December 08, 2005

மைக்ரோ சாப்ட்டின் “மைக்ரோ சுரண்டல்”
மைக்ரோ சாப்ட் அதிபர் ‘பில் கேட்ஸ்°’ நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஐ.டி. துறையில் ரூ. 17,500 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். வரவேற்க வேண்டிய விஷயமே! இதன் மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போவதாகவும், தற்போது இந்தியாவில் 4000 பேர் மைக்ரோசாப்ட்டில் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார். “இந்தியாவில் மனிதவளம் மிகுந்துள்ளதையும்” பில்கேட்ஸ் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாட்டில் இவ்வளவுப் பெரிய முதலீடு செய்வதை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

இருப்பினும் இம்முதலீடு குறித்து மனதில் எழும் சில கேள்விகளை கேட்காமலும் இருக்க முடியவில்லை.

 • நமது நாட்டில் ஐ.டி. துறையில் அறிவு வளம் மிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் மிகுந்திருப்பதோடு, இவர்களையெல்லாம் அமெரிக்கா - ஐரோப்பாவோடு ஒப்பிடும் போது மிகக் குறைந்த சம்பளத்தில், தங்களுக்கு தேவையான பணிகளையும் மிகச் சிறப்பாக பெற முடியும் என்பதே! (இது ஒரு கௌரவ சுரண்டல்) இதன் மூலம் மைக்ரோ சாப்ட் அடையக்கூடிய லாபம் என்பது அளவிட முடியாததாக இருக்கும்.
 • பொதுவாக நம்மைப்போன்ற பின்தங்கிய நாட்டில், உதாரணமாக ரூ. ஒரு லட்சம் முதலீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். சரி! இது உயர் தொழில் நுட்பத்துறையாக இருப்பதால் ஒரு கோடி ரூபாய்க்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு என்றால் கூட 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். நிலைமை என்ன? பெரிய கப்பலில் இருந்து மிகப்பெரிய வலையை வீசி அனைத்து மீன்களையும் அள்ளிச் செல்லும் வேலைதான் இது. (இதுதான் மைக்ரோ சாப்டில் மைக்ரோ சுரண்டல்)
 • இம்முதலீட்டின் மூலம் இந்திய நாட்டில் உள்ள விப்ரோ, டி.எஸ்.சி. போன்ற உள்நாட்டு ஐ.டி. போட்டியாளர்களையும் இத்தொழிலில் இருந்து சிறிதளவாவது போட்டியிலிருந்து விலக்கி வைக்க முடியும்.
 • நம் நாட்டில் ஐ.டி. சார்ந்த சேவையை பயன்படுத்துபவர்கள் அமெரிக்க - ஐரோப்பிய மார்க்கெட்டில் உள்ளவர்களை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும் இத்தகைய சேவையை பயன்படுத்துபவர்களை “மைக்ரோ சாப்ட்டின் சாப்ட்வேர் அடிமைகளாக” மாற்றுவதையும் தனது நோக்கமாக கொண்டுள்ளார் பில்கேட்ஸ். ஏற்கெனவே 90 சதவீத அடிமைகளாக மாறிவிட்டனர் கணிணி வல்லுனர்களும் - பயன்பாட்டாளர்களும்.
 • லீனக்°, யூனிக்ஸ், சன்... என பல்வேறு ஆப்ரேட்டிங் சிஸ்டஸ்ட்ம் உட்பட “இலவச சாப்ட்வேர்களை” வழங்கி வருவதை நாம் அறிவோம். இப்படி பன்முகப்பட்ட தன்மை களைக் கொண்ட சாப்ட்வேர்களை மக்கள் உபயோகிப்பதை தடுப்பதும் மைக்ரோசாப்ட்டின் நோக்கங்களில் ஒன்று. நமது அரசுகளும் கூட இதுபோன்ற பாதுகாப்பான இலவச சாப்ட்வேர்களை பயன்படுத்திக் கொள்வதில்லை. (இதுதான் ஏகபோக ஆதரவு கொள்கை யின் அப்பட்டமான வெளிப்பாடு.)
 • குறிப்பாக இன்றைக்கு தமிழ்த்துறையை எடுத்துக் கொண்டால் “தமிழ் பாண்ட்”, “கீ போர்டு டிரைவர்” என பலவற்றிற்கு பல தமிழ்சார்ந்த சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பல சிறிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் வளர முடிகிறது. (இதிலும் வியாபாரக் கொள்ளை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது) இருப்பினும் இதன் மூலம் பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதுவே மைக்ரோ சாப்ட்டின் தமிழ் சார்ந்த சாப்ட்வேராக இருந்தால் அனைத்து நிறுவனங்களையும் ஒழிக்கும் வேலையை ‘பில் கேட்ஸ்’ நன்றாகவே செய்திருப்பார்.
  மேலும், டி.பி. போன்ற நோய்களை ஒழிப்பதற்கு ‘வேக்சின்’ தயாரிக்க பில்கேட்ஸ் உதவ முன்வந்திருக்கிறார். இது ஏதோ அவரது கருணையால் நமக்கு கிடைக்கும் பணம் அல்ல; இந்திய நாட்டில் தனக்கு மிகப்பெரிய சுரண்டலை செய்ய அனுமதித்ததற்கு போடும் ........ காசே! இதுபோன்ற உதவிகளால் மந்திரிகள் மனம் மகிழலாம் மக்கள்....
 • இறுதியாக, நமது நாட்டிற்கு இன்றையத் தேவை, பெரும்பாலான மக்கள் பயனடையக் கூடிய முறையிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்நுட்ப உதவிகளும், முதலீடுகளுமே!
  அபாரமான சிந்தனையாளர்களைக் கொண்ட நம் தொழில்நுட்ப வல்லுனர்கள் முயற்சி செய்தால் பல சிலிக்கன் வேலிகளை இந்திய நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் உருவாக்க முடியும்! மத்திய - மாநில அரசுகளின் ஆத்மீகமான கமிஷனற்ற உதவியும் அத்தியாவசியத் தேவை!
 • 2020 பேசும் அப்துல்கலாம் தனக்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு மாநில அரசுகளையாவது இப்பணியில் பயன்படுத்தலாம்... இவர்கள் எல்லாம் பேசுவதை குறைத்து விட்டு செயலில் ஈடுபட்டால் சிலிக்கன் வேலி எட்டும் தூரத்தில்....

6 comments:

மஞ்சூர் ராசா said...

எப்படி நமது அமைச்சர்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும், இந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் இந்த சுரண்டல் தெரியாமல் போனது? அல்லது இவர்களூக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா?
ஏன் நம் மக்கள் லினக்ஸ், யூனிக்ஸ், மற்றும் சன் உபயோகிக்கத் தயங்குகிறார்கள்?

சந்திப்பு said...

நன்றி, மஞ்சூர்

பொதுவாக மக்கள் ஓடும் வெள்ளத்தோடு தங்களும் சேர்ந்து ஓடுவதையே விரும்புகின்றனர். எதிர் நீச்சல் போட அல்ல.
அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உருவாக்குவது இத்தகைய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களே. அவர்கள் எப்போதும் இவர்களின் விசிறிகளாகத்தான் இருப்பார்கள்.

மஞ்சூர் ராசா said...

சமீபத்தில் சுஜாதா ஆனந்த விகடனில் இதைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார். ஆனாலும் இந்த விசயத்தில் பில் கேட்ஸின் ஆளுமையை அவ்வளவு விரைவில் தவிர்க்க முடியும் என்றுத் தோன்றவில்லை.
அமைச்சர் தயாநிதி மாறன் மிகவும் அவசரப்பட்டு எதையோ சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் செயல்படுகிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. (வேறு என்ன அரசியல் ஆதயம் தான்)

pozudhu said...
This comment has been removed by a blog administrator.
Muthu said...

இந்திய சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் அடிமை வேலையே போதும் என்று முடிவு செய்துவிட்டனர்.

குறிப்பாக தமிழர்கள் ஏராளாமானோர் இத்துறையில் கைநிறைய சம்பாதிக்கின்றனர். அடிப்படை தேவைகளுக்கு தேவையான பணத்தை சம்பாதித்துவிட்ட ஆட்களாவது இத்துறையில் ஒரு நாராயணமூர்த்தி மாதிரி ஒரு பிரேம்ஜீ மாதிரி வர வேண்டாமா?

பில்கேட்ஸை மட்டும் குற்றம் சொன்னால் போதாது. நம்முடைய அரசாங்கமே இன்று
survival of the fittest என்று பேசி வரும்போது.......

சந்திப்பு said...

நன்றி முத்து சார்!

தங்கள் கருத்துடன் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.
நமது அரசுகள் என்றைக்கு சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறதோ அன்றுதான் நம மக்களும் அப்பாதையில் நடைபோடத் துவங்குவார்கள்...

கே. செல்வப்பெருமாள்