December 16, 2005

அமெரிக்க மாடும் - ஏழை மனிதனும்
WTO - படிப்பினைகள்“உட்டோ” மாநாட்டின் மூன்றாவது நாள் “வளரும் நாடுகளின்” ஒற்றுமையை மிகப் பரந்த அளவில் கொண்டுவந்துள்ளது. ஜி-20, ஜி-90 என்று ஆரம்பித்து ஜி-125 என்ற அளவில் ஏகாதிபத்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக ஒருமித்து குரலெப்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்தியா, பிரேசில், வெனிசுலா, சீனா, தென்னாப்பிரிக்கா உட்பட உள்ள வளரும் நாடுகள் ஒன்றுபட்டு முன்னேறி வருகின்றன.இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் விவசாயத்தையும், விவசாயம் சாராத வர்த்தகத்தையும் ஒன்றாக இணைக்கக்கூடாது என்று கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.தற்போது அமெரிக்காவும் - ஐரோப்பாவும் மானியங்களை குறைப்பதில் எப்படிப்பட்ட பாரபட்சமான போக்கில் நிலவுகிறது என்பதை பல தரப்பினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக “ஏழை நாடுகளில் மனிதனாக பிறப்பதைவிட, அமெரிக்காவில் மாடாக பிறக்கலாம்” என்று ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதிலிருந்தே அமெரிக்காவும் - ஐரோப்பாவும் தங்களது நாட்டு விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், ஏன் மாடுகளுக்கும் கூட மானியத்தை அள்ளி வழங்கி வருவதையும், அதே சமயத்தில் இந்தியா போன்ற நாடுகளில் “சமையல் கே°” உட்பட எதற்கும் மானியம் வழங்கக்கூடாது என நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
இதன் விளைவு “உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 18,000 குழந்தைகள் பசியாலும், பட்டினியாலும், தடுக்கக்கூடிய நோய்களாலும் உயிரிழந்து வருவதாக உலக உணவு பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து வருவதே” வளரும் நாடுகள் எத்தகைய ஆபத்தை நோக்கியுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.விவசாய சந்தையை வளரும் நாடுகள் திறந்து விட்டால் “ஹைபிரிட் விதைகள்” என்ற பெயரில் மலட்டு விதைகளை நம் விவசாயிகள் உபயோகிக்க வேண்டி வரும், அத்துடன் விதைக்காக நாம் அவர்களிடம் கையேந்தவேண்டிய நிலை வரும், மேலும் அவர்கள் பரிந்துரைக்கக்கூடிய உரத்தை இடுவதன் மூலமே சிறப்பான அறுவடையை எட்ட முடியும் என்று அவர்களது மறைமுகமான பொறிக்குள் நமது விவசாயம் சிக்கும்; விவசாயம் என்பது ஏற்றுமதிக்கே தவிர நம்முடைய உணவுத் தேவைக்காக இருக்காது! உட்டோவின் மாயாஜால வலைக்குள் எப்படியாவது சிக்க வைக்க துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்காவும் - ஐரோப்பாவும்.
அமெரிக்க - ஐரோப்பிய சந்தைகளில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக ஆசை வார்த்தைகளை காட்டுகின்றனர். உண்மை என்ன? அவர்கள் பட்டியலிடக்கூடிய பொருட்களை இந்தியா போன்ற ஏழை நாடுகள் ஏற்றுமதி செய்ய முடியாது. அதே சமயம் அவர்களது மார்க்கெட்டில் நாம் இலாபம் அடைகிறோம் என்ற நிலை வந்தால், உடனடியாக ஏதாவது ஒரு சொத்தை காரணத்தை கூறி நம்முடைய வர்த்தகத்தை தடுப்பார்கள்.
ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் சீனாவின் சமீபத்திய ஜவுளி ஏற்றுமதியை குறிப்பிடலாம். சீனாவின் ஜவுளி துணிகள் மிகப் பெருமளவில் குவிந்துக் கிடக்கிறது. அத்துடன் மிக குறைந்த விலையில் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்கப்படுவதால் ஐரோப்பிய ஜவுளி வியாபாரிகள் தற்போது அதைத் தடுத்து விட்டதை உதாரணமாக குறிப்பிடலாம்.
“உட்டோ” மாநாட்டை எதிர்த்து ஹாங்காங்கில் வலுவான எதிர்ப்புக்குரலை எழுப்பி வருகின்றனர். “உட்டோ எங்களை சாகடிக்குமே தவிர வாழவைக்காது!” என்ற கோஷத்தோடு உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என விதவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

3 comments:

CrazyTennisParent said...

செல்வபெருமாள் அருமையான பதிவு.
இந்த விதைகள் மற்றும் உரங்கள் பற்றி நீங்கள் சொல்வது இரத்தத்தை உறைய வைக்கும் விஷயம்..ஏற்கனவே செத்துக்கிட்டு இருக்கிற விவசாயி ரொம்ப பாதிக்கப்படுவான்....

ஜவுளி ஏற்றுமதில சீனா பாதிக்கப்பட்டிருந்தா எப்படியும் நம்மளுக்கும் அதே கதிதான் இல்லையா?

கடந்த வாரம் திண்ணையில எழுதினீர்களா?

சுந்தரவடிவேல் said...

பதிவுக்கு நன்றி.

சந்திப்பு said...

முத்து சாருக்கும், திரு. சுந்தரவடிவேலுவுக்கும் நன்றி!

முத்து சார் தாங்களும், தங்களது பாணியில் உலக வர்த்தக அமைப்பு குறித்து எழுதினால் அது நிறைய வாசகர்களுக்கு உதவியாக இருப்பதோடு, பரந்த விவாதத்தையும் - ஒரு ஆரோக்கியமான சூழலையும் “வலைப் பூ”விற்கு வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். தங்களது வலைப்பூ அதிகமான வாசகர்களை ஈர்ப்பதாக இருப்பதால் இவ்விஷயத்தல் ஒரு திருப்பத்தை உண்டாக்க முடியும்! தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
நான் திண்ணையில் “இந்தியா : உலகமய வெற்றியும், மனிதவளத் தோல்வியும்” என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். அதை நல்ல முறையில் திண்ணை வெளியிட்டிருந்தது மகிழ்ச்சிகரமானது.
கே. செல்வப்பெருமாள்