அனைத்து நாடுகளையும், குறிப்பாக நமது நாடுகள் அனைத்தையும் தனிச் சொத்தாக்கவே விரும்புகிறது. தாராளமயம் குறித்து இப்படி சொல்வதுதான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.
அதன் பின்னர் நமது வளங்களில் என்னதான் மிஞ்சப் போகிறது? ஏனெனில் அவர்கள் கொள்ளையடிப்பதோடு உலகையே சுரண்டி, பெரும் செல்வத்தைக் குவித்து வருகிறார்கள். அது மட்டுமின்றிக் தாமிரத்தைப் பொன்னாக்கும் முயற்சிகள் முன்னாளில் நடைபெற்றதைப் போல், பல்வேறு தகிடு தத்தங்களையும் செய்து வருகிறார்கள். தற்பொழுது அவர்கள் தங்கத்தை காகிதமாக்கி வருகின்றனர். இந்த காகிதத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்க முயல்கின்றனர். இதில் மனிதனின் ஆன்மா மட்டுமே விலக்காக உள்ளது. இன்னுந் துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனிற், பெரும்பான்மையான மக்களின் ஆன்மாவை; விட அனைத்தையும் அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள்.
அவர்கள் இயற்கை வளங்களை, ஆலைகளை, ஒட்டுமொத்த் தகவல் தொடர்பு சாதனங்களை, சேவைப் பிரிவுகளை, இன்னும் பலவற்றை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த வியாபாரத்தை உலகெங்கிலும் நடாத்தி வருகிறார்கள். தங்கள் நாடுகளைக் காட்டிலும் பிற நாடுகளில் மிகவும் மலிவாக இவை கிடைப்பதால், வேகத்துடன் விலை பேசுகிறார்கள். எதிர் வருங்காலங்களில் சிறப்பு வாய்ந்த முதலீடாகத் திகழும் என்ற நம்பிக்கையின் பேரில் இந்த வர்த்தக முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதன் இறுதி விளைவுகள் என்னவாகத்தான் இருக்கும்? நமக்கென்று என்னதான் மிஞ்சப் போகிறது? நாம் நடைமுறையில் இரண்டாந்தரக் குடிமக்களாகி விடுவோமா? குறிப்பாக ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களாகச் சொந்த நாட்டிலேயே இருக்கும் நிலை உருவாகிவிடுமோ? உலகை மாபெரும் சுதந்திர வர்த்தக வலயமாக்க அவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அதை இன்னும் சரிவரப் புரிந்துப் கொள்ள வேண்டுமெனிற் கட்டற்ற வர்த்தக வலயம் குறித்து நாம் அறிதல் வேண்டும். இது ஒரு வித்தியாசமான தன்மை கொண்ட பிரதேசம். இங்கு வரியேதுஞ் செலுத்தத் தேவை யில்லை. மூலப் பொருட்களையோ, உதிரிப் பாகங்களையோ சந்தையில் வாங்கி இணைக்கவோ அல்லது வேறு பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளவோ முடியும். இங்கே மனித உழைப்புத் தான் பிரதான அம்சமாகத் திகழுகிறது. ஒரு சில துறைகளில் தங்கள் நாட்டில் அதே விலைக்கு கொடுக்கப்படும் கூலியில் 5மூ அளவே இந்த சுதந்திர வர்த்தக வலயங்களில் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் நமக்கு அளிப்பது அல்லது நம்மிடம் விட்டுச் செல்வது மிகவும் குறைந்த கூலியையே.
இதில் கவலை அளிக்கக்கூடிய விடயம் என்னவென்றால் நமக்கிடையே மோதலை உருவாக்கும் போட்டி நிலைகளே. நாம் ஒருவருக்கொருவர் போட்டியிடும் நிலை அதிகரிக்கிறது. பல்வேறு வரிச் சலுகைகள், முதலீட்டுச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுக்குச் சாதகதமான நிலையை உருவாக்குகிறோம். முதலீடுகட்காகவும் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்கும் பொருட்டும், மூன்றாவது உலக நாடுகள் ஒன்றோடொன்று போட்டி போடும் நிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள்.
நான் அறிந்த பல்வேறு நாடுகளில் வறுமையும் வேலையின்மையும் தலை விரித்தாடுகிறது. ஆயினும் இந் நாடுகள் உலகில் அனைவராலும் ஏற்கப்பட்ட நிலைக்கு ஆளாவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நினைப்பிற், சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. இந் நாடுகளில் இந் நிலை இல்லையேல் இந்த வலயங்கள் உருவாக முடியாது. மேலும் இந்த வலயங்களிலுள்ள தொழிற்சாலைகளை உருவாக்கியவர்கள், தங்கள் நாட்டுச் சம்பளத்தின் 5மூ முதல் 7மூ அளவோ அல்லது அதைக் காட்டிலுங் குறைவாகவோ இந்த கட்டற்ற வர்த்தக வலையங்களிற் கூலியாக வழங்குகிறார்கள்.
அவர்கள் நமது நாட்டையே மாபெரும் சுதந்திர வர்த்தக வலயமாக மாற்ற முயற்சிக்கின்றனர். பின்னர் அவர்களிடம் உள்ள பணபலத்தினதும் தொழில்நுட்பத்தினதுந் துணைகொண்டு அனைத்தையும் வாங்கத் தொடங்குவர். இதுதான் நிகழப் போகிறது. இதன் பின்னர் எத்தனை விமான நிலையங்கள் தேசிய சொத்தாக நீடிக்கும் என்பது தெரியவில்லை. எத்தனை துறைமுகங்கள், எத்தனை வகைச் சேவைப் பிரிவுகள் மக்களின் சொத்தாக நாட்டின் உரிமைப் பொருளாக இருக்கும் என்பதும் தெரியாது.
இவ்வகையான எதிர் காலத்தைத்தான் நவீன தாராளவாத உலகமயமாக்கல் நமக்கு அளிக்கிறது. இது உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப் படுவதாகக் கருத வேண்டாம். தேசிய முதலாளிகள், சிறு மற்றும் இடைநிலை முதலாளிகள் ஆகியோருக்கும் இதே கதிதான். உள்நாட்டு முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடும் நிலைமைக்குத் தள்ளப் படுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் நவீன நுட்பமான சாதனங்களை கொண்டு இருப்பதோடு, உலகளாவிய விநியோக அமைப்பையும் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில்தான் நாம் அவர்களுடன் போட்டியிட வேண்டி உள்ளது. இவர்களது போட்டியாளர்களாகத் திகழும் பன்னாட்டு நிறுவனங்கள் இது போன்ற பாதகமான அம்சங்கள் இல்லாமல், தங்கள் பொருட்களை விற்பதற்கு சந்தையைப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
இனித் தேசியத் தொழிற்றுறைக்கு என்னநிலை ஏற்படும்? அவர்கள் யாருக்கு எதை ஏற்றுமதி செய்வது? உலகின் பெரும் பகுதியில் கோடிக் கணக்கான மக்கள் வறுமை, பசி, வேலையின்மையில் வாடிக் கொண்டிருக்கையில் இத்தகைய நுகர்வு சாதனங்களை வாங்கப் போவது யார்? அனைவரும் தொலைக்காட்சி, தொலைபேசி, குளிர் சாதனப்பெட்டி, கார், கணினி, வீடு என அனைவரும் இப்படி ஒவ்வொன்றையும் வாங்கும் வரை காத்திருப்பதா? அல்லது வேலையின்மைக்கான நிவாரணம் பெறுவதற்காக காத்திருப்பதா? பங்குச் சந்தையில் ஊக பேரத்தில் ஈடுபடுவதா? அல்லது ஓய்வூதியத்தை பத்திரப் படுத்துவதா? இது தான் வளர்ச்சிப் பாதை என்று அவர்கள் பல்லாயிரம் முறை கூறி வந்திருக்கிறார்கள். இந்தப் பாதை உண்மையிலயே வளர்ச்சிக்கு வழி வகுக்குமா? சுங்க வரி பெருமளவுங் குறைக்கப்பட்ட நிலையில் உள்நாட்டுச் சந்தை என்னவாகும்? பெரும்பாலான மூன்றாவது உலக நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தின் ஆதாரமாக சுங்க வரிதான் இருந்து வருகிறது. இப்போது சுங்க வரிக் குறைப்பு நிர்ப்பந்தமாய் அந் நாடுகள் மீது திணிக்கப்பட்டால் அவர்களின் கதி என்னவாகும்?
நவீன தாராளமயவாதிகளால் இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. இன்று, வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமின்றிப் பணக்கார நாடுகளிலும் வேலையின்மை என்பது பாரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில் அவர் களால் என்றைக்குமே இந்தப் பிரச்சனைககு தீர்வு காண முடியாது.
ஒரு பக்கம் முதலீடுகளை அதிகரித்துத் தொழில் நுட்பத்தை மேம்படுத்தி வருகையில், மறுபுறம் மக்கள் அதிகளவில் வேலையின்மைக்கு ஆளாகிறார்கள். இத்தகைய முரண்பாட்டை உள்ளடக்கியதாகவே இந்த அமைப்பு இருக்கிறது. மனிதனின் பேராற்றலில் இருந்து தான் உற்பத்தி திறனும், அதி நவீன கருவிகளும் பிறக்கின்றன. இது செல்வங்களை மட்டுமின்றி, வறுமையையும், தொழிற்சாலைகள் மூடப் படுவதையும் பன் மடங்காகப் பெருக்குகிறது. மனித சமூகத்திற்கு இதனால் விளையும் பயன் என்ன? வேலை நேரத்தைக் குறைத்து ஓய்வு, பொழுது போக்கு, விளையாட்டு, பண்பாடு, அறிவியல் மேம்பாடு ஆகியவற்றிற்கு அதிக நேரத்தை செலவிடும் பொருட்டு இந் நிலை உருவாக்கப் படுகிறதா? இது நிச்சயமாக நடக்க முடியாது. ஏனெனில் நாளுக்கு நாள் புதிய சந்தை விதிகளும் போட்டி முறைகளும், யதார்த்த நிலைகளைக் காட்டிலும் கற்பனையான அம்சங்களையே கொண்டுள்ளன.
பன்னாட்டு நிறுவனங்கள் உலகில் ஆதிக்கம் பெற்ற இந்நாளில், பெரும் நிறுவனங்கட்கு இடையிலான இணைப்புகளும் ஏகபோகங்களும் இவற்றை அனுமதிப்பதே இல்லை. இந்த உலகில் மற்றப் போட்டியாளர்கட்கு ஒரு சிறு இடமோ அல்லது மூலையோ கூட கிடையாது. பணக்கார நாடுகளின் அதிநவீன தொழில் நுட்பங் கொண்ட நிறுவனங்கள், மூன்றாமுலக நாடுகளின் தொழிலாளர்களைக் கொண்டு ஜீன்ஸ், அதற்கான சட்டைகள், ஆடைகள், காலணிகள், பூச்செடிகள், என பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்கின்றன. இவை அனைத்துமே பணக்கார நாடுகளின் தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படுபவையே.
நாம் அனைவருமே அமெரிக்காவில் கஞ்சா பயிர் செய்யப்படுவதை அறிவோம். அங்கே பண்ணைகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தாராளமாக கஞ்சா பயிரிடப்படுகிறது. அங்கே விளைவிக்கப்படும் சோளத்தைக் காட்டிலும் கஞ்சாவின் மதிப்புதான் பலமடங்கு கூடுதலாக உள்ளது. இத்தனைக்கும் உலகிலேயே அதிக அளவிலான சோளத்தை அவர்கள்தான் விளைவிக்கிறார்கள். உலகின் போதைப் பொருட்களின் மாபெரும் உற்பத்தியாளராக திகழும் அந்நாட்டில், எதிர்வருங் காலங்களில் தற்காலிகமாவது அவர்களது ஆய்வுக் கூடங்கள் மூடப்பட்டு விடும். பதட்டத்தை தனிக்கக்கூடிய மருந்து, ஊக்க மருந்து, இன்னும் பல மருந்துகளின் பெயரால் கலவைகள் தயாரிக்கப்படக் கூடும். ஏற்கனவே அந் நாட்டிலுள்ள இளைஞர்கள் இந்த போதைப் பொருட்களை பல்வேறு முறைகளிற் கலப்பதும் பயன்படுத்துவதும் பற்றி நிறைய அறிந்து வைத்துள்ளார்கள்.
வளர்முக நாடுகளில் விவசாயப் பணிகள் இன்னும் இயந்திரமயமாக்கப் படவில்லை என்பது குறித்து மகிழ்ச்சியே. தக்காளி பறிப்பது போன்ற விவசாயப் பணிகளுக்காக இதுவரை எந்த ஒரு இயந்திரமும் உருவாக்கப்படவில்லை. காயா பழமா என்று பாhத்து, அளவு வாரியாக, மற்றைய தன்மைகளை கண்டறிந்து, பிரித்துப் போடக்கூடிய ரோபோக்களும் இன்னும் உருவாக்கப் படவில்லை. அதே போன்று நுகர்வுக் கலாச்சார சமூகத்தில் சாலைகளை சுத்தம் செய்வது போன்ற விரும்பத்தகாத பணிகளை யாருமே செய்ய முன்வருவதில்லை. அப்படியானால் எப்படி இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போகின்றார்கள்? கவலையே வேண்டாம். இதற்காகத்தான் மூன்றாவது உலக நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் இருக்கின்றார்களே. இவை போன்ற வேலைகளைத் தொழில் முறையில் வளர்ச்சி பெற்ற நாடுகளைச் சார்ந்தவர்கள் செய்வதில்லை.
நான் ஏற்கனவே குறிப்pட்டபடி நமது எல்லைகளுக்குள்ளேயே அந்நியராகிப் போனவர்கள் இந்த தொழிலாளர்கள் தான். மேலும் இவர்கள் கண்டதெல்லாம் நீல ஜீன்ஸ{ம் அது போன்றவற்றை உற்பத்தி செய்யும் முறைகளுந் தான். அவர்களது வினோதமான பொருளாதார விதிகளின்படி அவர்கள் நம்மை ஜீன்ஸ் உற்பத்தியில் ஈடுபடுத்தி உள்ளார்கள். ஏற்கெனவே உலக மக்கள் தொகை நாலாயிரம் கோடியைத் தாண்டி விட்டதாகவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஜோடி நீல ஜீன்ஸ் வாங்கும் அளவிற்கு காசு இருப்பதாகவும் கருதி இந்த நீல ஜீன்ஸ் உற்பத்தி நடைபெற்று வரு கிறது. நான் ஜீன்ஸ் கால் சட்டையை கிண்டல் செய்யவில்லை. இளையோருக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்குப், பிடித்த ஆடையாக அது மாறி வருகிறது. அவர்கள் எம் மாதிரியான பணியை நம்மிடம் விட்டு வைத்துள்ளார்கள் என்பதுடன் அதி நவீன தொழில் நுட்பத்திற்கும் இதற்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை என்பதற்குமாகவே இதை விமரிசனம் செய்கிறேன். இனி நமது பல்கலைக் கழகங்களுக்கு வேலையிருக்காது, பணக்கார நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அதே நேரத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றக் கூடிய தொழில் நுட்பப் பணியாளர்கட்குப் பயிற்சி அளித்து உருவாக்குவதே இனி இந்தப் பல்கலைக் கழகங்களின் பணியாக இருக்க முடியும்.
சமீபத்தில் அமெரிக்காவில் கணினி, மின்ணணுவியல் போன்ற துறைகளில் வளர்ந்து வரும் தேவைக்கேற்ப மனித உழைப்பு தேவைப்படுவதாற் சர்வதேச அளவில் இரண்டு லட்சம் பேருக்கு அவர்கள் ‘வேலை வாய்ப்பு அனுமதி’ வழங்கப் போவதாகப் பத்திரிகைகளிற் செய்தி வெளியாகியது. உங்களிற் பலரும் இதை படித்திருக்கக் கூடும்.
அவர்களைப் பொறுத்த மட்டிற் சர்வதேசச் சந்தை என்பது மூன்றாவது உலக நாடுகள் தான். இந்த இரண்டு லட்சம் பேரும் அதி நவீன தொழில் நுட்பக் கூடங்களில் பணியாற்ற வேணடியிருக்கும். நீங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும். ஏனெ னில் அவர்களுக்கு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களே தேவை ப்படுகிறார்கள். இப்பொழுது தக்காளி பறிப்பதற்கு ஆட்களை எடுக்கப் போவதில்லை. அவர்கள் மெத்தப் படித்தவர்களாக இல்லை. இதை நீங்களே நேரில் பார்க்க முடியும். அமெரிக்காவில் பலருக்கு பிரேசிலுக்கும் பொலிவியாவிற்கும் வித்தியாசம் தெரியாது குழம்பிப் போயிருப்பார்கள். பலருக்கு அவர்கள் நாட்டைப் பற்றிய பல்வேறு விஷயங்களே தெரியாது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இன்னுஞ் சொல்லப் போனால் இலத்தீன் அமெரிக்கா பற்றிக் கூட ஏதும் அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. அது ஆபிரிக்காவில் இருக்கிறதா ஐரோப்பாவில் இருக்கிறதா என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இவற்றை எல்லாம் நான் மிகைப்படுத்திக் கூறுவதாக நீங்கள் கருத வேண்டாம். அதி நவீன இயந்திரங்களைக் கையாள்வதற்கு தேவையான புத்திசாலித் தொழில் நுட்பப் பணியாளர்கள் அவர்களிடங் கிடையாது. எனவே தான் அவர்கள் மூன்றாம் உலக நாடுகட்கு வருகிறார்கள். அப்படிப்பட்ட வேலைகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள். நம்மிடம் இருக்கக்கூடிய நாம் உருவாக்கிய தேர்ச்சி பெற்ற ஒரு சிலரையும் அவர்களிடம் ஒட்டு மொத்தமாக இழந்து விடுகிறோம்.
நம்மிடமிருந்த சிறப்பு வாய்ந்த அறிவியலாளர்கள் இப்போது எங்கே? அவர்கள் எந்த ஆய்வுக்கூடங்களிற் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? நம்மிடையில் எந்த நாடு இது போன்ற அறிவியலாளர்களுக்கு பயிற்சி அளித்து சோதனைகளை மேற் கொள்ளும் திறன் பெற்றதாக இருக்கிறது? நம்மால் இவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவது எவ்வளவு?
அவர்கள் அளிப்பது என்ன? அந்த அறிவியலாளர்கள் எங்கே போனார்கள்? அங்கே உள்ள சிறப்புவாய்ந்த, கீர்த்திபெற்ற பல்வேறு லத்தீன் அமெரிக்கர்களை நான் அறிந்திருக்கிறேன். யார் அவர்களுக்குப் பயிற்சி அளித்தது? ஏதோ ஒரு மூன்றாமுலக நாடுதானே அவர்களுக்கு அனைத்து வகையான பயிற்சிகளையும் அளித்தது. அதன் பின்னர் அந் நாடுகளின் உயர்நிலையில் வாய்ப்புகள் இல்லை என்பதனால் அவர்கள் ஏழை நாடுகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுத்து, அந் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள். சந்தைகளில் அடிமைகளை விலைக்கு வாங்குவதைப் போல், நமது பேஸ்பால் விளையாட்டு வீரர்களை வாங்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் நம்பிக்கைத் துரோகிகள். எப்போதாகிலும் ஒரு ஆன்மா விலை பேசப்படும் என்றுதான் புதிய வேதாகமம் உரைக்கிறது. முதலில் உருவான மனிதனைத் தான் அது அவ்வாறு குறிப்பிடுகிறது. ஆனால் பின்னர் வருபவர்கள் சற்று மாறுதலாக இருக்க வேண்டாமா? நுகர்வுக் கலாசார சமூகம் பற்றி உணராதவர்கள் அதற்காக இப்படி பித்துப் பிடித்து அலைவதா? அந் நாளில் டொலர் என்பதே கிடையாது. இப்பொழுது திடீரென்று சிறகு விரித்து பறக்கத் தொடங்கிவிட்டது. கியூபாவிலுள்ள பேஸ்போள் ஆட்டக்காரர்களை நாம் ஏலத்தில் கூவி விற்கும் பட்சத்தில் நாம் பெரும் செல்வந்தர்களாகி விடுவோம்.
இதற்கு அடுத்தபடியாக குறிப்பிடப்பட வேண்டியது தொலைக்காட்சி விளம்பரங்கள். பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்த அழகிய பெண்கள் கார் விளம்பரங்களில் பயன்படுத்தப் படுவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இதில் மட்டுமின்றி வேறும்பல வர்த்தக விளம்பரங்களும் மற்றவைகளும் நாம் காணும் சாதாரண பத்திரிகைகளிலும் வெளியாகிறது. இந்த விளம்பரங்கள் நம்மில் பலருக்கு ஆசையை தூண்டுகின்றன.
கியூபாவில் அச்சிடக்கூடிய காகிதத்தை இது போன்ற பகட்டான விளம்பரங்களுக்காக விரயமாக்குவதில்லை. மற்ற வளங்களை இதற்காகப் பயன்படுத்துவதில்லை. ஒரு சில நேரங்களில் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை நான் காண்பதுண்டு. என்னால் அவற்றை நீண்ட நேரம் பார்க்க முடிவதில்லை.
காரணம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு வர்த்தக விளம்பரம் காட்டப் படுகிறது. ஒரு சில நேரங்களில் மனிதன் ஒருவன் உடற் பயிற்சிக்கான சைக்கிளை ஓட்டுவதையும் விளம்பரத்தில் கண்டிருக்கிறேன். இதைவிட கன்றாவியான விளம்பரம் உலகில் வேறெதும் இருக்க முடியாது. இந்த விளம்பரங்களை தவறு என்று நான் சொல்லவில்லை. பார்க்கச் சகிக்கவில்லை என்றுதான் கூறுகிறேன். எந்த நிகழ்ச்சியாக இருப்பினும் அல்லது குடும்பத்திற்கானது என்ற பெயரில் சுவிங்கமாக நீடித்த தொடர்களுக்கு இடையில் மட்டும்தான் விளம்பரக் குறுக்கீடுகள் இருக்கிறது என்பதில்லை. ஒரு அற்புதமான காதல் காட்சிக்கு இடையேயும் தான்.
எங்கள் நாட்டில் இருக்கும் சிறிதளவு காகிதத்தைக்கூட உண்மையிலேயே கவனமாகப் பயன்படுத்தி வருகிறோம். அது பாடப் புத்தகங்களுக்கு பயன்படுகிறது. இது தவிரக் குறைவான பக்கங்களைக் கொண்ட ஒரு சில பத்திரிகைகளுக்கும் பயன்படுகிறது. எங்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு அங்கிருப்பதைப் போல் பகட்டான பத்திரிகைகளை அச்சிட முடியாது. அவற்றையெல்லாம் என்னவென்று அழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. பல்வேறு படங்கள் நிறைந்த இந்த பத்திரிகைகளைப் பிச்சை எடுப்பவர்கள் கூட நமது நகரத் தெருக்களின் மூலைகளில் படித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.
பல்வேறு ஆடம்பரக் கார்களின் விளம்பரங்கள் கூடவே பாதுகாப்பிற்கு அழகு மிக்க பெண்கள். இன்னும் உல்லாசப் படகுகள் மற்றும் இதர பொருட்களுக்கான விளம்பரங்களின் ஊடான கருத்துப் பிரச்சாரம் மூலம் மக்கள் மனதில் விஷவித்தை விதைக்கிறார்கள். இதுபோன்ற விளம்பரங்களின் தாக்கத்தால் பிச்சை எடுப்பவர்கள் கூட யதார்த்த வாழ்வில் பெற முடியாத சொர்க்கத்தைப் பற்றிய கனவுகளில் மூழ்கி இருக்கிறார்கள். முதலாளித்துவத்தால் இதைத்தான் வழங்க முடியும்.
நுகர்வோரின் வாழ்நிலை பற்றித் தெளிவுபடுத்தச் சில எடுத்துக்காட்டுகளை உங்கள் முன் வழங்க விரும்புகிறேன். பங்ளாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் அல்லது சீனா இங்கெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கார் ஒன்று இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடமும் கார் இருப்பின் என்னை மன்னியுங்கள். இந்தப் போக்குச் சரியல்ல. இதற்கு மாற்றான பல்வேறு வழிகளைத்தான் நாம் பின்பற்றியாக வேண்டும். நான் விமரிசனம் செய்யவில்லை, எச்சரிக்கவே விரும்புகிறேன். வளராத நிலையில், வளர்ந்து வரும் சூழலில், ஒவ்வோர் வீடடிற்கும் ஒரு கார் என்ற ஏற்க முடியாத முன்மாதிரிகளை நாம் கொள்ளலாகாது. இதே போன்று சீனாவில் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். பத்துக் கோடி ஹெக்டேர் விளைநிலங்கள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்ட வேண்டும். இது தவிரப், பெட்ரோல் நிலையங்கள் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் போன்றவற்றையும் உருவாக்க வேண்யிருக்கும். அப்போது ஒரு நெல்மணிகளை விளைவிக்க ஒரு சாண் நிலங் கூட மிஞ்சி இராது.
உலகெங்கிலும் அவர்கள் திணிக்கக்கூடிய நுகர்வுக் கலாசார வடிவம் மிகவும் பைத்தியக்காரத் தனமானது. அது குழப்பமானது மட்டுமின்றி அபத்தமானதும் கூட. அதற்காக உலகமே துறவியர் மடமாக மாற வேணடும் என்று நான் கூறவில்லை. ஆனால் நமக்கு உலகில் வேறு வழியில்லை. நுகர்வு வடிவங்கள் குறித்துச் சரியான வரையறைகளை உண்டாக்கித்தான் தீர வேண்டும். நுகர்வுக்கு ஏற்றவை எவை, அவற்றைப் பெறுவதற்கான முறை எது, அவற்றைப் பெற முடியுமா முடியாதா போன்ற அம்சங்கள் குறித்து மனித சமூகத்திற்கு கற்பிக்கப்பட வேண்டும். நாம் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய தருணம் இது.
தமிழாக்கம்: ஏகலைவா
No comments:
Post a Comment