தாமதமான பதிவுக்கு வருந்துகிறேன். மெளனம் சில நேரங்களில் அடிப்படைவாத பிற்போக்கு சக்திகளுக்கு சாதகமாகக் கூடும்.
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழகத்தையும், குறிப்பாக தாய்மார்களின் உள்ளத்தையும் உலுக்கி விட்டது. இப்படியும் நடக்குமா? இவர்கள் மனிதப் பிறவிகளா? இவர்கள் படிப்பதற்காகத்தான் கல்லூரிக்கு செல்கிறார்களா? அல்லது ரவுடித்தனம் செய்வதற்கு செல்கிறார்களா? ரத்தத்தை உறைய வைக்கும் விலை மதிக்க முடியாத இந்த ஆவேச கேள்விகள் பொத்தம் பொதுவாய் எழுந்தாலும் இவைகள் யாருக்கு எதிராய் எழுப்பப்பட்டிருக்க வேண்டிய கேள்விகள்?
இவ்வளவுப் பெரிய வன்முறை சம்பவம் நடந்துக் கொண்டிருந்தபோது கைகட்டி, வாய்பொத்தி, செல்போனில் அளவளாவிக் கொண்டிருந்த காக்கிச் சட்டைகளுக்கு இதயம் இருக்கிறதா? ஏன் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள்? இவர்களுடைய கைகளைக் கட்டிப் போட்டது யார்? என்ற கேள்விகள் அலை அலையாய் இன்னும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் வழிபோக்கர்களாய் இருந்த மனிதர்களின் மனங்கள் பதைத்து போலீசே நடவடிக்கை எடு என்று கத்தியபோதும், கெ;"சியபோதும் கேளாக் காதினராய் முகம் மறைத்துக் கொண்ட காவல்துறை ஏன் அமைதிக் காத்தது? இன்றைக்கு விழுந்து விழுந்து நடவடிக்கை எடுப்பதாக தினமும் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த வேகத்தில் ஒரு சதவிகிதம் கூட ஏன் அப்போது இல்லையே என்ற கேள்விக்கு காவல்துறை என்ன சமாதானம் சொல்லப்போகிறது?
இந்த சம்பவம் குறித்து வினவு ஒரு அற்புதமான பதிவை எழுதியிருந்தார். அதேபோல் லக்கிலுக் திரு. ஆனந்த் டெல்டும்பேவின் உண்மைக் கண்டறியும் குழுவினரின் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு. இருப்பினும் நம் பங்கிற்கு இது குறித்து கருத்து சொல்லாமல் இருக்கலாமா? என்ற மண்டைக் குடைச்சல் உறுத்திக் கொண்டே இருந்தது...
இந்த சம்பவத்திற்கு யார் மூல காரணம் என்று ஆராய்வது புலனாய்வுத்துறையின் வேலை என்று ஒதுக்கித் தள்ள முடியுமா? முடியாது. முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினத்தையொட்டி - கல்லுரியில் தேவர் ஜாதியைச் சார்ந்த மாணவர்கள் ஒரு விழாவை நடத்தினர். அது அவர்களது உரிமை என்றுக் கூட சொல்லலாம். ஆனால் அந்த விழாவுக்காக அடிக்கப்பட்ட சுவரொட்டியில் "சென்னை சட்டக் கல்லுரி" என்று போட்டு விட்டனர். அதாவது டாக்டர் அம்பேத்கார் என்ற பெயரை அவர்கள் உச்சரிக்கக்கூட தயாராக இல்லை என்பதை காட்டி மறைமுகமாக டாக்டர் அம்பேத்கரின் மீது மறைந்த பின்பும் தீண்டாமை என்ற இழிவை திணித்ததுதான் வேதனையானது.
ஜாதிய அமைப்பில் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டைகளான தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட - தலித் ஜாதியைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சுவரொட்டியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தீண்டாமை குறித்து கேள்வி எழுப்புகின்றனர். என்னை ஏற்கவில்லையென்றாலும் பரவாயில்லை. என் தலைவனை கூடவா ஏற்க மாட்டீர்கள் என்ற உள்ளக் கொதிப்பு நாடி நரம்புகளில் பரவுகிறது. இயல்பாகவே மாணவப் பருவம் தனது கருத்திற்கான எதிர்வினையை நாடித்துடிப்புகளை விட வேகமாக செயலில் காட்டும் பருவம். அந்த உணர்வுகளை - அதுவும் அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட அடிமைத்தனத்திற்கு எதிராக இன்னும் போராட வேண்டியிருக்கிறதே என்ற ஆவேசத்தோடு அந்த மாணவர்கள் தங்களது கருத்துக்களை நயமாக உணர்த்துகின்றனர்.
இருப்பினும் இது குறித்து ஆதிக்க ஜாதி மனோபவம் கொண்ட அந்த மாணவர்கள் இதனை அலட்சியப்படுத்துவதோடு, தலித் மாணவர்களுக்கு எதிராக தாக்குதலையும் தொடுக்க தொடர்ந்து முனைகின்றனர். டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களான ஆறுமுகம் - பாரதி கண்ணன் ஆகியோர் இதற்கு தொடர்ந்து தலைமை தாங்குகின்றனர். குறிப்பாக பாரதி கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே பதியப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மாணவர்கள் தலித் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வதற்காக தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக புகைந்துக் கொண்டிருந்த இந்த பிரச்சனை குறித்து அக்கல்லூரி முதல்வருக்கும் தெரியும். காவல்துறை உளவுத்துறைக்கும் தெரியும். இருப்பினும் இதில் உடனடியாக தலையிட்டு - உரிய நேரத்தில் ஆற்றுப்படுத்த தவறி விட்டனர். நிலைமை கையை மீறிப் போய்விட்டது.
குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அன்று ஆறுமுகமும் - பாரதி கண்ணனும் கத்தியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளனர். இது குறித்த தகவல் கல்லூரி முதல்வருக்கும், காவல்துறையினருக்கும் தெரிந்துள்ளது. சட்டக் கல்லூரியில் வன்முறைச் சம்பவம் நிகழப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் கேமிரா சகிதமாக மீடியாக்குழுவினர் ஆஜராகியுள்ளனர்.
இந்நிலையில் கல்லூரிக்குள் தேர்வு எழுதுவதற்காக தலித் மாணவர்கள் வந்தால் அவர்களை உள்ளே விடக்கூடாது என்ற நோக்கில் வெறித்தனத்தோடு திரிந்துள்ளனர் ஆதிக்க ஜாதி மாணவர்கள். அத்துடன் நிற்காமல் தலித் மாணவர்களை கத்தியை காட்டி தொடர்ந்து மிரட்டி கல்லூரிக்குள்ளேயே ஓட ஓட விரட்டியுள்ளதோடு ஒரு மாணவணை கத்தியால் கிழித்தபோது அவரது காது அறுபட்டுள்ளது. இந்நிலையில்தான் தங்களது பாதுகாப்பிற்காக தலித் மாணவர்கள் தாக்குதலைத் தொடுத்தனர். அப்போது கூட பாரதி கண்ணன் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை பாய்ந்து பாய்ந்து கத்தியை நீட்டி தாக்குவதை மீடியாவில் பார்க்க முடிந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் தலித் மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளான பாரதி கண்ணன் மற்றும் ஆறுமுகம் இருவரையும் தங்களது ஆத்திரம் தீரும் வரை அடித்துள்ளனர்.
இந்த காட்சியை திரும்பத் திரும்ப மீடியா காட்டிக் கொண்டே இருந்தது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும், ஆசேகத்தையும் உண்டு பண்ணியது. இந்த இடத்தில் ஒரு விசயத்தை நாம் குறிப்பிட்டேயாக வேண்டும். பாரதி கண்ணன் கீழே விழுந்த போது தடியால் அடித்த மாணவர்களில் ஒருவர் கூட அவரது மண்டையை தாக்க முனைவில்லை என்பதுதான். அதாவது அவர்களது நோக்கம் அவரை கொல்ல வேண்டும் என்பதாக இருந்திருந்தால் தலையில் அல்லவா தாக்கியிருப்பார்கள் என்ற கேள்வியை தொலைக்காட்சியைக் கண்டவர்கள் எழுப்பும் போது அதில் நியாயம் இருப்பதாகத்தான் தெரிகிறது.
இறுதியாக மாணவர்கள் எதிர்கால மன்னர்கள் என்று அழைப்பது தமிழகத்து வழக்கம். நாட்டை ஆளப் பிறந்த மாணவர்கள் ஜாதிய விஷத்திற்கு ஆட்பட்டு தங்களது மூளையை விஷமாக்கிக் கொண்டதால் வந்த விபரீதம். இதற்கு யார் காரணம்?
நமது சமூக அமைப்பும், இந்த ஜாதியத்தால் பலம்பெறக்கூடிய ஆதிக்க சக்திகளின் அரசியல் உள்நோக்கமும்தான். இளம் உள்ளத்திலேயே ஜாதிய விஷத்தை விதைத்து விட்டால் பின்னர் அது மரமாகி எதை கனிய வைக்கப் போகிறது?
மாணவர்களை கல்லூரிக்குள் ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரிக்கும் வகுப்புவாத மாணவர் அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். மதச்சார்பற்ற முறையில், ஜாதிய பாகுபாடற்ற முறையில் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் மாணவர் அமைப்புகளை அடையாளப்படுத்த வேண்டிய தருணம் இதுவே.
கருப்பின மக்களை அடிமைப்படுத்தி - உயிர்களைப் பறித்து நான்காம்தர குடிமக்களாக நடத்தி வந்த அமெரிக்காவில் கூட இன்றைக்கு ஒபாமா ஒற்றுமையின் சின்னமாக முடி சூட்டிக் கொண்டுள்ளார். இத்தகைய மாற்றத்தை உலகமே வரவேற்றுள்ளது. ஆனால் நமது நாட்டில் ஜாதிய ஏற்றத் தாழ்வு மனிதனை மனிதன் அங்கீகரிக்காத போக்கு தொடர்வதற்கான மனுவாத அரசியலை எப்போது முடிவுக்கு கொண்டு வரப்போகிறோம்?
கல்வி தனியார்மயமாவதற்கு எதிராக சென்னையில் வலுவான போராட்டத்தை நடத்திய மாணவர்களின் ஒற்றுமை ஜாதிய பிரிவினைவாதத்திற்கு இட்டுச் சென்றது எது? இன்றைய உலகமயம் அரசியல் மாணவர்கள் மற்றும் வாலிபர்களிடையே ஒற்றுமை ஏற்படுவதை விரும்பவில்லை. பிரிவினை அரசியல் அதன் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. எனவே, மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திடவும், சுமூகமான முறையில் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளை அரசும் - மாணவர் சமூகமும் உருவாக்கிட வேண்டும்.
மேலும் ஜாதிய மற்றும் மதவாத வழியில் மாணவர்களை தூண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்.
ஒரு காலத்தில் பிரிட்ஷ் ஆட்சியாளர்களால் குற்றப் பரம்பரையினர் என்று இழிவுபடுத்தப்பட்டு - கள்ளர்கள் என்று பெயரிடப்பட்டதை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் உட்பட மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி, ஜீவானந்தம் உட்பட பலரும் தொடர்ந்து போராடியதால்தான் அந்த சட்டம் குப்பையில் வீசப்பட்டது. இப்படித்தான் ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கான இழிவிலிருந்து விடுபடுவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆரோக்கியமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் தேவை சமூக அமைதி. இது எப்போது வரும்? சமூகத்தில் எப்போது ஏற்றத் தாழ்வு - ஜாதிய பாகுபாடு ஒழிகிறதோ அப்போதுதான் வரும். எனவே, தொடரும் தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான மாணவர்கள் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும். இதற்கு ஜனநாயக சக்திகள் சிங்காரவேலர், பி. சீனிவாசராவ், பெரியார் போன்று தலைமை தாங்க வேண்டும். அது ஏதோ தலித்துக்களின் பிரச்சனை என்று பாராமுகமாய் இருப்பதிலிருந்து விடுபட வேண்டும்.
எனவே ஆதிக்க சாதி ஒன்று என்று சொல்லிக் கொள்ளும் ஜாதியும் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதிதான். அல்லது அதனை விட மேல் ஜாதியினரால் இன்றைக்கும் கேவலப்படுத்தப்படும் ஜாதிதான். மொத்தத்தில் மனுவின் பார்வையில் பிராமணீயத்திற்கு கட்டுப்பட்டவைகள்தான். நவீன இந்தியாவை உருவாக்கும் கனவு என்பது ஐ.டி. துறையில் சாதனைகள் நிகழ்த்துவதால் மட்டும் வந்து விடாது. அல்லது மேற்கத்திய உடைகளை உடுத்திக் கொண்டால் மட்டும் வந்து விடாது? புதிய சிந்தனைகளை மனித நேயச் சிந்தனைகளை நமக்குள் விதைத்துக் கொண்டால்தான் நாம் சந்திராயனை நோக்கிப் பயணிக்கும் மனிதனாவோம்!
8 comments:
keep writing. more such expressions are needed now.
தமிழ்நாட்டில் சாதியினால் மாணவர் வன்முறை. கேரளா,மே.வங்கத்தில்
கட்சி அரசியலால் மாணவர்களிடையே
வன்முறை.கேரளாவில் மாணவர் அமைப்புகள் கட்சி ரீதியாக மோதிக்
கொண்டு,வன்முறையில் இறங்குவதில்லையா.ஆகவே சாதி அரசியல்,கட்சி அரசியல்-இந்த இரண்டையுமே கல்வி
நிலையங்களில் முற்றாக தடை செய்யவேண்டும்.ஒப்புக்கொள்கிறீர்களா?
'இன்றைய உலகமயம் அரசியல் மாணவர்கள் மற்றும் வாலிபர்களிடையே ஒற்றுமை ஏற்படுவதை விரும்பவில்லை. பிரிவினை அரசியல் அதன் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.'
உலகமயம் இந்திய மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்
எண்ணற்ற வாய்ப்புகளை தந்துள்ளது.அதை பயன்படுத்திக்
கொள்பவர்கள் முன்னேறுகிறார்கள்.
உள்ளூர் சாதி அரசியலை வளர்ப்பது எல்லாக் கட்சிகளும்.கம்யுனிஸ்ட்கள் கட்சி அரசியலை கேரளாவில் பள்ளியிலிருந்தே மாணவர்களிடம்
புகுத்துகிறார்கள்.ஆக எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி
நல்ல கொள்ளி.
மதிப்புமிகு டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு வணக்கம்.
நான் தங்களது உளவியல் சார்ந்த கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகன். குறிப்பாக தங்களது 10 மாடு தத்துவம் மிகவும் பிடித்தமானது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தங்களது கருத்துக்கு மிக்க நன்றிகள்.
தமிழ்நாட்டில் சாதியினால் மாணவர் வன்முறை. கேரளா,மே.வங்கத்தில்
கட்சி அரசியலால் மாணவர்களிடையே
வன்முறை.கேரளாவில் மாணவர் அமைப்புகள் கட்சி ரீதியாக மோதிக்
கொண்டு,வன்முறையில் இறங்குவதில்லையா.
அனானி நன்பரே!
பொதுவாக வன்முறை என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இன்றைக்கு ஏகாதிபத்தியம் வன்முறையை மக்கள் மீது திணிக்கும் போது அதற்கு எதிரான வன்முறை அகிம்சையாக மாறும். சரி, தமிழகத்தில் நடந்துள்ள சாதிய பிரிவினையால் ஏற்பட்ட வன்முறையையும் - கேரளாவில் அரசியலில் ஏற்படும் வன்முறையையும் முதலில் இணைத்துப் பார்ப்பது சரியான பார்வையல்ல.
இது சமூக அவலம். அதாவது பெரும் பகுதி உழைப்பாளி மக்களை மிருகத்தை விட கேவலமாக பார்க்கும் சாதிய அமைப்பின் கேடு. மனு வகுத்த நீதியாலும், அதற்கு முந்தைய நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சதியாலும் ஏற்பட்ட இந்த சாதிய அணுகுமுறை இன்றைக்கும் மனிதனை உளவில் ரீதியாக முடமாக்கிக் கொண்டே வந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த இந்துத்துவ சக்திகள் செத்துப்போன பசுத் தோலை உரித்தற்காக ஹரியானாவில் ஐந்து தலித்துக்களை உயிரோடு கல்லெறிந்து கொன்றார்கள். கயர்லா;"சியில் சகோதரனும் - சகோதரியும் எப்படி நிர்வாணப்படுத்தப்பட்டு - பாலியல் பலாத்காரத்தை ஏவி கொன்றார்கள் என்பதுதான் சாதிய கொடூரத்தின் உச்சம். எனவே இந்த சாதிய எச்சத்தை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்.
இத்தகைய ஒரு கொடூரமான சாதிய அமைப்பினால் ஏற்பட்டுள்ள வன்முறையை அரசியல் வன்முறையோடு ஒப்பிடுவது பாலுக்கும் - சுண்ணாம்புக்கும் உள்ள வித்தியாசத்திற்கு ஒப்பாகும். அரசியல் வன்முறை என்பது பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். அல்லது கொள்கை ரீதியாக உணரும் போது சரியாக்கிக் கொள்ளலாம். அங்கே வெறிக்கு இடம் இல்லை. ஆனால் சாதி அப்படியா அனானி நன்பரே! சிந்திக்கவும்.
உலகமயம் இந்திய மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்
எண்ணற்ற வாய்ப்புகளை தந்துள்ளது.அதை பயன்படுத்திக்
கொள்பவர்கள் முன்னேறுகிறார்கள்.
உள்ளூர் சாதி அரசியலை வளர்ப்பது எல்லாக் கட்சிகளும்.கம்யுனிஸ்ட்கள் கட்சி அரசியலை கேரளாவில் பள்ளியிலிருந்தே மாணவர்களிடம்
புகுத்துகிறார்கள்.ஆக எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி
நல்ல கொள்ளி.
ஐயா உலகமய பிரியரே! வணக்கம்.
உலகமயம் உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு சாதகமானதாக இருக்கலாம். ஆனால் இந்திய நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களை அது அழித்து வருகிறது. அது மட்டும் அல்ல. கிடைத்திருக்கிற வாய்ப்பும் கூட முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைச் சுரண்டலுக்குதான் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குறிப்பாக சாப்ட்வேர் துறையில் அமெரிக்காவில் அந்நாட்டு தொழிலாளி வாங்கும் சம்பளத்தில் 10 ஒரு பகுதிதான் இந்தியாவில் வழங்கப்படுகிறது. இந்தக் கூலி இங்குள்ள மிடில் கிளாசுக்கு பெரிய தொகையாக தெரியலாம். ஆனால் அவர் சுரண்டப்படுகிறார் என்பதை உணருவதற்கு உலகமயம் வாய்ப்பு ஏற்படுத்துவதில்லை. அதனால்தான் ஐ.டி. நிறுவனங்களில் தொழிற்சங்கம் கூடாது என்று சட்டம் போடுகிறார்கள். அது மட்டுமா? வீக் எண்ட் டூர் என்று கிடைக்கும் ஒரு நாளையும் சிந்திக்க விடாமல் செய்கிறார்கள்.... இதுதான் உலகமயம். அந்த உலகமயம் இன்றைக்கு தலைகீழாக நடப்பதை நாம் அமெரிக்காவில் பார்க்கிறோம். உலகமே இந்த நெருடிக்கடியால் தவிக்கிறது. இது ஊதிப் பெருக்கிய வெற்று பலூன்தான் என்பது நிரூபனம் ஆகிவிட்டது. எனவே இந்த உலகமயத்தால் வரும் கேட்டை கேரளாவில் நடைபெறும் ஆரோக்கியமான அரசியல் சூழலை சமமாக பாவிப்பது சரியான பார்வையல்ல. குறிப்பாக ஒரு உதாரணம். தமிழகத்தில் உள்ள திராவிட இயக்க அரசியல் பெரும் தலைவர்கள் பொறியியல் கல்லூரிகளின் கொள்ளைக் காடாய் தமிழகத்தை மாற்றி விட்டார்கள். அங்கே சாராயம் காய்ச்சுபவன் கூட கல்லுரி முதல்வனாக முடிகிறது. கொள்ளையடிக்க முடிகிறது. ஆனால் கேரளத்தில் அப்படியில்லை. தனியார் மயத்திற்கு கடுமையான எதிர்ப்பை அரசும் - மாணவர் அமைப்பும் இணைந்து நடத்துகிறது. அதனால் கேரளாவில் பொறியியல் கடை திறக்கப்படுவதில்லை. மேலும் 50 சதவிகிதம் அரசுக்கு உரிய சீட்டும், மீதம் உள்ள 50 சதவீதம் உள்ள சீட் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் நடத்துகிறார்கள். ஆனால் தமிழகம்! இதுதான் உலகமயம்.... அன்பரே.... உலகத்தை தரையில் கால் பதித்து பார்க்கவும். அன்னாந்து பார்ப்பதால் நம்முடைய கால் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் போக வாய்ப்புள்ளது.
எத்தனை புத்தன்கள் வந்தாலும், எத்தனை காந்திகள் வந்தாலும்,
எத்தனை பெரியார்கள், எத்தனை அம்பேத்கர்கள் வந்தாலும்,
இந்த சனம் திருந்தப் போவதில்லை. இதற்கு ஒரே வழி,
மொழிவாரி மாநிலம் கொடுத்ததைப் போல, சாதிவாரி மாவட்டங்கள்
கொடுத்தால் என்ன..? நான் சொல்வதை கோபிக்காமல் கேலி
செய்யாமல் யோசியுங்கள்.. ப்ளீஸ்..
Untoucability is abolished.Do you believe this? This is what Our Constitution says. The practice of untouchability is deciared an offence by Indian Constitution.But the father of the constitution has again been subjected to this.Unless and untill this is viewed seriously by the pillors of democracy,namely Parliament,Executive and Judiciary this will continue.It is to see a person punished for untouchability.Subburam
Post a Comment