இந்துத்துவ சோதனைக் கூடத்தில் சமீபத்தில் நிகழ்த்தியுள்ள புதிய சோதனை நாடு முழுவதும் உள்ள கலைஞர்களை, கலை - இலக்கியவாதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்துத்துவ மோடியிசத்தின் போலி என்கவுண்டர் குறித்த அச்சு ஊடகத்தின் மை உலர்வதற்குள், படைப்புச் சுதந்திரத்தின் மீது மற்றுமொரு தாக்குதலை தொடுத்துள்ளது.
குஜராத்தில், பரோடாவில் உள்ள சர்வதேச அளவில் புகழ் பெற்ற மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஓவியக் கல்லூரி மாணவர் சந்திரமோகனும், அவரது படைப்பும் இந்துத்துவ கலாச்சார காவலர்களின் கொடுங்கரங்களுக்கு பலியாகியுள்ளது.
ஓவியம் மற்றும் நுண்கலையில் முதுநிலை பட்டப் படிப்பு (Post Graduate)பயிலும் மாணவர்களின் இறுதியாண்டுத் தேர்வின் ஒரு பகுதியாக அவர்களால் படைக்கப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, மதிப்பீட்டுக்குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களின் தேர்ச்சி உறுதி செய்யப்படும். இத்தகைய நிகழ்வு அனைத்து கல்லூரிகளிலும் இருக்கும் ஒரு தேர்வு முறை.
இதுபோன்ற ஒரு தேர்வை புகழ்பெற்ற மகாராஜா சாயாஜிராவ் கல்லூரியில் மே 9ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் சந்திரமோகன் என்ற மாணவர் தன்னுடைய அரிய படைப்பான மூன்று ஓவியங்களை காட்சிக்கு வைத்திருந்தார். சந்திரமோகனின் தூரிகைக் காட்சிகள் இந்து கடவுளர்களை அவமதிப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறிக் கொண்டு, பா.ஜ.க. - வி.எச்.பி. அமைப்பின் உள்ளூர் தலைவரான நிராஜ் ஜெயின் தலைமையில் வன்முறை கும்பல் எந்தவிதமான முன்அனுமதியும் இன்றி கல்லூரிக்குள் புகுந்து தேர்வுக்காக வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை சிதைத்ததோடு, கல்லூரிக்குள் இருந்த பழம் பெருமை வாய்ந்த ஓவியங்கள், சிற்பங்களையெல்லாம் அடித்து நொறுக்கி அராஜகம் புரிந்ததோடு, போலி என்கவுண்டர் புகழ் குஜராத் காவல்துறையை வைத்து மாணவன் சந்திரமோகனை கைது செய்து, அவர் மீது ஐ.பி.சி. 153, 114, 295ஏ மற்றும் 295 பி. பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து நான்கு நாட்கள் - ஐந்து இரவுகள் சிறையிலடைத்துள்ளது. மாணவர் சந்திரமோகன் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த ஓவியருக்கான லலித்கலா அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரமோகனை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் - கலைஞர்கள் - அறிவுஜீவிகளைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தொடர்ந்து போராட்டம் நடத்திய பின்னணியில், தற்போது ரூ. 5000 பிணைத் தொகை ஜாமினில் வெளிவந்துள்ளார்.
இந்த சம்பவத்தை ஓவியக்கல்லூரி ஆசிரியரும், கல்லூரி முதல்வருமான டாக்டர் சிவாஜி பணிக்கர் கடுமையாக கண்டித்ததோடு, சந்திரமோகனுக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற காரணத்திற்காக அவரையும் பல்கலைக் கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். தற்போது அவர் இந்துத்துவ நச்சுக்கரங்களால் கொலை செய்யப்படுவரோ என்ற அச்சத்தோடு, தலைமறைவாக இருக்கிறார்.

கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இந்துத்துவ பாசிஸ்ட் நிராஜ் ஜெயினுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் சாயாஜிகஞ்ச் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லூரி நிர்வாகமும் இத்தகைய வன்முறைகும்பலுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த முன்முயற்சியும் எடுக்காதது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சந்திரமோகன் செய்த தவறுதான் என்ன? அவர் என்ன நரேந்திர மோடியின் பாசிச படை கர்ப்பினி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவையும், தாயையும் கொன்ற கொடூரத்தையா காட்சியாக்கினார்? அல்லது 3000 இசுலாமியர்களை சொந்த மாநிலத்திலேயே அகதியாக்கப்பட்ட கொடூரத்தையா சித்திரம் தீட்டினார்? அல்லது இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் நிகழ்த்திய கற்பழிப்பு வன்மத்தை வண்ணமாக்கினாரா? இல்லையே!
கடந்த ஐந்தாண்டுகளாக அவர் கற்ற ஓவியக் கலையில், தன்னுடைய கற்பனைத் திறனோடுகூடிய படைப்பை உருவாக்கினார். இத்தகைய படைப்பை படைக்கும் போது இது இந்து மதத்திற்கு எதிரானது என்றோ அல்லது இவ்வாறு செய்தால் அது சமூக குற்றம் என்றோ உணர்ந்து செய்யவில்லையே! ஏற்கனவே ஒரிசாவில் உள்ள சூரியக்கோவிலில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளைப் போல் குஷன் முக லிங்கம் - முகமூடி அணிந்த லிங்கத்தையும், துர்கா-விஷ்ணுவை அரை நிர்வாண கோலத்திலும், இயேசுவின் சிலுவையை - அன்டைட்டில் என்ற தலைப்பலும் தனது படைப்பை வைத்திருந்தார்.
இந்த படைப்புகள் எப்படி இந்து மதத்தையும், இந்துக்களின் உணர்வையும் புண்படுத்துகிறது என்று தெரியவில்லை. நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து இந்துக்கோவில்களின் சுவர்களிலும், அதன் கோபுரங்களிலும் தீட்டப்பட்டுள்ள, சிற்பிகளால் படைக்கப்பட்டுள்ள சித்திரங்களை விட ஆபாசமாகவா (நாம் அதனை ஆபாசமாக கருதவில்லை; அது கலையின் உன்னதமான வெளிப்பாடு) இவர் வரைந்து விட்டார். மனித சிந்தனைக்கு அப்பாற்றபட்ட முறையில் புனைவது போன்ற சிலைகளைக்கூட இந்துக் கோவில்களில் காண முடிகிறதே! இதையெல்லாம் இந்துத்துவ சக்திகள் சிதைத்துவிட்டதா? அல்லது இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கோவில்களையெல்லாம் குப்புறப் புரட்டப்போகிறதா?
நிர்வாணம் ஒன்றும் பா.ஜ.க.விற்கு புதியதல்லவே! இதே குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷியின் கிலு, கிலு நிர்வாண லீலைகளை - ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை சி.டி. மூலம் மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க. வெள்ளி விழாவின் போது அம்பலப்படுத்தியதெல்லாம் பா.ஜ.க.வுக்கு நினைவில்லையா? அதுவும் சஞ்சய் ஜோஷி ஆர்.எஸ்.எஸ்.இன் கட்ட பிரம்மச்சாரியாச்சே!
எனவே, பா.ஜ.க. - சங்பரிவாரத்திற்கு நிர்வாணம் ஒன்றும் புதியதல்ல; அவர்களது இந்துத்துவ கலாச்சார சிந்தனை பாசிசத்தை அடிப்படையாக கொண்டு, சிறுபான்மை மக்களை, ஜனநாயக சக்திகளை, மதச்சார்பற்ற சக்திகளை, இடதுசாரி சிந்தனை கொண்டோரை வேட்டையாட எப்போதும் கடப்பாரையோடு அலைந்துக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிக் கூட்டம்தானே!
அது எப்போதுமே கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எதிரானதே என்பதை பயர், வாட்டர் படங்களின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோதும், ஓவியர் எம்.எப். ஹூசைனின் ஓவியக் கூடாரத்தை அடித்து நொறுக்கியபோதும், காதலர் விழாக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்போதும் அவர்களது நிர்வாணமாகிப்போன பாசிச சிந்தனை வெளிப்பட்டது!

இந்துத்துவத்தின் வேர்கள் மனிதகுலத்திற்கே எதிரானது. அது இட்லரை மோடியின் வடிவில் இந்தியாவில் உலவ விட்டுள்ளது. உலகை உலுக்கும் இன்னொரு நூரன்பர்க்க விசாரணை இந்திய வரலாற்றிலும் நடைபெறும்! அந்தநாள் மிக விரைவில்!
இது தொடர்பான சில இணைப்புகள்: