December 17, 2005

ஆசை வெட்கம் அறியாது!
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் 6வது உலக வர்த்தக மாநாட்டில் ஏழை நாடுகளிடையே ஏற்பட்டுள்ள உருக்குப்போன்ற ஒற்றுமையால் மூச்சுத் திணறிப்போயுள்ளது அமெரிக்காவும் - ஐரோப்பாவும்.
நரி செத்தாலும் கண் கோழி கூண்டின் மீதே இருக்கும் என்பதுபோல், உலக வர்த்தக மாநாடு தோல்வியைத் தழுவும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து கொண்ட ஏகாதிபத்திய நாடுகள் கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட்டு வருகிறது.
“உட்டோ” அறிக்கையை மறு பரிசீலனை செய்து, இன்றைக்கு புதிதாக தாக்கல் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார் உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் பா°கல் லாமி.நேற்றைக்கு நடைபெற்ற விவாதத்தில் இந்திய அமைச்சர் கமல்நாத் அமெரிக்காவில் உள்ள 20 ஆயிரம் பருத்தி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 480 பில்லியன் மானியம் அளிப்பதாக குற்றம்சாட்டியதோடு, இந்திய நாட்டில் உள்ள பருத்தி விவசாயிகள் எப்படி நிலைகுலைந்து நிற்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்துள்ளார். இதேபோல் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பிரதிநிதிகளும் தங்களது கோபாவேசத்தை கொட்டியுள்ளனர்.
ஐரோப்பிய வர்த்தக பிரதிநிதி பீட்டர் மண்டல்சன் கூறும் போது, மானிய வெட்டு என்பது உடனடியாக சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். ஊருக்குதான் உபதேசம் எனக்கில்லை என்பதுதான் “ஏகாதிபத்திய பழமொழி”.
இன்றைக்கு உலகமயமாக்கல் கொள்கையை தீவிரமாக நம்நாடு பின்பற்றி வருவதால் சமையல் எரிவாயு, மின்சாரம், ரேஷன் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, உரம், என அனைத்து அத்தியாவசியமான பொருட்களுக்கும் மானியம் கடுமையாக வெட்டப்பட்டுள்ளதால் நம்முடைய மக்களின் வாழ்க்கைத்தரம் அதள பாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், மேலை நாடுகள் இந்த விஷயத்தில் ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்புமாக செயல்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்?
மொத்தத்தில் வர்த்தக உடன்படிக்கை என்பது வெளிப்படையானதாக - சமத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

3 comments:

CrazyTennisParent said...

பெருமாள்,

முதலில் ஒன்று..சார் என்று கூப்பிடும் அளவிற்கு நான் வயதானவன் இல்லை...
சும்மா முத்து என்றே கூப்பிடுங்கள்.....

இந்த பொருளாதார பிரச்சனைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது..ஆகவே தான் நான் இதை பற்றி எழுதவில்லை...பிறகு எழுதுவோம்..மற்றபடி நான் டெய்லி உங்கள் பதிவை பார்த்துத்தான் இதை பற்றி அப்டெட் ஆகிறேன்.

என் பதிவெல்லாம் அதிக வரவேற்பு பெறவில்லை பெருமாள்..."சோ" பத்தி எழுதியதால் தான் என்று நினைக்கிறேன்.(இங்கு ஒரு பெரிய கேங் வார் நடந்துட்டு இருக்கு..நான் குறுக்கே போறனாலே குண்டடி பட்டிருவேன்னு நினைக்கிறேன்.)

Voice on Wings said...

//ஐரோப்பிய வர்த்தக பிரதிநிதி பீட்டர் மண்டல்சன் கூறும் போது, மானிய வெட்டு என்பது உடனடியாக சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். ஊருக்குதான் உபதேசம் எனக்கில்லை என்பதுதான் “ஏகாதிபத்திய பழமொழி”.//

மிகச் சரியாகக் கூறியிருக்கிறீர்கள். நானும் இது பற்றிய தகவல்களையும், வரலாற்றுப் பின்னணியையும் படித்து வருகிறேன். ஒரு தெளிவு பிறந்த பிறகு, அதை பதிவாகப் போடும் அளவுக்கு தகவல்கள் இருந்தால் முயற்சி செய்வேன். உங்கள் பதிவுகளுக்கு நன்றி.

சந்திப்பு said...

தங்களது முயற்சியை வரவேற்கிறேன். நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவதோடு, சிறப்பாகவும் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
நன்றி! Voice of Wings