உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் கடந்த 60 ஆண்டு காலமாக தேசத்திற்கே சவாலாக விளங்கும் பிரச்சனைகள் எழாமல் இருப்பதும் (காஷ்மீர் விதிவிலக்கு), பாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வருவதும், பொதுவாக அமைதியான முறையில் நமது மக்களின் வாழ்க்கை முறை அமைந்துள்ளதும் நமது நாட்டின் பலத்திற்கு சான்றாகும்.
மேலும் இந்தியாவை உலக மக்கள் பார்ப்பது காந்தியின் கண்ணாடி வழியாகத்தான். அதாவது இந்திய தேசம் பெளத்த தத்துவத்தை மட்டும் உலகிற்கு வழங்கவில்லை. அது அகிம்சையை போதித்த காந்திய போராட்ட முறைகளையும் உலகிற்கு அளித்துள்ளது. (இது குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்)பல இனங்கள், மொழிகள், மாநிலங்கள், சாதிகள் என பிரிந்திருந்தாலும் இந்திய தேசம் ஒரே மனிதனாக எழுந்து நிற்பது இன்றைக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய நாடு சிறிது சிறிதாக பயங்கரவாதிகளின் பிடிக்குள் செல்கிறதோ என்ற அச்சம் மக்கள் மனதை ஆட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்றைய தினம் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாதிகள் மும்பை நகரத்தையே தங்களது பிடிக்குள் கொண்டு வந்து விட்டார் போன்ற பயங்கரவமான - மிருகத்தனமான - இரத்தவெறிப்பிடித்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதுவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குள் இயங்கக் கூடிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான தாஜ், ஒபராய்... போன்ற ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தங்களது கைக்குள் கொண்டு வந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.
அது மட்டுமின்றி மும்பை இரயில்வே நிலையத்திற்குள் சென்று அங்கும் அப்பாவி பயணிகளை சுட்டுத் தள்ளியுள்ளனர். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இந்திய மக்கள் மீது மாபெரும் மறைமுகப்போரை இந்த பயங்கரவாதிகள் தொடுத்துள்ளதைத்தான் இது காட்டுகிறது. மேலும் இந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்த இடத்திற்கு போலீஸ் ஜீப்பிலேயே தப்பியுள்ளதாக கூறுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தொடர்ந்து இதுபோல் 7 இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதோடு, 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு இடத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்துள்ளது. அதுவும் பயங்கரவாதிகள் உள்நாட்டிலிருந்தும் - வெளிநாட்டிலிருந்தும் பயிற்சி எடுத்துக் கொண்டு திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருவதை அவ்வப்போது நமது காவல்துறை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில்தான் வி.எச்.பி.ஐயச் சார்ந்த இந்து பயங்கரவாத அமைப்பு எப்படி மலேகானில் குண்டு வைத்தது என்பதை மகாராஷ்டிரா போலீஸ் வெளிப்படுத்தியது. அதுவும் இந்த பயங்கரவாதிகள் சாதுவின் வடிவமாக காட்சியளித்து நாட்டை ரணகளமாக்கியவர்கள் என்பதையும் அம்பலப்படுத்தியது. அத்துடன் இந்த இந்து பயங்கரவாதிகளுக்கு துணையாக இராணுவத்தில் உள்ளவர்கள் எப்படி ஒத்துழைத்தார்கள் என்பதையும், இந்து பயங்கரவாதிகளின் மிலிட்டரி பள்ளியில் பயிற்சி பெற்றவர்களின் செயல்களையும் சமீபத்தில்தான் நமது மீடியாக்களும் - அரசும் வெளிப்படுத்தி வந்தது. இதுவரை எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த இந்தியா தற்போது உள்நாட்டிலேயே காவி உடையில் பயங்கரவாதிகள் திரிவதை பார்க்க முடிந்தது. இந்த விசாரணைகளை இந்திய மகக்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் தற்போதைய மும்பை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். அத்துடன் பயங்கரவாதம் இந்திய மண்ணில் வேறுன்றுவதற்கான அரசியல் காரணங்களையும் இந்திய அரசு ஆராய வேண்டும். சகிப்புத் தன்மையில்லாமல் - இந்திய மக்களிடையே மதக் காழ்ப்புணர்சிகளை தூண்டி விடும் மதவாத அமைப்புகள் அனைத்தையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். அவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிப் பட்டியலில் இருந்து தப்பியுள்ள அத்வானி உட்பட, குஜராத்தில் நடைபெற்ற மதப்பாசிச வன்முறைச் செயல்களுக்கு மோடி உட்பட தொடர்புள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய நாட்டில் சிறுபான்மை - பெரும்பான்மை மக்கள் ஒன்றுபட்ட சகோதரர்களாக வாழ்வதை உத்திரவாதப்படுத்துவது முதன்மையான ஒன்றாக மாறியுள்ளது. மேலும் ஏகாதிபத்திய சதியுடன் - வெளிநாட்டு பயங்கரவாதிகள் நடத்தும் இதுபோன்ற வெறியாட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும். குறிப்பாக நமது உளவுத்துறை இன்னும் பலப்படுத்த வேண்டும். தற்போதைய மும்பை தாக்குதலில் உளவுத்துறை இப்படி அப்பாவித்தனமாக செயல்பட்டு நமது மக்கள் பலி கொள்வதற்கு காரணமாகி விட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மத்திய காங்கிரஸ் அரசு இதில் அரசியல் சித்து விளையாட்டுக்களில் எல்லாம் ஈடுபடாமல் நமது தேசத்தில் பாதுகாப்பை - குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்பு பலப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பை நாட வேண்டும். இது குறித்து தேசிய அளவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு அதன் அடிப்படையில் முடிவெடுத்து நேர்மையாக செயலாற்ற வேண்டும். பயங்கரவாதிகளின் பெயர்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். ஆனால் பயங்கரவாதம் என்பது உலக மக்களின் முதல் எதிரி! அது எந்த வடிவில் வந்தாலும் அதனை முறியடிக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை!