Showing posts with label இந்துத்துவம். Show all posts
Showing posts with label இந்துத்துவம். Show all posts

March 02, 2009

மதவாதம்+ஏகாதிபத்தியம்=இலங்கை தமிழர்களுக்கான தீர்வு?

தமிழகத்தின் முதன்மை அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது இலங்கைத் தமிழர் பிரச்சனை. இதில் புலி ஆதரவு, புலி எதிர்ப்பு, ஈழ ஆதரவு, ஈழ எதிர்ப்பு, பயங்கரவாத ஆதரவு, பயங்கரவாத எதிர்ப்பு என்று மாறுபட்ட கோணத்தில் இயங்கும் தமிழகத்து சிற்றரசர்கள் வைகோ (மதிமுக), பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய கட்சி), தா.பாண்டியன் (சி.பி.ஐ.), தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), ச.ராமதாஸ் (பா.ம.க.), இல.கணேசன் (பா.ஜ.க.) என கூட்டுக் கலவையாக மாறி இலங்கைத் தமிழகர்களை பாதுகாப்பதற்கான ஏக பிரதிநிதித்துவம் பெற்றவர்களாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த ஹோதாவில் மகஇக போன்ற நக்சலிச அமைப்புகளும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள இனப் பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட தீர்வு கிடைக்குமா என்று அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஏங்கித் தவிக்கையில். தமிழகத்தின் மேற்கண்ட சிற்றரசர்கள் எந்தவிதமான கொள்கை - கோட்பாடு - தனித்துவமின்றி அம்மணமாக இந்தியாவில் உள்ள மக்களை கூறுபோட்டு பிணம் திண்ணி கழுகுகளாக கொத்தித் தின்னும் பாசிச இந்துத்துவ மதவெறியர்களோடு கைகோர்த்து இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காணப் புறப்பட்டது விந்தையிலும் விந்தை. இதற்கு இவர்கள் கூறும் ஒரே சமசரசம் தமிழர் என்ற அடையாளம் மட்டுமே!

மதிமுகவுக்கும், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கனவே இந்துத்துவாவோடு அரசியல் கூட்டுச் சேர்ந்தவர்கள்தான். இந்த இடத்தில் இவர்கள் வர்ணாசிரம தர்மம், பார்ப்பனீயம், தமிழின மீட்சி, பெரியாரின் மதவெறி எதிர்ப்பு கொள்கை என அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு தங்களுக்கான நாற்காலியைப் பிடிப்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தில் பங்கு வகிப்பதற்காகவும் கூட்டுச் சேர்ந்தவர்கள்தான்.
இதில் பழ.நெடுமாறன், தா.பாண்டியன் ஆகியோர் இந்துத்துவ எதிர்ப்பை தங்களது ரத்தத்தில் கலந்த ஒன்றாக பார்ப்பவர்கள். ஒருபோதும் இந்துத்துவத்தை அனுமதிக்க முடியாது என்று ஓயாது குரல் கொடுப்பவர்கள். ஆனால் கொள்கை அரசியலையெல்லாம் கைவிட்டு விட்டு தமிழன் என்ற ஒற்றை அடையாளத்திற்காக இல.கணேசனோடு கைகுலுக்கிக் கொண்டுள்ளது வேதனையானது - வேடிக்கையானது.

இதற்கும் மேல் இவர்கள் செய்த வேடிக்கையிலும் வேடிக்கை ஏகாதிபத்திய அமெரிக்க தூதரிடம் சென்று இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண மண்டியிட்டதுதான். உலக நாடுகளையும், உலக மக்களையும் கூறுபோடும் ஏகாதிபத்திய சக்திகள், நவநாகரீக உலகிலும் நாடுகளைப் பிடித்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் இந்த பினந்திண்ணி கழுகிடம் சென்று இலங்கை பிரச்சனைக்கு தீர்வு வேண்டி அமெரிக்க தூதரகம் சென்று மனுக் கொடுத்துள்ளனர்.

உண்மையில் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒரு பகுதியினர் கூட ஏகாதிபத்திய அமெரிக்காவை எதிர்த்து வீரச்சமர் புரிந்து வருகின்றனர். ஆனால், இந்த சிற்றரசர்களோ தமிழகத்து மக்களிடம் தங்கள் ஆதரவை விதைத்துக் கொள்வதற்காக இத்தகைய சமரசத்தில் ஈடுபடுவது கண்டு வேதனைபடுவதா? வெட்கித் தலை குனிவதா? இந்த மதவெறியர்களோடும் - ஏகாதிபத்தியவாதிகளோடும்தான் வினவு கும்பல் - மகஇக தங்களை இணைத்துக் கொண்டு கொள்கை குன்றாக வெளிப்படுத்திக் கொள்கிறது. இவர்கள் நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தத்தைக்கூட ஆதரித்தார்கள்.
இத்தகைய கொள்கையற்ற கூட்டுக்களால் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட உதவுமா?

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சதியாலும், இலங்கையில் உள்ள பேரினவாத மற்றும் சிற்றினவாத முதலாளித்துவ சக்திகளாலும் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட இந்த பகைமை இன்றைக்கு அப்பாவி இலங்கைத் தமிழர்களின் கழுத்துக்களில் கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறது. இனவாதமும், மதவாதமும் மக்களுக்கான வாதங்கள் அல்ல; அது மக்களுக்கு விரோதம் என்பதை தமிழக மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

October 17, 2008

ஜெயமோகனின் சாயம் வெளுத்துப் போச்சு!


அக்டோபர் 9, 2008 தேதியிட்டு "எனது இந்தியா" என்ற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் மூலம் தான் யார்? தனது கொள்கை என்ன? என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். குறிப்பாக சிறு பத்திரிகை, சிறுபான்மையினர், தலித்துக்கள், சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று அனைவர் மீதும் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

"நாய்க்கு நெல்பழ வாசனை" தெரியாது என்பார்கள் தமிழகத்தில். அதுபோலதான் இருக்கிறது இவரது கட்டுரையும். இந்தியாவை இவர் பார்ப்பது எல்லாம் இந்துத்துவ கண்ணாடி அணிந்து கொண்டுதான். அதற்கு இவரே கொடுத்துள்ள பெயர்தான், "இந்து ஞான மரபு". இணையத்திலும், வலைப்பதிவு உலகிலும், ஏன் அறிவுலகத்தினர் யாரும் "இந்து ஞான மரபு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வளவு ஏன் இந்த இந்து மரபு என்பது வெறும் "பார்ப்பனீய சனாதன" குப்பைதான் என்று அடித்து உரைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மேலும் இவர் உரைக்கக்கூடிய இந்த இந்து என்பதே பன்மைக்கு எதிரானதாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவும் செயல்படுவதுதான்.

சரி விசயத்திற்கு வருவோம். அவரது எனது இந்தியா கட்டுரையில் துவக்கத்திலேயே விழிப்புணர்வு என்ற பத்திரிகை மீது விழுந்து பிடுங்குவதோடு, அதனுடன் சேர்ந்த அனைத்து சிறு பத்திரிகைகளையும் தனது இந்துத்துவ பற்களைக் கொண்டு கிழித்து எடுக்கிறார். இந்த விழிப்புணர்வு பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைகள் குறித்து அவர் கூறுவதை இங்கே பாருங்கள். 

(அதன் பக்கங்கள் பெரும்பாலும் யாரென தெரியாதவர்களால் எழுதப்பட்டிருந்தன. அனேகமாக ஒருவரே எழுதியிருப்பாரோ என்று எண்ணவைக்கும் நடை.)

அதாவது ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் இவரைப் போன்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களால்தான் எழுத வேண்டும் என்பதுதான் இவர் வகுத்துள்ள சனாதன மனு நீதி - இதைத்தான் இவர் அடிக்கடி "இந்து ஞான மரபு" என்று பிதற்றுகிறார். அந்த பத்திரிகையில் வந்துள்ள கருத்தின் மீது விவாதம் செய்வதற்கு மாறாக, எழுத்தாளரையே முதலில் கூண்டுக்குள் எழுதுகிறார். அதாவது இதன் அர்த்தம் என்ன தெரியுமா? இவனெல்லாம் எழுத வந்துட்டானுங்க... இதுதான் மனுவின் உள்ளார்ந்த விஷம். அது மட்டுமல்ல இந்த எழுத்தாளர்கள் எல்லாம் கூலி எழுத்தாளார்களாம், அதுவும் அந்நிய நாட்டு நிதியைப் பெற்று எழுதுபவர்களாம். அது சரி இந்த அடையாளம் தெரியாத அனாமதேய எழுத்தாளர்கள் மட்டுமா?

அருந்ததிராய் முதல் அ. மார்க்ஸ் வரை அந்நிய நாட்டு நிதி பெற்று எழுதும் எழுத்தாளார்கள்தான் குற்றம் சாட்டுகின்றார். மேலும் இசுலாமிய இதழ்களாக வெளி வரும் சமரசம் முதல் அனைத்தும் தாலிபானிய அரசை விரும்புவதாகவும் அதனை அமைப்பதற்கே பாடுபடுவதாகவும் குற்றம் சாட்டுகிறார் இந்த மகா புனிதர். அது சரி ஜெயமோகனின் எனது இந்தியா எது என்று தெரிந்து கொள்ளலாமா? அது என்ன அகண்ட பாரதமா? இந்தியா என்ற ஒற்றைக் கோட்பாட்டை வடிவமைத்தவனே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள்தானே? அது மட்டுமா? இந்து என்ற அடையாளத்தையும் அவர்கள்தானே வழங்கினார்கள். இல்லையென்றால் சைவமாகவும், வைனவமாகவும், சமணமாகவும் அல்லவா இன்றைக்க மண்டையை பிளந்துக் கொண்டிருப்பார்கள் இந்த சனாதனவதிகள்.

நல்ல காலம் இந்த வலைப்பதிவு என்று கொண்டு வந்த தொழில்நுட்பம் கூட அவர்களது சதி என்று வாதிடாமல் விட்டு விட்டார் ஜெயமோகன். வலைப்பதிவு மூலமாக இன்றைக்கு பல புதிய நவீன எழுத்தாளார்கள் உருவாகி தேசத்திற்கும் - உலகிற்கும் சேவை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். இங்கே இவர்களைப் பார்ப்பது முகத்தையல்ல - மதத்தையல்ல - கருத்தைத்தான். இது கூட தெரியாத இந்த ரப்பர் மனிதர்களை என்ன வென்று சொல்லுவது?

மேலும் ஜெயமோகன் கூறுவதை கேளுங்கள்:

(இவை அனைத்துக்குமே பொதுவான ஒரு அம்சம் உண்டு. கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பு. இந்த நாடு முழுக்க முழுக்க அநீதி மீது கட்டப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் அநீதியால் இயக்கப்படுவதென்பதில் இவர்களுக்கு ஐயமே இல்லை.)

அதாவது, சிறுபத்திகையாளர்கள் எல்லாம் இந்திய எதிர்ப்பை மையமாகக் கொண்டே எழுதுகிறார்களாம்? அது சரி இந்திய எதிர்ப்பு என்றால் எது என்று சற்று விளக்கியிருக்கலாம். ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் எங்கள் இந்திய தாயின் கண்மணிகள் கற்பழிக்கப்படுகிறார்களே அதை இவர் தேச சேவை என்று போற்றுகிறாரா? குஜராத்தில் கர்ப்பணிகளையும் - குழந்தைகளையும் கருவருத்த மனித மாமிசவாதிகளையும் - சிறுபான்மையினரை நரவேட்டையாடிவர்களையும் தேசப் பிதாவாக சித்தரிக்கச் சொல்கிறாரா? இந்த நாட்டில் நடக்கும் மனிதனை மனிதன் வேட்டையாடும் இந்து இந்துத்துவ கொள்கைக்கு எதிராக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் ஒரே குரலில் எழுந்து நிற்கையில் வக்காலத்து வாங்கிக் கொண்டு வாதிட வந்திருக்கிறார் இந்த இந்துத்துவ மூகமூடி ஜெயமோகன்.

அடுத்து ஜெயமோகனி்ன் கவலை என்ன என்று பாருங்கள். அப்போது தெரியும் இந்த உண்மை சிகாமணியின் உடலுக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ ரகசியம்.

(சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன.)


சிறு பத்திரிகைகள் சிறுபான்மையினரையும், தலித்துக்களையும், பழங்குடிகளையும் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்கிறார்களாம்? இந்த கருத்துக்காக 

இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துக்கள் நாயினும் கீழாக நடத்தப்படுவது கண்டு எதுவும் பேசாத இந்த அதி மேதவி. அவர்களது வாழ்க்கைக்காக - சுய மரியாதைக்காக - மனிதனாக எங்களையும் அங்கீகரியுங்கள் என்ற கோரிக்கையோடு வயிற்றுப் பிழைப்பையும் கூட பாராது போராடுபவர்களைப் பார்த்து இந்த தேசத்திற்கு எதிராக கிளர்ந்து எழுமாறு தூண்டுகிறார்களாம். ஹரியானாவில் 5 தலித்துக்களை செத்துப் போன பசு மாட்டிற்காக அந்த தலித்துக்களின் உயிரை எடுத்தபோது இந்த ஜெயமோகனின் குரல் எங்கே ஒடுங்கிக் கிடந்தது? இதைச் செய்தது இந்துத்துவாதானே? கயர் லா;"சியில் என்ன நடந்தது? தாயும் - மகளும் - மகனும் கற்பழிக்கப்பட்டு கொன்று வீசி எரியப்பட்டார்களே? இந்த அநியாயம் யாரால் நடத்தப்பட்டது? இன்றும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலப்பிரபுத்து - இந்து சனாதனத்தால் உருவாக்கப்பட்டு ஆதிக்க கருத்தியல்தானே?, திண்ணியத்தில் மலத்தை திணித்தவனுக்கு எதிராக தீக்குரல் எழுப்பும் தலித் மக்களைப் பார்த்து - ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து இந்த தேசத்திற்கு எதிரானவர்கள் என்று பசப்பும் ஏ இந்துத்துவவாதியே உன்னுடைய எழுதுகோலை கீழே போடு... இனியும் எழுதுவதற்கு நீ அனுமதிக்கப்பட்டால் அது அநீதிக்குத்தான் துணை போகும்.....

பழங்குடி மக்களை இன்றைக்கு ஒரிசாவில் வேட்டையாடும் சக்தி எது? காட்டிலிருந்து விரட்டப்படும் பழங்குடிகள் எங்கே இருக்கிறார்கள்? சட்டீஸ்கரில் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பழங்குடிகள் விரட்டியக்கப்படுகிறார்களே அவரது குரல் ஓங்கி ஒலிப்பதால் உனக்கு எங்கே வலிக்கிறது? இவர்கள் கேள்வி எழுப்பக் கூடாது அவ்வாறு எழுப்பினால் அது இந்த தேசத்திற்கு எதிரானதா?

அருந்ததி ராய் காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று கட்ரைத் தீட்டியிருக்கிறார். அவ்வாறு கட்டுரை தீட்டக்கூடாதாம்! அதுதான் இவ்வளவு எரிச்சல் இந்த ஜெயமோகனுக்கு. இது குறித்து அவர் எழுதுவதைப் பாருங்கள்.

(மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளை கொன்று குவித்து அடித்து துரத்தியபின்னர்தான் அவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. காஷ்மீரிகள் தேடுவது எவ்வகையிலும் முற்போக்கான, மேலான ஒரு சமூக அமைப்பை அல்ல, மாறாக அவர்கள் தாலிபானிய அரசு ஒன்றை நாடுகிறார்கள். அவர்கள் இந்திய அரசை வெறுப்பது இது அடக்குமுறை அரசு என்பதனால் அல்ல, இது ஒரு தாலிபானிய இஸ்லாமிய அரசு அல்ல என்பதனாலேயே.)

காஷ்மீரி பண்டிட்டுக்கள் மண்ணின் மைந்தர்களாம்? அப்படியென்றால் அங்கே உள்ள முஸ்லீம்கள் எல்லாம் எங்கிருந்து வந்தவர்கள். இப்படிச் சொல்லி சொல்லித்தான் அந்த மக்களை அந்நியப்படுத்தினார்கள் மத்திய ஆட்சியாளர்கள். 370வது சட்டப் பிரிவு இருக்கக்கூடாது என்று ஓயாது குரல் கொடுக்கும் பா.ஜ.க. தனது ஆட்சிக் காலத்தில் காஷ்மீரை மேலும் அந்நியப்படுத்திது. மேலும் காஷ்மீர் மக்கள் விரும்புவது தாலிபானிய அரசைத்தானாம்? அந்த மக்கள் எந்த எதிர்பார்ப்போடு இந்தியாவில் இணைந்தார்கள் என்பதாவது தெரியுமா? இந்த அறிவு ஜீவிக்கு. காஷ்மீரியம் என்பது உயர்ந்த மதச்சார்பற்ற பண்பாடாக திகழ்ந்தது. அதில் விஷத்தை ஏற்றியவர்கள் அங்குள்ள இந்துத்துவ பண்டிட்டுக்கள்தான். அவர்கள் தாலிபாணிய அரசை விரும்புகிறார்கள் என்று பழியை சுமத்துவம் ஜெயமோகனின் இந்தியாவில் புஷ்யமித்திரனின் அரசு அமைய வேண்டும் என்று விரும்புவதைத்தான் இது மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறது.

அடுத்து அவர் இஸ்லாம் மீது பாய்வதை சற்று நோக்குங்கள் 

(காரணம் இஸ்லாம் என்பது அடிப்படையில் ஒரு தேசியகற்பிதம்– ஒரு மதமோ வாழ்க்கைமுறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காது. அந்த தேசிய கற்பிதங்களுக்குள் தனித்தேசியமாக தன்னை உணர்ந்து அவற்றை உள்ளிருந்து பிளக்கவே முயலும்.)

திராவிட இயக்கத்தவர்களுக்கும், பெரியாரியவாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கடவுள் மறுப்பு கொள்கை இருந்தாலும்கூட ஒரு மதம் குறித்து விமர்சிக்கும் போது அதன் பிற்போக்கு அம்சங்களை ஆதாரத்துடன் விமர்சிப்பதுதான் நாகரீகமாக கொண்டவர்கள். ஆனால் ஜெயமோகனின் எழுத்து இஸ்லாமின் அடிப்படையையே தகர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாக அமைகிறது. இந்த இஸ்லாமின் கோட்பாட்டால்தான் உலகம் முழுவதும் குண்டுகள் புதைக்கப்படுவதாக இவர் கதைக்கிறார். மேலும் அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காதாம். இவரது இந்துத்துவாதான் எல்லாக் கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் ஜனநாயக மரபாம்! இந்த நாட்டில் இந்தியா - பாகிஸ்தான் என்ற பிரிவினை உருவாக்குவதற்கே அடிப்படையாக இருந்தவர்களே இந்த இந்துத்துவாதிகள்தான். மேலும் இன்றைக்கும் நாட்டில் பதட்டத்தையும் - பிரிவினையையும் தூண்டிக் கொண்டிருக்கும் தத்துவம் ஜெயமோகனாயிசமே! இந்த பாசிச கொள்கைதான் அடிப்படை. இதன் அட்டூழியங்களுக்கு எதிராக சுண்டு விரலைக் கூட நீட்டாத இந்த பச்சிலம் பாலகர் இசுலாமின் மீது எறிந்து விழுவதன் நோக்கம் என்ன என்று புரிந்துக் கொள்ளக் கூடியதே.

இதற்கும் அடுத்து என்ன கூறுகிறார் என்று பாருங்கள்

(தாங்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளிலாவது பிற தேசியங்களுடன் ஒத்துப்போகவும் அதற்குக் கற்பிப்பதே இன்று அவசியம்.)

அதாவது எனது இந்தியா கட்டுரையில் இவர் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து புளங்காகிதம் அடைகிறார். அதனை கொ;"சி குலாவுகிறார். அதாவது இவரது ஜனநாயகம் என்பது சிறுபான்மையினர் அடங்கிக் கிடக்க வேண்டும். ஒடுங்கிக் கிடக்க வேண்டும் என்பதுதானாம்! ஆஹா இந்த இனிமேல் இதனை ஜெயமோகனாயிச ஜனநாயகம் என்றே அழைக்கலாம். இதுதான் இந்துத்துவ புத்தி! அதே சமயம் அது தத்துவ ரீதியாக சிறுபான்மையினராக இருந்துக் கொண்டு பெரும்பான்மை தலித்துக்களை ஒடுக்க நினைக்கும் என்பது ஒரு தர்க்க முரண். இந்த முரணியக்க விதியை ஏனோ தெரியவில்லை இந்த பாலகன் அறியவில்லை. இதுவும் அவரது ஜனநாயகத்தின் ஒரு பகுதியே!

மேலும் இந்த கொடிய விஷ சிந்தனையைக் கேளுங்கள் - ஜெயமோகன் கூறுகிறார்.

(எளிய லௌகீக வாழ்க்கையின் துயர்களில் துணைவரும்படி  இறைவனை தொழுவதற்காக ஒவ்வொரு முறைச் செல்லும்போதும் ஓர் இஸ்லாமிய நாட்டுக்காக போராளியாகும்படியான அறைகூவலை எதிர்கொள்கிறான் சாதாரண முஸ்லீம்.)

அதாவது தொழுகைக்கு செல்லும் முஸ்லீம்கள் எல்லாம் இஸ்லாமிய நாட்டுக்கான போராளியாகும்படி அறைகூவல் விடுக்கிறார்களாம்? இதைவிட விஷயத்தை வேறு யாரால் கொட்ட முடியும். இதைவிட வேறு யாரால் கொச்சைப்படுத்த முடியும். இந்துத்துவ ஷகாவுக்கு போகும் சாதாரண அப்பாவிகளை கொலையாளிகளாகவும் - பாசிஸ்ட்டுகளாகவும் உருவாக்கிக் கொண்டிருப்பவரின் அறிவுஜுவிச் சிந்தனையில் வேறு என்ன தோன்றும். நானும் இந்துதான் - பகவத் கீதையை படிக்கும் இந்துத்தான் என்று கூறிக் கொண்டே சனாதனத்தை கடைப்பிடித்த - அகிம்சைவாதியான மகாத்மாவை கொலை செய்த கோட்சேவிவின் குருக்களின் சிந்தனைக் கொத்துக்களை பயின்று வளர்ந்துள்ள இந்த இந்து ஞான மரபியலரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஜெயமோகனிடம் நேரடியாக ஒரு கேள்வியை எழுப்புகிறேன். தலித் மக்களை தீண்டத்தகாதவர்களா கோவிலுக்குள்ளே அனுமதிக்காத சனாதன குப்பையை கேள்வி கேட்க உன்னால் முடியுமா? அங்கே தினமும் என்ன வேதம் ஓதப்படுகிறது. இந்த தீண்டாமை வேதம்தானே!

மேலும் காஷ்மீர் குறித்த கட்டுரை எழுதிய அருந்ததி ராயை அவர் விமர்சிப்பதைப் பாருங்கள் - இவர்தான் தான் உயர்ந்த எழுத்தாளர் என்று டமாரம் அடித்துக் கொள்கிறார்.

(அடிப்படையான  வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்றுபெறும் அதீத முக்கியத்துவம் மிகமிக ஆச்சரியமானது.)


அருந்ததி ராய் குருவி மண்டையராம். ஒரு பெண் அறிவு ஜீவியாக வலம் வருவதை இந்த இந்துத்துவவாதியால் பொருத்துக் கொள்ள முடியுவில்லை. இந்துத்துவம் எப்போதும் பெண்களுக்கு எதிரானது தானே. இந்து ஞான மரபும் அப்படிப்பட்டதுதானே! அதனால்தான் சொல்கிறார் உலகளவில் ஒப்பற்ற எழுத்தாளராக திகழும் அருந்ததி ராயைப் பார்த்து குருவி மண்டையர் என்று? உன்னைப் பார்த்து என்ன சொல்லாம்! நீ ஏற்கனவே ஒரிஜீனல் பைத்தியக்காரன். இப்போது முழு பைத்தியக்காரனாகி விட்டாய் என்று யாராவது சொன்னால் அது எப்படி அபத்தமோ? அப்படித்தான் இதுவும் இருக்கிறது. எனக்கும் கூட அருந்ததி ராயின் பல கருத்துக்களோடு வித்தியாசம் உள்ளது. அதற்காக அவரது எழுத்துக்களை விமர்சனம் செய்யலாமே தவிர இப்படி ஜெமோகன் போல அவதூறு செய்வது ஜெயமோகனுக்கு அழகா!


அடுத்து அப்சல் குருவைப் பற்றி கூறுகிறார்:

(இந்தியப்பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டவர் அப்சல் குரு. அவரது வழக்கு இந்திய நீதிமன்றத்தின் வழக்கமான அனைத்துச் சம்பிரதாயங்களுடனும் படிப்படியாக நடத்தப்பட்டு மீண்டும் மீண்டும் மேல் முறையீட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது. அப்சல் குருவுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த இந்திய இதழாளர்கள் ஒட்டுமொத்த இந்திய நீதியமைப்பே முழுமையாகவே அநீதியானது, மதவெறி கொண்டது என்றார்கள். அந்த விசாரணையின் எந்தப் படியிலும் அப்சல்குருவுக்கு எளிய முறையீட்டுக்குக்கூட வழி தரப்படவில்லை என்றார்கள்.)

அப்சல் குருவுக்காக வாதாடியவர்கள் ஒட்டுமொத்த இந்திய நீதியமைப்பையே குற்றம் சுமத்துகிறார்கள் என்று ஜெயமோகன் குற்றம் சாட்டுகிறார். இங்கே இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அத்வானி அவர்கள் ஆட்சியிலிருந்த போது அதிலிருந்து விடுவித்துக் கொண்டார். இது எந்த நீதியின் அடிப்படை. பாபர் மசூதி இடிப்படிற்கு அடிப்படை தூண்டுகோலாக இருந்த முதல் குற்றவாளியே அத்வானிதான். 3000 இசுலாமியர்களை வேட்டையாடுவதற்கு அடிப்படையாக அமைந்தது இந்த பாபர் மசூதி இடிப்புதான். அப்சல் குருவுக்காக வாதாடும் இந்த இந்துத்துவ வேந்தன் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரின் உணர்வுகள் குறித்து - பட்ட வேதனைகள் குறித்து ஏதாவது எழுதினாரா? அப்சல் குரு சம்பந்தமாக எழுப்பப்பட்டுள்ள அடிப்படையான சந்தேகங்களுக்கு இதுவரை முழுமையான விடை இந்த ஜனநாயகத்தில் கிடைத்து விட்டதா? மொத்தத்தில் ஜெமோகனின் எனது இந்தியா இந்துத்துவ இந்தியாவே! அவரது குரல் இந்துத்துவ பாசிச குரலே!

ஜெயமோகன் தனது இந்துத்துவ வெறித்தனத்தின் உச்சிக்கே சென்று உளறுவதைப் பாருங்கள்

(இத்தனை வெறியூட்டல்களுக்குப் பின்னும் இங்குள்ள சராசரி இஸ்லாமியர் தங்கள் அன்றாடத்தொழில்களைச் செய்தும் பிற சமூகத்தவரிடம் வணிகத்தில் ஈடுபட்டும் ஒரு சமூக வாழ்க்கையை கடைப்பிடிப்பது.இந்திய சமூகம் இன்று அளிக்கும் வாய்ப்புகள் மூலம் மக்களில் பெரும்பகுதியினர் மெல்லமெல்ல நடுத்தரவற்கமாக உருவாகி வருகிறார்கள். இந்தியாவெங்கும் இந்த வளர்ச்சிப்போக்கைக் காணமுடிகிறது. இது ஒன்றுதான் இந்த வெறியூட்டல்களுக்கு எதிரான ஒரே சக்தியாக இருக்கிறது.)

அதாவது, இஸ்லாமியர்கள் வெறியூட்டல்களில் ஈடுபடுகிறார்களாம். அப்படியிருந்தும் அவர்களை இந்த சமூகம் அவர்களது அன்றாடத் தொழில்களைக் செய்ய அனுமதிப்பது ஆச்சரியமாக இருக்கிறதாம். பிற சமூகத்திடம் வணிகத்தில் ஈடுபடுவதும் - கடைப்பிடிக்கப்படுவதும் வியப்பளிக்கிறதாம். மேலும் அவர்கள் பொருளாதார ரீதியாக வளர்கிறார்களாம். இதுதான் அவர்களை வெறியூட்டல்களுக்கு எதிரான சக்தியாக இருக்கிறதாம். சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட சச்சார் கமிட்டி அறிக்கையை இந்த அறிவு படித்திருந்தாலும் - படிக்காததுபோல் பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார். அதில் இந்திய முஸ்லீம்களின் நிலை தலித்துக்களை விட சில இடங்களில் கீழாக இருக்கிறது. அவர்களது வாங்கும் சக்தி முதல் கல்வி நிலை - வாழ்நிலை அனைத்தும் கேள்விக்கு இடமாகி உள்ளது. அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வேலைவாய்ப்பில் தரப்படுவதில்லை. கல்வி நிலையத்தில் தரப்படுவதில்லை என்று உண்மையை உலகுக்கு உணர்த்தியது. உண்மை இப்படியிருக்க தனது இந்துத்துவ கோயபல்ஸ் பிரச்சாரத்தை கையாளுவதை ஜெயமோகன் தவிர்க்கவில்லை. இதுதான் அவரது பாரதீய சிந்தனை வளர்ச்சியின் சாரம்.

அடுத்து மேலும் ஒரு படி போய் வெறிக் கொண்டு கொக்கறிக்கிறார் ஜெயமோகன்

(ஆனால் இந்த நாட்டை விட மேலானதாக நீங்கள் சொல்லும் நாடு எது நண்பர்களே? பாகிஸ்தானா? தாலிபானின் ஆப்கானிஸ்தானா? சீனாவா? இதை அழித்து நீங்கள் உருவாக்க எண்ணும் நாடு எதைப்போன்றது?)

இந்திய முஸ்லீம்கள் இந்த நாட்டை விட மேலானதாக பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும், சீனாவைவும் கருதுவது போல ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறார். அதுசரி சீனாவை எப்படி முஸ்லீம்கள் விரும்புவார்கள் என்று ஜெயமோகனுக்கே வெளிச்சம். இப்படியெல்லாம் அவதூறுப் பிரச்சாரத்தை கிளப்பி சிறுபான்மை இந்திய மக்களை - இந்தியாவை தாயகமாக கொண்டவர்களை வெறுப்புடன் பார்க்கும் பார்வைக்கு இந்திய மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள். அவர்கள் ஒருபோதும் சவர்க்கர் சிந்தனையின் பக்கம் சென்றதில்லை. செல்லவும் மாட்டார்கள். 

இந்தியாவில் அரவாணிகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கிறார்களாம். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உயர்ந்த மாண்பாம். இதைவிட ஜனநாயகம் வேறு எங்காவது உண்டா என்ற தொனியில் கேள்வி எழுப்பும் போது இவரது ஜனநாயக உள்ளடக்க சிந்தனையில் எந்தக் குப்பைக் கூடையில் போடுவது என்றுத்தான் தெரியவில்லை. ஒருவேளை இவர் ஐரோப்பாவில் இருந்தால் அங்கே லெஸ்பியன்களுக்கு கூட சட்ட உரிமை வழங்குகிறார்கள் என்று புளங்காகிதம் அடைந்து புகழ்ந்து தள்ளியிருப்பார். கூடுதல் விஷயம் என்னவென்றால் இந்துத்துவவாதிகளில் பலபேர் லெஸ்பியன்கள் என்று கூறப்படுகிறது அது குறித்து ஏதாவது மேல் தகவல் இருந்தால் அதையும் வெளிப்படுத்துங்கள் ஜெயமோகன் சார்.


இறுதியாக எனது இந்தியா எப்படியிருக்கும் என்று அவர் கூறியிருப்பதைப் பார்ப்போம்.

(எனது இந்தியாவில் இந்துமரபும் பௌத்த சமண மரபுகளும் கிறித்தவ மரபும் இஸ்லாமிய மரபும் ஒவ்வொரு கணமும் உரையாடி தங்களை வளர்த்துக் கொண்டவாறிருக்கும்.)


முதலில் ஒரு விஷயம் இங்கே இந்து மரபு என ஒன்று இல்லவே இல்லை. இங்குள்ள பார்ப்பனீய மரபைத்தான் இவர்கள் இந்து மரபு என்று கூறுகிறார்கள். எனவே பார்ப்பனீய மரபு பெளத்த மரபை - சமண மரபுகளுடன் உரையாடி வளர்த்துக் கொண்டுள்ளதா? அது இஸ்லாமையும் - கிறித்துவத்தையும் சகிக்கிறதா? இது உண்மைதானா? இந்தியாவில் பிறந்த பெளத்தம் இன்றைக்கு சீனா - ஜப்பான் என்று இடம் மாறிப்போனதேன். பார்ப்பனீய சூழ்ச்சிகள்தானே. அந்த பார்ப்பனீய சூழ்ச்சியைத்தான் இவர் எனது இந்தியாவாக சித்தரிக்கிறார்.


எனவே ஜெயமோகனின் எனது இந்தியா என்பது இந்துத்துவ இந்தியாவே என்று வரையறுத்து முடிக்கலாம். நமது இந்தியா மதச்சார்பற்ற - ஜனநாயக - சோசலிசத்தை நோக்கி முன்னேறும் இந்தியாவாக இருக்கட்டும். நமது இந்தியாவில் ஜெயமோகனாயிசத்திற்கு இடமில்லை.

July 28, 2008

பயங்கரவாதத்தின் மூன்று முகங்கள்!


பெங்களுரைத் தொடர்ந்து அஹமதாபாத்திலும் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அடுத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு குறி வைத்திருப்பதாக பயங்கரவாதிகள் மிரட்டுகின்றனர். தமிழகத்தில் கூட திருநெல்வேலியில் ஒருவர் பிடிபட்டுள்ளார். இந்த பயங்கரவாதச் செயல்களுக்கு இந்திய முஜாஹீதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அவர்கள் கூறும் போது 1992ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று கூறுகின்றனர்.
பயங்கரவாதிகள் எந்தப் பெயரில் வந்தாலும் அது மக்களுக்கு எதிரானதே! குறிப்பாக சாதாரண - ஏழை எளிய உழைப்பாளி மக்கள்தான் இதுபோன்ற செயல்களால் உயிர் பலியாகின்றனர். அப்பாவி மக்களை இவ்வாறு கொல்வதன் மூலம் பயங்கரவாதிகள் எதைச் சாதிக்க விரும்புகின்றனர்? இசுலாமிய மத அடிப்படைவாதம் - குறிப்பாக ஜீகாதி - புனிதப் போர் என்ற பெயரில் மக்களைக் கொல்வதில் இன்பம் கான்பதை இசுலாமிய மதம் அனுமதிக்கிறதா என்பதுதான் சாதாரண மக்களின் கேள்வி? எந்த மதமும் இதனை அனுமதிக்காது! எனவே மத அடிப்படைவாதிகள் உள்நாட்டு - வெளிநாட்டு பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு நமது நாட்டின் ஒற்றுமையை துண்டாடுவதையே அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகும். இதற்கு மதச் சாயம் என்பது மிகவும் எளிதில் தீப் பிடிக்கும் மருந்தாகிறது அவ்வளவுதான்.
பயங்கரவாதம் எந்த முகத்தோடு வந்தாலும் அதனை நாம் முறியடிக் வேண்டும். அதனை வேறுடன் பிடுங்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம் - இது இந்து மத உணர்வை பயன்படுத்தி சுயநல அரசியல் ஆதாயம் அடையும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக கலகத்தை தூண்டி விட்டு படுகொலையை நிகழ்த்துகிறது. இந்துத்துவ பயங்கரவாத்தின் உச்ச கட்டம்தான் குஜராத் மோடித்துவ பாசிசம்தான். இந்த இந்துத்துவ பாசிசம் துவக்கி வைத்த பயங்கரவாத விளையாட்டு இந்தியாவை பல்வேறு வடிவங்களில் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முறியடிக் வேண்டிய பயங்கரவாதத்தில் முதன்மையானது பெரும்பான்மை இந்துத்துவ பயங்கரவாதமே!
அடுத்து, இந்த இந்துத்துவ பயங்கரவாதத்தை காரணமாகக் கூறிக் கொண்டு பழிக்கு பழி வாங்குவதாக புனிதப் போர் என்ற பெயரில் இந்திய மக்கள் மீது மறைமுகப் போரைத் - குண்டு வெடிப்பு கலாச்சரத்தை நிகழ்த்தும் இன்னொரு பாசிசம் இசுலாமிய மத அடிப்படைவாத பாசிசம்! குறிப்பாக சமீப காலத்தில் இந்த இசுலாமிய மக்கள் மதச்சார்பற்ற - ஜனநாயக சக்திகளுக்கு அணி திரள்வதற்கு மாறாக மத அடிப்படைவாத கண்ணோட்டம் என்ற அமைப்பின் பின்னால் அணி திரள்வதும் - அதனைத் தொடர்ந்து இந்த வாலிபர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டு இத்தயை வெட்கம் கெட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடச் செய்வதும் கோழைத்தனத்தின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம். இத்தகைய இசுலாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதத்தையும் நாம் உறுதியாக முறியடிக்க வேண்டும்.
அடுத்து உலகளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா செய்யும் அட்டூழியம். இந்த பயங்கரவாதிகள் பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் தற்போது ஈரானையும் குறி வைத்து செயல்பட்டு வருகின்றனர். ஆப்கானும் - ஈராக்கும் முழுமையாக கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏகாதிபத்திய பயங்கரவாதம் என்பது அனைத்து பயங்கரவாத்திற்கும் தலைமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கூட இந்துத்துவ - சங்பரிவார கும்பல் யாருடன் சுகமான கூட்டு வைத்துள்ளது இந்த ஏகாதிபத்திய அமெரிக்காவுடன்தான் அவர்கள் கூட்டு வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களைத்தான் அவர்கள் உற்ற நன்பர்களாக கருதுகிறார்கள். இத்ன் மூலம் இவர்களுக்கான பாடத்தை வழங்குவது அமெரிக்க பயங்கரவாதம்தான்.

மொத்தத்தில் இன்றைய இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய பயங்கரவாதம் ஆகியவற்றை உறுதியாக முறியடிக்க வேண்டும். இவைகள் ஒன்றுடன் ஒன்று மறைமுகமாகவும், நேரடியாகவும் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது சுயநல அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. எனவே ஜனநாயக சக்திகள் - இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போர்த் தொடுக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்திற்கு முழுமையான விடுதலை கிடைக்கும். மேலும் இந்த பயங்கரவாதம் என்பது தற்போதைய அரசியல் பிரச்சினைகளைக் கூட உணர்வு ரீதியாக பின்னுக்குத் தள்ளும் கருவியாக ஆளும் வர்க்கத்திற்கு பயன்படுகிறது. மக்கள் ரொட்டிக்கும், கூழுக்கும் ஆளாய்ப் பறக்கையில், விலை வாசி உயர்வு என்ற பிரச்சினையால் வதைபட்டு இருக்கையில், அணு சக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய மக்களின் கழுத்தில் பெரிய சுருக்கைப் போடும் மத்திய அரசுக்கு எதிரான போக்கை கண்டுக்கும் தருவாயில் இந்த பயங்கரவாம் நம்மை அச்சுறுத்துகிறது. எனவே பயங்கரவாதம் உழைக்கும் மக்களின் அடிப்படை எதிரி இதை அனுமதிக்கக் கூடாது! இதனை உறுதியாக முறியடிப்போம்!