உலகமயப் பொருளாதாரம் பல்வேறு நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய வடிவம்தான் “சிறப்பு பொருளாதார மண்டலம்” (Special Economic Zone - SEZs) ‘இன்னொரு உலகம் சாத்தியமே!’ என்று போராடி வரும் வேளையில், உலகமயமும் அதன் பாணியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை (SEZ) புதிய உலகமாக சித்தரிக்கிறது. இத்தகைய மண்டலங்கள் யாருடைய நலனுக்காக அமைக்கப்படுகிறது? இதனால் பாதிக்கப்படும் வர்க்கம் எது? சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை இம்மண்டலங்கள் ஏற்படுத்தப்போகிறது?சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சட்டத்தை 2005 நவம்பரில் மன்மோகன் அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் அடிப்படையான நோக்கம் நேரடி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது. அதற்காக சர்வதேச தரத்தில் இம்மண்டலங்களை உருவாக்குவது என்பதுதான்.இந்திய வர்த்தகத்துறை அமைச்சகம் மிக வேகமாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இதுவரை 181 மண்டலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 128க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. கிட்டத்திட்ட நாடு முழுவதும் 309 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.SEZசின் புதிய ஆட்சியாளர்கள்இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கப்போவது யார் என்பதை அறிந்தாலே அதன் மர்மங்கள் துலங்கிவிடும், ரிலையன்°, டாடா, சகாரா, யூனிடெக், வீடியோகான், மகேந்திரா குழுமம், கல்யாணி குழுமம்... என உள்நாட்டு பெரு முதலாளிகளும், அந்நிய நாட்டு பெரு முதலாளிகளும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சுதந்திரமாக அமைத்துக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது மன்மோகன் சிங் அரசு. இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட குறைந்தபட்சம் 10,000 ஏக்கரில் இருந்து 35,000 ஏக்கர் அளவில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஹரியானாவில் ரிலையன்° நிறுவனமும் - ஹரியானா மாநில வளர்ச்சி கார்ப்பரேஷனும் இணைந்து 25,000 ஏக்கர் பரப்பளவில் குர்கான் - ஜாஜர் பகுதியில் SEZ அமைக்க உள்ளனர். அதேபோல் டி.எல்.எப். என்ற நிறுவனம் அதே குர்கானில் 20,000 ஏக்கரிலும், மும்பையில் ரிலையன்° நிறுவனம் 35,000 ஏக்கரிலும் SEZ அமைக்கவுள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய SEZ திட்டம் இதுதான். சென்னையில் மகேந்திர குழுமமும், நான்குநேரி, ஓசூர் உட்பட தமிழகத்தில் ஐந்து இடங்களிலும் SEZ அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விழுங்கப்படும் விவசாய நிலங்கள்‘இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் வாழ்கிறது’ என காந்திஜி கூறினார். மேலும் இந்தியா என்பது வெறும் நகரங்கள் மட்டுமல்ல பல லட்சக்கணக்கான கிராமங்களைக் கொண்டது என மிக ஆழமாக வலியுறுத்தினார். அவரது வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிந்தனைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சமாதி கட்டத் துவங்கி விட்டனர். பன்னெடுங்காலமாக தலைமுறை, தலைமுறையாக கலாச்சார ரீதியாக - பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கிராமப்புற மக்களின் நன்செய் விவசாய விளை நிலங்கள் அடிமாட்டு விலைகொடுத்து வாங்கப்படுகிறது. மார்க்கெட் விலையை விட மிகக் குறைந்த தொகையை கொடுத்து நிலக் கொள்ளை நடைபெற்று வருகிறது. நிலங்களை பறிக்கொடுத்த கிராமப்புற மக்கள், தங்கள் கிராமங்களை காலி செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியேறும் மக்களுக்கு மாற்று இடங்களோ அல்லது அவர்களது வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான சூழலை, அடிப்படைத் தேவைகள் பற்றி எந்தவிதமான சிரத்தையையோ மாநில அரசுகளும், இந்திய அரசும் அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களோ மேற்கொள்வதில்லை. இத்தகைய செயல் மூலம் சமூகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாக்கி வருகிறது ஆளும் வர்க்கம். இது குறித்து முன்னாள் பிரதமர் வி.பி. சிங் கூறும் போது, “மக்களை ஆயுதம் ஏந்துவதற்கு தள்ளி விடாதீர்கள்” என எச்சரித்துள்ளார். இந்திய நகர்ப்புறங்கள் பிதுங்கி வழிந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரசின் இத்தகைய போக்கு நகரங்களில் மேலும் நெருக்கடியை உண்டாக்குவதோடு, சமூகத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்திட செய்யும்.இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ள 67 SEZ திட்டங்களுக்காக மட்டும் 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள திட்டங்களையும் சேர்த்தால் 2,74,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கஜினி முகமது இந்தியாவை 17 முறை கொள்ளையடித்ததை வைத்து அரசியல் நடத்தும், சங்பரிவாரக் கூட்டங்களுக்கு பல லட்சக்கணக்கான மக்களின் நிலம் கண்ணெதிரே கொள்ளையடிக்கப்படுவது ஏனோ தெரியவில்லை! பிரிட்டிஷ் இந்தியாவிற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலக்கொள்ளை நடப்பது நவீன வரலாற்றில் இதுதான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்திய உணவு உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கும் விவசாய நிலங்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவதால் எதிர்காலத்தில் பெரும் உணவு பற்றாக்குறையுடன் கூடிய பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.ஆசிர்வதிக்கப்பட்ட நவீன காலனிஇத்தகைய சிறப்பு பொருளாதார மண்டத்திற்குள் ஏற்றுமதியை நோக்கமாக கொண்டு தொழில் துவங்கும் அந்நிய நிறுவனங்களுக்கு அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டு காலத்திற்கு அவர்களுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி மற்றும் வருமான வரி உட்பட அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 50 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும், அதற்கடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் மறு முதலீடு என்ற பெயரில் இத்தகைய சலுகையை நீட்டிக்க முடியும். இது தவிர இத்தகைய நவீன மண்டலத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகாலத்திற்கு எந்தவிதமான வரியும் இல்லை! மேலும், இம் மண்டலத்திற்கான பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உட்பட 27 வகைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திடவும், காண்ட்டிராக்ட் என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும், 8 மணி நேர வேலை பாதுகாப்பு, இ.எ°.ஐ., மருத்துவம், பனி பாதுகாப்பு என எந்த சட்டரீதியான பாதுகாப்பும் இம்மண்டலத்திற்குள் bல்லுபடியாகாது. மொத்தத்தில் சுதந்திர இந்தியாவிற்குள் ஏகபோக மற்றும் பெரு முதலாளிகளின் நவீன காலனிகளாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன.அரசின் இத்தகைய கொள்கையால் ரூ. 1,75,000 கோடி அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியும், நிதித்துறையும் எச்சரித்துள்ளது. இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மூலம் அரசு எதிர்பார்க்கு மூலதனம் என்பது வெறும் 3,60,000 கோடி ரூபாய் மட்டுமே!இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் SEZ மிகப் பெரிய வேலைவாய்ப்பினை வழங்கும் என்று கதைக்கத்துவங்கியுள்ளார். தற்போது செயல்பட்டு வரும் 28 SEZசில் ஐந்து லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாக 1,00,650 வேலைவாய்ப்பினை மட்டுமே இவைகள் வழங்கியுள்ளன. இன்னும் குறிப்பாக கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் SEZசில் 79 நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்துள்ளன. இவைகளில் வெறும் 7000 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மேலும் SEZ ஆதரவாளர்கள் கூறுவது போல அந்நிய முதலீடும் எதிர்பார்த்த அளவிற்கு வருமா? என்பதுகூட கேள்விக்குறியே!சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முழுமையான வரிகளையும், நிலத்தினையும் வாரி வழங்கும் மத்திய - மாநில அரசுகளின் கொள்கை மாநிலத்தில் செயல்படும் சிறுதொழில் பேட்டைகளை சட்டை செய்வதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் அம்பத்தூர், கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர் போன்ற இடங்களில் செயல்படும் தொழிற்பேட்டைகளுக்கு சாலை, மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட செய்துக் கொடுப்பதில்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் சிறு தொழில் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவானதோடு, மறைமுகமாக மேலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்பை இது வழங்கியது. மத்திய - மாநில அரசின் கொள்கை வேலைவாய்ப்பினை பெருக்கிட இதுபோன்ற முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கு பதிலாக பன்னாட்டு மற்றும் ஏகபோக முதலாளிகளின் நலன் காக்கும் கொள்கைகளைத்தான் வடிவமைக்கின்றனர்.நிலக் கொள்ளையும் - ரியல் எsடேட் பிசினசும்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கும் நிறுவனங்கள் அதன் பரப்பளவில் 25 சதவீத அளவில் தொழிற்சாலைகளுக்கும், மற்ற 25 சதவீதம் சாலை, மின்சாரம், குடிநீர் உட்பட அடிப்படை கட்டமைப்புகளுக்கும் பயன்படுத்திடலாம் மீதம் உள்ள 50 சதவீத நிலத்தில் மிக நவீனமான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி அதன் மூலம் கொழுத்த இலாபத்தை ஈட்டுவதுதான் SEZயை உருவாக்கும் நிறுவனங்களின் அடிப்படை நோக்கம். விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களை குறுகிய காலத்தில் பெரும் லாபமீட்டும் முதலீடாக கருதுகின்றன. உதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10,000 ஆயிரத்திற்கு வாங்கியிருந்தால் பிறகு அதே நிலத்தை 40 இலட்சத்திற்கு விற்பனை செய்வார்கள். சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது தொழிலை வளர்ப்பதை விட ரியல் எ°ட்டேட் பிசினஸை - பெரும் கொள்ளையை உருவாக்க வழிவகுக்கிறது. இவ்வாறான விற்பனைகளுக்கு கூட எந்தவிதமான வரியையும் அவர்கள் செலுத்த வேண்டியதில்லை. மேலும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. மாநில அரசு அதிகாரிகளோ, ஏன் மந்திரிகளோ கூட தங்கள் மூக்கை நுழைக்க முடியாது. இதற்கென இருக்கும் வளர்ச்சி அதிகாரிகள்தான் இதனை கவனிப்பர். SEZயை உருவாக்கிய தனியாரின் சுதந்திரமான ஆட்சியதிகாரத்தின் கீழ்தான் இது செயல்படுத்தப்படும். குறிப்பாக, கூறுவேண்டுமானால் இது “அரசுக்குள் அரசாக அதுவும் செல்வம் விளையாடும் அரசாக” செயல்படும். சிறப்பு பொருளாதார மண்டலம் சுரண்டலின் வேர்காலாக சிறப்பு சுரண்டல் மண்டலமாக உருவாவதற்கே மன்மோகன் அரசு வழிவகுத்துள்ளது.அனைத்து மாநில அரசுகளும் நிலச்சீர்திருத்தம் செய்திட வேண்டும் என்று 50 ஆண்டு காலமாக வலியுறுத்தி வந்தாலும், இந்த விஷயத்தை காதில் போட்டுக் கொள்ளாத மாநில அரசுகள், தற்போது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதன் மூலம் புதிய நவீன ஜமீன்தாரிகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலகமயமாக்கல் ஆட்சியாளர்களின் சிந்தனைகளை எவ்வாறு சீரழித்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.சீனாவில் சிறப்பு பொருளாதார மண்டலம்உலகில் முதன் முதலில் 1986இல் சீனாவில்தான் டெங்சியோ பிங் வழிகாட்டலின் அடிப்படையில் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டது. சீனாவை பொறுத்தவரை “ஒரு தேசத்தில் இரண்டு கொள்கைகள்” என்ற அடிப்படையில் செயல்படும் நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கே சோசலிசம் என்பதை சீனத்தன்மைக்கேற்ப கட்டிட வேண்டும் என்று டெங்சியோ பிங் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த அடிப்படைகளை நம்முடைய இந்திய அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சீனாவில் இயங்கி வரும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சீன மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கு பயன்படும் அளவில் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது வெறும் பெயரில் மட்டும்தான் அவ்வாறு அமைந்துள்ளது. அதன் செயல்பாட்டில் முற்றிலும் மாறுபட்ட நிலையே இங்குள்ளது.சீனாவில் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சீன அரசு மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைத்தது. இம்மண்டலத்திற்கான நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலங்களைத்தான் அரசு தேர்வு செய்கிறது. அனைத்து விதத்திலும் சர்வதேச தரத்துடன் - அடிப்படை கட்டமைப்புகளோடு சீன அரசே இம்மண்டலங்களை உருவாக்குகிறது. நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது; இதில் எந்த தனியாரும் உரிமை கொண்டாட முடியாது. இத்தகைய மண்டலங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக சீனாவின் மற்ற பகுதிகளுக்கு இணையாக இங்கே வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இத்தோடு நில்லாமல், இத்தகைய மண்டலங்களை உருவாக்க நிலங்களை வழங்கிய மக்களை இதில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டுள்ளது. அரசுக்கு வரும் இலாபத்தில் உரிய விகிதத்தை நிலம் வழங்கிய அம்மக்களுக்கு சீன அரசு வழங்கி விடுகிறது. அத்தோடு அவர்களுக்கான வேலைவாய்ப்பும் திறமைக்கு ஏற்ப இத்தகைய நிறுவனங்களுக்கு உள்ளே வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் ஒரு தொழிலாளியை நீக்க நினைத்தால் அத்தகைய தொழிலாளிக்கு மாற்று வேலைவாய்ப்பை அந்நிறுவனங்களே ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள், மருத்துவம், இன்சூரன்° உள்ளிட்ட சமூக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சீன அரசின் ஆரோக்கியமான செயல்பாட்டின் மூலம் இன்றைக்கு இத்தகைய பொருளாதார மண்டலங்களில் 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சிப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மேற்கு வங்கத்தில் SEZஇடது முன்னணி ஆட்சி நடைபெறும் மேற்குவங்க மாநிலத்திலும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட மாநில அரசு நான்கு இடங்களில் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக இந்தோனேசியாவில் உள்ள சலீம் குழுமம் அமைக்கவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் டாடா குழுமம் அமைக்கவுள்ள மண்டலங்களை குறிப்பிடலாம். இத்தகைய மண்டலங்களை பின்தங்கியிருக்கக்கூடிய வடக்கு பர்கானா 24 போன்ற மாவட்டங்களில்தான் அமைக்க அனுமதிக்கின்றனர். இத்தகைய மண்டலங்களை அமைப்பதற்காக வெறும் விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலங்களை மட்டுமே அரசு கையகப்படுத்துகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மிகக் குறைந்த அளவில் மட்டும் ஒரு போகம் விளையக்கூடிய நிலங்களை கையகப்படுத்துகின்றனர். இவ்வாறு பெறப்படும் நிலங்களுக்கு சந்தை விலையில் 152 சதவீதத்தை வழங்குகிறது. அந்த மக்களுக்கான மாற்று இடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. மற்றும் அவர்களுக்கான புனர்வாழ்வாதாரங்களுக்கான ஏற்பாடுகளையும் மேற்குவங்க அரசு செய்துக் கொடுக்கிறது.உருவாகி வரும் கிளர்ச்சிகள்சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அசுரத்தனத்தால் இந்திய கிராமப்புறங்கள் திவாலாகி வருவதையும், விவசாயிகள் நிற்கதிக்கு ஆளாவதையும் எதிர்த்து மும்பை, ஒரிசா போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சிமிக இயக்கங்கள் வலுப்பெற்று வருகின்றன. மற்றொரு புறம் இடதுசாரி அமைப்புகள் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் உருவாக்கத்தில் அரசு பல்வேறு மாற்றங்களை செய்திட வேண்டும் என்று குரலெழுப்பி வருவதோடு, நிலக்கொள்யையையும் தடுத்து நிறுத்த, சிறப்பு பொருளாதார சட்டத்தில் திருத்ததையும் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக, நிலம் கையகப்படுத்துவதற்கான வரையை தீர்மானிக்க வேண்டும். மேலும் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு மார்க்கெட் விலை மற்றும் SEZ அமைக்கப்பட்டதற்கு பின் ஏற்படும் விலை நிலவரத்திற்கு ஏற்ப விலையை கொடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் மட்டுமின்றி நிலமற்ற விவசாயத் தொழிலாளியையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். மற்றும் அவர்களுக்கான மாற்று இடம், கல்வி, சுகாதாம், சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் SEZ அமைக்கும் நிறுவனங்கள் நிலத்தை இழந்த மக்களை பங்குதாரர்களாக சேர்த்திட வேண்டும் என்பதோடு, இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு உட்பட, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசுக்குள் ஒரு அரசாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது மேலும் வரி விலக்கு மிக தாராளமாக வழங்கப்படுவதை பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியுள்ளனர்.மொத்தத்தில் உலகமயம் வழங்கிய நவீன காலனியாக செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிராக பெரும் திரள் கிளர்ச்சிகளை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதில் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.