May 14, 2007

கிரிமினல்மயமாகும் அரசியல்!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்புமுனைகள் நடந்தேறி வருகிறது. குறிப்பாக, கலைஞரின் சட்டமன்ற பொன்விழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திமுகவிற்குள் நடந்து வரும் மாற்றங்கள் தயாநிதி மாறன் நீக்கம் போன்ற தொடர் சம்பவங்கள் திமுகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டும், மக்களிடையே விவாதிக்கப்பட்டும் வருகிறது. திமுக தொண்டர்களிடம் கலைஞரின் நடவடிக்கைக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தாலும், மக்கள் மத்தியில் திமுகவின் நடவடிக்கை குறித்து பல விதமான சந்தேகங்கள் நிலவுவதை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

‘தினகரன் கருத்து கனிப்பு’ அதைத் தொடர்ந்து மதுரையில் மு.க. அழகிரியின் அடியாட்களால் நடத்தப்பட்ட தாக்குதல், மூன்று உயிர்கள் பலி - சன் டி.வி., தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்குதல், தீ வைப்பு சம்பவங்கள் மதுரையை மட்டுமல்ல; ஜனநாயகத்தை விரும்பும் மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.

இந்த சம்பவத்தை நிகழ்த்தியது மு.க. அழகிரியின் அடியாட்களான அட்டாக் பாண்டியன் போன்ற கிரிமினல்கள் மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர்கள், மதுரை மேயர் தேன்மொழி, அவரது கனவர் போன்றவர்கள் நேரடியாக களத்திற்கு வந்து இந்த தாக்குதலுக்கு தலைமையேற்று நடத்தியுள்ளது அதைவிட கொடுமையானது; ஏற்க முடியாதது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அண்ணாதுரையால் வகுக்கப்பட்ட கொள்கை முழக்கத்தை ஏந்தி செயல்படும் திமுக தொண்டர்கள் தற்போது யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறார்கள் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

மதுரை லீலாவதி படுகொலை, முன்னாள் அமைச்சர் த. கிருஷ்ணன் படுகொலை, தற்போது தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் படுகொலை ஆகியவற்றில் மு.க. அழகிரிக்கும் அவரது அடியாட்களுக்கும் தொடர்பு இருப்பதாக சன் டி.வி. குற்றம் சாட்டியது. மொத்தத்தில் மதுரையில் அழகிரியின் ராஜ்யமே நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவங்களின் தொடர் நிகழ்ச்சியும், கலைஞரின் பொன் விழாவில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு வி.ஐ.பி. அந்த°து கொடுத்து, சட்டமன்ற லாபியில் உட்கார வைத்ததும் மக்கள் மத்தியில் மேலும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு இப்படிப்பட்ட அந்த°தை வழங்கப்பட்டுள்ளதன் மூலம் வன்முறை - கொலைவெறியாட்டத்தை அரசியல் அதிகாரத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற சூழல் நிலவினால், அரசியலில் கிரிமினல்களைத் தவிர வேறு யாருக்கு இடமிருக்க முடியும்!

அரசியல் கிரிமினல்மயமாவது குறித்து தொடர்ந்த பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை மற்றும் புறநகரில் உள்ளாட்சி தேர்தலில் நடத்திய பெரும் வன்முறை, வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கையை அரங்கேற்றியதன் மூலம் சென்னையில் உள்ள ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் இது நம்ம ஆட்சி! என்ற எண்ணத்தையும், நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற எண்ணத்தை தோற்று வித்துள்ளது. திமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் கிரிமினல் நடவடிக்கைகளுக்கான ஒரு வேராக அமைந்து விட்டது.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் படுகொலைகள், சென்னை சென்டிரல் ரயில்வே °டேஷனில் பட்டப் பகலில் நடந்த படுகொலை போன்ற சம்பவங்கள் இன்னும் மக்கள் மத்தியில் நெஞ்சில் இருந்து அகலவில்லை!

அதேபோல், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி மற்றும் அவரது சகோதரர்கள் மீது கே.வி.கே. குப்பத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மீது உயர்நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதும், சமீபத்தில்கூட அமைச்சரின் தம்பி ஒருவர் டிராபிக் போலீசாரை தாக்கியது தொடர்பான செய்தியையும் பத்திரிகையில் பார்க்க முடிந்தது. அரசியல் அதிகாரத்தின் மூலம் எதைச் செய்தாலும் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற சிந்தனையே இந்த சம்பவங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

50 ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தை முடித்துள்ள கலைஞர், நீண்ட நெடிய அரசியல் பாரம்பர்யம் உள்ளவர், திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராக வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். இந்த சூழலில், மக்கள் மத்தியில் எழும் பல்வேறு கேள்விகளுக்கு அவர் விடையளிப்பதைப் பொறுத்துதான் வரலாற்றில் அவரது இடம் தீர்மானிக்கப்படும்.

குறிப்பாக தயாநிதி மாறன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவரது குடும்ப சண்டையாக மட்டுமே பார்க்க முடிகிறது. தினகரன் அலுவலகத்தை தாக்கிய - மூன்று உயிர்களை பலிவாங்கியவர்கள் மீது, குறிப்பாக மதுரை மேயர் தேன்மொழி மற்றும் திமுக கவுன்சிலர்கள் இதற்கு மூலகாரணமான மு.க. அழகிரி இவர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளதோடு, குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அனைவர் மீதும் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதன் மூலமே இந்த சம்பவத்திற்கு உண்மையான நீதி வழங்கியதாக அமையும்! முதல்வர் இதனை நிறைவேற்றுவார் என்று நம்புவோம்!

கலைஞரின் ஓராண்டு ஆட்சியில் இரண்டு ஏக்கர் நில விநியோகம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ரேஷன் கடையில் எண்ணெய், பருப்பு விற்பனை, கூட்டுறவு கடன் ரத்து போன்ற நல்ல திட்டங்களின் மூலம் மக்களின் நல்லாதரவை பெற்றுள்ள அரசிற்கு இந்த சம்பவங்கள் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாது என்பது ஜனநாயக விரும்பிகளின் நல்லெண்ணமாக இருக்கிறது.

No comments: