றும் குழந்தைகள் கூட அவரோடு இருப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை. இரத்த வெறி பிடித்த இராணுவ ஆட்சியாளர்கள் துப்பாக்கி முனையில் தங்களது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டனர்.
இவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்றும் கூட சிறைக் கொட்டடியில் அடைபட்டு கிடக்கின்றனர். ஆங் சான் சூகுயி தொடர்ந்து 17 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உலகிலேயே அதிக நாட்கள் சிறையிலிருந்த முதல் பெண் ஆங் சான் சூ குயி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை இன்னொரு நெல்சன் மண்டேலா என்று அழைக்கின்றனர். மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மின் கியோ நியாங் 1989 முதல் 2005 ஆம் ஆண்டு வரை சிறைவாசம் இருந்தார். இளைஞராக சிறைக்குச் சென்றவர் முதுமையோடு வெளியே வந்த காட்சி இராணுவ ஆட்சியின் அடையாளத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைத்தான் ‘88 ஜெனரேஷன்’ என்றும் அழைக்கின்றனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரது குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாய் போனது. அவர்களுக்கு உதவுவதற்காக தாய்லாந்திலிருந்து பல உதவிக்குழுக்கள் இயங்கி வருகிறது.
தற்போது நடைபெறும் ஜனநாயகத்திற்கான போராட்டத் திலும் மின் கியோ நியாங் ஈடுபட்டதால் மீண்டும் அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது இராணுவ அரசு.
கேலிக் கூத்தான ஜனநாயகம்!
1988ஆம் ஆண்டு நடைபெற்ற மகத்தான எழுச்சியைத் தொடர்ந்து 1990 மே மாதம் 27 ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்தியது இராணுவ அரசு. இத்தேர்தலில் 93 கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஆங் சான் சூ குயி-இன் ‘என்.எல்.டி. - ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி’ மகத்தான வெற்றி பெற்றது. 485 இடங்களில் 392 இடங்களை இக்கட்சி கைப்பற்றியது. மொத்த இடத்தில் இது 80 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவ ஆட்சியாளர்கள் எதிர்பாராத அளவில் இந்த வெற்றி அமைந்ததால், ஆங் சான் சூகுயி தலைமையில் ஜனநாயக அரசை அமைப்பதற்கு அனுமதிக்காமல், மக்கள் தீர்ப்பை தூக்கியெறிந்து ஆட்சி அதிகாரத்தை இராணுவ ஆட்சியாளர்களே தக்க வைத்துக் கொண்டுள்ளனர். முதலாளித்துவ சர்வாதிகாரம் என்பது ஜனநாயகத்திற்கு எப்போதும் நேர் விரோதமானது. சலகவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொண்டு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஜெனரல் தான் ஷா தலைமையிலான ஆட்சியாளர்கள் பர்மாவிற்குள் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கதவுகளை திறந்து விட்டனர். இதனால் பர்மாவின் எண்ணை வளம், அரிசி உற்பத்தி, தேக்கு மர ஏற்றுமதி, வைரச் சுரங்கங்கள் என அனைத்து துறைகளிலும் தாராளமாக அந்நியர்கள் நுழைந்து கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டது.
கொள்ளை போகும் பர்மிய வளம்
அமெரிக்காவின் ‘ச்செர்வான்’ ஆயில் நிறுவனமும், பிரான்சின் ‘டோட்டல்’ நிறுவனமும், தாய்லாந்தின் ‘ஃபேம்’ நிறுவனமும் எண்ணை வளத்தை பங்கு போட்டு கொண்டன. மேலும் தாய்லாந்து வழியாக பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டு அந்நாட்டை மொத்தமாக சுரண்டி வருகின்றனர். பர்மாவிலிருந்து 25 சதவீதம் துணியை அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் டாலர்களை கொண்டு இராணுவ அரசு தனது படை பலத்தை பெருக்கிக் கொள்வதையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகிறது. தற்போது மியான்மர் - பர்மா இராணுவத்தில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு நவீன ரக அயுதங்களையும் வாங்கி குவித்து வருகிறது.
இராணுவ ஆட்சியாளர்கள் 1997 ஆம் ஆண்டு முதல் அரசின் பட்ஜெட் - வரவு செலவு கணக்கை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் மொத்த வருவாயில் 40 - 60 சதம் வரை இராணுவத்திற்கே செலவழிக்கப் படுகிறது. கல்விக்கும் - சுகாதாரத்திற்கும் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மொத்தத்தில் இராணுவத்திற்கும் அவர்களது குடும்பத்திற்கும் வாரியிறைத்து தங்களது ஆட்சி அதிகாரத்தை துப்பாக்கி முனையில் தக்க வைத்துக் கொள்கிறது பர்மிய அரசு.
அந்நாட்டின் வேலையிண்மை தற்போது 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும், 10 சதவீதம் செல்வந்தர்களிடம் அந்நாட்டின் மொத்த வருவாயில் (ஜி.டி.பி.) 32.4 சதம் செல்வம் குவிந்துள்ளது. அதேசமயம் 10 சதவீதம் உழைக்கும் மக்களிடம் வெறும் 2.8 சதவீதமே சென்றடைகிறது. அரிசி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை வகித்த பர்மா இன்றைக்கு ஓபியத்தை (போதைப் பொருள்) ஏற்றுமதி செய்து வருவதில் இருந்தே இராணுவ ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நிலையை உணர முடியும். ஓபியம் ஏற்றுமதியில் முதலிடத்தை வகிப்பது அமெரிக்க வழியிலான ஜனநாயகம் நடைபெறும் ஆப்கானிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் திரு. வால்கவ் ஹெவல் மற்றும் திரு. டெஸ்மண்ட் எம். டிட்டு என்ற இரு நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர்கள் பர்மா குறித்து ஆய்ந்து ஐ.நா.விற்கு சமர்ப்பித்த அறிக்கையில் பல அதிர்ச்சிசூட்டும் தகவல்கள் வெளியா கியுள்ளது. குறிப்பாக, அந்நாட்டு மக்கள் தொகையில் 75 சதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பதாக தெரி வித்துள்ளனர். ஐந்து வயதிற்கு உட்பட்ட 36 சதவீத பர்மிய குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதாகவும், மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் 5 ஆம் வகுப்பு வரைகூட பள்ளி கல்வியை முடிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பர்மா அகதிகளில் 5 இலட்சம் பேர் தாய்லாந்திலும், 15,000 பேர் பங்களாதேஷிலும், 60,000 பேர் இந்தியாவிலும், 25,000 பேர் மலேசியாவிலும் மேலும் 2,50,000 பேர் இசுலாமிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர சின்ஸ், கச்சின்ஸ், ஷான், கரன்ஸ் போன்ற சிறுபான்மை இன மக்களை அவர்களது வாழிடங்களி லிருந்து இடம் பெயர வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள சிறுபான்மை தேசிய இனத்தவரிடையே பகைமையை உருவாக்கி, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி வருவதோடு, பர்மியர்கள் என்ற தேசிய அடையாளத்தையும் அழித்து வருகின்றனர். மேலும், 2500க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இராணுவ ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் ஊதாரித் தனத்தாலும், அந்நிய நிறுவனங்கள் பர்மாவின் செல்வத்தை கொள்ளையடித்துச் செல்வதாலும் ஏற்பட்ட நெருக்கடியின் ஒரு பகுதியாகத்தான் தற்போதைய பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும், அதையொட்டிய போராட்டமும் விண்ணை கீறிக் கொண்டு வந்துள்ளது.
துப்பாக்கி முனைகளை எதிர் கொள்ள அந்நாட்டின் புத்த துறவிகள் அமைதியான வழியில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 88 ஆம் ஆண்டு அவர்கள் போராட்டக் காலத்தின் போது இராணுவ ஆட்சியாளர்களின் குடும்ப விழாக்களில் எதிலும் பங்கேற்கப்போவதில்லை என்றும், மேலும் பாரம்பரிய மத ரீதியான சடங்குகளைக் கூட நடத்த மாட்டோம் என்றும், அவர்கள் வழங்கும் எந்த கொடையையும் ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்தனர். அத்தகைய போராட்ட வழி முறைகளையும் தற்போது கையாண்டு வருகின்றனர்.
பர்மா கலாச்சார முறைப்படி அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் புத்த துறவியாக செயலாற்று வதற்கு ஒருவரை அனுப்பி வைப்பது வழக்கம். பர்மா இராணுவத் திற்கு நிகராக அமைப்பு ரீதியாக திரண்டுள்ளவர்கள் புத்த துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 5 லட்சம் புத்த துறவிகள் அந்நாட்டில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஜனநாயக போராளி ஆங் சான் சூ குயி மற்றும் இதர ஜனநாயக அமைப்புகளின் போராட்டங்களுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றனர். பர்மாவில் நடைபெறும் ஜனநாயக போராட்டத் திற்கு உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள் ஆதரவு இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் பர்மாவிற் கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு இந்திய அரசும் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஏகாதிபத்திய சக்திகள் அந்நாட்டின் மீது கொண்டு வரும் எந்தவிதமான பொருளாதார தடைகளையும் ஏற்க முடியாது என்று வலியுறுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், பர்மாவில் கைது செய்து பல வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள், புத்த துறவிகள் மற்றும் போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அந்நாட்டில் ஜனநாயக அரசு அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
அத்தோடு, பர்மாவின் ஜனநாயகத்தை புதைகுழிக்கும் அனுப்பும் அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவான பர்மாவின் அரசியல் சாசன சட்டத்தையும் திருத்த வேண்டும் என்று அங்குள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.
20ஆம் நூற்றாண்டு காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மகத்தான பங்கினை ஆற்றியது. 21ஆம் நூற்றாண்டு பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேஷியா என பல்வேறு நாடுகளில் நிலவும் இராணுவ ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் அந்தோனியா கிராம்சி கூறியது போல், ‘சோசலிசத்திற்கான போராட்டத்தில் நொடிப் பொழுது கண்ணயர்ந்தால் கூட பாசிசம் எனும் கொடுந் தண்டனை நம்மை வந்து சேரும்’ என்ற உன்னதமான கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பர்மா விஷயத்தில் உணர முடிகிறது.
இறுதியா, இந்தியாவிலும் கூட பிற்போக்கு ஜனநாயக சக்திகள் சமீப ஆண்டுகாலமாக தற்போது நிலவும் ஜனநாயகத்திற்கு எதிராக தொடர் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். குறிப்பாக, ‘இரு கட்சி ஆட்சி முறை’, ‘ஜனாதிபதி ஆட்சி முறை’, ‘நிலையான அரசு - ஐந்தாண்டுகளுக்கு நீடித்த ஆட்சி முறை’ போன்ற கோஷங்களை முன் வைப்பதை பார்க்கிறோம். இவையெல்லாம் உழைப்பாளி மக்களின் நலன்களை காப்பதற்காக அல்ல; மாறாக, ஏகாதிபத்திய - பெருமுதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் தங்கு தடையற்ற சுரண்டலை பாதுகாப்பதற்கே. எனவே, இந்திய உழைப்பாளி மக்கள் விழிப்போடு இருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் உறுதியோடு செயலாற்ற வேண்டியுள்ளது.
இந்திய மார்க்சிய அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கூறுவதுபோல், ‘ஜனநாயகம் வர்க்கப் போராட்டத்தின் களம்.’ எனவே அதனை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாம் முன்னிற்க வேண்டும். பர்மாவில் நடைபெறும் ஜனநாயகத்திற் கான போராட்டத்திற்கு நேசக்கரம் நீட்டுவோம்! வெற்றிபெற வாழ்த்துவோம்!!
ஆதாரம் :
1. பர்மாவின் ஜனநாயகப் போராளி, ஆங் சான் சுய் குய்,
என். ராமகிருஷ்ணன், சவுத் ஏசியன் புக்ஸ், 1992.
2.டெக்கான் க்ரானிக்கல்
3.பிரண்ட் லைன்
4.பீப்பிள்ஸ் டெமாக்ரசி
5.http://en.wikipedia.org/wiki/Burma
6.http://www.cpa.org.au
7.http://www.zmag.org
8.http://www.CrisisGroup.org