Showing posts with label இந்துத்துவ பாசிசம். Show all posts
Showing posts with label இந்துத்துவ பாசிசம். Show all posts

August 26, 2008

கலாச்சார பாசிசம்!






பாசிசம் சகிப்புத்தன்மையற்றது. அது ஒரு இனத்தின் மீது அல்லது வேற்று மதத்தின் மீது அல்லது வேற்று நாட்டு மக்கள் மீது எப்போதும் நெருப்பையும் - வெறுப்பையும் உமிழ்ந்துக் கொண்டிருக்கும். குறிப்பாக இந்த பாசிசஸ்ட்டுகள் கலாச்சாரத்துறை மீதுதான் அளவுகடந்த வெறுப்பை கக்குவார்கள். கல்வித்துறை, கலை, இலக்கியம் என்று எதையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

இந்தியாவில் இந்துத்துவ பாசிசம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இல்லாவிட்டாலும் அதன் பாசிச வெறிச் செயல் மண்டையில் ஆழமாக ஊறியுள்ளதால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி தங்களது வெறித்தனத்தை காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் சஹமத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச ஓவிய கண்காட்சியில் புகுந்து எம்.எப். ஹுசைனின் ஓவியங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

சர்வதேச அளவிலான ஓவிய கண்காட்சி இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய கலை மாநாடு 2008 என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் 35 அரங்கங்களில் 400க்கும் மேற்பட்ட ஓவிய மற்றும் கலை கண்காட்சிகளை அமைத்திருந்தனர். சர்வதேச புகழ்பெற்ற ஓவியர்கள் இதில் பங்கேற்று தங்களது பண்பாடு, கலை மற்றும் அழகியல் வெளிப்பாடுகளை அற்புதமாக அமைத்திருந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில்தான் இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹுசைனின் ஓவியமும் இடம் பெற்றிருந்தது.

சீரி ராம் சேனா என்ற சங்பரிவார - ஆர்.எஸ்.எஸ். கொலைவெறிக் கூட்டம் பார்வையாளர்கள் போன்று 10 பேர் உள்ளே நுழைந்து திட்டமிட்டு எம்.எப். ஹுசைனின் ஓவியத்தை சேதப்படுத்தியுள்ளனர். உடைத்துள்ளனர். கிழித்தெறிந்துள்ளனர். தலைநகர் டெல்லியிலேயே சங்பரிவாரம் இத்தகைய கோர மதவெறித்தனத்தை காட்டுகிறது என்றால் நாட்டின் மற்ற இடங்களில் அதன் வெறித்தனத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்.

சில மாதங்களுக்கு முன்பு இதே டெல்லியில்தான் மதவெறியர்கள் - பாசிச சன்னியாசி கும்பல் ஒன்று சி.பி.எம். அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. டெல்லியில் உள்ள போலீசாருக்கும், உளவுத்துறையினரும் சங்பரிவாரத்தின் நடவக்கைகளை கண்காணிக்கிறார்களா? இல்லையா? என்ற சந்தேகமே மேலெழுகிறது. இவையெல்லாம் அரசியல் நடவடிக்கை என்று வேடிக்கை பார்க்கிறார்களா? இந்த பாசிச மதவெறியர்களின் செயலினை மத்திய அரசும், மாநில அரசுகளும் வேடிக்கை பார்ப்பது அதன் மதவெறித்தனத்திற்கு மறைமுகமாக தீனி போடுவதாகவே ஆகும்.

ஏதே இந்த மதவெறியர்கள் இசுலாமியரான ஹுசைனுக்கு எதிராக மட்டும்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த பாசிச சங்பரிவார கும்பல் ஏற்கனவே சாயாஜீ சரபோஜீராவ் ஓவிய கல்லூரின் இறுதித் தேர்விலி சந்திரமோகன் என்ற ஓவிய கல்லூரி மாணவன் வைத்த ஓவியங்களை அடித்து நொறுக்கியதோடு. அந்த அப்பாவி மாணவன் மீதும் தாக்குதல் நடத்தியது. எனவே பாசிசம் என்பது எதிர் கருத்தை ஒருபோதும் அனுமதியாது. அதற்கு ஜனநாயக வடிவம் என்றால் என்னவென்றே தெரியாதுது. அவர்களிடம் நாம் ஜனநாயகத்தை ஒருபோதும் எதிர்பார்க்க கூடாது.

 இந்த மதவெறியர்களின் பாசிச நடவடிக்கைகளை இந்த ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள யேல் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற விமர்சகர் ராபர்ட் ஸ்டோர் கடுமையாக கண்டனம் செய்துள்ளார். அவர் கூறும் போது, சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும் இதுபோன்ற கலை நடவடிக்கைகளை கூட அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மதச்சார்பற்ற கொள்கைகளுக்காக நிற்பதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இதர ஜனநாயக சக்திகளோ இந்த இந்துத்துவ மதவெறியர்களுக்கு எதிராக தங்களது சுண்டு விரலைக் கூட நீட்ட வில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளதோடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கலாச்சார பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள ஓவியர்கள் ஓரணியில் திரள வேண்டும். இவர்களால் எத்தனை ஓவியங்களை சிதைக்க முடியும். உங்களது தூரிகைகள் இந்த வெறியர்களின் முகத்திரையை மக்கள் முன் அம்பலப்படுத்துவதாக அமையட்டும். ஒரு ஓவியர் ஒரு ஓவியம் என்று இந்த மதவெறியர்களுக்கு எதிராக படைத்து அதனை அனைத்து மீடியாக்களிலும் இடம் பெறச் செய்ய வேண்டும். சாலையோரங்களில், வலைப்பதிவுகளில், பத்திரிகைகளில்... என்று அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த பாசிச வெறியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.