October 03, 2008

அமெரிக்காவின் பொருளாதார சூதாட்டம்: இலாபம் யாருக்கு?

சிறப்பு கட்டுரை
வே. மீனாட்சிசுந்தரம்
பல நாடுகளில் கிளைகள் அமைத்து செயல்படும் அமெரிக்க நாட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து டாலர் முடக்கத்தால் திவாலாகின. உலகமே பதற எல்லா திக்கிலும் வீசும் புயலாகவும் வெள்ளமாகவும் இந்த திவால் படபடப்பு உருவெடுத்து பல நாட்டு மக்களின் சேமிப்புகளை வாரி எடுத்துச் சென்று விட்டது. (இதனை அமெரிக்கர்கள் பட்டாம் பூச்சி விளைவு என்கின்றனர். இதனை விளக்க சீனாவில் பட்டாம் பூச்சிகள் சிறகடித்தால் அமெரிக்காவில் புயலாகிவிடும் என்ற புது மொழியை சொல்லுகின்றனர்! அதை விட அமெரிக்க பெரு முதலாளிகள் தாயம் உருட்டினால் உலகமே உருளும் என்பதே இந்த விளைவை விளக்கப் பொருந்தும்) உலகளவில் இந்த நிறுவனங்களில் பங்குகளாகவும், இன்சூரன்ஸ் பிரிமியமாகவும் முதலீடு செய்தவர்கள் உள்ளதையும் இழந்து அந்தந்த நாடுகளின் தெருக்களிலே நிறுத்தி விடப்பட்டுள்ளனர்.ஐரோப்பா (பிரிட்டன் உட்பட) மற்றும் ஜப்பான், தென் அமெரிக்க நாடுகளின் அரசுகள் இந்த பாதிப்பிற்கு அமெரிக்க அரசை குற்றம் சாட்டுகின்றனர்.
அரசியல் கலப்பில்லாத பொருளாதார பன்டிதர்களோ மக்களின் பேராசையே இந்த துன்பத்திற்கு காரணம் என்று உளவியல் விளக்கம் தருகின்றனர். நமது பிரதமர் மன்மோகன் சிங் எல்லாம் வல்ல புஷ் காப்பாற்றுவார் என்று கும்பிடுகிறார். நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நிதி அமைச்சர் கண்ணை மூடிக்கொண்டு மார் தட்டுகிறார்! நமது நாட்டில் பணம் காய்க்கும் மரமாக இருக்கும் அவுட் சோர்சிங் துறையில் உடனடியாக பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். பண புழக்கத் துறையில்தான் கொழுத்த சம்பளம் பெறமுடியும் என்று பட்டம் பெற்ற இளவட்டங்கள் காத்திருக்கும் பட்டியலில் தள்ளப்பட்டனர். அந்நிய நிறுவனங்களில் ஏதேனும் ஒருவகையில் (ஹெட்ஜ் பன்ட் உட்பட) நமது பெரு முதலாளிகளும் அரசியல் பெரும் புள்ளிகளும், ஊழல் அதிகாரிகளும் முதலீடு செய்த பணம் எவ்வளவு காணாமல் போனது என்பதை நாம் அறிய முடியாது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் அவர்களும் சொல்ல மாட்டார்கள். நமது இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் பொதுத்துறை வங்கிகளை அந்நிய நிறுவனங்களுக்கு விற்க அரசு முயற்சித்த பொழுது இடதுசாரிகளும் விழிப்புணர்வு பெற்ற ஊழியர்களும் தடுத்ததால் நமது மக்களின் சேமிப்பு ஓரளவு தப்பியது. ஆனால் எதையெடுத்தாலும் முதலீட்டிற்கு டாலரை சார்ந்து நிற்க வைக்கப்பட்டிருக்கும் நமது பொருளாதார உற்பத்தி திறன் வளர்ச்சி வேகம் எவ்வளவு பாதிக்கும் என்பதை நிபுணர்களைத் தவிர மற்றவர்கள் கணக்கிட முடியாது. எனவே தனது அறியாமையை மறைக்க ப. சிதம்பரம் மார்தட்டுகிறார்!
உண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் கடன் நிலுவையும் திவாலும் விளைவே தவிர நெருக்கடிக்கான காரணங்களல்ல! இந்த நெருக்கடி பண முதளைகள் பங்குச் சந்தையில் நடத்தும் மங்காத்தா ஆட்டத்தால் வந்தது. மாயமாக வந்த பணம் மாயமாக போய்விட்டது. போகிற போக்கில் பாமரர்களின் உழைப்பை சுரண்டிவிட்டது. இது சராசரி மனிதனின் பார்வைக்கு அப்பால் நடைபெறுவதால் சுரண்டும் கும்பலால் எளிதில் குழப்ப முடிகிறது. காரணங்களை விளைவுகளாகவும், விளைவுகளை காரணங்களாகவும் சித்தரிப்பதில் வல்ல மேலை நாட்டு மீடியாக்கள் பரபரப்பாக போட்ட கூச்சலென்ன?அமெரிக்க,ஐரோப்பிய, நிதி நிறுவனங்கள் கண்மூடித்தனமாக அமெரிக்க மக்களுக்கு வீட்டுக் கடன் வழங்கின. கடன் வாங்கியவர்கள் தவனை கட்ட தவறினர். வராக் கடன் சுமை பெருகியது. பணம் முடங்கியதால் நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின. சந்தை விளைவால் இதுவே ஊழிக் கூத்தாக ஆகிவிட்டது! பல லட்சம் கோடி ரூபாய்களை இழந்து விஷ சக்கரத்தில் நிதி நிறுவனங்கள் மாட்டிக் கொண்டன! என்றுதானே சத்தம் போட்டன. ஏன் அவர்கள் கடன் கொடுத்தனர் ஏன் இவர்கள் தவனை தவறினர் என்பதை இந்த மீடியாக்கள் கூறாமல் விட்டதின் மூலம் ஒரு உண்மைக்கு திரை போட்டு மறைத்தனர். விலை உயர்வும் வட்டிவீத உயர்வும் தவனை தரத் தள்ளியது என்பதை யாரும் பெரிது படுத்தவில்லை. லட்சக்கனக்காக அமெரிக்கர்கள் வீடுகளை இழந்து விட்டதைப் பற்றி யாரும் மூச்சுவிடவில்லை அதே நேரம் அமெரிக்க பொருளாதாரமே சறுக்கி குழியில் விழுந்து விட்டது என்று மீடியாக்கள் பயமுறுத்தின. ஆபத்பாந்தவன் புஷ் திவாலாகிப்போன நிதி நிறுவனங்களை பல லட்சம் கோடி வழங்கி காப்பாற்றிய பிறகே சில உண்மைகளை வெளியிட முன்வந்தன. மீடியாக்களில் சில புஷ் அமெரிக்காவை சோவியத் யூனியனாக்கி விட்டார் என்று அலறின. ஆனால் நடந்ததென்ன? சராசரி அமெரிக்கனின் வீடுகள் பணம் போல் மாயமாக மறையவில்லை! கடன் கொடுத்த நிறுவனங்களின் அசையா சொத்தாக ஆகிவிட்டன. அதே நேரம் நிறுவனங்கள் இழந்த டாலரை அரசே கொடுத்து விட்டது. அதாவது புஷ்ஷின் நடவடிக்கையால் சராசரி மனிதனின் சொத்து கடன் கொடுத்த நிறுனங்களின் சொத்தாக ஆக்கப்பட்டன. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொடுத்ததால் அமெரிக்க மக்களின் கோபம் தன் மீது பாயாமல் இருக்க டால திரட்ட வரிகளை போடாமல் புஷ் செய்ததென்ன? டாலர் தாளை அச்சடித்ததோடு கடன் பத்திரங்களையும் அச்சடித்து டாலருக்கு ஏங்கும் நாடுகளின் தலையில் கட்டிவிட்டார். அதாவது நிறுவனங்களின் வராக்கடனை வட்டியும் முதலுமாக நம்மை தவனை முறையில் கொடுக்கவைத்து விட்டார். இதுவே வால் ஸ்டீரீட் சோசலிசம் என்று பிரபலமானது!!இதிலிருந்து நாம் காண்பதென்ன?அமெரிக்காவிடம் டாலர் நோட்டுக்களை அச்சடிக்கும் எந்திரமும், அந்நிய செலவானிக்கு டாலரை நம்பி நிற்கும் ஏழை நாடுகளும் இருக்கிறவரை எந்த புயலையும் அமெரிக்கா சமாளிக்கும்!!!
பங்குச்சந்தை சூதாட்டம் மூலம் சுரண்டல்
இன்று உலகமயத்தால் முக்கியமாக நடப்பதென்ன? உலகளவில் பங்குச் சந்தைகள் மூலம் பணத்தையும் அதனுடைய டூப்பிளிகேட்டுகளையும் வைத்து நடக்கும் கொடுக்கல் வாங்கல் சூதாட்டங்களே. உலகளவில் சரக்குகளும் மனிதர்களும் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி போக வர இருக்கிற தடைகள் வரம்புகள் ஏராளம் உள்ளன. பணத்திற்கு அவ்வளவு தடைகள் இல்லை! இதனைத்தான் தாராள மயமாக்கல் என்கிறோம். பணமென்பதென்ன? ஒரு சமூகத்தின் உழைப்பு சக்தியும், அதனால் உருவாக்கப்படும் சரக்குகளும் பணவடிவம் பெறுகின்றன. முன்னொரு காலத்தில் தங்கமே பணமாக இருந்தது. பின்னர் அதனை ஸ்ட்டாக் வைத்து அரசு தாள்பணம் வெளியிட்டது. அதாவது பணத்தை தாள்வடிவில் டூப்பிளிகேட் செய்தது. இப்பொழுது அந்த டூப்பிளி கேட்டிற்கு பல டூப்பிளி கேட்டுக்களை பணச்சந்தை உருவாக்கிவிட்டது. அதனை பங்கு பத்திரம், கடன் பத்திரம், பியூட்ச்சர்ஸ், ஆப்சன்ஸ் ஸ்வாப்ஸ் என்று ஒரு டசனுக்கு மேல் டூப்பிளிகேட்டுகள் இன்றைய தேதியில் உள்ளன. இதனை நிதிக் கருவிகள் (பினான்சியல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்) என்கின்றனர். இந்த டூப்பிளிகேட்டுகளை வாங்கி விற்று லாபம் சம்பாதிப்பது என்பதை பந்தய விளையாட்டாக பணம் படைத்தவர்கள் ஆக்கியுள்ளனர். மஹா பாரதத்தில் தருமருக்கு பணயம் வைக்க ஏதும் கிடைக்காமல் மனைவியை பணயம் வைத்திழந்தது போல் சங்கடங்கள் இவர்களுக்கு இல்லை! குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்றுத்தான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை நட்டத்திலும், லாபம் சம்பாதிக்கலாம். விலைகள் ஏறும் பொழுதும் சம்பாதிக்கலாம், விலைகள் விழும் பொழுதும் சம்பாதிக்கலாம். சொந்த பங்குகளையே விற்றும் வாங்கியும் லாபம் சம்பாதிக்கலாம். இன்னொருத்தர் பங்குகளை வாடகைக்கு எடுத்தும் லாபம் சம்பாதிக்கலாம். ஒரு உதாரணம் கூறினால் இது விளங்கும்.
அப்பாவிசாமி தனது சேமிப்பை முதலீடு செய்து அலையன்ஸ் நிறுவனத்தின் நூறு பங்குகளை வாங்குகிறார். உல்ட்டாசாமி அவரிடம் வாடகை தருவதாக கூறி மூன்று மாதத்திற்கு வாடகைக்கு அந்த பாங்குகளை வாங்குகிறார். பங்கு விலைகள் ஏறுமுகமாக இருக்கிற நேரத்தில் அந்த பங்குகளை ஆறுசாமிக்கு ஆயிரம் ரூபாயிக்கு விற்கிறார். மூன்றாவது மாதத்தில் அன்றய நிலவர விலை கொடுத்து வாங்குவதாக உள்ட்டாசாமி ஒப்பந்தம் போட்டே விற்கிறார். ஆறுசாமியும் தனக்கு சாதகமாக பங்கு விலை உயரும் என்று எதிர்பார்த்து பங்குகளை ஆயிரம் கொடுத்து வாங்குகிறார். ஆனால் மூன்றாவது மாதத்தில் பங்குவிலை சரிந்தது. ஆயிரம் கொடுத்து வாங்கிய பங்குகளை விற்ற உல்ட்டாசாமிக்கு 800 ரூபாய்க்கு கொடுக்கிறார். உல்ட்டா சாமிக்கு 200 ரூபாய் லாபம் கிடைக்கிறது. வாடகைக்கு வாங்கிய பங்குகளை திருப்பி கொடுக்கிறார். 200 ரூபாய் சம்பாத்தியத்தில் வாடகை போக மீதியை உள்ட்டாசாமி சுருட்டுகிறார். ஒரு வேளை பங்கு விலை உயர்ந்து இருந்திருந்தால் உள்ட்டா சாமிக்கு நட்ட மேற்பட்டிருக்கும். இதில் உள்ள உள்குத்து என்னவெனில் இருவருமே அப்பாவி சாமியின் பங்கை காட்டி நிதி நிறுவனங்களிடம் குறுகிய காலகடனை வாங்கியே விளையாடுவர். ஓரே பொருளை பலர் காட்டி கடன் வாங்குகிற பொழுது நிதி நிறுவனங்களே இழப்பை தாங்க வேண்டும்.
இது புயலாகிற பொழுது அரசு தலையிடுகிறது. அதன் மூலம் சொத்துக்கள் பணக்கார நிறுவனங்களின் கைக்கு மாற்றப்படுகிறது. பணத்தின் டூப்பிளிகேட்டுக்களை வைத்து நடக்கும் இந்த சூதாடட்டங்கள் உலகளவில் நடக்கிற பொழுது நிகழ்வதென்ன? அந்நிய செலவானிக்கு பணக்கார நாடுகளின் நாணயங்களை ஏழை நாடுகள் சார்ந்து இருக்கிற வரை பங்குச் சந்தை வினைகளால் உருவாகும் இத்தகைய வாந்தி பேதி சுரண்டலை அணுபவித்தே ஆக வேண்டும்.
டாலரை பகவானாக கருதி கை யேந்தும் பிச்சைகார அரசியல் தலைவர்கள் ஆளுகிற வரை நமது வறுமை வேலை இன்மை மின்சார பஞ்சம் அகலாது. டாலர் பகவானே வெள்ளத்தில் அடித்துச் செல்லுகிற பொழுது அவர் எங்கே நம்மை காக்க கை நீட்டப் போகிறார்! நாட்டுப் பற்றுள்ள அரசியல் தலைவர்களும் பொது அறிவு படைத்த பொருளாதார நிபுனர்களும் கூறுவதென்ன? நம்மை கட்டையாக்கி டாலர் பகவான் தப்பி விடுவார்! சிலரை சீக்கிரமாக பணக்காரர்களாக ஆக்க ஆசைப்பட்டு பூங்கா அமைக்க கூட அவாளிடம் கடன் வாங்கும் கொள்கையை உடைய அரசியல் கட்சிகளின் கூட்டு ஆளுகிறவரையில் மீட்சி இல்லை. சுய சார்பை நிறுவும் அரசை அமைப்போம். நமது கையையும், காலையும், மூளையையும் நம்புவோம். கரை சேர அதுதான் வழி என்கின்றனர். அந்தந்த நாட்டு மக்களின் வர்க்கப் போராட்டம் பொருளாதார உறவுகளை மாற்றி அமைக்கும் சர்வதேச இயக்கமாவது அவசியம் என்பதையே இந்த டாலர் நெருக்கடி உணர்த்துகிறது

5 comments:

ஆட்காட்டி said...

ஆனா அந்த 200+....ரூபாய் எங்க இருந்து வந்தது? குமிழி ஊதினா உடைஞ்சு தான் ஆகணும்.

PROLETARIAN said...

Sir
vanakkam.

Vijayakanthudam koottani vaikka poguthaamey ungal katchi.
athu paththti oru katturai ezuthungal. Please!!!

ungal DYFI thozhar "AM.Kamaraj" DMDK vil sernthathu paththiyum oru katturai please.

PROLETARIAN said...

Sir
vanakkam.

Vijayakanthudam koottani vaikka poguthaamey ungal katchi.
athu paththti oru katturai ezuthungal. Please!!!

ungal DYFI thozhar "AM.Kamaraj" DMDK vil sernthathu paththiyum oru katturai please.

ஏகலைவன் said...

//////// pasi said...
Sir
vanakkam.

Vijayakanthudam koottani vaikka poguthaamey ungal katchi.
athu paththti oru katturai ezuthungal. Please!!!

ungal DYFI thozhar "AM.Kamaraj" DMDK vil sernthathu paththiyum oru katturai please./////////

அது ஒன்றுமில்லை நண்பர் பசி அவர்களே!

"விஜய்காந்த அவர்களது அரசியல் நிலைப்பாடு எமது அரசியலோடு பெரிதும் பொருந்துவதால் கூட்டனி குறித்து பேசுவதில் தவறேதுமில்லை" என்று தோலர் என்.வராதராஜன் சொன்னார். இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட 'கட்டைப்பஞ்சாயத்து புகழ்' கே.கே.நகர் காமராஜ் இரண்டு அரசியல் நிலைப்பாட்டையும் பொருத்திப்பார்த்து இந்த முடிவுக்கு வந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும் தமது 'கட்டைப்பஞ்சாயத்து' தொழிலும் 'ஊர்தாலிகளை அறுத்து' தின்கிற பிழைப்பும் தடங்கலில்லாமல் எப்போதும் போலவே நடக்கவேண்டும் என்கிற 'கொள்கை'யில் தோலர் காமராஜ் இந்த 'மாபெரும்' முடிவை எடுத்திருப்பார் என்றும் கருதலாம்.

ஏகலைவன் said...

//////////சந்திப்பு said...
அமெரிக்காவின் பொருளாதார சூதாட்டம்: இலாபம் யாருக்கு?

என்ற தலைப்பிலான மேற்கண்ட கட்டுரை சம்பந்தமாக தோழர் பசி அவர்கள் எதையும் கூறாமல். அந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத கீழ்க்கண்ட கேள்வியை பதிந்துள்ளார். முதலில் இது எந்தவிதமான நாகரீகம் என்று தோழர் ஏகலைவனும். பசியும் தெரிவிக்க வேண்டும். ////////////


உமது அரசியலை நோக்கி வைக்கப்படுகின்ற எமது எண்ணற்ற விமர்சனங்கள் உங்களால் யோக்கியமாக பதிலளிக்கப்படாவிட்டாலும் கூட பரவாயில்லை, நேர்மையாக பதிப்பிக்கப் படுவதும்கூட கிடையாது. விவாதங்கள், அதற்கான பதிலளிப்புகள் இவை எவற்றிலும் உமது ஒழுக்க நெறியை அனைவரும் அறிவர். உங்களுக்கு எமது பின்னூட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் அருகதையில்லை.

கேள்விகளுக்கு பதில் சொல்லத் திராணியற்ற இழிநிலையில் இருந்து கொண்டு "என்னை ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?" என்று புலம்புவது உமது அரசியல் ஓட்டாண்டித்தனத்துக்கு இன்னுமொரு சாட்சியமாக அமைகிறது.

முடிந்தால் விமர்சனங்களுக்கு யோக்கியமாக பதிலளித்து, இருட்டடிப்பு கேவலத்திலிருந்து மீண்டு வரப்பாருங்கள். பிறகு பேசலாம் சந்திப்பு என்கிற செல்வப்பெருமாள்.

ஏகலைவன்.

குறிப்பு: 'பசி' என்பவரது பதிவு குறித்து நீங்கள் அவரிடத்தில்தான் கேட்க வேண்டும்.