அக்டோபர் 9, 2008 தேதியிட்டு "எனது இந்தியா" என்ற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் மூலம் தான் யார்? தனது கொள்கை என்ன? என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். குறிப்பாக சிறு பத்திரிகை, சிறுபான்மையினர், தலித்துக்கள், சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று அனைவர் மீதும் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
"நாய்க்கு நெல்பழ வாசனை" தெரியாது என்பார்கள் தமிழகத்தில். அதுபோலதான் இருக்கிறது இவரது கட்டுரையும். இந்தியாவை இவர் பார்ப்பது எல்லாம் இந்துத்துவ கண்ணாடி அணிந்து கொண்டுதான். அதற்கு இவரே கொடுத்துள்ள பெயர்தான், "இந்து ஞான மரபு". இணையத்திலும், வலைப்பதிவு உலகிலும், ஏன் அறிவுலகத்தினர் யாரும் "இந்து ஞான மரபு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வளவு ஏன் இந்த இந்து மரபு என்பது வெறும் "பார்ப்பனீய சனாதன" குப்பைதான் என்று அடித்து உரைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மேலும் இவர் உரைக்கக்கூடிய இந்த இந்து என்பதே பன்மைக்கு எதிரானதாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவும் செயல்படுவதுதான்.
சரி விசயத்திற்கு வருவோம். அவரது எனது இந்தியா கட்டுரையில் துவக்கத்திலேயே விழிப்புணர்வு என்ற பத்திரிகை மீது விழுந்து பிடுங்குவதோடு, அதனுடன் சேர்ந்த அனைத்து சிறு பத்திரிகைகளையும் தனது இந்துத்துவ பற்களைக் கொண்டு கிழித்து எடுக்கிறார். இந்த விழிப்புணர்வு பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைகள் குறித்து அவர் கூறுவதை இங்கே பாருங்கள்.
(அதன் பக்கங்கள் பெரும்பாலும் யாரென தெரியாதவர்களால் எழுதப்பட்டிருந்தன. அனேகமாக ஒருவரே எழுதியிருப்பாரோ என்று எண்ணவைக்கும் நடை.)
அதாவது ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் இவரைப் போன்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களால்தான் எழுத வேண்டும் என்பதுதான் இவர் வகுத்துள்ள சனாதன மனு நீதி - இதைத்தான் இவர் அடிக்கடி "இந்து ஞான மரபு" என்று பிதற்றுகிறார். அந்த பத்திரிகையில் வந்துள்ள கருத்தின் மீது விவாதம் செய்வதற்கு மாறாக, எழுத்தாளரையே முதலில் கூண்டுக்குள் எழுதுகிறார். அதாவது இதன் அர்த்தம் என்ன தெரியுமா? இவனெல்லாம் எழுத வந்துட்டானுங்க... இதுதான் மனுவின் உள்ளார்ந்த விஷம். அது மட்டுமல்ல இந்த எழுத்தாளர்கள் எல்லாம் கூலி எழுத்தாளார்களாம், அதுவும் அந்நிய நாட்டு நிதியைப் பெற்று எழுதுபவர்களாம். அது சரி இந்த அடையாளம் தெரியாத அனாமதேய எழுத்தாளர்கள் மட்டுமா?
அருந்ததிராய் முதல் அ. மார்க்ஸ் வரை அந்நிய நாட்டு நிதி பெற்று எழுதும் எழுத்தாளார்கள்தான் குற்றம் சாட்டுகின்றார். மேலும் இசுலாமிய இதழ்களாக வெளி வரும் சமரசம் முதல் அனைத்தும் தாலிபானிய அரசை விரும்புவதாகவும் அதனை அமைப்பதற்கே பாடுபடுவதாகவும் குற்றம் சாட்டுகிறார் இந்த மகா புனிதர். அது சரி ஜெயமோகனின் எனது இந்தியா எது என்று தெரிந்து கொள்ளலாமா? அது என்ன அகண்ட பாரதமா? இந்தியா என்ற ஒற்றைக் கோட்பாட்டை வடிவமைத்தவனே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள்தானே? அது மட்டுமா? இந்து என்ற அடையாளத்தையும் அவர்கள்தானே வழங்கினார்கள். இல்லையென்றால் சைவமாகவும், வைனவமாகவும், சமணமாகவும் அல்லவா இன்றைக்க மண்டையை பிளந்துக் கொண்டிருப்பார்கள் இந்த சனாதனவதிகள்.
நல்ல காலம் இந்த வலைப்பதிவு என்று கொண்டு வந்த தொழில்நுட்பம் கூட அவர்களது சதி என்று வாதிடாமல் விட்டு விட்டார் ஜெயமோகன். வலைப்பதிவு மூலமாக இன்றைக்கு பல புதிய நவீன எழுத்தாளார்கள் உருவாகி தேசத்திற்கும் - உலகிற்கும் சேவை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். இங்கே இவர்களைப் பார்ப்பது முகத்தையல்ல - மதத்தையல்ல - கருத்தைத்தான். இது கூட தெரியாத இந்த ரப்பர் மனிதர்களை என்ன வென்று சொல்லுவது?
மேலும் ஜெயமோகன் கூறுவதை கேளுங்கள்:
(இவை அனைத்துக்குமே பொதுவான ஒரு அம்சம் உண்டு. கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பு. இந்த நாடு முழுக்க முழுக்க அநீதி மீது கட்டப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் அநீதியால் இயக்கப்படுவதென்பதில் இவர்களுக்கு ஐயமே இல்லை.)
அதாவது, சிறுபத்திகையாளர்கள் எல்லாம் இந்திய எதிர்ப்பை மையமாகக் கொண்டே எழுதுகிறார்களாம்? அது சரி இந்திய எதிர்ப்பு என்றால் எது என்று சற்று விளக்கியிருக்கலாம். ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் எங்கள் இந்திய தாயின் கண்மணிகள் கற்பழிக்கப்படுகிறார்களே அதை இவர் தேச சேவை என்று போற்றுகிறாரா? குஜராத்தில் கர்ப்பணிகளையும் - குழந்தைகளையும் கருவருத்த மனித மாமிசவாதிகளையும் - சிறுபான்மையினரை நரவேட்டையாடிவர்களையும் தேசப் பிதாவாக சித்தரிக்கச் சொல்கிறாரா? இந்த நாட்டில் நடக்கும் மனிதனை மனிதன் வேட்டையாடும் இந்து இந்துத்துவ கொள்கைக்கு எதிராக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் ஒரே குரலில் எழுந்து நிற்கையில் வக்காலத்து வாங்கிக் கொண்டு வாதிட வந்திருக்கிறார் இந்த இந்துத்துவ மூகமூடி ஜெயமோகன்.
அடுத்து ஜெயமோகனி்ன் கவலை என்ன என்று பாருங்கள். அப்போது தெரியும் இந்த உண்மை சிகாமணியின் உடலுக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ ரகசியம்.
(சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன.)
சிறு பத்திரிகைகள் சிறுபான்மையினரையும், தலித்துக்களையும், பழங்குடிகளையும் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்கிறார்களாம்? இந்த கருத்துக்காக
இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துக்கள் நாயினும் கீழாக நடத்தப்படுவது கண்டு எதுவும் பேசாத இந்த அதி மேதவி. அவர்களது வாழ்க்கைக்காக - சுய மரியாதைக்காக - மனிதனாக எங்களையும் அங்கீகரியுங்கள் என்ற கோரிக்கையோடு வயிற்றுப் பிழைப்பையும் கூட பாராது போராடுபவர்களைப் பார்த்து இந்த தேசத்திற்கு எதிராக கிளர்ந்து எழுமாறு தூண்டுகிறார்களாம். ஹரியானாவில் 5 தலித்துக்களை செத்துப் போன பசு மாட்டிற்காக அந்த தலித்துக்களின் உயிரை எடுத்தபோது இந்த ஜெயமோகனின் குரல் எங்கே ஒடுங்கிக் கிடந்தது? இதைச் செய்தது இந்துத்துவாதானே? கயர் லா;"சியில் என்ன நடந்தது? தாயும் - மகளும் - மகனும் கற்பழிக்கப்பட்டு கொன்று வீசி எரியப்பட்டார்களே? இந்த அநியாயம் யாரால் நடத்தப்பட்டது? இன்றும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலப்பிரபுத்து - இந்து சனாதனத்தால் உருவாக்கப்பட்டு ஆதிக்க கருத்தியல்தானே?, திண்ணியத்தில் மலத்தை திணித்தவனுக்கு எதிராக தீக்குரல் எழுப்பும் தலித் மக்களைப் பார்த்து - ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து இந்த தேசத்திற்கு எதிரானவர்கள் என்று பசப்பும் ஏ இந்துத்துவவாதியே உன்னுடைய எழுதுகோலை கீழே போடு... இனியும் எழுதுவதற்கு நீ அனுமதிக்கப்பட்டால் அது அநீதிக்குத்தான் துணை போகும்.....
பழங்குடி மக்களை இன்றைக்கு ஒரிசாவில் வேட்டையாடும் சக்தி எது? காட்டிலிருந்து விரட்டப்படும் பழங்குடிகள் எங்கே இருக்கிறார்கள்? சட்டீஸ்கரில் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பழங்குடிகள் விரட்டியக்கப்படுகிறார்களே அவரது குரல் ஓங்கி ஒலிப்பதால் உனக்கு எங்கே வலிக்கிறது? இவர்கள் கேள்வி எழுப்பக் கூடாது அவ்வாறு எழுப்பினால் அது இந்த தேசத்திற்கு எதிரானதா?
அருந்ததி ராய் காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று கட்ரைத் தீட்டியிருக்கிறார். அவ்வாறு கட்டுரை தீட்டக்கூடாதாம்! அதுதான் இவ்வளவு எரிச்சல் இந்த ஜெயமோகனுக்கு. இது குறித்து அவர் எழுதுவதைப் பாருங்கள்.
(மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளை கொன்று குவித்து அடித்து துரத்தியபின்னர்தான் அவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. காஷ்மீரிகள் தேடுவது எவ்வகையிலும் முற்போக்கான, மேலான ஒரு சமூக அமைப்பை அல்ல, மாறாக அவர்கள் தாலிபானிய அரசு ஒன்றை நாடுகிறார்கள். அவர்கள் இந்திய அரசை வெறுப்பது இது அடக்குமுறை அரசு என்பதனால் அல்ல, இது ஒரு தாலிபானிய இஸ்லாமிய அரசு அல்ல என்பதனாலேயே.)
காஷ்மீரி பண்டிட்டுக்கள் மண்ணின் மைந்தர்களாம்? அப்படியென்றால் அங்கே உள்ள முஸ்லீம்கள் எல்லாம் எங்கிருந்து வந்தவர்கள். இப்படிச் சொல்லி சொல்லித்தான் அந்த மக்களை அந்நியப்படுத்தினார்கள் மத்திய ஆட்சியாளர்கள். 370வது சட்டப் பிரிவு இருக்கக்கூடாது என்று ஓயாது குரல் கொடுக்கும் பா.ஜ.க. தனது ஆட்சிக் காலத்தில் காஷ்மீரை மேலும் அந்நியப்படுத்திது. மேலும் காஷ்மீர் மக்கள் விரும்புவது தாலிபானிய அரசைத்தானாம்? அந்த மக்கள் எந்த எதிர்பார்ப்போடு இந்தியாவில் இணைந்தார்கள் என்பதாவது தெரியுமா? இந்த அறிவு ஜீவிக்கு. காஷ்மீரியம் என்பது உயர்ந்த மதச்சார்பற்ற பண்பாடாக திகழ்ந்தது. அதில் விஷத்தை ஏற்றியவர்கள் அங்குள்ள இந்துத்துவ பண்டிட்டுக்கள்தான். அவர்கள் தாலிபாணிய அரசை விரும்புகிறார்கள் என்று பழியை சுமத்துவம் ஜெயமோகனின் இந்தியாவில் புஷ்யமித்திரனின் அரசு அமைய வேண்டும் என்று விரும்புவதைத்தான் இது மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறது.
அடுத்து அவர் இஸ்லாம் மீது பாய்வதை சற்று நோக்குங்கள்
(காரணம் இஸ்லாம் என்பது அடிப்படையில் ஒரு தேசியகற்பிதம்– ஒரு மதமோ வாழ்க்கைமுறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காது. அந்த தேசிய கற்பிதங்களுக்குள் தனித்தேசியமாக தன்னை உணர்ந்து அவற்றை உள்ளிருந்து பிளக்கவே முயலும்.)
திராவிட இயக்கத்தவர்களுக்கும், பெரியாரியவாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கடவுள் மறுப்பு கொள்கை இருந்தாலும்கூட ஒரு மதம் குறித்து விமர்சிக்கும் போது அதன் பிற்போக்கு அம்சங்களை ஆதாரத்துடன் விமர்சிப்பதுதான் நாகரீகமாக கொண்டவர்கள். ஆனால் ஜெயமோகனின் எழுத்து இஸ்லாமின் அடிப்படையையே தகர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாக அமைகிறது. இந்த இஸ்லாமின் கோட்பாட்டால்தான் உலகம் முழுவதும் குண்டுகள் புதைக்கப்படுவதாக இவர் கதைக்கிறார். மேலும் அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காதாம். இவரது இந்துத்துவாதான் எல்லாக் கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் ஜனநாயக மரபாம்! இந்த நாட்டில் இந்தியா - பாகிஸ்தான் என்ற பிரிவினை உருவாக்குவதற்கே அடிப்படையாக இருந்தவர்களே இந்த இந்துத்துவாதிகள்தான். மேலும் இன்றைக்கும் நாட்டில் பதட்டத்தையும் - பிரிவினையையும் தூண்டிக் கொண்டிருக்கும் தத்துவம் ஜெயமோகனாயிசமே! இந்த பாசிச கொள்கைதான் அடிப்படை. இதன் அட்டூழியங்களுக்கு எதிராக சுண்டு விரலைக் கூட நீட்டாத இந்த பச்சிலம் பாலகர் இசுலாமின் மீது எறிந்து விழுவதன் நோக்கம் என்ன என்று புரிந்துக் கொள்ளக் கூடியதே.
இதற்கும் அடுத்து என்ன கூறுகிறார் என்று பாருங்கள்
(தாங்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளிலாவது பிற தேசியங்களுடன் ஒத்துப்போகவும் அதற்குக் கற்பிப்பதே இன்று அவசியம்.)
அதாவது எனது இந்தியா கட்டுரையில் இவர் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து புளங்காகிதம் அடைகிறார். அதனை கொ;"சி குலாவுகிறார். அதாவது இவரது ஜனநாயகம் என்பது சிறுபான்மையினர் அடங்கிக் கிடக்க வேண்டும். ஒடுங்கிக் கிடக்க வேண்டும் என்பதுதானாம்! ஆஹா இந்த இனிமேல் இதனை ஜெயமோகனாயிச ஜனநாயகம் என்றே அழைக்கலாம். இதுதான் இந்துத்துவ புத்தி! அதே சமயம் அது தத்துவ ரீதியாக சிறுபான்மையினராக இருந்துக் கொண்டு பெரும்பான்மை தலித்துக்களை ஒடுக்க நினைக்கும் என்பது ஒரு தர்க்க முரண். இந்த முரணியக்க விதியை ஏனோ தெரியவில்லை இந்த பாலகன் அறியவில்லை. இதுவும் அவரது ஜனநாயகத்தின் ஒரு பகுதியே!
மேலும் இந்த கொடிய விஷ சிந்தனையைக் கேளுங்கள் - ஜெயமோகன் கூறுகிறார்.
(எளிய லௌகீக வாழ்க்கையின் துயர்களில் துணைவரும்படி இறைவனை தொழுவதற்காக ஒவ்வொரு முறைச் செல்லும்போதும் ஓர் இஸ்லாமிய நாட்டுக்காக போராளியாகும்படியான அறைகூவலை எதிர்கொள்கிறான் சாதாரண முஸ்லீம்.)
அதாவது தொழுகைக்கு செல்லும் முஸ்லீம்கள் எல்லாம் இஸ்லாமிய நாட்டுக்கான போராளியாகும்படி அறைகூவல் விடுக்கிறார்களாம்? இதைவிட விஷயத்தை வேறு யாரால் கொட்ட முடியும். இதைவிட வேறு யாரால் கொச்சைப்படுத்த முடியும். இந்துத்துவ ஷகாவுக்கு போகும் சாதாரண அப்பாவிகளை கொலையாளிகளாகவும் - பாசிஸ்ட்டுகளாகவும் உருவாக்கிக் கொண்டிருப்பவரின் அறிவுஜுவிச் சிந்தனையில் வேறு என்ன தோன்றும். நானும் இந்துதான் - பகவத் கீதையை படிக்கும் இந்துத்தான் என்று கூறிக் கொண்டே சனாதனத்தை கடைப்பிடித்த - அகிம்சைவாதியான மகாத்மாவை கொலை செய்த கோட்சேவிவின் குருக்களின் சிந்தனைக் கொத்துக்களை பயின்று வளர்ந்துள்ள இந்த இந்து ஞான மரபியலரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஜெயமோகனிடம் நேரடியாக ஒரு கேள்வியை எழுப்புகிறேன். தலித் மக்களை தீண்டத்தகாதவர்களா கோவிலுக்குள்ளே அனுமதிக்காத சனாதன குப்பையை கேள்வி கேட்க உன்னால் முடியுமா? அங்கே தினமும் என்ன வேதம் ஓதப்படுகிறது. இந்த தீண்டாமை வேதம்தானே!
மேலும் காஷ்மீர் குறித்த கட்டுரை எழுதிய அருந்ததி ராயை அவர் விமர்சிப்பதைப் பாருங்கள் - இவர்தான் தான் உயர்ந்த எழுத்தாளர் என்று டமாரம் அடித்துக் கொள்கிறார்.
(அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்றுபெறும் அதீத முக்கியத்துவம் மிகமிக ஆச்சரியமானது.)
அருந்ததி ராய் குருவி மண்டையராம். ஒரு பெண் அறிவு ஜீவியாக வலம் வருவதை இந்த இந்துத்துவவாதியால் பொருத்துக் கொள்ள முடியுவில்லை. இந்துத்துவம் எப்போதும் பெண்களுக்கு எதிரானது தானே. இந்து ஞான மரபும் அப்படிப்பட்டதுதானே! அதனால்தான் சொல்கிறார் உலகளவில் ஒப்பற்ற எழுத்தாளராக திகழும் அருந்ததி ராயைப் பார்த்து குருவி மண்டையர் என்று? உன்னைப் பார்த்து என்ன சொல்லாம்! நீ ஏற்கனவே ஒரிஜீனல் பைத்தியக்காரன். இப்போது முழு பைத்தியக்காரனாகி விட்டாய் என்று யாராவது சொன்னால் அது எப்படி அபத்தமோ? அப்படித்தான் இதுவும் இருக்கிறது. எனக்கும் கூட அருந்ததி ராயின் பல கருத்துக்களோடு வித்தியாசம் உள்ளது. அதற்காக அவரது எழுத்துக்களை விமர்சனம் செய்யலாமே தவிர இப்படி ஜெமோகன் போல அவதூறு செய்வது ஜெயமோகனுக்கு அழகா!
அடுத்து அப்சல் குருவைப் பற்றி கூறுகிறார்:
(இந்தியப்பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டவர் அப்சல் குரு. அவரது வழக்கு இந்திய நீதிமன்றத்தின் வழக்கமான அனைத்துச் சம்பிரதாயங்களுடனும் படிப்படியாக நடத்தப்பட்டு மீண்டும் மீண்டும் மேல் முறையீட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது. அப்சல் குருவுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த இந்திய இதழாளர்கள் ஒட்டுமொத்த இந்திய நீதியமைப்பே முழுமையாகவே அநீதியானது, மதவெறி கொண்டது என்றார்கள். அந்த விசாரணையின் எந்தப் படியிலும் அப்சல்குருவுக்கு எளிய முறையீட்டுக்குக்கூட வழி தரப்படவில்லை என்றார்கள்.)
அப்சல் குருவுக்காக வாதாடியவர்கள் ஒட்டுமொத்த இந்திய நீதியமைப்பையே குற்றம் சுமத்துகிறார்கள் என்று ஜெயமோகன் குற்றம் சாட்டுகிறார். இங்கே இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அத்வானி அவர்கள் ஆட்சியிலிருந்த போது அதிலிருந்து விடுவித்துக் கொண்டார். இது எந்த நீதியின் அடிப்படை. பாபர் மசூதி இடிப்படிற்கு அடிப்படை தூண்டுகோலாக இருந்த முதல் குற்றவாளியே அத்வானிதான். 3000 இசுலாமியர்களை வேட்டையாடுவதற்கு அடிப்படையாக அமைந்தது இந்த பாபர் மசூதி இடிப்புதான். அப்சல் குருவுக்காக வாதாடும் இந்த இந்துத்துவ வேந்தன் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரின் உணர்வுகள் குறித்து - பட்ட வேதனைகள் குறித்து ஏதாவது எழுதினாரா? அப்சல் குரு சம்பந்தமாக எழுப்பப்பட்டுள்ள அடிப்படையான சந்தேகங்களுக்கு இதுவரை முழுமையான விடை இந்த ஜனநாயகத்தில் கிடைத்து விட்டதா? மொத்தத்தில் ஜெமோகனின் எனது இந்தியா இந்துத்துவ இந்தியாவே! அவரது குரல் இந்துத்துவ பாசிச குரலே!
ஜெயமோகன் தனது இந்துத்துவ வெறித்தனத்தின் உச்சிக்கே சென்று உளறுவதைப் பாருங்கள்
(இத்தனை வெறியூட்டல்களுக்குப் பின்னும் இங்குள்ள சராசரி இஸ்லாமியர் தங்கள் அன்றாடத்தொழில்களைச் செய்தும் பிற சமூகத்தவரிடம் வணிகத்தில் ஈடுபட்டும் ஒரு சமூக வாழ்க்கையை கடைப்பிடிப்பது.இந்திய சமூகம் இன்று அளிக்கும் வாய்ப்புகள் மூலம் மக்களில் பெரும்பகுதியினர் மெல்லமெல்ல நடுத்தரவற்கமாக உருவாகி வருகிறார்கள். இந்தியாவெங்கும் இந்த வளர்ச்சிப்போக்கைக் காணமுடிகிறது. இது ஒன்றுதான் இந்த வெறியூட்டல்களுக்கு எதிரான ஒரே சக்தியாக இருக்கிறது.)
அதாவது, இஸ்லாமியர்கள் வெறியூட்டல்களில் ஈடுபடுகிறார்களாம். அப்படியிருந்தும் அவர்களை இந்த சமூகம் அவர்களது அன்றாடத் தொழில்களைக் செய்ய அனுமதிப்பது ஆச்சரியமாக இருக்கிறதாம். பிற சமூகத்திடம் வணிகத்தில் ஈடுபடுவதும் - கடைப்பிடிக்கப்படுவதும் வியப்பளிக்கிறதாம். மேலும் அவர்கள் பொருளாதார ரீதியாக வளர்கிறார்களாம். இதுதான் அவர்களை வெறியூட்டல்களுக்கு எதிரான சக்தியாக இருக்கிறதாம். சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட சச்சார் கமிட்டி அறிக்கையை இந்த அறிவு படித்திருந்தாலும் - படிக்காததுபோல் பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார். அதில் இந்திய முஸ்லீம்களின் நிலை தலித்துக்களை விட சில இடங்களில் கீழாக இருக்கிறது. அவர்களது வாங்கும் சக்தி முதல் கல்வி நிலை - வாழ்நிலை அனைத்தும் கேள்விக்கு இடமாகி உள்ளது. அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வேலைவாய்ப்பில் தரப்படுவதில்லை. கல்வி நிலையத்தில் தரப்படுவதில்லை என்று உண்மையை உலகுக்கு உணர்த்தியது. உண்மை இப்படியிருக்க தனது இந்துத்துவ கோயபல்ஸ் பிரச்சாரத்தை கையாளுவதை ஜெயமோகன் தவிர்க்கவில்லை. இதுதான் அவரது பாரதீய சிந்தனை வளர்ச்சியின் சாரம்.
அடுத்து மேலும் ஒரு படி போய் வெறிக் கொண்டு கொக்கறிக்கிறார் ஜெயமோகன்
(ஆனால் இந்த நாட்டை விட மேலானதாக நீங்கள் சொல்லும் நாடு எது நண்பர்களே? பாகிஸ்தானா? தாலிபானின் ஆப்கானிஸ்தானா? சீனாவா? இதை அழித்து நீங்கள் உருவாக்க எண்ணும் நாடு எதைப்போன்றது?)
இந்திய முஸ்லீம்கள் இந்த நாட்டை விட மேலானதாக பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும், சீனாவைவும் கருதுவது போல ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறார். அதுசரி சீனாவை எப்படி முஸ்லீம்கள் விரும்புவார்கள் என்று ஜெயமோகனுக்கே வெளிச்சம். இப்படியெல்லாம் அவதூறுப் பிரச்சாரத்தை கிளப்பி சிறுபான்மை இந்திய மக்களை - இந்தியாவை தாயகமாக கொண்டவர்களை வெறுப்புடன் பார்க்கும் பார்வைக்கு இந்திய மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள். அவர்கள் ஒருபோதும் சவர்க்கர் சிந்தனையின் பக்கம் சென்றதில்லை. செல்லவும் மாட்டார்கள்.
இந்தியாவில் அரவாணிகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கிறார்களாம். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உயர்ந்த மாண்பாம். இதைவிட ஜனநாயகம் வேறு எங்காவது உண்டா என்ற தொனியில் கேள்வி எழுப்பும் போது இவரது ஜனநாயக உள்ளடக்க சிந்தனையில் எந்தக் குப்பைக் கூடையில் போடுவது என்றுத்தான் தெரியவில்லை. ஒருவேளை இவர் ஐரோப்பாவில் இருந்தால் அங்கே லெஸ்பியன்களுக்கு கூட சட்ட உரிமை வழங்குகிறார்கள் என்று புளங்காகிதம் அடைந்து புகழ்ந்து தள்ளியிருப்பார். கூடுதல் விஷயம் என்னவென்றால் இந்துத்துவவாதிகளில் பலபேர் லெஸ்பியன்கள் என்று கூறப்படுகிறது அது குறித்து ஏதாவது மேல் தகவல் இருந்தால் அதையும் வெளிப்படுத்துங்கள் ஜெயமோகன் சார்.
இறுதியாக எனது இந்தியா எப்படியிருக்கும் என்று அவர் கூறியிருப்பதைப் பார்ப்போம்.
(எனது இந்தியாவில் இந்துமரபும் பௌத்த சமண மரபுகளும் கிறித்தவ மரபும் இஸ்லாமிய மரபும் ஒவ்வொரு கணமும் உரையாடி தங்களை வளர்த்துக் கொண்டவாறிருக்கும்.)
முதலில் ஒரு விஷயம் இங்கே இந்து மரபு என ஒன்று இல்லவே இல்லை. இங்குள்ள பார்ப்பனீய மரபைத்தான் இவர்கள் இந்து மரபு என்று கூறுகிறார்கள். எனவே பார்ப்பனீய மரபு பெளத்த மரபை - சமண மரபுகளுடன் உரையாடி வளர்த்துக் கொண்டுள்ளதா? அது இஸ்லாமையும் - கிறித்துவத்தையும் சகிக்கிறதா? இது உண்மைதானா? இந்தியாவில் பிறந்த பெளத்தம் இன்றைக்கு சீனா - ஜப்பான் என்று இடம் மாறிப்போனதேன். பார்ப்பனீய சூழ்ச்சிகள்தானே. அந்த பார்ப்பனீய சூழ்ச்சியைத்தான் இவர் எனது இந்தியாவாக சித்தரிக்கிறார்.
எனவே ஜெயமோகனின் எனது இந்தியா என்பது இந்துத்துவ இந்தியாவே என்று வரையறுத்து முடிக்கலாம். நமது இந்தியா மதச்சார்பற்ற - ஜனநாயக - சோசலிசத்தை நோக்கி முன்னேறும் இந்தியாவாக இருக்கட்டும். நமது இந்தியாவில் ஜெயமோகனாயிசத்திற்கு இடமில்லை.