September 16, 2006

அமெரிக்க சர்வாதிகாரம்: கியூபா கடும் தாக்கு

"பொருளாதார வல்லமையை பயன்படுத்தி உலக நாடுகளின் மீது அமெரிக்கா முழுமையான சர்வாதிகாரம் செலுத்தி வருகிறது,''
என்று அமெரிக்கா மீது கியூபா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அணி சாரா நாடுகள் இயக்கத்தின் ("நாம்') உச்சி மாநாடு கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டை நடத்தும் கியூபா, அமெரிக்காவின் "சர்வாதிகாரப் போக்கை' ஒரு பிடிபிடித்தது.
நாம் வாழும் இன்றைய உலகம் நீதியற்ற, நெறியற்ற, சமத்துவமற்ற நாள்களாக நாளுக்குநாள் மாறிக்கொண்டிருக்கிறது. யுத்தம் மற்றும் பொருளாதார பலத்தைப் பிரயோகித்து உலக நாடுகளின் மீது முழுமையான சர்வாதிகாரம் செலுத்தப்பட்டு வருகிறது என்று கியூபா துணை அதிபர் கார்லோஸ் லாகி கூறினார்.
அணி சாரா நாடுகள் மாநாட்டு பிரதிநிதிகள் கூட்டத்தில் புதன்கிழமை பேசினார் கார்லோஸ் லாகி.
மேலும் அவர் பேசியதாவது: ஒரு நாடு (அமெரிக்கா) மற்றொரு நாட்டின் மீது பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் நெருக்கடி கொடுப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இதனால் எந்த நாட்டின் மீதும் ஊடுருவி தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக எத்தகைய அழிவையும் அந்த நாடு மேற்கொள்ளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய, நியாயமான, பொருளாதார சமத்துவம் ஏற்பட அணி சாரா நாடுகளாகிய "நாம்' பாடுபட வேண்டும். இந்நோக்கில் இன்றைய காலகட்டத்தில் "புதிய உலகம்' அமைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது சாத்தியமும் கூட. சர்வதேச உறவுகளுக்கான புதிய கொள்கைகளை "நாம்' உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
யுத்தம், பயங்கரவாதம், அநீதி, சமத்துவமின்மை, இரட்டை நிலைப்பாடு போன்ற காரணங்களுக்காக "நாம்' இணைந்து செயல்படவில்லை. அமைதி மற்றும் பொதுநீதிக்காக "நாம்' செயல்படுகிறோம்.
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் இழைக்கும் கொடுமைகள் போன்றவற்றை "நாம்' அனுமதிக்கக்கூடாது என்றார் லாகி.
உச்சி மாநாட்டின் தீர்மானங்களை உருவாக்குவதற்காக உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அணி சாரா இயக்க நாடுகளின் ("நாம்') தலைவர்கள் புதன்கிழமை விவாதித்தனர்.
அதன்படி, "நாம்' வெளியிடவுள்ள வரைவு பிரகடனத்தில், "காஸôவில் இருந்து இஸ்ரேல் தனது துருப்புகளை விலக்கிக்கொள்ள வேண்டும்; சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன அதிகாரிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு நாடு அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது; அதேவேளையில், மற்றொரு நாடு அணு ஆயுதங்களை சேகரித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய அநீதியான போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.
நாடுகளிடையே ஒற்றுமையும் சமாதானமும் ஏற்பட உண்மையாக பாடுபடும் அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை மாற வேண்டும்; மாற்றியாக வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு, போதை மருந்து கடத்தலுக்கு எதிரான சர்வதேச சவால்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு, உள்நாட்டு மக்களுக்கான பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் "நாம்' தலைவர் விவாதித்தனர்.
Thanks : Dinamani

September 14, 2006

கல்வியைக் கைவிட்ட மத்திய அரசு

கல்வியைக் கைவிட்ட மத்திய அரசு
வஸந்தா சூரியா

"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!'' என்பதை போல், இன்று நாடெங்கும் "எங்கும் கல்வி! என்பதே பேச்சா''கி விட்டது.

பஸ் ஸ்டாண்டில், ரயில் பெட்டியில், டீக்கடையில், ஆபீஸில், கல்யாண மண்டபத்தில் - ஏன், குழாயடியிலும் கூட - ""உங்க பிள்ளை என்ன படிக்கிறான்?'', ""என் பொண்ணு ஸ்கூல்ல ராங்க் வாங்கியிருக்கா!'' அல்லது ""யாரானாச்சும் ஒரு நல்ல டியூஷன் மாஸ்டர் வேணும் பா... நம்ம பயல் இங்க்லீஷ்ல கொஞ்சம் வீக்!'' - இதேதான் பேச்சு. தேனாய் காதில் பாயும் இந்தப் புதிய கல்விப் பேச்சிலிருந்து சமுதாயத்தில் தோன்றிய மகத்தான மாறுதலைப் புரிந்து கொள்ளலாம். கோடிக்கணக்கான மக்கள், ""படிச்சு கிழிச்சு என்ன ஆகிவிட போவுது!'' என்ற நினைப்பிலிருந்து வெளிவந்து, ஒவ்வொருவரும் தன் குழந்தைக்கு நிச்சயமாகக் கல்வி கிடைத்தாகிவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். பரம்பரை பரம்பரையாகப் படிப்பு வாசனையில்லாதவர்கள் படிப்பை எப்படியாவது எட்டிப்பிடித்து வாழ்க்கையில் நமக்கும் சம பங்குண்டு என்று நிரூபிக்கத் தயாராகி விட்டார்கள். திறமையாகப் பங்கு கொள்வதற்கு கல்வி ஓர் ஆயுதம் என்று நன்கு தெரிந்து கொண்டு, அதை எப்படியாவது தன் வாரிசுகளுக்குக் கொடுக்க பெரும்பாடுபடுகிறார்கள். இதுதான் இந்திய சமுதாயத்தின் இன்றைய ""பிரம்மபிரயத்தனம்'' என்றே சொல்லலாம்.


ஆனால், ""கல்வி இலவசமாக, தரமாக இருக்க வேண்டும். சமநீதிக்கு உட்பட வேண்டும்!'' என்ற அரசியல் சட்ட வாக்குறுதி நிறைவேறாமல் நிற்கிறது. இந்திய அரசாங்கம் இந்தக் கல்வித் தாகத்தை தீர்க்க, ""கல்வி உரிமை''யை வெறும் பேச்சாக்கி, பல மட்டமான திட்டங்களைப் புகட்டிக் கொண்டே வருகிறது. அதற்குப் பதிலாக அரசாங்கப் பள்ளிகளை அமைத்து, பராமரித்து, ஒழுங்காக நடத்தியிருந்தால் கடந்த 60 வருடங்களில் நாட்டில் செழிப்பான முன்னேற்றம் தோன்றியிருக்கும். இன்று அரசாங்கத்தை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த பெற்றோர் தங்கள் வயிற்றைக் கட்டியாவது தம் குழந்தையை ""நல்ல'' பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டு தனியார் பள்ளியை நாடுகிறார்கள். தனியார் பள்ளிகளோ ஒரு கதம்பம்; அந்தப் பட்டியலில் ஒஹோவென்று புகழ சில பள்ளிகள் இருந்தாலும், அவை வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது ஒரு ரகசியமல்ல. அதே தனியார் பட்டியலில் மிக மிக மட்டமானவையும் உண்டு. அந்த ""கல்விக் கடைகளில்'' தங்கள் குழந்தைகளைச் சேர்த்து விட்டு, வாயைக் கட்டிக்கொண்டு, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கிறார்கள் பல பெற்றோர்கள். "தரமான கல்வி வேண்டும்' என்கிற ஏக்கம்தான் மிச்சம். இவர்கள் டொனேஷன் கொடுத்து, பீஸ் கட்டி, அதற்கு மேல் டியூஷனும் வைக்கிறார்கள் - ஏனென்றால், பாடங்களைச் சரியாகச் சொல்லித் தர ஆசிரியர்களுக்குத் திறமையும் பொறுமையும் போதாது, வருமானமோ மிகக் குறைவு. இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் கல்வியின் தரம் ஏது? புகார் சொன்னால் தன் குழந்தைக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்று பயந்து, பெற்றோர்கள் கப்சிப்பென்று சகித்துக் கொள்கிறார்கள்.

பெற்றோரின் தவிப்பு ஒருபுறம் இருக்க, தரமான உபயோகமுள்ள கல்வி இல்லாமலிருந்தால், நாடு உருப்படியான முன்னேற்றத்தை அடையுமா? புள்ளிவிவரங்களை வைத்து ஜாலம் காட்டுகிறார்கள், சிலர்: ""பொருளாதார வளர்ச்சி 8% வரையில் வந்துவிட்டது. இந்தியா விரைவில் செழிப்படைந்து விடும்! உலக சந்தையில் பெரிய இடம் பெற்றால் போதும், பிறகு கல்வி என்ன - எல்லா நன்மைகளும் இங்கு வந்து குவியும்!'' என்று வாய்கிழிய இந்தியாவின் பொன்னான எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார்கள், சிலர். இன்னமும் ஒவ்வொரு மூலை முடுக்கில் நாம் தினமும் பார்க்கும் வறுமையும் கொடுமையும் இந்தப் புள்ளிவிவரத்தில் தெரியவில்லை. அதென்ன, பொருளாதார வளர்ச்சி, பொது மக்களின் நன்மைக்கு அப்பாற்பட்டதா, என்ன? மனித வளர்ச்சி ஓர் அளவுக்கு வந்த பின் அல்லவா, பொருளாதார வளர்ச்சி ஏற்பட முடியும்? குழந்தைக்குக் கல்வியும் உணவும் கொடுத்தால்தானே அது வளர்ந்து பல சாதனைகள் புரிந்து, செல்வத்தை உருவாக்கும்? ஆம், இதெல்லாம் சரி... ஏது பணம், என்று சால்ஜாப் சொல்லிக்கொண்டே வருகிறது, மத்திய அரசாங்கம். இதில் என்ன வேடிக்கை என்றால் எந்தக் கட்சியோ, கூட்டணியோ முதலில் மூக்கால் அழுது, கல்வியின் அவசியத்தை மக்களுக்குப் போதனை செய்து, எல்லோருக்கும் தரமான கல்வியைக் கொண்டு வர உறுதி கூறி, ஆட்சிக்கு வந்த பிறகு---ஏது பணம்? என்று பின்வாங்குகிறது.

இதற்கு, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் விதிவிலக்கல்ல. ""மத்திய கல்வி ஆலோசகர் குழு'' என்ற அமைப்பை 2004-ல், மடஅ ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்தது. இரண்டு வருட காலம் பாடுபட்டு பல பிரச்சினைகளை அலசி, தீர்வுகள் வழங்கிய இந்தக் குழு இப்பொழுது கலைக்கப்பட்டது. முக்கியமாக, "இந்திய அரசியல் சட்டத்தில் 86வது சட்டத்திருத்தலை அமலுக்குக் கொண்டு வர, மத்திய அரசு கணிசமாக உதவ வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என்று CABE ஆலோசனை சொல்லியது.

ஆனால் இப்பொழுது மத்திய அரசு கல்விக் களத்திலிருந்து நாசூக்காக ஒதுங்கிவிட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டிய சட்டம் மாநிலங்களிடம் தள்ளப்பட்டது. ஒரு ‘‘Model Bill’’ முன்மாதிரி சட்ட வடிவு) மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதை அவரவர் சட்டசபையில் கொண்டுவராவிட்டால் மத்திய அரசிலிருந்து சர்வ சிக்ஷா அபியான் பெறும் நிதியுதவி 75 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்படும்!

பள்ளியில் சொல்லிக் கொடுக்காத பாடத்தை மாநிலங்களுக்கு "Homework" சுமையாக ஏற்றிவிட்டது, மத்திய அரசு!
Thanks: Dinamani, September 14, 2006

September 13, 2006

கிட்னி வேணுமா?

இந்தியாவில் வறுமை குறைந்து வருவதாகவும், ஏழ்மை ஒழிக்கப்பட்டு வருவதாகவும் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர் நம்முடைய இணையவாசிகள். முன்பு சங்பரிவாரம் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று கூறியதைத்தான் தற்போது இவர்கள் மீண்டும் வாந்தியெடுக்கத் துவங்கியுள்ளனர். ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்’ என்று கூறும் நம்முடைய தமிழ் பழமொழிகளுக்கு ஒத்தவர்களை இணையத்திலும் காண்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. இவர்களது கண்கள் ‘மானிட்டர்’களின் ஒளி வீச்சால் சூழப்பட்டுள்ளதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்திய கிராமப்புறங்களைப் பற்றியோ, ஏன் சென்னை, பெங்களுர் போன்ற பெரு நகரங்களில் பிளாட்பாரத்தில் கந்தல்கோலமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையெல்லாம் இவர்கள் மனிதர்களாகவே நினைப்பதில்லை. அதனால்தான் இவ்வளவு தைரியமாக கூறுகிறார்கள் இந்தியாவில் ஏழ்மை ஒழிந்து வருகிறது என்று.


சரி, சப்ஜெக்ட்டுக்கு வருவோம்! இன்றைய இந்தியன் எக்°பிரசில் (13.06.2006, சென்னை எடிசன்) ஒரு செய்தி வந்துள்ளது. 30 வயது இளைஞன் ஒருவன் தன்னுடைய கிட்னியை விற்பதற்கு விளம்பரம் செய்துள்ளார். அவரை தொடர்பு கொள்வதற்கான செல்போன் உட்பட. பத்திரிகையில் அல்ல; பொது மக்கள் நடமாடும் இடங்களில், அவர் கைப்பட எழுதி, அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். இது குறித்து இந்தியன் எக்°பிர° நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசியதையும் இன்றைக்கு செய்தியாக வெளியிட்டுள்ளார். அவரது கோரிக்கை என்ன? ஏன் அவர் தன்னுடைய கிட்னியை விற்க வேண்டும். அதுவும் இந்த இளம் வயதில்!

வேலையின்மை, வறுமைதான் காரணம். அதிமேதாவிகள் அடிக்கடி கூறுவார்கள் வேலையில்லை என்று நாம் சொல்லக்கூடாது. நாமாக முன்னேறனும்; அரசாங்கமே எல்லாத்தையும் செய்ய முடிமோ... பாருங்க அசிம் பிரேம்ஜியை... என்று அறிவுரையெல்லாம் மிக அழகாக அளிப்பார்கள். இந்த இளைஞரும் அப்படித்தான் சொந்த தொழில் செய்யலாம் என்று ஈடுபட்டு கையை சுட்டுக் கொண்டார். என்ன ஊர் முழுக்க கடன்தான். தனக்கு மூன்று லட்சம் கடன் இருப்பதாக கூறும் இந்த இளைஞன். கடனை அடைப்பதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். அதற்காக இந்திய விவசாயிகள் போல் தற்கொலையா செய்துக் கொள்ள முடியும்? (இந்தியாவில் அப்படியெல்லாம் நடக்கிறதா என்று கேட்பார்கள் டாலர் தேசத்து மக்கள்!) இருக்கவே இருக்கிறது இரண்டு கிட்னி, சரி ஒன்றை விற்று விடலாம் என்று துணிந்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளார். தன்னுடைய கடன் பிரன்னையை தீர்ப்பதற்காக மூன்று லட்சம் தேவைப்படுவதாகவும், அதை யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு கிட்னியை தருவதாக கூறியுள்ளார். இந்திய இளைஞர்களின் வறுமைக்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா? (தயவு செய்து இதில் டாலர் தேசத்து இளைஞர்களை மட்டும் ஒப்பிடாதீர்கள்)


ஏற்கனவே கிராமப்புற ஏழை - எளிய மக்கள் வெறும் ஆயிரம், இரண்டாயிரத்திற்கெல்லாம் கிட்னியை பறிக்கொடுத்த சம்பவங்கள் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வந்தது. இப்படியும் சில மனித பிராணிகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து மாமனிதர்களாக உயர்த்திக் கொண்டு, தங்கள் பிள்ளைகளை டாலர் தேசத்திற்கு அனுப்பி வைத்து சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு சென்று விடுகின்றனர். பாவம்! இந்த கதைகளெல்லாம் நம்முடைய இணையவாசிகளான டாலர் தேசத்து கண்களுக்கு படமாட்டேன் என்கிறதே நாம் என்ன செய்வது! அவர்களுக்கு உலகவங்கியின் ஓலம் (நரியின் ஓலம்) இந்தியாவில் வறுமை குறைந்து விட்டது என்று கூறுவதுதான்படுகிறது! அநேகமாக இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவில் முற்றிலும் வறுமை தீர்ந்து விடும் எப்படி என்றால் வறுமையில் இருக்கும் இளைஞர்கள் தங்களின் கிட்னிகளை விற்பதன் மூலமாகத்தான்!

September 08, 2006

பள்ளிக் கூடம் - சிறுகதை

பள்ளிக் கூடம்
சிறுகதை
முருகனது குடும்பம் நீலகிரியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து 30 வருடமாகி விட்டது. முருகன் மாமா சிவனாண்டி சென்னைக்கு குடியேறியதைத் தொடர்ந்து அவனது தாயாரும் தன்னுடைய குழந்தைகளோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

இன்னும்கூட முருகனுக்கு நீலகிரியின் வாசம் மறையவில்லை. பசுமையான மலைத் தொடர்களும், அடர்ந்த மரங்களும், தெளிந்த நீரோடைகளும் அவனது நெஞ்சத்தில் இடம் பெற்று விட்டது. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டிலேயே முருகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நம் தலைமுறையில் யாருமே படிக்கவில்லை. தன் பிள்ளையை சென்னையில் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணக் கனவு அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

குழந்தையின் வளர்ச்சியின் கூடவே அவனது கனவும் கூடிக் கொண்டே வந்தது. குழந்தைக்கு பெயர் வைப்பது, காது குத்துவது, மொட்டை அடிப்பது என குழந்தையின் முதல் பிறந்த நாள் வரை அத்தனைக்கும் விழா எடுப்பதற்கு தவறவில்லை.

எப்படியோ பையனுக்கு இரண்டரை வயதை தொட்டவுடனேயே அக்கம், பக்கத்தில் விசாரித்து சுமாரான பள்ளிக்கூடத்தில் தன் மகனை சேர்ப்பது என்று முடிவு செய்தான். பள்ளிக்கூடத்திற்கு சென்று பார்ம் வாங்கிக் கொண்டு வந்தான் முருகன். பள்ளி நிர்வாகி பிறந்த சான்றிதழையும், சாதிச் சான்றிதழையும் தவறாமல் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

குழந்தையின் பிறந்த சான்றிதழை வாங்கி வைத்திருந்ததில் மகிழ்ச்சி கொண்ட முருகன், சாதிச் சான்றிதழ் வாங்க வேண்டுமே! இதை எப்படி வாங்குவது, எங்க வாங்குவது என விழிபிதுங்கினான்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த சாமியப்பனிடம் இது பற்றி கேட்க, ‘அட ஜாதி சட்டிபிகேட் தானே’, ‘அது ஒண்ணும் பெரிய விஷயமில்லிங்க, நம்ம டீ கடை கோவிந்தசாமி கிட்ட சொல்லுங்க, ஒரு நூற்றி ஐம்பது ரூபா கொடுத்தா எல்லாத்தையும் அவரே பாத்துப்பாரு...’ என்று கூறினார்.

‘முருகனும் எப்படியோ சர்டிபிகேட் வாங்கியாகணும், வேற வழியில்லை... நமக்கும் அங்கெல்லாம் அலைய முடியாது’ என்று மனதில் எண்ணிக் கொண்டே, டீ கடை கோவிந்தசாமியை பார்த்து விஷயத்தை சொன்னான்.

டீ கடை கோவிந்தசாமி இந்த விஷயத்தில், அந்த ஊர்லலே ரொம்ப பேம°. ‘சரி, சரி என்ன ஜாதின்னு கேட்டார்; ‘நாங்க மலை ஜாதிங்க, குருமன்°’-ன்ன சொல்லுவாங்க’; சரி, இதுக்கு ஏதாவது அத்தாட்சி வைச்சிக்கிறீயா? என்று கேட்டார் டீ கடை கோவிந்தசாமி.

‘எங்க வீட்ல யாரும் படிக்கிலீங்க... எங்கிட்டயும் வேற எந்த சர்டிபிகேட்டும் இல்லீங்க என்றார்... அப்பாவித்தனமாக. ‘என்னய்யா... நீ, சரி, இது இல்லாட்டி போகுது, உங்களுக்கு ஏதாவது இடம், கிடம் இருந்தா அந்த பத்திரத்தில எழுதியிருப்பாங்களே அதாவது இருக்கா?’ என்றார் டீ கடை கோவிந்தசாமி.

‘அண்ணே எங்களுக்கு நிலமிருந்தா நாங்க ஏன்னே சென்னைக்கு வர்றோம். அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்கண்ணே’ என்றான் முருகன்.

‘நல்ல கேஸூயா நீ...’

‘யோவ்... மலை ஜாதின்னா சர்டிபிகேட் தர மாட்டாங்கய்யா’ ஏண்ணே’, ‘நாங்களும் உங்களாட்டும் மனுஷங்கத்தானே!’

‘அது ஒண்ணும் இல்லையா... உங்க ஜாதின்னா கவுருமெண்டுல வேல்யூ அதிகம்... அதான் தர மாட்டங்கா. நீ மலைஜாதின்னு சர்டிபிகேட் வாங்கிட்டினா ஒம் பையனுக்கு படிப்பு, வேலை எல்லாத்துலையும் நிறைய சலுகை கிடைக்கும்...’

‘ஆனா...?’

இன்ண்னாணே! சரி நீ நாளைக்கு வா... ட்ரை பண்ணுவோம்...

‘யோவ் முருகா! இந்த சர்டிபிகேட் வாங்கணும்னா நிறைய காசு செலவாகும்ய்யா...’ ‘இண்னாணே கூட ஒரு நூறு ரூபா ஆவுமா!’

‘மண்ணாங்கட்டி! பத்தாயிரம் ரூபா ஆவும்யா...’

அதிர்ந்து போன முருகனுக்கு, கண்ணில் தண்ணீர் வரவில்லையே தவிர கோபமும், ஏமாற்றமும் முட்டிக் கொண்டு வந்தது.

மறு நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்ட முருகன், டீ கடை கோவிந்தசாமியை பார்க்கப் போனான்.

முதல் நாளே அப்ளிகேஷனையெல்லாம் தயாராக எழுதி வைத்திருந்த டீ கடை கோவிந்தசாமி, முருகனையும் கூட்டிக் கொண்டு வில்லேஜ் ஆபிசரை பார்த்து விஷயத்தை சொன்னார்.

‘ஏம்பா கோவிந்தசாமி! உனக்கு வேற கேஸே கிடைக்கிலியா?’ ‘என் வேலைக்கே உலை வைச்சிடுவ போலீருக்கே’ என்று கடுகடுப்பாக சொன்னார் வில்லேஜ் ஆபிசர்.

முருகனுக்கு ஒண்ணுமே புரியலை! ஜாதி சர்டிபிகேட் வாங்குறதுன்னா அவ்வளவு கஷ்டமா? பக்கத்து வீட்டு சாமியப்பன் நூத்து ஐம்பது ரூவாவுல முடிஞ்சிடும்னு சொன்னான்!

குழம்பிப்போன முருகன், படிக்காமப் போனது எவ்வளவு தப்பா போச்சு! என்று மண்டையில் அடித்துக் கொண்டான். தன்னை படிக்க வைக்காத அப்பா மேலயும் எரிச்சலாய் வந்தது. அவுங்க என்ன பண்ணுவாங்க... அந்த மலையில எங்க பள்ளிக்கூடம் இருந்தது! அரசாங்கமும் அத கண்டுக்கல....

டீ கடை கோவிந்தசாமி, வில்லேஜ் ஆபிசருக்கு ஒரு டீயை வாங்கிக் கொடுத்து, ‘எண்னன்ணே பண்றது? நீங்களே ஒரு வழி சொல்லுங்க... என்னை நாடி வந்தவங்களே நான் கை விட்டது இல்லை..., கையில காசு வாங்குனாலும் நாக்குச் சுத்தமாக இருக்கணும்னு நினைக்கிறவன் நான்.. உங்களுக்கே தெரியும்!’

‘யோவ் கோவிந்தசாமி பழங்குடி சர்டிபிகேட் வாங்குனம்னா குறஞ்சது அஞ்சு வருசம் ஆகும்யா... அதுவும் ஆர்.டி.ஓ., சப்-கலக்டர், கலக்டர்-ன்னு நிறைய என்கொய்ரி எல்லாம் இருக்கும்...’
‘அதுவும் இந்த கேஸூக்கு எந்த ஆதாரமும் இல்லை... சர்டிபிகேட் வாங்கவே முடியாதுய்யா...ன்னுட்டார். சரி! நாளைக்கு வா! ரெவீன்யூ ஆபிஸர பாத்து பேசலாம்... ஆனா... காசு செலவாகும்யா...ன்னார்.’

முருகனுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல! இன்னிக்கே ஒரு நாள் லீவு போட்டாச்சு! அந்த மே°திரி வேற லொள் லொள்ன்னு கத்துவான்... வேலை கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. இந்த நிலையில நாளைக்கு வேற எப்படி லீவு போடறது என்று யோசித்துக் கொண்ட... இருந்தவனுக்கு தலை சுத்தியது...

பையனை படிக்க வைக்கணுமே என்ன பண்றது!

சரி! சாயந்திரம் மே°திரிக்கிட்ட போய் விஷயத்தை சொல்லிட்டு நாளைக்கும் லீவு போட்டுட்டு ரெவின்யூ ஆபிசராம் அவரைப் பார்ப்போம்! என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டான் முருகன்.
யோவ் முருகா, ரொம்ப யோசிக்காத! இந்த பழங்குடி ஜாதில பிறந்தாலே இப்படித்தான் நாய் பொழப்பாயிடும், நீயே பரவால்ல... வேலையில இருக்குற, பல ஆபிஸருங்க கதைய கேட்டீன்னா ரொம்ப சோகமா இருக்கும்மாய்யா...

ஏண்ணே! அவங்கbல்லாம் நல்லா படிச்சிருப்பாங்களேண்ணே... ‘படிப்பாவது, புண்ணாக்காவது, எவனாவது ஆவாதவன் மொட்டை கடுதாசி போட்டான்னா.. அவ்வளவுதான்; என்கொய்ரி, என்கொய்ரின்னு உயிர எடுத்துடுவானுங்க....’

இதற்குள் மே°திரியின் ஞாபகம் வந்த முருகனுக்கு, ‘அந்த ஆள் வேற சாயந்தரத்துல புல்லா தண்ணியடிச்சிட்டு இருப்பான். நல்லா இருக்கும்போதே எரிஞ்சி விழுவான்... தண்ணியடிச்சா சொல்லவே தேவையில்லை...’ என்று நினைத்தவனுக்கு கண் கலங்கியது...

எப்படியோ மே°திரி இல்லாத நேரத்துல போய், வீட்டம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்துட்டான்.
மறுநாள் மாதாகோவில் மணியடிக்கும் சத்தத்தை கேட்டதும் விழித்துக் கொண்ட முருகன், அவசர, அவசரமா ரெடியாகி... ரெவீன்யூ ஆபிஸர பாக்குறதுக்கு டீ கடை கோவிந்தசாமியோட போனான்.
‘ரெவின்யூ ஆபி°ல ரெடியா இருக்கேன்னு சொன்ன வில்லேஜ் ஆபிஸரை காணோமே!’ சுத்தி, முத்தி பாத்த கோவிந்தசாமி, பக்கத்துல இருந்த வாட்ச்மேன் கிட்ட கேட்க!

“ஏம்பா! அவுங்க எல்லாம் இன்னிக்கு காலைலே 7 மணிக்கே கும்மிடிப்பூண்டி போய்ட்டாங்க... அங்க ஏதோ வீடுங்க பத்திக்கிச்சாம், அத விசாரிக்க போயிட்டாங்க....” நீ நாளைக்கு வான்னு... வாட்ச் மேன் கூறியவுடன் இதயமே நொறுங்கிப் போனது முருகனுக்கு.

வீட்டுக்கு போனதும் முருகன் மனைவி கருப்பாயி ‘என்னங்க வாங்கியாச்சான்னு’ கேட்டதும், “பளார்னு ஒன்ணு விடணும் போல தோணுச்சு...” நாமே எரிச்சலா வர்றோம்... உள்ள நுழையறமோ இல்லையோ, அதுக்குள்ள கேள்வி கேக்குறா... வீட்டுக்காரரின் சிடு சிடுப்பை பார்த்ததுமே ஒண்ணும் நடக்கலை என்பதை உணர்ந்து கொண்டாள் கருப்பாயி.

தூங்கிக் கொண்டிருந்த பையன் அப்பாவின் சத்தத்தை கேட்டதும், அரைத் தூக்கத்தில் ஓடி வந்து அப்பாவின் மடிமேல் படுத்துக் கொண்டான். மனைவி போட்ட சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பெண்டாட்டிக்கிட்ட சொன்னான்.

‘ஜாதி சட்டிபிகேட் வாங்குறதுக்கு இவ்வளவு பிரச்சினையா! ஜாதி இல்ல, ஜாதி இல்லங்கறங்க... ஏன், இப்படி சர்டிபிகேட் கேட்டு நம்ம தாழியறுக்கிறானுங்க’ என்று முணுமுனுத்தால் கருப்பாயி.
பள்ளிக்கூடம் சேர்ப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் என்ன செய்வது என்ற யோசனையிலேயே உறங்கிப் போனான்.

மறு நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்று ‘ஜாதி சர்டிபிகேட் கிடைக்க நாளாகுங்க! ஒரு மாசம் கழிச்சு வாங்கித் தறேன்’ என்று முருகன் கூற, பள்ளி நிர்வாகி, ‘ஒரு மாசமெல்லாம் டைம் கிடையாது, இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாந்து சேக்கணும் சரியா!’ என்று மிரட்டல் தொனியில் சொல்லிட்டார் ஹெட் மா°டர்.

முருகன் டீ கடை கோவிந்தசாமியை பார்த்து, பள்ளி நிர்வாகி கூறியதை சொன்னான். ‘ஏம்பா, நீ எந்த தைரியத்துல ஒரு மாசத்துல கிடைக்கும்ன’ அவனவன் ஐஞ்சு வருஷம் லொங்கு, லொங்குன்னு அலையறான் அவனுக்கே கிடைக்க மாட்டங்குது’ நீ என்னடான்னா...

‘வேணும்னா ஒண்ணு பண்ணு, உனக்கு அவசரமாக சட்டிபிகேட் வேணும்னா, நான் வேற எதாவது ஜாதியைப் போட்டு வாங்கித் தரேன் அப்புறம் பாத்துக்கோ...ன்னார்...

பள்ளிக்கூடமும் - பையனும் மட்டுமே கண்ணுல இருந்த முருகனுக்கு ஜாதியை தூக்கி எரிஞ்சான்! ?
- கே. செல்வப்பெருமாள்
நண்பர் யாத்தீரிகன் அவர்கள் ‘பள்ளிக்கூடம்’ என்ற சிறு கதையை மீள் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற அவரது ஆலோசனைக்கேற்ப இதனை இங்கே மீள் பதிவு செய்துள்ளேன். யாத்தீரிகனுக்கு மிக்க நன்றிகள்...

September 07, 2006

விஜயகாந்த் திராவிடரா?

தமிழக அரசியல் களத்தில் தற்போது சூடாக விவாதிக்கப்படும் பொருளாக மாறியுள்ளது விஜயகாந்த் திராவிடரா? நமது பத்திரிகை நன்பர்கள் முதல்வர் கருணாநிதி அவர்களிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளில் ஒன்று இது!

இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் : விஜயகாந்தை நான் எப்போதும் திராவிடர் அல்ல என்று கூறியது கிடையாது. ஆனால், இப்போது எல்லோருக்கும் ‘திராவிர்’ என்ற முத்திரை தேவைப்படுகிறது. என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த விஷயத்தில் விஜயகாந்திற்கு ஏக்கச்சக்க கோபமாம்! அதனால், அவர் போகும் இடமெல்லாம் கருணாநிதியை ஒரு பிடி பிடிக்கிறாராம்!

உண்மையில் விஜயகாந்த் தான் திராவிடர் என்று கருதினால் அவர் என்ன செய்திருக்க வேண்டும் ‘கிண்டி கிங்’ இன்°டிடியூட்டில் தன்னுடைய டி.என்.ஏ.வை கொடுத்து தான் திராவிடர் என்று நிரூபித்திருக்க வேண்டும்! அதை செய்யும் துணிச்சல் அவரிடம் இருக்காது என்று நமக்கு தெரியும்! ஏனென்றால் டி.என்.ஏ. சோதனையில் திராவிடம் என்ற ரிசல்ட் எல்லாம் வராது! அது கற்பனையானது என்று கூறிவிடும். இத்தகைய ஒரு டெ°ட்டை செய்து கொள்ள திராவிடம் என்று முழங்கும் யாரும் முன்வர மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஓ.பி.சி. இடஒதுக்கீடு, சாட்டிலைட் சிட்டி, பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் வேலையின்மை வரை ஏராளமான பிரச்னை இருக்கும் போது அது பற்றியெல்லாம் கவலைப்படாத விஜயகாந்த் திராவிடத்தை பற்றி கவலைப்படுகிறரே அது ஏன்? அரசியலுக்கு திராவிடம் தேவைப்படுகிறதே! அங்கு மட்டுமா?....