பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தன்னை இடதுசாரிகள் கொத்தடிமை போல நடத்த முயன்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுவாக அடிமையாகவோ அல்லது கொத்தடிமையாகவோ இருப்பவர்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி மீள்வது வழக்கம். ஆனால் மன்மோகன் என்ன செய்தார்?
தன்னை அடிமைப்படுத்த முயன்ற இடதுசாரிகளிடம் இருந்து விடுதலைப் பெறுவதற்காக அவர்களிடம் தங்களுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு கூறினாரா? அல்லது உங்கள் ஆதரவு வேண்டாம் என்று கூறினாரா? இல்லையே!
இடதுசாரிகள்தான் மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிமைத்தனத்தை கண்டு - அணு சக்தி என்ற பெயரால் இந்த நாட்டையும் - நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் துரோகத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்து ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
தற்போது இதனை தலை கீழாக பேசி கயிறு திரிக்கிறார் மன்மோகன். நாட்டு மக்களை சந்திக்காமல் புறவழியாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்கும் மன்மோகனுக்கு எப்படி நாட்டு மக்கள் மீது மரியாதையோ, விசுவாசமோ இருக்கும்? என்ற கேள்விதான் எழுகிறது!
மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இவர்களது சந்தர்ப்பவாத கூட்டும் - ஊழலும் நாட்டு மக்களை வெட்கித் தலைக் குனிய வைத்துள்ளது. நாட்டு மக்களின் நம்பிக்கையை மன்மோகன் இழந்து விட்டார்!

