
தேசத்தை உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தாஜ் ஓட்டல், நரிமன் இல்லம், ஓபராய் போன்றவற்றில் பிணைய கைதிகளாக வைத்திருந்த அப்பாவி மக்களையும், வெளிநாட்டு பயணிகளையும் மீட்பதற்காக 60 மணி நேர ஓய்வு ஒலிச்சலில்லாத கடுமையான போராட்டத்திற்கு பின் நமது வீரர்களின் அளப்பரிய உயிர்களை தியாகம் செய்து அந்த பயங்கரவாத மிருகங்களை முறியடித்து மீட்டுள்ளனர்.
இந்த பணியில் ஈடுபட்ட நமது தேசிய பாதுகாப்பு படையினரின் சாதனையும், தியாகமும் போற்றப்பட வேண்டியது. மெச்சத் தகுந்தது. இந்த தேசம் காக்கும் பணியில் முதல் பலியானவர் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைவர் ஹேமந்த் கார்க்கரே! இவரது இழப்பு மகாராஷ்டிரத்திற்கு மட்டுமின்றி தேசத்திற்கே பெரும் இழப்பாகும்.
இந்த ஒப்பற்ற மாவீரரின் தியாகத்திற்கு தலை வணங்கி வீரவணக்கம் செலுத்துவோம்.
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் பல வருடங்களாக துப்பு துலங்காத நிலையில் ஹேமந்த் கார்க்கரே பொறுப்பேற்ற பின்னர் அதன் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, அந்த சம்பவத்தில் காவியுடை பயங்கரவாதிகளின் இருண்ட முகங்கள் - காவியுடையால் மறைக்கப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தினார். இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து வட மாநிலங்களில் அதுவும் குறிப்பாக மகாராஷ்டிராவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுவாக இதுபோன்ற பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் மதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்களும் அத்வானி அவர்களும் இசுலாமிய பயங்கரவாத அமைப்பின் கையிருப்பதாகவும், இதில் ஐ.எஸ்.ஐ. பங்கு இருப்பதாகவும் உடனடியாக கதை கட்டி விடுவார்கள். நாடும் இதை நம்பித்தான் வந்தது. இப்படியான பயங்கரவாத நடவடிக்கையின் வாயிலாக குறிப்பாக இசுலாமிய சமீபத்தின் மீதே ஒரு பயங்கரவாத முத்திரையை திணிப்பதற்கு இந்துத்துவவாதிகளும், இந்துத்துவ ஆதரவு மீடியாக்கவும் கடுமையான முயற்சிகளை - கோயபல்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது.
இந்த சூழ்நிலையில்தான் முதல் முறையாக சாத்வி பிரக்யா என்ற இந்து துறவி இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்தியதோடு, சங்பரிவாரம் நடத்தும் இராணுவ பள்ளியின் மூலமாகத்தான் இதுபோனற் சதிச் செயல்கள் அரங்கேற்றப்பட்டது என்பதையும் நாட்டிற்கு அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே! அது மட்டுமா? இன்றைக்கு தேசத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக தமது விலை மதிக்க முடியாத உயிரை பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களை நாடே புகழ்ந்து கொண்டிருக்கையில் - அத்தகைய மதிப்புமிக்க இராணுவத்திற்குள்ளேயே இந்துத்துவ ஓநாய்கள் இராணுவத்தின் உயர்மட்டம் வரைச் சென்று நமது தேசத்திற்கு எதிராகவே, நமது இந்திய மக்களுக்கு எதிராகவே பயங்கரவாத வன்முறைச் செயல்களை நிகழ்த்தியதை நினைக்கும் போது, இந்த சங்வரிவார பயங்கரவாதிகளுக்கு நாட்டையும், நாட்டு மக்களையும் விட அவர்களது வெறி பிடித்த பாசிச தத்துவம் எந்த அளவிற்கு அவர்களது மூளையை ஆட்டு வித்துள்ளது - ஆக்கிரமித்துள்ளது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
பாசிச சிந்தனை எப்படி செயல்படும் என்பதற்கு அடையாம்தான் - முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இருவரும் நாசிக் அருகே, 'இந்து ராணுவப் பயிற்சிக் கழகம்' என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். மேஜர் குல்கர்னி, 'ஹிந்து சைனிகி சன்ஸ்த்தா' என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப் பிரிவில் செயலாளராகத் தொண்டு(!) ஆற்றி வருபவராவார்.
இந்த வழக்கில் இன்னும் தோண்டத் தோண்ட பல புதைகள் கிடைக்கவுள்ளன. இந்த நிலையில்தான் இந்த வழக்கின் கதாநாயகனாக செயல்பட்டு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தேசத்தின் முன் மேற்கண்ட பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே!
ஆனால், மேற்கண்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டனர் அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும். அதாவது மேற்கண்ட நேர்மையான அதிகாரிகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு பொய்களை வாரியிறைத்தனர். அவதூறுகளை அள்ளி வீசினர். சாத்வீ துன்புறுத்தப்படுவதாக கூக்குரல்களை எழுப்பினர். இந்த தேச மக்களுக்கு வேட்டு வைத்த ஒரு குற்றவாளியை துன்புறுத்தாமல் எப்படி விசாரிக்க முடியும் என்ற கலையை அத்வானிதான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டில் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த அமைப்புகளோ, நபர்களோ ஈடுபட்டிருந்தால் இந்நேரத்தில் அவர்களை உடனே தூக்கிலிடு என்று பெருத்த குரலெழுப்பியிருப்பார்கள் இந்த போலி பயங்கரவாத எதிர்ப்பு பாசாங்குவாதிகள்.
பயங்கரவாதம் என்பது வெளியிலிருந்து மட்டும் வருவதல்ல அது உள்ளிருந்தும் வரும் என்பதை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்திச் சென்றிருக்கும் ஹேமந்த் கார்க்கரே, தனது இறுதி சில மணி நேரங்களில் தனது நன்பரும் - துறைச் சார்ந்தவருமான கோவர்த்தனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மும்பையில் தேசத்தையே உலுக்கிய பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடச் செல்லும் நேரத்தில் கூட, தனக்கு என்ன நேர்ந்தாலும் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை மிகத் தெளிவாக தனது இறுதி சில மணி நேரத்தில் கூட கடமையாற்றியிருக்கும் இந்த மகத்தான வீரரின் வீரம் போற்றப்பட வேண்டியது. இது தேசத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.
அதேபோல் பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஹேமந்த் கார்க்கரே மறைந்து விட்டார் என்ற உடன் குஜராத் முதல்வர் மோடி அந்த குடும்பத்திற்கு ஒரு கோடி தருவதாக கூறினார். ஆனால் அந்த குடும்பத்தினர் மோடியின் நிவாரணத்தை வாங்க மறுத்து விட்டனர்.
மோடி யார்? என்பது உலகிற்கே தெரியும் போது? அந்த தாய்குத் தெரியாமலே போகும்! எனது கணவர் இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அதற்கு மோடியின் ஒரு கோடி ஈடேறுமா? இந்த தியாகம் ஈடு இணையற்ற தியாகம் என்றே அவர் நினைத்திருக்கலாம்!
அது மட்டுமா? தேசமே இந்த சோகத்தை எப்படி எதிர் கொள்ளுவது என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளதன் மூலம் இவர்களது அரசியல் சதிராட்டம் மீண்டும் அம்பலத்திற்கு வந்துள்ளது. பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று பொறுப்புள்ள எதிர் கட்சி வெளியில்தான் பேசுவோம்! ஆனால் உள்ளரங்கில் ஜனநாயக ரீதியாக விவாதிக்கும் கூட்டத்தில் விவாதிக்க மாட்டோம் என்று சண்டித்தனம் செய்வதுதான் தேச பக்தியா? என்ற கேள்வி எழுகிறது.
அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும் இவ்வாறு கலந்து கொள்ளாதது யாரை காப்பாற்றுவதற்காக? என்ற கேள்வி இந்திய மக்கள் மனதில் எழுகிறது.
மொத்தத்தில் காவி பயங்கரவாதமும் இந்தியாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே என்பதை தனது நியாயமான புலன் விசாரணை மூலம் அம்பலப்படுத்தி - மும்பை பயங்கரவாதிகளையும் எதிர்த்து தனது உயிரை தியாகம் செய்துள்ள ஹேமந்த் கார்க்கரேவுக்கு எனது வீர வணக்கங்கள்.