September 11, 2008

யாருக்காக இந்த ஒப்பந்தம்

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் இந்திய ஆளும் வர்க்கமும் - அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளும் இணைந்து அதிவேகமாக செயலாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நமது ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் கண்ணில் மண்ணைத் தூவி அம்பலப்பட்டு விழிபிதுங்கி நின்ற காட்சிகள்தான் பிம்பமாய் நிழலாடுகிறது. 


இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் புஷ்ஷின் பதவிக் காலத்திற்குள்ளாக இதனை முடிப்பதற்கு அமெரிக்க ஆட்சியாளர்கள் சிரத்தை எடுத்துச் செயலாற்றுகின்றனர். இதற்கிடையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதாயமடையப்போவது யார்? என்ற கேள்வி எழாமல் இல்லை. இதற்கான விவாதம் இந்தியாவிலும் - அமெரிக்காவிலும் வெகுஜோராக இப்போதே தொடங்கி விட்டது. 


இடதுசாரி கட்சிகளும் - இதர ஜனநாயக சக்திகளும் இந்த ஒப்பந்தம் 1. இந்திய நாட்டின் சுயேச்சையான அயல்துறை கொள்கைக்கு வேட்டு வைக்கப்படுகிறது, 2. நேருவின் அணி சேரா கொள்கை என்ற கோட்பாடு பலியிடப்படுகிறது, 3. ஆசியாவில் அமெரிக்காவின் கேந்திர கூட்டாளியாக இந்தியாவை மாற்றும் நோக்கம் கொண்டது, 4. சுயேச்சையான அணு சக்தி கொள்கை கை கழுவப்படுகிறது. . . என்று அடுக்கடுக்காக வைத்த குற்றப் பத்திரத்திற்கு இதுவரை சரியான பதிலை வழங்காத ஐ.மு.கூ. அரசு கிளிப் பிள்ளைப் போல் ஒரே விஷயத்தை தொடர்ந்து கூறி வருகிறது. அது என்னவென்றால், ‘இந்தியாவை கடந்த 25 ஆண்டுக் காலமாக அணு சக்தி துறையில் உலகளவில் ஒதுக்கி வைத்ததிலிருந்து விலக்கு பெறுகிறது’ என்று பெருமையடித்துக் கொள்கிறது. 


இந்த விஷயத்தில் கூட, எதிர்காலத்தில் நாம் அமைக்கக்கூடிய அணு உலைகளுக்கு தடையில்லாமல் யுரேனிய எரிபொருள் மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் கிடைக்குமா? என்ற கேள்விக்கு இதுவரை உருப்படியான விடையில்லை என்பதே உண்மை நிலை. மேற்கண்ட விஷயங்கள் அப்படியே தொடரும் நிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல், “அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்க 1962 ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளது. இதன்படி நமது நாட்டைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தாராளமாக முதலீடு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார். 


அதாவது, இதுவரை அணுசக்தி துறையில் அரசுத் துறை மட்டுமே ஈடுபட்டு வந்தது என்ற கொள்கை கைகழுவப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்த ஒப்பந்தம் யாருடைய நலனிற்காக இவ்வளவு அவசர கதியோடு நிறைவேற்றப்படுகிறது என்பது வெளிச்சத்திற்கு வருகிறது. அதேபோல் வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் சமீபத்தில் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து கூறும் போது, இந்தியாவில் நிறுவப்படவுள்ள 40 அணு உலைகளுக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கிவிட்டதாகவும், இதன் மூலம் வரும் 15 ஆண்டுகளில் 40,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், இரண்டு லட்சம் கோடி ரூபாய் இத்துறையில் முதலீடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். 


அத்துடன் நிற்காமல் அணு சக்தி துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக்கல், யூ.எஸ்.யூ., வெஸ்ட்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்து இலவு காத்த கிளிபோல் காத்திருக்கின்றன. இதன் மூலம் தங்களது பங்கையும் உறுதிப்படுத்துவதற்கு இந்நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இது குறித்து இந்திய -– அமெரிக்க வர்த்தக கவுன்சில் தலைவர் ரோன் சுமர் கூறும்போது, 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு தோராயமாக 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் என்று கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் 2020 வாக்கில் 40,000 மெகாவாட் மின்சாரம் அணு சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேற்கண்ட நிறுவனங்கள் எதுவும் தற்போது அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளாக அணு உலைகள் எதுவும் கட்டியெழுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 1979 ஆம் ஆண்டு மூன்று மைல் தீவில் ஏற்பட்ட அணு விபத்தை அடுத்து புதிய அணு உலைகளை அமைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் ஆதர்சமாகத் திகழ்கிறது. மற்றொரு புறத்தில் அணு சக்தி தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளிடம்தான் பெருவாரியான அணு வர்த்தகம் நடைபெறும் என்று விவாதிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் அமெரிக்கா இந்த உடன்பாட்டிற்கு முன்நின்ற நாடு என்ற முறையில் அந்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்கினை உறுதி செய்வதற்கு முந்திக் கொண்டு வருகின்றனர். 


மேற்கண்ட பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார சூதாட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு ஏற்படும் இழப்புகளையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஒரு மெகாவாட் மின்சாரம் அணு சக்தி மூலம் உற்பத்தி செய்வதற்கு ரூ. 8 - 9 கோடி ஆகும். இதுவே நிலக்கரியின் மூலம் உற்பத்தி செய்வதாக இருந்தால் ரூ. 4 – 5 கோடி மட்டுமே. இதையே கே° மூலம் உற்பத்தி செய்வதாக இருந்தால் ரூ. 3 – 4 கோடி ஆக மட்டுமே இருக்கும். மேலும் அணு சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 3 – 5 வருடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் மற்ற முறையில் மின்சாரம் உற்பத்தி செய்ய 2 – 3 வருடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணு மின்சார விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 6.5 இருக்கும். மற்ற மரபுசார்ந்த துறை மூலம் உற்பத்தி செய்வதில் ரூ. 2- 3 வரை மட்டுமே இருக்கும். மின் கட்டணம் உயர்ந்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் சொல்லாமலே உயர்ந்து விடும் என்பது எளிய உண்மை. 


இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதாயம் அடையப்போவது பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களே பெருத்த இலாபமும், நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு பெருத்த நட்டமும் ஏற்பட்டு பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்டுள்ள இராணுவ ரீதியான உறவு; அதனால் ஏற்படும் வர்த்தகம் என்று தொடர் சங்கிலி போல் அமெரிக்காவின் தடுமாறும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் ஆயுதமாக இந்த ஒப்பந்தம் அச்சாணியாகியுள்ளது. இராணுவத்துறையில் இரண்டு டசன் “ஹார்புன் வகை ஏவுகணைகளை” வாங்குவதற்கு மட்டும் 170 மில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. 


மேலும் 126 சண்டையிடும் ஜெட்களை வாங்குவதற்கு 10 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவிற்கு இந்த உடன்பாட்டின் மூலம் மேலும் ஒரு கூடுதல் ஆதாயம் என்னவென்றால், ‘உலகின் வர்த்தக ரீதியான 40 சதவிகித எண்ணெய் பொருட்கள் இந்திய கடல்வழியில்தான் கொண்டுச் செல்லப்படுகிறது. குறிப்பாக செங்கடல் மற்றும் மலாய்க்கா ஸ்டிரேய்ட் என்று சொல்லக்கூடிய இடங்களில் நடைபெறும் கடற்கொள்ளை வியாபாரத்தை இதன் மூலம் தடுக்க முடியும். இதற்கான பாதுகாப்பையும் - ஒத்துழைப்பையும் இந்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று கருதுகிறது. மொத்தத்தில் இந்தியாவிற்கு இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் என்ன? என்ற கேள்விக்கு ஆட்சியாளர்களிடம் விடை கிடைக்குமா? அல்லது இந்த ஒப்பந்தமே இந்திய – அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக செய்துக் கொண்டதுதான் என்ற குற்றச்சாட்டையும் வழக்கம் போல் கண்டுக் கொள்ளாமல் விடுமா? என்பதே நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி!

3 comments:

Anonymous said...

George Fernando was opposing Koodankulam Project in early 90s. Now his party has voted for proposal that may bring 40 such projects to the country.

Anonymous said...

வெஸ்டிங்ஹவுஸ் சீனாவில் அணுமின் ஆலைகளை
நிறுவுகிறது. அது போல் இந்தியாவில்
நிறுவினால் உங்களுக்கு என்ன வந்தது.
சீனாவிலும்,ரஷ்யாவிலும்
அணு மின் உற்பத்தி இல்லையா?

கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்பு,கண்மூடித்தனமான முஸ்லீம் ஆதரவு என்பதாகிப் போன இடதுசாரிகளுக்கு தேர்தல்களில் ஆப்பு வைக்க வேண்டும்.

சந்திப்பு said...

இந்துத்துவ அனானி தேர்தல்களில் மக்கள் யாருக்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சீனாவில் குறிப்பிட்ட நிறுவனம் அணு உலைகளை நிறுவுகிறது என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு அதனை இந்தியாவிலும் அதரிக்க வேண்டும் என்ற உங்களது முட்டாள்தனமான முடிவுக்காக பரிதாபப்படுகிறேன். ஏதோ இந்த நேரத்தில் நீங்கள் சீன ஆதரவாளர் போலவும், நாங்கள் பெரிய அமெரிக்க எதிரி போலவும் சித்தரிக்க முயல்வதுதான் வேடிக்கையானது. அனானி இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் போல சீனாவும் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அது பா.ஜ.க. ஆதரிக்கும் அடிமைத்தனமான ஒப்பந்தம் போன்றது அல்ல. 13 ஆண்டு காலம் இதற்காக பெரிய விவாதம் நடத்தப்பட்டு பிறகு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவில் என்ன நிலைமை 2005 இல் துவக்கி 2008ல் முடிந்து விட்டது. வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இடைவெளி. அதுவும் மக்கள் மன்றத்தில் உண்மைகளை எல்லாம் மூடி மறைத்து விட்டு செயல்படும் காங்கிரசும் அதற்கு மறைமுகமாக வக்காலத்து வாங்கும் அமெரிக்க ஆதரவு இந்துத்துவ - சங்பரிவார சன்னியாசி சக்திகளும் இந்திய நாட்டை அடகு வைக்கும் பாதையை நோக்கி சென்று விட்டதுதான் இங்கே விவாதிக்கப்படவுள்ளது. மேலும் தற்போது அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு மெல்வதற்கு அவல் கிடைத்த கதைதான்....