November 23, 2006

அடங்கித்தான் போகவேண்டும்!

இந்திய பொருளாதாரத்தின் தலைநகரமாகத் திகழும் மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில்தான் இந்த கொலைபாதகம் நடந்தேறியுள்ளது.தீண்டாமை கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்காத நம்நாட்டில்தான், இந்தியா ஒளிர்கிறது! 2020-ல் இந்தியா வல்லரசு நாடு! ஐ.டி. உலகில் ஜாம்பவான் என்றெல்லாம் புளகாங்கிதம் அடைகிறது ஆளும் வர்க்கம்!
தலித் என்றாலே அடங்கித்தான் போகவேண்டும்! அவன் பிறருக்கு அடிமை சேவகம் புரியவே பிறப்பெடுத்தவன் என்ற மேல்ஜாதி - வர்ணாசிரம ஆதிக்கவெறி எங்கும் வியாபித்து - தொடர்கிறது. அதன் தற்போதைய உதாரணம்தான் கயர்லாஞ்சி!
கயர்லாஞ்சி கிராமத்தில் மூன்று தலித் குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தை தழுவியவர்கள். தமிழகத்தில் சிங்காரவேலர் - பெரியார் வலியுறுத்திய சுயமரியாதையோடு வாழ்ந்து வருபவர்கள். இத்தகைய சுயமரியாதையை ஏற்குமா ஆதிக்கஜாதி!பையாலால் போட்மாங்கேவின் மனைவி சுரேகா, மகள் பிரியங்கா மகன்கள் சுதிர், ரோஷன் ஆகியோரைக் கொண்ட சிறிய குடும்பம் வெறும் செங்கற்களால் அடுக்கப்பட்ட ஓலை வீட்டில் வசித்து வந்தது. இவர்களுக்கென்று இருக்கும் 2.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். இந்த நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டது ஆதிக்கஜாதி வர்க்கம். அத்துடன் சாலை போடுவதற்கு இவர்களது நிலத்தை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.விவசாய கூலி சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை காரணமாக வைத்துக் கொண்டு 40க்கும் மேற்பட்ட ஜாதியாதிக்க சக்திகள் செப்டம்பர் 29, 2006 அன்று விடியற்காலையில் பையாலால் போட்மாங்கே வீட்டிற்குள் நுழைந்து தாய், மகள், மகன்கள் என நான்கு பேரையும் அடித்து, உதைத்து நிர்வானமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கிராமத்தின் மையத்தில் நிற்க வைத்து சகோதரனை - சகோதரரியோடு உடலுறவு கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளனர். இந்த மனித அரக்கர்கள் அத்துடன் நிற்கவில்லை. இந்த இளம் சகோதரிகளை மிருகத்தனமாக கும்பலாக கற்பழித்ததோடு, சின்னபின்னமாக்கியதோடு, சைக்கிள் செயின்களாலும், பயங்கரமான அயுதங்களாலும் தாக்கி கொலை செய்து விட்டு, அந்த ஊரிலிருந்து தொலைவில் இருக்கும் ஏரியருகே வீசியெறிந்து விட்டுச் சென்று விட்டனர்.
உயர் ஜாதி அடையாளம் ஒன்றே இவையெல்லாவற்றையும் செய்வதற்கு வழங்கப்பட்ட லைசன்சு போல நடந்துக் கொண்டுள்ளன இந்த மனித மிருகங்கள். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில வாரங்கள் கழித்தே வெளியுலகிற்கு தெரியவந்தது. அந்த அளவிற்கு அங்குள்ள காவல்துறையும், அதிகார வர்க்கமும் இந்த கொலைபாதக செயலை மூடிமறைத்துள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூட ஆதிக்கவெறியர்களின் பக்கமே நின்று பொய் சான்றிதழ் வழங்கியுள்ளனர். மொத்தத்தில் நாகரீக சமூகம் வெட்கித் தலைக்குனியும் அளவிற்கு ஜாதி ஆதிக்கவெறியர்களோடு கைகோர்த்துள்ளது அரசு நிர்வாகம்.
இது ஏதோ, எங்கோ நடைபெற்ற சம்பவம் அல்ல! நம் இந்தியாவில்தான்!! பா.ஜ.க. ஆட்சியின் போது ஹாரியானாவில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த நான்கு தலித்துக்களை கல்லால் அடித்தே கொன்றது சங்பரிவார - சன்னியாசிக் கூட்டம். வெண்மணி, சுண்டூர், கொடியங்குளம், மாஞ்சோலை தோட்டம், கயர்லாஞ்சி என தொடரும் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக ஜோதிபாபூலே, அம்பேத்கர், சிங்காரவேலர், பி. சீனிவாசராவ், பெரியார், பகத்சிங், பாரதியார் காட்டிய வழியில் சகோதரத்துவத்தோடு வர்ணாசிரம - ஜாதி ஆதிக்க சிந்தனைக்கு முடிவு கட்டிட கிளர்ந்தெழுவோம்! தீண்டாமைக்கு தீ வைப்போம்!!

1 comment:

அருண்மொழி said...

நாம் அனைவரும் இந்துக்களே :-)