September 13, 2006

கிட்னி வேணுமா?

இந்தியாவில் வறுமை குறைந்து வருவதாகவும், ஏழ்மை ஒழிக்கப்பட்டு வருவதாகவும் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர் நம்முடைய இணையவாசிகள். முன்பு சங்பரிவாரம் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று கூறியதைத்தான் தற்போது இவர்கள் மீண்டும் வாந்தியெடுக்கத் துவங்கியுள்ளனர். ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்’ என்று கூறும் நம்முடைய தமிழ் பழமொழிகளுக்கு ஒத்தவர்களை இணையத்திலும் காண்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. இவர்களது கண்கள் ‘மானிட்டர்’களின் ஒளி வீச்சால் சூழப்பட்டுள்ளதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்திய கிராமப்புறங்களைப் பற்றியோ, ஏன் சென்னை, பெங்களுர் போன்ற பெரு நகரங்களில் பிளாட்பாரத்தில் கந்தல்கோலமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையெல்லாம் இவர்கள் மனிதர்களாகவே நினைப்பதில்லை. அதனால்தான் இவ்வளவு தைரியமாக கூறுகிறார்கள் இந்தியாவில் ஏழ்மை ஒழிந்து வருகிறது என்று.


சரி, சப்ஜெக்ட்டுக்கு வருவோம்! இன்றைய இந்தியன் எக்°பிரசில் (13.06.2006, சென்னை எடிசன்) ஒரு செய்தி வந்துள்ளது. 30 வயது இளைஞன் ஒருவன் தன்னுடைய கிட்னியை விற்பதற்கு விளம்பரம் செய்துள்ளார். அவரை தொடர்பு கொள்வதற்கான செல்போன் உட்பட. பத்திரிகையில் அல்ல; பொது மக்கள் நடமாடும் இடங்களில், அவர் கைப்பட எழுதி, அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். இது குறித்து இந்தியன் எக்°பிர° நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசியதையும் இன்றைக்கு செய்தியாக வெளியிட்டுள்ளார். அவரது கோரிக்கை என்ன? ஏன் அவர் தன்னுடைய கிட்னியை விற்க வேண்டும். அதுவும் இந்த இளம் வயதில்!

வேலையின்மை, வறுமைதான் காரணம். அதிமேதாவிகள் அடிக்கடி கூறுவார்கள் வேலையில்லை என்று நாம் சொல்லக்கூடாது. நாமாக முன்னேறனும்; அரசாங்கமே எல்லாத்தையும் செய்ய முடிமோ... பாருங்க அசிம் பிரேம்ஜியை... என்று அறிவுரையெல்லாம் மிக அழகாக அளிப்பார்கள். இந்த இளைஞரும் அப்படித்தான் சொந்த தொழில் செய்யலாம் என்று ஈடுபட்டு கையை சுட்டுக் கொண்டார். என்ன ஊர் முழுக்க கடன்தான். தனக்கு மூன்று லட்சம் கடன் இருப்பதாக கூறும் இந்த இளைஞன். கடனை அடைப்பதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். அதற்காக இந்திய விவசாயிகள் போல் தற்கொலையா செய்துக் கொள்ள முடியும்? (இந்தியாவில் அப்படியெல்லாம் நடக்கிறதா என்று கேட்பார்கள் டாலர் தேசத்து மக்கள்!) இருக்கவே இருக்கிறது இரண்டு கிட்னி, சரி ஒன்றை விற்று விடலாம் என்று துணிந்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளார். தன்னுடைய கடன் பிரன்னையை தீர்ப்பதற்காக மூன்று லட்சம் தேவைப்படுவதாகவும், அதை யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு கிட்னியை தருவதாக கூறியுள்ளார். இந்திய இளைஞர்களின் வறுமைக்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா? (தயவு செய்து இதில் டாலர் தேசத்து இளைஞர்களை மட்டும் ஒப்பிடாதீர்கள்)


ஏற்கனவே கிராமப்புற ஏழை - எளிய மக்கள் வெறும் ஆயிரம், இரண்டாயிரத்திற்கெல்லாம் கிட்னியை பறிக்கொடுத்த சம்பவங்கள் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வந்தது. இப்படியும் சில மனித பிராணிகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து மாமனிதர்களாக உயர்த்திக் கொண்டு, தங்கள் பிள்ளைகளை டாலர் தேசத்திற்கு அனுப்பி வைத்து சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு சென்று விடுகின்றனர். பாவம்! இந்த கதைகளெல்லாம் நம்முடைய இணையவாசிகளான டாலர் தேசத்து கண்களுக்கு படமாட்டேன் என்கிறதே நாம் என்ன செய்வது! அவர்களுக்கு உலகவங்கியின் ஓலம் (நரியின் ஓலம்) இந்தியாவில் வறுமை குறைந்து விட்டது என்று கூறுவதுதான்படுகிறது! அநேகமாக இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவில் முற்றிலும் வறுமை தீர்ந்து விடும் எப்படி என்றால் வறுமையில் இருக்கும் இளைஞர்கள் தங்களின் கிட்னிகளை விற்பதன் மூலமாகத்தான்!

1 comment:

Anonymous said...

அற்புதமான கட்டுரை