March 17, 2009

சாதியற்றவர்கள்!

"சாதியற்றவர்கள்" யாராவது இருக்க முடியுமா? இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது தமிழக அரசு! இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் பிறப்பிலேயே சாதி திணிக்கப்பட்டுள்ளது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியர்கள் இந்த அடையாளத்தோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். அதேசமயம் இந்த சாதி இருவகையில் செயலாற்றுவதுதான் நமக்கு பிரச்சனை!


உயர்சாதி அடையாளத்தை சுமக்கும் மனிதர்களுக்கும், கடைநிலையில்-ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தை சுமக்கும் மனிதர்களும் இருவேறு மனநிலையில் பயணிக்க வேண்டிய நிலையே உள்ளது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சுரண்டுவது வர்க்கபேதம் என்றால், சாதிய கருத்தாக்கமே, அதிலும் உயர்சாதி கருத்தாக்கம் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை கருத்தியல் ரீதியாகவே ஒடுக்கி வருகிறது.


இது ஒருபுறம் என்றால், "நான் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன்தான்" இதுதான் என்னுடைய பாரம்பரியம், அடையாளம் என்று சொல்லும் அடித்தட்டு சமூக மக்களை அரசே அங்கீகரிக்க மறுக்கிறது. அதாவது, இவர்களது சாதியை அரசு ஏற்க மறுத்து அவர்களை "சாதியற்ற மனிதர்களாக" உலாவ விட்டிருக்கிறது. இதனால் எழும் பிரச்சனைகள் ஏராளம்! தமிழகம் இதில் முதலிடம் வருகிக்கிறது.


இந்தியாவில் எட்டு கோடி பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் நூற்றுக்கணக்கான இனப்பிரிவுகளாக, தனி அடையாளங்களோடு வாழ்ந்து வருகின்றனர். மலைப்பகுதிகளிலும், காடுகளிலும், குகைகளிலும் மட்டுமில்லாமல் பல்வேறு காரணங்களல் புலம்பெயர்ந்து நகரவாசிகளாக மாறி பெரு நகரங்களிலும் வசிக்கின்றனர். தமிழகத்தில், குருமன்ஸ், காட்டு நாயக்கன், இருளர், கோத்தர், ஆதியன், மலைக்குறவன், மலையாளி, படுகர், தோடர்... என்று 36 பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்களது பண்பாடு, சமயம் அனைத்தும் தனித்துவமானது. இந்த மக்களை இந்திய அரசு அங்கீகரித்து "பழங்குடியினர் பட்டியலில்" இணைத்துள்ளதோடு, இவர்களுக்கான இடஒதுக்கீட்டையும் மாநில விகிதாச்சாரத்திற்கு ஏற்ப உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் இவர்களுக்கு ஒரு சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.


பிரச்சனை என்னவென்றால், பழங்குடியினருக்கு என்று ஒதுக்கப்பட்ட பல்வேறு துறைகளில் அதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படாமலும், உயர் பதவிகளுக்கு உயர்த்தாமலும் "பேக்-லாக்" என்று சொல்லக்கூடிய முறையில் நிரப்பப்படாத காலியிடங்களாக பல நூறு பதவிகள் உள்ளன. உண்மையில் இதற்குரிய தகுதியான ஆட்கள் இல்லையா? என்றால் அதுதான் இல்லை! மேற்கண்ட பட்டியலில் உள்ள லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் தங்களது இனம் இதுதான் என்று உறுதி செய்தாலும் அரசு அவர்களை அங்கீகரிக்க மறுக்கிறது என்பதுதான் தற்போதைய பிரச்னையின் குவி மையம்.


அதாவது, முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரிவிலிருந்து வரும் குறிப்பிட்ட சாதி சார்ந்த மக்களுக்கு எந்தவிதமான கேள்வியும் இன்றி சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், பிறப்பிலேயே பழங்குடியினத்தை சார்ந்த மக்களுக்கும் மட்டும் "பழங்குடியினருக்கான" சான்றிதழை வழங்க மறுக்கிறது அரசு! அதாவது அவர்களது சாதியை அரசே ஏற்க மறுக்கிறது. இது இன்று, நேற்று நடைபெறும் நிகழ்வு அல்ல. பல 10 ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை அமுக்கப்பட்டு கிடக்கிறது.



ஒரு குழந்தை பிறந்தவுடன் பள்ளியில் சேர்ப்பது முதல் இறப்புச் சான்றிதழ் பெறுவதை வரை சாதியை தவறாமல் கேட்கும் இதே அரசுதான். பழங்குடி மக்களுக்கு அவர்களுக்கான சாதி சான்றிதழை கொடுக்க மறுக்கிறது. இது குறித்து பல தொடர் போராட்டங்களை அந்த பழங்குடியின மக்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் மாறியுள்ளது இப்பிரச்சனை!


உதாரணத்திற்கு குருமன் சாதியைச் சார்ந்த ஒரு குழந்தையை ப0ள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது பல பள்ளிக்கூடத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான சான்றிதழை பெற்றுவரும்படி நிர்ப்பந்திக்கின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் அது சப்-கலெக்டர் வரை சென்று பல மட்ட சோதனைகளை சந்தித்தபின்தான் கிடைக்கும். இதற்கு கிட்டத்தட்ட ஐந்து முதல் 10 வருடங்கள் கூட ஆகலாம்! அல்லது கிடைக்காமலே கூடப் போகலாம். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? மாணவர்கள் "தான்" இந்தச் சாதியைச் சார்ந்தவன்தான் என்றாலும்கூட அங்கிகரிக்காத நிலை பெரும் மனவேதனையை அளிக்கக்கூடியது. இதனால் குறிப்பாக 10ஆம் வகுப்பு செல்லும் போது இந்த இன மாணவர்கள் பெரும் சோதனையை சந்திக்க வேண்டியுள்ளது.


பழங்குடியினம் தவிர்த்து மற்ற சாதியினருக்கு எந்தவிதமான விசாரணைகளும், சோதனைகளும் இன்றி சாதி சான்றிதழ் கொடுக்கும் போது இவர்களுக்கு மட்டும் இவ்வாறு வழங்க மறுப்பதேன்! ஒரே விஷயம் "போலி சான்றிதழ்" பெற்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான்! அதாவது எங்கே தேவைக்கு அதிகமாக சான்றிதழ் வழங்கி விடப்போகிறோமோ என்ற அதிகார வர்க்க அச்சம்தான் காரணம்! வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத கையாலாகதத்தனம்தானே இன்றைக்கு வரை இடஒதுக்கீட்டுக்கு உயிர் கொடுத்து வைத்து, தங்களது அரசியலுக்கும் சாதூர்யமாக துணை புரிய வைத்துக் கொண்டுள்ளார்கள். சரி, நீங்கள் உண்மையானவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டுமா இல்லையா? இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்களுக்கான சான்றிதழ் கோரிய விண்ணப்ப மனுக்கள் தூங்கும் எரிமலைகளாய் குமுறிக்கொண்டுதானே இருக்கிறது!


அது மட்டுமல்ல; பழங்குடியினத்தை சார்ந்த ஒருவர் மத்திய அல்லது மாநில அரசுதுறைகளில் சேர்ந்து விட்டார் என்றால் அவர் படும் சோதனை அதைவிட கொடுமையானது. அதாவது திறமையுள்ள பழங்குடியினர் சற்று மேலே படித்து முன்னேறத் துடித்தால், இதைப் பிடிக்காத ஆதிக்க சாதியினர் (இங்கே இவர்களைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் மட்டுமல்ல தலித்துகளும்கூடத்தான்) இவர் பழங்குடியில்லை என்று ஒரு மொட்டை பெட்டிசன் போட்டால் போதும்! உடனே அவருக்கு மெமோ வழங்குவதோடு - அவர் பழங்குடிதானா? என்று கண்டறியும் விசாரணை துவங்கிவிடும். இதற்காகவே இந்த பழங்குடியினத்தை சார்ந்த பலரும் தங்களுக்கான உரிமைக் குரலைக் கூட உரக்க எழுப்ப முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டுள்ளனர் என்றால் இவர்களது உள்ளக் குமுறல் எப்படியிருக்கும்?
அதாவது ஒரு பழங்குடி குலத்தில் பிறந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இடம் பெயர்ந்து நகரத்திற்கு வந்து 30 - 40 வருடம் ஆகிவிட்டால் இயல்பிலேயே அவர்களது நடைமுறை பழக்கங்களும் கூட மாறிவிடும், அடுத்தடுத்து வரும் தலைமுறைக்கு தங்களது முன்னோர்களின் அடையாளம் கூட மறக்கப்படும் என்பது இயல்புதான். இந்த இடத்தில்தான் இவர்களுக்கு சோதனை வருகிறது. அதாவது ஒருவர் குருமன் பழங்குடி என்று வைத்துக் கொள்வோம் இவர் தன்னுடைய பூர்வீகத்தை நிரூபிப்பதற்கு எந்த மலையிலிருந்து தோன்றினார்... இவர்களது தலைமுறை தற்போது எங்கு உள்ளது. இவர்களது வழிபாட்டு முறை என்ன? குடும்ப உறவுகள் எப்படி உள்ளது. இவர்களுக்கு தலித் கட்டும் வழக்கம் உள்ளதா? அப்படியிருந்தால் எப்படிப்பட்ட தாலியை அணிகிறர்கள்? என்றெல்லாம் பல்வேறு உண்மைகளை கண்டறியும் நார்கோ அனலிசிஸ், பிரைன் மேப் சோதனைகளை எல்லாம் நடத்திவிட்டு இவர்கள் பழங்குடியினர் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்!

ஒரு பழங்குடியினருக்கு வழிபாட்டு முறையில் தலையில் தேங்காய் உடைக்கும் பழக்கம் உள்ளதாம்! தற்போது அதே பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவருக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் "தலையில் தேங்காய் உடைத்து காட்ட வேண்டும்" இல்லையென்றால் அவர் பழங்குடியிலி்லை என்று அறிவிக்கப்படும். இப்படித்தான் பல்வேறு சோதனைகள் உள்ளது.

இல்லையென்றால் தங்களுடைய மூதாதையர்களுடைய நூற்றாண்டு சான்றிதழ்கள், பத்திரங்கள், போன்ற அரசு ஆவணங்களை சமர்பிக்க வேண்டுமாம். தரையிலேயே கல்வியைப் பரப்பாத மத்திய அரசு மலையிலே பரப்பாத காலத்தில் வழந்த மக்களிடம் இதையெல்லாம் கேட்பது "காதில் பூ சுற்றும்" நடவடிக்கைதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.


இதனால் தமிழகத்தில் பல கிராமங்களில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி பதவிகளில் கூட சான்றிதழ் இல்லாத காரணத்தால் போட்டியிட முடியாத நிலையே பல்லாண்டுகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது என்றால் இவர்கள் உள்நாட்டிலேயே எப்படி அகதிகளாகவும் - ஒதுக்கப்பட்ட மனிதர்களாகவும் மாற்றப்பட்டுள்ளார்கள் என்று காணலாம். அதாவது அரசே பழங்குடியின மக்களையெல்லாம் சாதியற்ற மனிதர்களாக மாற்றிவிட்டது! சாதியற்ற மனிதர்கள் மட்டுமா? அரசியல் மற்றும் வாழ்வுரிமையற்ற நடைபிணங்களாகத்தானே ஆக்கியுள்ளது தமிழக அரசு!


இதுஒருபுறம் என்றால் மதவாதிகள் இவர்களை அணுகுவது மிக வித்தியாசமானது. இப்படித்தான் ஒரிசாவில் இயற்கையை வழிபட்ட "சர்ணா" என்ற பழங்குடியின மக்கள் தங்களது வாழ்வில் கல்வியறிவு முதல் விழிப்புணர்வுகளை கொண்டு வந்த கிருத்துவ மிஷனரிகள் மீது நம்பிக்கை வைத்து கிருத்துவத்திற்கு மதம் மாறினார்கள். ஆர்.எஸ்.எஸ். விடுமா? விடவில்லை; அதனால்தான் பழங்குடியின மக்களை ஆயிரக்கணக்கான மக்களை ஒரிசாவில் அடித்து, நொறுக்கி, வீடுகளை தீக்கிரையாக்கி துவம்சம் செய்தது. அது மட்டும? தற்போது இவர்களை தாய் மதம் திருப்புகிறார்களாம்! இதைத்தான் செய்து வந்தான் அந்த கொல்லப்பட்ட லட்சுமணானந்தா? எந்த தாய் மதம்! இந்து மதமாம்! இவர்களுக்கும் இந்துவுக்கும் என்னத் தொடர்பு - ராமருக்கும், சீதைக்கும், கிருஷ்ணனுக்கும், (முருகர் - விநாயகர் அங்கில்லை) இயற்கையை வழிபட்ட, வெறும் சூரியனை வழிபட்ட அந்த சர்ணா மக்களுக்கு என்னத் தொடர்பு? இவர்களைத்தான் தாய்மதம் திருப்பினார்களாம்! அதாவது, அதிகாரம் மற்றும் அடக்குமுறை மூலம் இந்து மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்தார்கள் இந்துத்துவவாதிகள்!


இன்னொரு பக்கத்தில் காட்டிலும், மலையிலும் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு அது சொந்தமில்லை என்று விரட்டப்பார்க்கிறது மத்திய அரசு. இப்படி பன்முகத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் சாதியற்றவர்கள்!


சுட்டிகளையும் நோக்கலாம்




6 comments:

மாசிலா said...

//உயர்சாதி அடையாளத்தை சுமக்கும் மனிதர்களுக்கும், கடைநிலையில்-ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தை சுமக்கும் மனிதர்களும் ...//
உயர்சாதி மக்கள் தங்கள் அடையாளத்தை சுமப்பவர்கள் அல்ல நண்பரே. அதை அனைவருக்கும் தெரியும்படி உயர தூக்கிப் பிடிப்பவர்கள்.

மற்றபடி சான்றிதழ் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும், அரசு நிர்வாகங்களின் மெத்தன போக்கினால் இழக்கப்படும் கால நேரங்களை தவிப்பதற்கும், மண்டையில் தேங்காய் உடைத்து சோதனை செய்வதை தவிர்ப்பதற்கும் நவீன கால விஞ்ஞான தொழில்நுட்ப மரபணு ஆராய்ச்சி முறைகளை பயண்படுத்தி சீறிய முறையில் தீர்வு காணலாமே.

ஆஹா நூதன சாதிகளே! இவைகள் இருந்தும் கொல்கின்றன, இல்லாமலும் கொல்கின்றன. என்னே அதன் அயகு!

கருத்தாழமிக்க அவசிமாக தெரிந்துகொள்ள வேண்டிய நிறைய புதிய செய்திகள் நிறைந்த அருமையான பதிவினை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே.

சந்திப்பு said...


உயர்சாதி மக்கள் தங்கள் அடையாளத்தை சுமப்பவர்கள் அல்ல நண்பரே. அதை அனைவருக்கும் தெரியும்படி உயர தூக்கிப் பிடிப்பவர்கள்


நன்றி மாசிலா. தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துத்தான் என்னுடையதும். இருப்பினும் இதனை சொல்லிய முறையில் பிழையேற்பட்டுள்ளது. நன்றி.

Anonymous said...

You have dealt with an important issue of people belonging to Scheduled Tribe community.It is an issue which ought to have captured the attention of the political parties but has failed to do so.In other words none of the political parties have addressed social seclusion of the tribal people living in plains.Left Parties have rightly addressed the issue of the tribal people still living in forests,their right over the forest land and other produces.And they have succeceded in bringing in Tribal Act during UPA regime.But the problems facing the tribals already driven out of their original habitates i.e.forests long back and living in plains have eluded the attention of the left parties also.Those people have been refused their identity by refusal of the community certificates.So they are left casteless in a society where caste is every thing. They have been refused education, jobs and place in modern society.They are also landless. Apart from these things some of the tribal castes are facing the wrath of the police on the pretext of "the dead act" Criminal Tribe Act.Every year lockup torture, rape of tribal women are being reported.I should appriciate you for having touched this in your blog.

vimalavidya said...

To my knowledge no organisations/unions/said to be working for the upliftment of ST said like you boldly>>>திறமையுள்ள பழங்குடியினர் சற்று மேலே படித்து முன்னேறத் துடித்தால், இதைப் பிடிக்காத ஆதிக்க சாதியினர் (இங்கே இவர்களைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் மட்டுமல்ல தலித்துகளும்கூடத்தான்) இவர் பழங்குடியில்லை என்று ஒரு மொட்டை பெட்டிசன் போட்டால் போதும்-good sprit you have writen the article.I understand more on ST issues from different angle-selvapriyan-chalakudy

சந்திப்பு said...

பழங்குடியின மக்கள் பிரச்சனைகளை பெரும்பான்மையான கட்சிகள் - அமைப்புகள் கண்டுகொள்வதேயில்லை என்ற உண்மையை சுட்டிக்காட்டிய நண்பர் செல்வப்பிரியனுக்கு நன்றிகள்.

சந்திப்பு said...

நன்றி சுப்புராம்

தாங்கள் சுட்டிக்காட்டியுள்ளது போல் புலம் பெயர்ந்து நகரவாசிகளாக மாறிப்போயுள்ள தரைவழிப் பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் ஏராளம். எனக்குத் தெரிந்து ஒரே குடும்பத்தைச் சார்ந்த - குலத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்திற்கு சான்றிதழ் கிடைத்து விட்டால், பின்னர் அதே குலத்தைச் சார்ந்த இன்னொரு சக குடும்பத்தினருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால், அந்த குடும்பத்திற்கும் தனக்கும் சொந்தம் உள்ளதாகக் கூட காட்டிக் கொள்ள முடியாத கொடுமையான நிலையிலேயே உள்ளனர். ஏன்? மாமனார் சொந்த மருமகனுக்குகூட சிபாரிசு செய்ய முடியாத நிலைதான் இவர்களிடையே நீடிக்கிறது. சரியான முறையில் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இவர்கள் பிரச்சனை தீவிரமாக சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டியுள்ளது. நன்றி நன்பரே!ஒ