
காவல்துறையின் அனுமதி பெற்று நடைபெற்றுள்ள இந்நிகழ்ச்சி துவங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு காவலர் கூட்டம் நடத்துபவர்களிடம் ‘நீங்கள் யாருடைய மனதும் புண்படாதவாறு பேசுங்கள்’ என்று சொல்லியுள்ளார். இந்த தகவல் எழுத்தாளரும், கவிஞருமான இரா.தெ. முத்துவுக்கு சொல்லப்பட்டது. அவர் மேடையில் ஏறி பேசும் போது, “இங்கே நாம் யாருடைய மனதும் புண்படாமல் பேச வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். யாருடைய மனதும் புண்பாடமல் எப்படி பேச முடியும். நாட்டில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை கூர்ந்து நோக்கும் யாராலும் இப்படி பேச முடியாது. குறிப்பாக ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதல் குறித்து பேசும் போது எப்படி மனது புண்படாமல் பேச முடியும்? இப்படித்தான் பேச வேண்டும் என்றால் சுதந்திர இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எதற்கு? மாற்றுக் கருத்துக்களை - கலைகளை எடுத்துச் சொல்லத்தானே இந்த உரிமைகள் என்று கூறிவிட்டு இங்கே ஒரு கலாச்சார காவலர் இருக்கிறார் அவர் யார் தெரியுமா? என்று கூட்டத்தினரைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள். “கூட்டத்தில் இருந்த பொது மக்கள் இராமகோபாலன்” என்று சொன்னதுதான் தாமதம்.
ஏற்கனவே இந்த கூட்டத்தில் கலவரத்தை நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்த இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பல் - 20க்கும் மேற்பட்டவர்கள் சகலவிதமான ஏற்பாடுகளுடன் முன்கூட்டியே எப்படி தாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்து செயல்படுத்தியுள்ளனர். இந்த கலாச்சார காவலரின் குண்டர் படை இப்படி பேசிய உடன் மேடைய நோக்கி பெரிய, பெரிய செங்கற்களை எரிந்ததோடு, கையில் கத்தி, இரும்பு பைப் மற்றும் செயின் என்று ஆயுதங்களால் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொது மக்களை தாக்கியதோடு, அங்கிருந்த சேர்களையும் தூக்கி எறிந்துள்ளனர். மேலும் இந்த கலாச்சார குண்டர்கள் ஒருவருக்கொருவர் அடையாளம் தெரிந்து கொள்ளும் முறையில் கையில் செந்நிற பட்டை அணிந்து கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதல் நடத்தும் போதே “இராமகோபாலன் வாழ்க”, “இந்து முன்னணி வாழ்க” என்று கோஷம் எழுப்பியவாறு இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் - குழந்தைகளுடன் கலந்து கொண்டுள்ளனர். யார் மீது தாக்குதல் தொடுக்கிறோம் என்று கூட எதையும் பார்க்காமல் பெண்கள் மீதும் - குழந்தைகள் மீதும் கூட கற்களை வீறியெறிந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு குழந்தை “தன்னுடைய கண்ணுக்கு எதிரே தன்னுடைய தந்தையை தாக்குவதை கண்ணுற்றபோது” அதன் அலறல் கல் நெஞ்சையும் கறைய வைக்கும் அளவில் இருந்தது. இந்த குழந்தையின் மனநிலை பாதிப்பு இந்த பாசிச வெறிபிடித்த நரமாமிச சக்திகளான இந்துத்துவ வெறியர்களுக்கு புரியுமா? அல்லது காவியுடையில் வேஷம் தரித்துக் கொண்டுள்ள மனிதகுல விரோதி இராமகோபாலனுக்குத்தான் தெரியுமா? மேலும், அதே பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு த.மு.எ.ச. நடத்திய ஒரு கலை நிகழ்ச்சியிலும் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த விவரம் அங்குள்ள காவல்துறைக்கும் தெரியும். அப்படியிருந்தும் காவல்துறையினர் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த நிலையிலேயே இருந்தனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ எதுவும் செய்யப்படவில்லை.
இந்த தாக்குதல் நடைபெறும் போது, அங்கிருந்த ஒரு பெண் ஒரு காவரைப் பார்த்து “இப்படி அநியாயம் பண்றாங்க நீங்க வேடிக்கை பார்க்கறீங்களே” என்று கேட்டபோது, நானும் மனிதன் தானே என்ற பதில்தான் வருகிறது. இந்த காவலர்கள்தான் நம்முடைய தமிழ் மக்களை காப்பாற்றப் போகிறார்களா? தேச சேவையின் போது மக்களை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்தாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையில்லாத இந்த காவலர்களால் நாட்டுக்கு என்ன பயன்? இதுபோன்ற காவலர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் காவல்துறைக்கும் - அங்குள்ள ஐ.எஸ். (காவல்துறை உளவுத்துறைக்கும்) சூழல் நிச்சயம் நன்றாக புரிந்திருக்கும். இருப்பினும் சட்டம் - ஒழுங்கை ஒரு பொதுக்கூட்டத்தில் அப்பட்டமாக மறுப்பதற்கும், தாக்குதல் தொடுப்பதற்கும் யார் கொடுத்த தைரியும்?
அண்ணாவின் நூற்றாண்டும், பெரியாரின் 130வது ஆண்டும் நடைபெறும் தருவாயில் இந்துத்துவ பாசிசவாதிகளின் இந்த கொடுங்கோல்தனத்தை பார்த்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன செய்யப்போகிறது? சங்பரிவாரத்திற்கு எதிராக அண்ணாவின் முழக்கம் என்ன ஆனது? பெரியாரின் பேச்சும், மூச்சும் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளதே எதனால்? எப்படி இந்த பாசிச விஷ விதை இந்த மண்ணில் முளைத்துள்ளது? இதற்கு இந்த தி.மு.க.வும் - திராவிட இயக்க சக்திகளும் பொறுப்பல்லவா? மேலும், அந்த பாசிச குண்டர்கள் ஒரு ஷட்டர் போட்ட கடைக்குள்ளே ஒளிந்துக் கொண்டிருந்த நிலையில் த.மு.எ.ச.வினர் காவல்துறையிடம் அந்த குண்டர்கள் - ரவுடிகள் இங்கேதான் ஒளிந்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறியபோது, நீங்கள் அமைதியாக இருங்கள் என்று சமாதானம் சொல்லிவிட்டு அவர்களை தப்ப விட்டுவிட்டனர். மொத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் உள்ள காவல்துறையே இந்துத்துவ கயவாளிகளோடு கூட்டு சேர்ந்து விட்டதா? என்ற எண்ணம்தான் மேலிடுகிறது.
மொத்தத்தில் இந்த சம்பவம் தொடர்பாக முறையான நீதிவிசாரணை செய்து உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், பொது மக்களை காக்கத்தவறிய சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீசார் யார்? யார் அங்கு பணியில் இருந்தார்களே அவர்கள் மீதும் துறைபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் போலீசாருக்கு பொது மக்களை காப்பது எப்படி என்ற சிந்தனையையாவது வளர்க்க வேண்டும்.
மொத்தத்தில் பெரியாரின் ஒரு நிகழ்ச்சியில் இந்துத்துவ கலாச்சார குண்டர்கள் தாக்குதல் நடத்தி விட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் நின்று விடும் என்ற பாசிஸ்ட்டுகளின் கனவை தூளாக்குவோம்! மாநிலம் முழுவதும் ஏராளமான பெரியார் நிகழ்ச்சிகளை நடத்தி இந்துத்துவ சக்திகளை - பாசிச வெறியர்களின் உண்மை முகத்தை தோலூரிப்போம்!

