Showing posts with label மூன்றாவது அணி. Show all posts
Showing posts with label மூன்றாவது அணி. Show all posts

September 12, 2007

ஆட்டம் காணும் அம்மாவின் மனக் கணக்கு!


ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு (அதாங்க அம்மா கூட்டணி) பிள்ளையார் சுழி போட்டு மூன்று மாதங்களே ஆன நிலையில் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றாவது அணி ஆரம்பிக்கும் போதே ஆட்சியை இழந்தவர்களின் அந்திமக் கூட்டணி! என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சந்திப்பில் போட்டிருந்தேன். இந்த கொள்கையற்றவர்களின் கூட்டணியின் அந்திமக் காலம் துவங்கி விட்டதைதான் அம்மாவின் அறிக்கை காட்டுகிறது.
அம்மாவின் அரசியலை தமிழகம் நன்கு உணர்ந்துள்ளது. அம்மாவின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறினால் அடுத்த நிமிடமே முகத்தை மாற்றிக் கொள்ளும் பேராதிக்க குணம் படைத்தவர். அது மட்டுமா? தோழமை கட்சியினராக இருந்தால் கூட தான் சொல்வதை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். இவரது அரசியல் சுபாவம் சந்திரபாபுவுக்கோ அல்லது முலாயமுக்கு தெரிந்திரிக்க நியாயம் இல்லை. அந்த ரகசியத்தை நன்கு உணர்ந்து அரசியல் நெருக்கம் கொண்டிருக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் விசயத்தில் இடதுசாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் முலாயமும். சந்திரபாபும் கலந்து கொண்டார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை இவர்களது விரிசலுக்கு. அம்மாவுக்கு யாரும் தகவல் சொல்லவில்லையாம்! இவரும் கூட அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஏன் இவர் இடதுசாரிகளோடு ஒத்துழைக்கவில்லை. இவரது எதிர்ப்பு என்பது பா.ஜ.க.வின் எதிர்ப்பைபோலத்தான் இரட்டை தன்மை கொண்டது. அது இந்த ஆட்சி எப்போது கவிழும் என்ற நோக்கத்தை கொண்டதே தவிர உண்மையான தேச நலன் சார்ந்தது இல்லை.
அம்மா எப்போதும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்பவராம்! அது சரி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவாத்துக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றா தீர்மானம் எடுத்தது! இல்லையே! இவர் என்ன செய்தார்? திடுதிப்பென்று இவருக்கே தெரியாமல் அவர்களது சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு விட்டார்களாம்! மணலை கயிராக திரிக்கும் கலையில் அம்மாவுக்கு ஆஸ்கர் அவார்டே தரலாம்! பாவம் முலாயமும். சந்திரபாபுவும் யாருக்கும் ஓட்டுப் போடாமல் நடுநிலை வகித்தனர். (நடுநிலை என்ற ஒரு கொள்கையே இல்லை). அப்போதுதான் புரிந்தது அம்மாவின் அரசியலுக்குள் ஒளிந்திருக்கும் சங்பரிவார - பா.ஜ.க.வின் குரல்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் பா.ஜ.க. பொறுப்பாளர் ரவி சங்கர் வர்மா அம்மாவை சந்தித்து ஒரு மணி நேரம் அரசியல் ஆலோசனை செய்துள்ளார். அதற்கு பின்தான் அம்மாவின் அறிக்கை வந்துள்ளது! தற்போது அத்வானி வரப் போகிறாராம் அம்மாவை சந்திக்க! இவரது மூன்றாவது அணி யாருடைய நலனை காப்பதற்கு என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
விழித்துக் கொண்ட முலாயமும். சந்திரபாபுவும் அம்மா விரித்த வலையில் சிக்காமல் மீண்டால் சரி!
இடதுசாரிகளைப் பொறுத்தவரை மூன்றாவது அணி என்பது குறைந்தபட்ச கொள்கை கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள். உறுதியான மதச்சார்பின்மை - மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு - சுயேச்சையான அயலுறவு கொள்கை போன்ற அடிப்படை விசயங்களிலாவது சரியான புரிதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். அம்மாவுக்கு ஆட்சி கனவைத் தவிர வேறு என்ன கொள்கை இருக்க முடியும்!
நான் மதவாத பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். என்று அம்மா மெரீனா கடற்கரையில் முழங்கினார். அவரது தொண்டர்கள் அதனை மறந்திருப்பார்கள் ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள். எந்த அடிப்படையில் மதவாதிகளோடு கள்ளத்தனமாக உறவு கொள்ள துடிக்கிறார் என கேட்கத் துவங்கி விட்டனர். எம்.ஜி.ஆரின். கொள்கை பற்றாளர்கள் விழிப்பார்களா?

June 06, 2007

ஆட்சியை இழந்தவர்களின் அந்திமக் கூட்டணி!


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இன்று (6.6.2007) அகில இந்திய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவதற்காக ஆந்திர மாநில முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஜெயலலிதா. முலாயம்சிங். வைகோ. ஓம் பிரகாஷ் செளதாளாவின் கட்சி. கர்நாடக பாபுலால் மராண்டி. கேரள காங்கிரசு. ஜார்கண்ட் விகாஸ் கட்சி என மொத்தத்தில் 8 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஜெயலலிதா கடந்த ஓராண்டாக இதற்கான முயற்சியை எடுத்து வந்தார். அவரது முயற்சியின் பேரிலேயே இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டணிக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மேலும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இக்கட்சித் தலைவர்கள் தனித்த முடிவு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


கடந்த காலத்தில் சந்திரபாபு நாயுடு காரு. ஜெயலலிதா அம்மையார். முலாயம்சிங் யாதவ் ஜி ஆகிய மூவரும் தாங்கள் ஆட்சி செய்த மாநிலத்தில் மக்கள் விரோத. சர்வாதிகார. வன்முறை ஆட்சியை நடத்தியதும். தொழிலாளிகளை வஞ்சித்து உலகமயாக்கலின் ஏவலாளிகளாக செயல்பட்டதால் ஆட்சியை இழந்து நிற்கும் இவர்களும். இவர்களுடன் ஒட்டிக் கொண்டுள்ள பிழைப்புவாதிகளும் அகில இந்திய அளவில் மூன்றாவது மாற்றை உருவாக்கப் போவதாக கூறுவது வேடிக்கையானது.

இதில் முலாயம் சிங்கைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதவாத பா.ஜ.க.வோடு கொஞ்சிக் குலாவியவர்கள். பா.ஜ.க.வின் மதவாத அரசியல் இன்றைக்கு கரையொதுங்கிப்போனதால் எந்தக் கப்பலில் ஏறி அதிகார - ஆட்சிப் பயணத்தை மேற்கொள்வது என்ற அதிகார வெறியைத் தவிர மக்கள் நலனை கிஞ்சிற்றும் ஏறடெத்துப் பார்க்காத கூட்டணியே இது.

இந்த மூன்றாண்டு காலத்தில் மதவெறி பா.ஜ..கவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகவோ அல்லது மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவோ எந்தவிதமான மக்கள் இயக்கமும் நடத்தாதவர்கள் மத்திய ஆட்சிக் கட்டிலில் ஏறத் துடிக்கிறார்கள். இவர்களது சந்தர்ப்பவாத கூட்டணி அந்திமக் கூட்டணியே தவிர ஆளும் கூட்டணியாக ஒருபோதும் மலராது.