July 17, 2008

சிங் இஸ் சிங்...சிங் இஸ் சிங்...


சிங் இஸ் சிங்...
சிங் இஸ் சிங்...
சிங் இஸ் சிங்...


இதுதான் தற்போது காங்கிரஸ் கட்சியின் புதிய இசை ஆல்பம். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியின் போது காங்கிரஸ் காரர்களால் இசைக்கப்பட்ட புதிய கீதம். இந்த வாசிப்பு யாருக்கானது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். ஜார்ஜ் புஷ் தன்னுடைய ஐ-பாடில் இதனை நிரந்தரமாக ரீ மேக் செய்து கேட்கிறாராம். அது மட்டும் அல்ல. அவரது மொபைல் ரிங்டோன் கூட சிங் இஸ் சிங்... சிங் இஸ் சிங்... என்றே ஒளிக்கிறதாம் அந்த அளவிற்கு மன்மோனாமிக்ஸ் வேலை செய்கிறது.



சரி இந்தக் கூட்டத்தில் முழங்கிய சோனியாவின் பேச்சை மகாராஷ்டிர விவசாயிகள் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். அப்படி என்ன பேசினார் என்று கேட்கிறீர்களா? ஒன்றும் இல்லை.



காங்கிரஸ் கட்சி விவசாயிகள் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்கிறார்களாம்!



அணு சக்தி ஒப்பந்தம் இந்த நாட்டிற்கு நலன் பயக்குமாம்! இதன் மூலம் சிறந்த தொழில்நுட்பங்களும், யுரேனியமும் கிடைக்குமாம்!



வெளியுறவுத் துறை சம்பந்தப்பட்ட கொள்கையில் யாருடனும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டார்களாம்!



எந்தக் கட்சியின் சான்றிதழும் காங்கிரசிற்கும் தேவையில்லையாம்!



இப்படி பல்வேறு முத்துக்களை உதிர்ந்துள்ளார் சோனியா! உண்மை என்ன என்பதை மகாராஷ்டிர மற்றும் ஆந்திர விவசாயிகளுக்கே தெரியும். கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பார்கள். ஆனால் சோனியா முழு பூசனியை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.



பத்திரிகையாளர் சாய்நாத் மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை குறித்து ஆராய்ந்து அதிர்ச்சிதரும் உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி கடந்த 10 ஆண்டு காலத்தில் 1,20,000 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இந்த உண்மையை அப்படியே மறைத்து விட்டு விவசாயிகளுக்கு தங்கள் அரசு நண்மை செய்வதாக கோயாபல்ஸ் பிரச்சாரத்தை கட்டவிழித்து விட்டுள்ளார் சோனியா! பா.ஜ.க. கடைப்பிடித்த அதே பொருளாதார கொள்கையை கடைப்பிடித்து விவசாயிகளை போட்டிப் போட்டு தற்கொலைப் பாதையில் தள்ளியதுதான் இந்த அரசின் சாதனை என கூறலாம்.



அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் என்ன நன்மை கிடைக்கும் என்று சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி அணு சக்தி ஒப்பந்தம் குறித்து அவர்களது கட்சி அணிகளுக்காக வெளியிட்ட பிரசும் ஒன்றில் குறிப்பிட்டுள்ளபடி 2020 வாக்கில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியுமாம்! அதாவது இது 7 முதல் 8 சதவி்கிதம் மட்டுமே மொத்த மின்சார உற்பத்தியில் அங்கம் வகிக்கும். இதற்காக நாம் செலவு செய்ய வேண்டிய தொகை எவ்வளவு என்பதை அந்தப் பிரசுரம் மறைத்து விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கும் மேல் நாம் கொட்டியழ வேண்டியிருக்கும். மேலும் அணு சக்தியின் மூலம் தயாரிக்கும் மின்சாரத்திற்கான யூனிட் ஒன்றுக்கு தற்போது நாம் கொடுக்கும் விலையை விட மூன்று மடங்கு அதிகம் இருக்கும் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு சோனியா சொல்லத் தயாரா? இந்த தொகைக்கு நீங்கள் என்ன மானியமா தரப்போகிறீர்கள்? அல்லது விலை உயர்ந்த இந்த மின்சாரத்தை விவசாயிகளுக்குத்தான் இலவசமாக தரப் போகிறீர்களா? இல்லையே! அதாவது இந்த அணு சக்தி மின்சாரத்தின் மூலம் கூடுதலாக இன்னும் ஒரு லட்சம் விவசாயிகளை பரலோகத்திற்கு அனுப்பலாம் இதுதான் காங்கிரஸ் மற்றும் சோனியாவின் மகத்தான திட்டம். அதைவிட முக்கியமான விசயம் என்ன தெரியுமா? அணு உலைகள் மேம்பாட்டில் அறிவே இல்லாத அமெரிக்காவிடம் இருந்து ஒதுக்கப்பட்ட உலைகளையெல்லாம் பெரிய விலை கொடுத்து வாங்கப் போகிறோம். இதுதான் இவர்கள் புதிய தொழில்நுட்பம் என்று கூறுகிறார்கள்.



சரி வாதத்திற்காக நம்முடைய இந்திய நாட்டில் தற்போது தோரியத்தின் மூலம் அணு சக்தியை பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. பாஸ்ட் பிரீடர் தொழில்நுட்பத்தில் நாம்தான் முன்னணியில் இருக்கிறோம். அமெரிக்கா நம்மிடம் இதனை ரகசியமாக திருடக்கூடிய இடத்தில்தான் இருக்கிறது. இந்த நிலையில் நாம் எப்படி புதிய தொழில்நுட்பத்தை அவர்களிடம் இருந்து பெறப்போகிறோம் என்பதை சோனியா விளக்குவாரா? புதய தொழில்நுட்பம் என்ற வாதத்தை சோனியா வைப்பதன் மூலம் நம்முடைய அணு சக்தி தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக பாடுபட்ட அறிவியலாளர்களையும் அவமதிக்கிறார் சோனியா!



வெளியுறவுத்துறை கொள்கையில் யாருடனும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டோம் என்று பெருமையடித்துக் கொள்கிறார்!



இந்த விசயத்தில் நீங்கள் சமீபத்தில் நடந்துக் கொண்ட முறை என்ன? ஈரானுக்கு எதிராக ஐ.ஏ.இ.ஏ.வில் இரண்டு முறை வாக்களித்தீர்களே இது யாருடைய நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களித்தீர்கள்? அல்லது சொந்த நிலைபாடு என்றால் ஈரான் எந்த விதத்தில் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க காங்கிரஸ் தயாரா?



மேலும் ஈரான் மூலம் குழய் வழி எரிவாயுத் திட்டம் இந்தியா - பாகிஸ்தான் - ஈரான் திட்டம் தொங்கல் நிலையில்தானே உள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து குழாய் வழி எரிவாயுத் திட்டத்தை அமலாக்குங்கள் என்று நச்சரிக்கிறதே காங்கிரசின் நிலைபாடு என்ன? உண்மையில் ஈரானிலிருந்து நாம் இந்த எரிவாயுத் திட்டத்தை அமலாக்கினால் நாட்டு மக்களின் எரி சக்தி பிரச்சினைக்கு பெரியத் தீர்வு கிடைக்குமே! ஏன் இதை கைவிடுகிறீர்கள்? ஊசலாடுகிறீர்கள். இந்த துறையின் மந்திரியாக இருந்த மணி சங்கர் ஐய்யர் மாற்றப்பட்டாரே யாருடைய நிர்ப்பந்தத்தில்? இதுதானே உங்கள் அயலுவுறக் கொள்கை!



இந்த முதுகெலும்பில்லாத கொள்கைகளைத்தானே இடதுசாரிகள் விமர்சனம் செய்து வந்தார்கள். இதற்கெல்லாம் எந்தவிதமான உருப்படியான பதிலையும் சொல்லாமல் புறவழியாக இந்த உடன்பாட்டை நிறைவேற்றத் துடிக்கிறீர்களே இது யாருடைய நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் என்று நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!



இறுதியாக, எந்தக் கட்சி சான்றிதழும் தங்களுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். நல்ல விசயம்தான். அதுவரை இப்படி கூறியதற்காக சோனியாவை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனன்றல் இந்திய மக்களின் சான்றிதழ் கூட தங்களுக்கு தேவையில்லை என்று சொல்லாமல் விட்டாரே! அதற்காகத்தான். இவர்களுக்கென்ன ஜார்ஜ் புஷ்ஷீன் பாராட்டு இருந்தால் போதும், கொலைகாரன் சிபு சோரனின் பாராட்டு இருந்தால் போதும், அப்புறம் என்ன அம்பானிகளின் ஆசி இருக்கும் போது எந்தக் கட்சியின் பாராட்டும் இவர்களுக்கு தேவையில்லைதான்!

1 comment:

மீன்துள்ளியான் said...

நண்பரே எலலம் ஏற்கனவே முடிவு பண்ணியாச்சு ... இப்போ அதுக்கு ஆதரவு தெரிவிக்க ஏதாவது சொல்லணும் .. அதான் இப்படி உளறுகிறார்கள் காங்கிரசார்
இப்படி தான் பல வருடங்களுக்கு முன்பு பசுமை புரட்சி என்ற ஒன்றை கொண்டு வந்து நாட்டை பாழ் பண்ணினார்கள் .. இது பற்றி அறிய எனது பதிவுகளை படிக்கலாம் www.meenthulliyaan.blogspot.com
இப்ப 123 ஒப்பந்தம் .


அன்புடன்
மீன்துள்ளி செந்தில்