September 14, 2006

கல்வியைக் கைவிட்ட மத்திய அரசு

கல்வியைக் கைவிட்ட மத்திய அரசு
வஸந்தா சூரியா

"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!'' என்பதை போல், இன்று நாடெங்கும் "எங்கும் கல்வி! என்பதே பேச்சா''கி விட்டது.

பஸ் ஸ்டாண்டில், ரயில் பெட்டியில், டீக்கடையில், ஆபீஸில், கல்யாண மண்டபத்தில் - ஏன், குழாயடியிலும் கூட - ""உங்க பிள்ளை என்ன படிக்கிறான்?'', ""என் பொண்ணு ஸ்கூல்ல ராங்க் வாங்கியிருக்கா!'' அல்லது ""யாரானாச்சும் ஒரு நல்ல டியூஷன் மாஸ்டர் வேணும் பா... நம்ம பயல் இங்க்லீஷ்ல கொஞ்சம் வீக்!'' - இதேதான் பேச்சு. தேனாய் காதில் பாயும் இந்தப் புதிய கல்விப் பேச்சிலிருந்து சமுதாயத்தில் தோன்றிய மகத்தான மாறுதலைப் புரிந்து கொள்ளலாம். கோடிக்கணக்கான மக்கள், ""படிச்சு கிழிச்சு என்ன ஆகிவிட போவுது!'' என்ற நினைப்பிலிருந்து வெளிவந்து, ஒவ்வொருவரும் தன் குழந்தைக்கு நிச்சயமாகக் கல்வி கிடைத்தாகிவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். பரம்பரை பரம்பரையாகப் படிப்பு வாசனையில்லாதவர்கள் படிப்பை எப்படியாவது எட்டிப்பிடித்து வாழ்க்கையில் நமக்கும் சம பங்குண்டு என்று நிரூபிக்கத் தயாராகி விட்டார்கள். திறமையாகப் பங்கு கொள்வதற்கு கல்வி ஓர் ஆயுதம் என்று நன்கு தெரிந்து கொண்டு, அதை எப்படியாவது தன் வாரிசுகளுக்குக் கொடுக்க பெரும்பாடுபடுகிறார்கள். இதுதான் இந்திய சமுதாயத்தின் இன்றைய ""பிரம்மபிரயத்தனம்'' என்றே சொல்லலாம்.


ஆனால், ""கல்வி இலவசமாக, தரமாக இருக்க வேண்டும். சமநீதிக்கு உட்பட வேண்டும்!'' என்ற அரசியல் சட்ட வாக்குறுதி நிறைவேறாமல் நிற்கிறது. இந்திய அரசாங்கம் இந்தக் கல்வித் தாகத்தை தீர்க்க, ""கல்வி உரிமை''யை வெறும் பேச்சாக்கி, பல மட்டமான திட்டங்களைப் புகட்டிக் கொண்டே வருகிறது. அதற்குப் பதிலாக அரசாங்கப் பள்ளிகளை அமைத்து, பராமரித்து, ஒழுங்காக நடத்தியிருந்தால் கடந்த 60 வருடங்களில் நாட்டில் செழிப்பான முன்னேற்றம் தோன்றியிருக்கும். இன்று அரசாங்கத்தை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த பெற்றோர் தங்கள் வயிற்றைக் கட்டியாவது தம் குழந்தையை ""நல்ல'' பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டு தனியார் பள்ளியை நாடுகிறார்கள். தனியார் பள்ளிகளோ ஒரு கதம்பம்; அந்தப் பட்டியலில் ஒஹோவென்று புகழ சில பள்ளிகள் இருந்தாலும், அவை வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது ஒரு ரகசியமல்ல. அதே தனியார் பட்டியலில் மிக மிக மட்டமானவையும் உண்டு. அந்த ""கல்விக் கடைகளில்'' தங்கள் குழந்தைகளைச் சேர்த்து விட்டு, வாயைக் கட்டிக்கொண்டு, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கிறார்கள் பல பெற்றோர்கள். "தரமான கல்வி வேண்டும்' என்கிற ஏக்கம்தான் மிச்சம். இவர்கள் டொனேஷன் கொடுத்து, பீஸ் கட்டி, அதற்கு மேல் டியூஷனும் வைக்கிறார்கள் - ஏனென்றால், பாடங்களைச் சரியாகச் சொல்லித் தர ஆசிரியர்களுக்குத் திறமையும் பொறுமையும் போதாது, வருமானமோ மிகக் குறைவு. இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் கல்வியின் தரம் ஏது? புகார் சொன்னால் தன் குழந்தைக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்று பயந்து, பெற்றோர்கள் கப்சிப்பென்று சகித்துக் கொள்கிறார்கள்.

பெற்றோரின் தவிப்பு ஒருபுறம் இருக்க, தரமான உபயோகமுள்ள கல்வி இல்லாமலிருந்தால், நாடு உருப்படியான முன்னேற்றத்தை அடையுமா? புள்ளிவிவரங்களை வைத்து ஜாலம் காட்டுகிறார்கள், சிலர்: ""பொருளாதார வளர்ச்சி 8% வரையில் வந்துவிட்டது. இந்தியா விரைவில் செழிப்படைந்து விடும்! உலக சந்தையில் பெரிய இடம் பெற்றால் போதும், பிறகு கல்வி என்ன - எல்லா நன்மைகளும் இங்கு வந்து குவியும்!'' என்று வாய்கிழிய இந்தியாவின் பொன்னான எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார்கள், சிலர். இன்னமும் ஒவ்வொரு மூலை முடுக்கில் நாம் தினமும் பார்க்கும் வறுமையும் கொடுமையும் இந்தப் புள்ளிவிவரத்தில் தெரியவில்லை. அதென்ன, பொருளாதார வளர்ச்சி, பொது மக்களின் நன்மைக்கு அப்பாற்பட்டதா, என்ன? மனித வளர்ச்சி ஓர் அளவுக்கு வந்த பின் அல்லவா, பொருளாதார வளர்ச்சி ஏற்பட முடியும்? குழந்தைக்குக் கல்வியும் உணவும் கொடுத்தால்தானே அது வளர்ந்து பல சாதனைகள் புரிந்து, செல்வத்தை உருவாக்கும்? ஆம், இதெல்லாம் சரி... ஏது பணம், என்று சால்ஜாப் சொல்லிக்கொண்டே வருகிறது, மத்திய அரசாங்கம். இதில் என்ன வேடிக்கை என்றால் எந்தக் கட்சியோ, கூட்டணியோ முதலில் மூக்கால் அழுது, கல்வியின் அவசியத்தை மக்களுக்குப் போதனை செய்து, எல்லோருக்கும் தரமான கல்வியைக் கொண்டு வர உறுதி கூறி, ஆட்சிக்கு வந்த பிறகு---ஏது பணம்? என்று பின்வாங்குகிறது.

இதற்கு, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் விதிவிலக்கல்ல. ""மத்திய கல்வி ஆலோசகர் குழு'' என்ற அமைப்பை 2004-ல், மடஅ ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்தது. இரண்டு வருட காலம் பாடுபட்டு பல பிரச்சினைகளை அலசி, தீர்வுகள் வழங்கிய இந்தக் குழு இப்பொழுது கலைக்கப்பட்டது. முக்கியமாக, "இந்திய அரசியல் சட்டத்தில் 86வது சட்டத்திருத்தலை அமலுக்குக் கொண்டு வர, மத்திய அரசு கணிசமாக உதவ வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என்று CABE ஆலோசனை சொல்லியது.

ஆனால் இப்பொழுது மத்திய அரசு கல்விக் களத்திலிருந்து நாசூக்காக ஒதுங்கிவிட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டிய சட்டம் மாநிலங்களிடம் தள்ளப்பட்டது. ஒரு ‘‘Model Bill’’ முன்மாதிரி சட்ட வடிவு) மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதை அவரவர் சட்டசபையில் கொண்டுவராவிட்டால் மத்திய அரசிலிருந்து சர்வ சிக்ஷா அபியான் பெறும் நிதியுதவி 75 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்படும்!

பள்ளியில் சொல்லிக் கொடுக்காத பாடத்தை மாநிலங்களுக்கு "Homework" சுமையாக ஏற்றிவிட்டது, மத்திய அரசு!
Thanks: Dinamani, September 14, 2006

No comments: