எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கெள்ளும் அத்தை, தான் நினைத்ததை உடனே செய்து விடுவார் அப்படிப்பட்ட குணம் படைத்தவர்.அத்தையின் முறைப் பையன் ஒருமுறை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்தபோது கூட வேண்டாம் என மறுத்து விட்டவர்! எப்படியோ, அவருக்குள் அந்த ஆசை குடிகொண்டு விட்டது!
தான் ஏதாவது முடிவு எடுத்து விட்டால் அதனை வெளியே சொல்வதற்கும் தயங்கியதில்லை!எப்படி அத்தை திடீர்னு உங்களுக்கு திருமண ஆசை வந்தது என்று கேட்க! 'சும்மா இப்படியே இவ்வளவு நாள் ஜாலிய இருந்துட்டேன்! சரி திருமணன்னு சொல்றாங்களே அதுல என்ன சந்தோஷம் இருக்குதுன்னு பாக்கலாம்னுதான்...' என மிகச் சாதாரணமாக, அதே ஒளி வீசும் கண்களோடு, சிரித்த முகத்தோடு வெளிப்படுத்தினார்... ஒரு பக்கம் அத்தையின் ஆசையில் அர்த்தம் இருந்தாலும், இந்த மனிதர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்ற குழப்பம்....
அத்தையின் அம்மாவுக்கும் வயசாகிக் கொண்டே இருந்தது. 'சரி! பொண்ணு ஆசைப்படறா... அவளுக்கும் கல்யாணம்னு ஒண்ணு ஆயிட்டா... அவ குழந்தை, குட்டின்னு காலத்தை ஓட்டிடுவா! அண்ணன், தம்பின்னு... யாரையும் நம்ப வேண்டியதில்லப்பார்னு...' அத்தையின் அம்மா கூறியதில் அர்த்தம் இருந்தது.
அத்தையின் திருமண ஆசை பற்றி உறவினர்களிடமும், நண்பர்களிடமும் ஏன் கல்யாண மாலையில் கூட பதிவு செய்து வைத்து விட்டார்கள்... 'அட எம்பொண்ணுக்கு எந்த ஜாதியா இருந்தாக்கூட பரவாயில்லை... ஆனா இந்துவா இருக்கணும்...' அவ்வளவுத்தான் என்பது வரையில் வந்து விட்டார்கள்.
பல பேர் வருவதும், போவதுமாக இருந்தார்கள்! அத்தை குடும்பத்தில் வசதிக்கு ஒன்றும் குறையில்லை. இருந்தாலும் என்ன! ஜாதகம்தான் பொருந்தவில்லை என்று... தள்ளிக் கொண்டே வந்தது....இந்நிலையில், நாகர்கோவில் சந்திரனுக்கு ஊனமான பெண்தான் திருமண பொருத்தமாக அமையும் என்று ஜாதகத்தில் சொல்லியிருந்தார்களாம்!
அத்தையின் விலாசத்தை கண்டுபிடித்து சென்னைக்கு வந்து சந்திரனும், அவரது அம்மாவும் பெண் பார்த்து விட்டுப் போனார்கள். ஊருக்கே பிடிக்கும் அத்தையை மாப்பிள்ளைக்கு பிடிக்காமல் போகுமா!சந்திரன் ஊருக்கு போனதும் அத்தையின் நினைவாகவே இருந்தார்! தினந்தோறும் அத்தைக்கு போன் போட்டு அன்பு மொழியில் நேசமாக பேசுவார்! அத்தை வெளிப்படையானவர், எதையும் மறைக்காமல், ஒன்று விடாமல் அப்படியே வாண்டுகளிடம் சொல்லி விடுவார்.
புதிய சந்திரனுக்கு இதயத்தில் இடம் கொடுத்து விட்டார் அத்தை! அப்புறமென்ன! நட்சத்திரம் சிகிதமாக இருக்கும் இரவு சந்திரன் ஏக்கமாகி விட்டது!"
அத்தைக்கு ஆசையாக புடவை எடுக்கப்போன சந்திரன், பிறகு சென்னை பெண்கள் எல்லாம் சுடிதார்தான் போடுவார்கள் என யோசித்து சுடிதாரும், புடவையுமாக எடுத்து வைத்து விட்டார். அத்தோடு நிற்கவில்லை! 'ஐன்டீனின் ஒளி தியரி புதிய காதலர்களுக்கு கைகொடுக்காமலா போய்விடும்' கூடவே ஒரு புதிய செல் போனையும் வாங்கி மொத்தமாக அத்தைக்கு அனுப்பி வைத்து விட்டார்!
ஐன்°டீனிடம் சார்பியல் தியரி குறித்து கேட்டபோது, அவர் அளித்த விளக்கம் மிக அழகானது! "அழகான பெண்ணிடம் இரண்டு மணி நேரம் பேசினால் அது இரண்டு நிமிடம் போல் இருக்கும்; அதே நேரம் எரியும் அடுப்பின் மீது இரண்டு நிமிடம் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் போல் இருக்கும்" என்று கூறினார்...
அதேபோல் செல்போனின் ஒளிகள் நாகர்கோவிலுக்கும், சென்னைக்கும் ரன்னெடுத்தே சோர்ந்து போகும் அளவிற்கு நாள்தோறும் நான்கு மணி நேரத்திற்கு குறையாமல் அவர்களது பேச்சுவும், கும்மாளமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.ஏன்டீ, இன்னுமா தூக்கம் வரலை உனக்கு! அப்படி என்னதான் பேசுவீயோ அவனோடு... என்று தன் தாயே கூறுமளவிற்கு அவர்களது பேச்சு நடு ஜாமத்திலும் நீடிக்கும்...
அத்தையோடு யாராவது பையன்கள் பேசும்போது கூட, 'டேய், என்னடா நீ கூட மாமா மாதிரியே பேசுற...' என்கிற அளவிற்கு எங்கும், எதிலும் சந்திரனையே சுற்றி சுற்றி வந்தார் அத்தை...அத்தையின் சந்தோஷம் அவருக்கு மட்டுமா? வாண்டுகளுக்கும், தோழிகளுக்கும்தான்!
திருமண தேதி எப்போது என்ற அளவிற்கு அவர்களது பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, சந்திரனின் வேகமான நடவடிக்கை வீட்டில் பெரிய பிரச்சினையாக மாறுகிறது... நீண்ட நாளாக கல்யாணம் ஆகாத சந்திரன் 'ஜாதகத்தையே மாற்றி பொருத்தம் செய்து விட்டார்!' என்பதுதான். அவ்வளவுதான், அவரது தாய் தன் ஒரே பிள்ளை இப்படி செஞ்சுட்டானே என்று புலம்பி.... புலம்பி.... புயலே வீசி விட்டது அவரது குடும்பத்தில்...
சந்திரனிடம் இருந்து இரண்டு நாட்களாக கால்கள் வராததால் உலகமே தன்னிடமிருந்து துண்டித்து விட்டதுபோல் துடித்தார் அத்தை! இரண்டு நாட்கள், இரண்டு வாரமாக மாறியது... காரணம் அறியாமல் துடித்தார்... எப்படியோ சந்திரன் வேலை பார்க்கும் இடத்தின் தொலைபேசி எண்ணை கண்டு பிடித்து அவருக்கு போன் போட்டுப் கேட்டபோது, 'சந்திரன் வெளி நாடு சென்று விட்டதாக கூறுகிறார்கள்...' என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்தார் அத்தை! எதற்கும் அசராத அத்தையின் ஒவ்வொரு பொழுதும் ஒரு வருடம் போல் கழிந்தது!
அத்தை நடந்த விஷயத்தையெல்லாம் தன் நண்பர்களோடு மனம் விட்டுப் பேச... 'சந்திரன் எங்கே என்ற கேள்விகள் தன் இதயத்தை முட்டிக் கொண்டே இருந்தது...' கூற, அத்தைக்காக எதையும் செய்யும் இளசுகள் கன்னியகுமரி எக்°பிர° வேகத்தில் நாகர்கோவில் சென்று விசாரித்ததில், 'சந்திரனின் குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண்ணை பார்த்து அதிரடியாக திருமணம் செய்து வைத்து விட்டார்கள்' என்ற தகவல் கிடைக்க! அதிர்ச்சியான இளசுகள் அத்தையிடம் இதனை எப்படி சொல்வோம் என துடித்தனர்...
அத்தையின் ஒவ்வொரு நொடியும் சந்திரனின் நினைவாகவே கழிந்தது... இரவில் தூங்குவதை விட அந்த கால் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு விண்ணில் முட்டிக் கொண்டே இருந்தது.... அத்தையின் மனதை திசை திருப்ப, 'ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாற்றையும், பீத்தேவனின் இசை ஞானத்தையும் எல்லாம் கூறவோம்' இருந்தாலும் என்ன?
காதல் நோய்க்கு யாரால் மருந்திட முடியும்! காதல் ஒரு முறை உள்ளத்தில் புகுந்து விட்டால், கட்டாற்று வெள்ளம்போல் கரை புரண்டு ஓடிக்கொண்டே இருக்குமல்லவா! அணை போடாத வரை தடையேது காதலுக்கு!அத்தையிடம் எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும் என தீர்மானித்த இளசுகள், மிக நிதாணமாக அத்தையிடம் நடந்ததை கூற, அத்தையின் கண்களில் காவிரி பாய்ந்ததோடு, அவரது இதயம் முதல் முறையாக ஊனமாகி விட்டது!
- கே. செல்வப்பெருமாள்
No comments:
Post a Comment