உலகமயமாக்கல் பந்தயத்தில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தொடையை தட்டி பங்கேற்ற நாடு இந்தியா. அதன் ஏகப் பிரதிநிதிகளாக பிரதமர் மன்மோகன்சிங், ப. சிதம்பரம், திட்ட கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் செயலாற்றி வருகின்றனர்.
ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் கூட பொருளாதார வளர்ச்சியில் தட்டுத், தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் இந்தியா 8 சதவிகித வளர்ச்சியையும் தாண்டி நடைபோட்டது. பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 8 சதவிகித வளர்ச்சியே தங்களது நோக்கம் என்று மார்தட்டிக் கொண்டதையும் - இந்தியா ஒளிர்கிறது என்று புளகாங்கிதம் அடைந்ததையும் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதே பாதையில் நாங்களும் இன்னும் வேகமாகக் சென்று சீனாவை எட்டிப் பிடித்து விடுவோம் என்று அலறினர் மன்மோகன் சிங்கும் - சிதம்பரமும்.
அந்நிய முதலீட்டிற்கு தங்கள் கதவை மிக விசாலமாக திறந்து விட்டதோடு, குப்பை கூளங்களைக் கூட இறக்குமதி செய்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்; எதையும் விட்டு வைக்கப் போவதில்லை என்று இரு கரம் கூப்பி வரவேற்றனர். அதன் விளைவு என்ன? நாளுக்கு நாள் இராக்கெட்டின் உயரத்தை விட சென்செக்ஸ் விண்ணை தாண்டிச் சென்றது. 5000 புள்ளிகளைத் தாண்டியபோது நமது மகாத்மாக்களின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அப்புறம் என்ன 8000 புள்ளியைத் தாண்டி விட்டபோது உற்சாக பெரு வெள்ளத்தில் நீந்தினர்... பின்னர் 10,000 புள்ளியை சென்செக்ஸ் தொட்டபோது எங்கள் ஆட்சியின் சாதனையைப் பார்த்தீர்களா? நாங்கள்தான் உலகின் முன்னணியில் இருக்கிறோம் என்று ஆர்ப்பாட்டம் போட்டனர்.
இந்திய பொருளாதார ராக்கெட் செல்லும் வேகத்தை பார்த்த நமது பொருளாதார விஞ்ஞானிகள்கூட அய்யா கொஞ்சம் பிரேக் போட்டு போங்கள் இல்லையென்றால் அது கண்தெரியாத கிரகத்திற்குப் போய்விடும் என்று கூறியதையெல்லாம் வெறும் பிதற்றல் என்று ஒதுக்கித் தள்ளினர்; இந்த வேகம் தற்போது 15,000 புள்ளியைத் தொட்டு விட்டது. இந்த வளர்ச்சியை நிதியமைச்சர் சிதம்பரத்தாலேயேக் கூட நம்ப முடியவில்லை; அய்யோ இந்த ராக்கெட்டை நாம்தான் ஏவுகிறோமோ? அல்லது வேறு யாருடைய கட்டுப்பாட்டிலாவது இயங்குகிறதா என்று சின்ன சஞ்சலம் கூட அவருக்கு இருக்கலாம். இருந்தாலும் என்ன? இது குறித்து நாங்கள் மிகவும் உஷாரா செயல்படுகிறோம், பங்குச் சந்தையை கவணித்து வருகிறோம் என்றார் சிதம்பரம்.தற்போது ராக்கெட் கட்டுப்பாட்டு எல்லையை மீறி விட்டது!
விளைவு சென்செக்ஸ் தலை கீழாக வீழ்ந்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பங்குச் சந்தையை இரண்டு மணி நேரத்திற்கு நிறுத்தி வைத்தனர். இப்போது ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தை சரிந்து வருகிறது. மிக உயரமாக எழுப்பப்பட்ட கண்ணாடி மாளிகை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கி வருகிறது.
மத்திய அரசின் அரசியல் தடுமாற்றமும், முரட்டுக் காளைளும், கரடிகளுமே மார்க்கெட் சரிந்து விழுவதற்கு அடிப்படையான காரணம். இப்போது திருவாளர்கள் மன்மோகன்சிங் - சிதம்பரத்தின் கவலைகள் எல்லாம் இந்த கண்ணாடி மாளிகையை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்! அதற்காக ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க முற்படுகிறார்கள். அரசியல் சித்து விளையாட்டை துவக்கியிருக்கிறார்கள்! இடதுசாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றி மார்தட்டிக் கொள்வது; இன்னொன்று சரிந்துக் கொண்டிருக்கும் கண்ணாடி மாளிகைக்கு தற்காலிகமாக முட்டுக் கொடுப்பது!உண்மையில் இப்போது நடப்பதென்ன கடந்த மூன்று மாதத்தில் பண வீக்க விகிதம் 8 சதவிகிதத்திலிருந்து 11.42 சதவிதத்திற்கு எகிறி விட்டது. குறிப்பாக ஒரே மாதத்தில் பாய்ச்சல் வேகத்தில் எகிறி சென் செக்ஸ் ராக்கெட்டை விட நான் மிகவும் வேகமாக போகும் சக்தி படைத்தவன் என்று நிரூபித்து விட்டது பண வீக்கம்! இதன் விளைவு சாதாரண - ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டதோடு, விலைவாசி விண்ணுக்கு ஏறிக் கொண்டிருக்கிறது. வரலாறு காணாத பண வீக்க விகிதமாக இது மாறிவிடும் ஆபத்துள்ளது; பண வீக்கம் 13 சதவிகிதம் அளவிற்கு உயரும் என்று பொருளாதார நிபுனர்களால் ஆரூடம் கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துங்கள் என்று சிதம்பரத்தை பார்த்துக் கேட்டால்! எண்ணெய் விலை உயர்வால்தான் இப்படி நடக்கிறது; உலகம் முழுவதுமே பொருளாதார நெருக்கடி நிலவுகிறது என்று மழுப்புகிறார். விளைவு பணவீக்கம் இப்போது ஊளைச் சதையாக பலூன் போன்று ஊதி பெருகிக் கொண்டிருக்கிறது. பொருளாதார வல்லுனர்களோ 1929 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஏற்பட்டதைப் போன்று இப்போது ஏற்படுமா? என்றெல்லாம் கூட அச்சப்படுகின்றனர்.
இந்தப் பணவீக்கத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் உலக செல்வந்தர்கள் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், செல்வந்தர்களை உருவாக்குவதில் உலகளவில் முன்னணியில் இருப்பது இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. 22.7 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ளோம். குறிப்பாக 2007 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் புதிதாக 23,000 கோட்டீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள். கேட்டீஸ்வரர்கள் என்றால் அமெரிக்க அளவுகோள்படி ரூ. நான்கு கோடி வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம். இதில் அவர்களது வீட்டு மதிப்பு சேராது. ஏற்கனவே இந்தியாவில் ஒரு லட்சம் கோட்டீஸ்வரர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மறுபுறத்தில் ஒரு நாளைக்கு ரூ. 40க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 35 கோடி பேரும், ரூ. 80க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 70 கோடி பேரும் உள்ள நாட்டில்தான் இந்த ராக்கெட்வேக கோட்டீஸ்வரர்கள் உருவாகி வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில் பண வீக்கம் எனும் பூதத்தை கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன தெரியுமா? சி.ஆர்.ஆர். என்று சொல்லப்படும் வங்கிகளின் இருப்பி விகிதத்தை கூட்டுவது. இந்த ஒரே ஒரு வழிதான் பணவீக்கம் எனும் பூதத்தை கட்டுப்படுத்தும் மந்திரகோல் என்று பொருளாதார புலிகளான மன்மோகனும் - சிதம்பரமும் நாட்டு மக்களிடம் கூறுகின்றனர். சரி, இதன் மூலம் இவர்கள் கட்டுப்படுத்தும் தொகை எவ்வளவு என்றால் வெறும் 20,000 கோடி ரூபாய் மட்டும்தான். அதாவது நாட்டு மக்களிடம் கிட்டத்தட்ட 10 இலட்சம் கோடி ரூபாய் பணப் புழக்கம் இருப்பதாகவும் இதில் ஒரு 20,000 கோடியை கட்டுப்படுத்தினால் பண வீக்கம் என்ற பூதம் மாயமாய் மறைந்து விடும் என்று கதை கட்டுகிறார் சிதம்பரம்.
உண்மை என்ன? பண வீக்கம் என்ற பூதத்தின் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மந்திர சக்தி எது என்றால் இந்திய நாட்டில் போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் கருப்பு பணமும், ஆன் லைன் வர்த்தகமும் என்பதை மூடி மறைக்கின்றனர். இந்தியாவின் ஜி.டி.பி.யில் (மொத்த உற்பத்தியில்) 20 முதல் 60 சதவிகிதம் அளவிற்கு கருப்பு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் உருவாகிறது. 2006 ஆம் ஆண்டு உலக வங்கி கணக்குப் படி 10,2000 கோடி டாலர் கருப்பு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. இந்த கருப்பு பணச் சந்தையுடன் ஒப்பிடும் போது வங்கி இருப்பி விகிதத்தை கட்டுப்படுத்துவதாக கூறப்படும் தொகை கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் பேகும். மொத்தத்தில் இந்த கருப்பு பணம் தான் நம் நாட்டின் பங்கு மார்கெட்டில் புகுந்து விளையாடுவதற்கும், ஆன் லைன் வர்த்தகத்தக சூதாட்டத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
மேலும், மத்திய அரசாங்கம் உணவு பொருட்கள் உட்பட 25 அத்தியாவசிய பொருட்களை ஆன் - லைன் வர்த்தகத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இது வர்த்தக சூதாடிகளுக்கும், கள்ளச் சந்தை பதுக்கல் பேர்வழிகளுக்கும் வசதியாக மாறியுள்ளது. இதன் விளைவே இன்றைய விலை உயர்விற்கும் - பண வீக்கத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பெருகி வரும் விலை உயர்வை கட்டுப்படுத்த 25 பொருட்களை ஆன் - லைன் வர்த்தகத்திலிருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரியதோடு, 15 அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும்; இதன் மூலம் விலை உயர்விலிருந்து சாதாரண ஏழை எளிய மக்களை பாதுகாக்க முடியும் என்று கோரியது. ஆனால், மத்திய அரசோ செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்ற மவுனம் சாதித்து வருகிறது.
அதே போல் பெட்ரோலிய பொருட்களின் மீதான விலை உயர்வை பயன்படுத்திக் கொண்டு பெரும் இலாபம் ஈட்டிய ரிலையன்ஸ், கெயின்ஸ் உட்பட உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது வரி (றுனேகயடட கூயஒ) விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அத்துடன் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த 5 சதவிகித இறக்குமதி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீது அரசு விதிக்கும் 7.5 சதவிகித வரியை 2.5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கண்டுக் கொள்ளவே இல்லை. இடதுசாரிகள் முன்வைத்த மேற்கண்ட மாற்று நடவடிக்கைகள் எதனையும் செய்ய முன்வராமல் பண வீக்கம் ஏதோ தன்னால் ஏற்படுவது போன்ற மாயையை தோற்றுகிறது மத்திய அரசு. மொத்தத்தில் உலகமய ஆதரவு பொருளாதார புலிகளான மன்மோகனும் - சிதம்பரமும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறும் நடவடிக்கை தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போன்றே! எனவேதான் தற்போதைய பண வீக்கத்திற்கு ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையின் சீரழிவின் மறுபக்கமே என்று அறுதியிட்டுக் கூறலாம்.

