June 04, 2007

குஜ்ஜார் கோரிக்கையும் சங்பரிவார அரசியலும்!


வாஜ்பாய் ஆட்சியில் இந்தியா ஒளிர்கிறது என்று கதைத்தவர்களின் காதை திருகியிருக்கிறது குஜ்ஜார் மக்களின் போராட்டம்.

பா.ஜ.க. ஆட்யில் இருக்கும் ராஜஸ்தானில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வரும் குஜ்ஜார் மக்களின் இடஒதுக்கீட்டுப் போராட்டம் அதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சூடு 16 பேர் உயிர்பலி என்பதோடு நில்லாமல் தொடர் ஓட்டத்தின் அடுத்த கட்டமாக பழங்குடி மக்களான மீனா மக்கள் குஜ்ஜார் சமூகத்திற்கு எதிராக களத்தில் இறங்கியதும். இரண்டு சமூகமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் தொடரும் உயிர் பலி என 25க்கும் மேற்பட்டவர்கள் சங்பரிவாரின் இடஒதுக்கீட்டு அரசியலுக்கு பலியாகியுள்ளனர்.

குஜ்ஜார் சமூகம் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறது. ஏன் இந்த திடீர் கோரிக்கை!

எப்படி வந்தது இந்த திடீர் முழக்கம்! இதற்குள் ஒளிந்திருக்கும் அரசியல் என்ன? பா.ஜ.க. மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்பதற்கு மாறாக மத ரீதியான அரசியலை முதன்மைப்படுத்துவதும். மாநில நிலைமைக்கு ஏற்ப ஜாதிய அரசியலை வளப்படுத்துவதும்தான் இன்றைய பிரச்சினைக்கு அடிப்படை.


தாழ்த்தப்பட்ட. பழங்குடி. பிற்படுத்தப்பட்ட மற்றும் மற்றும் முற்படுத்தப்பட்ட மக்களை ஜாதி ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதே பா.ஜ.க.வின் நடைமுறை கொள்கை.

வி.பி. சிங் ஆட்சியின்போது மண்டல் கமிஷன் அமலாக்கப்பட்டபோது அதற்கு எதிராக மாணவர்களையும் உயர் ஜாதி இந்துக்களையும் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடியது. இந்துத்துவ கொள்கை என்பது உயர் ஜாதி மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது என்றாலும். அதனை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வரமுடியாது என்பதை சங்பரிவார் நன்கு உணர்ந்துள்ளது. அதன் விளைவாகத்தான் மாநிலத்திற்கு மாநிலம் பெரும்பான்மை ஜாதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையில் வாக்குவங்கி அரசியலை நடத்தி வருகிறது. பா.ஜ.க.!

ராஜஸ்தானில் உயர் ஜாதி பிரிவில் இருந்த ஜாட் ஜாதியை இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தது வாஜ்பாய் அரசு. பா.ஜ.க. உயர்ஜாதி மக்களுக்கு சலுகை அளிக்கும் நோக்குடனேயே இதனை துவக்கி வைத்தது. இதன் தொடர்ச்சிதான் இன்றைய குஜ்ஜார் போராட்டம்.

மேலும் ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தின் 11 சதவீத வாக்கின் மீதும் பா.ஜ.க.வுக்கு எப்போதும் ஒரு கண்ணிருக்கும். அதன் ஒரு பகுதியாகத்தான் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலின்போது குஜ்ஜார் சமூகத்தை பழங்குடிகள் பட்டியலில் இணைப்பதாக வாக்குறுதியளித்தது பா.ஜ.க. இடஒதுக்கீடு மற்றும் வாக்குவங்கி அரசியலின் இரண்டாவது இன்னிங்சை துவங்கி வைத்த சங்பரிவாரின் அரசியல் சந்தர்ப்பவாதமே இன்றைய உயிரிழப்புகளுக்கும் வன்முறை சம்பவங்களுக்கும் அடிப்படை காரணம்.


பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த குஜ்ஜார் சமூகம். ஜாட் சமூகத்தின் வருகையால் கல்வி - வேலைவாய்ப்பில் தங்களது இடம் பங்கிடப்படுவதால் ஏற்படும் நெருக்கடியை உணர்ந்தது. எனவே தங்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்குமாறு பலமான கோரிக்கைகளை வைக்கிறது. குஜ்ஜார் சமூகத்தை பழங்குடிகள் பட்டியலில் இணைத்தால் ஏற்கனவே பழங்குடிகள் பட்டியலில் உள்ள மீனா சமூகம் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே அவர்கள் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக குஜ்ஜார் மக்களுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளனர்.

மொத்தத்தில் இரண்டு சமூக மக்களும் அடிப்படையில் பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையிலேயே உள்ளனர் என்பது நிதர்சமான உண்மை. உழைக்கும் மக்களாக உள்ள இந்த இரு பிரிவினரும் மோதிக்கொள்வதன் மூலம் பிரச்சினை திசை திருப்பப்படுகிறது. இந்த இரு பிரிவினருக்கும் ஆதரவாக வசுந்தரா ராஜா சிந்தியா அமைச்சரவையில் இருக்கும் இரு பிரிவு அமைச்சர்களும் தத்தம் மக்களுக்காக. தாங்கள் வகிக்கும் பதவிகளை ராஜினாமா செய்வதாக மிரட்டிற் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க. தன்னை ஒரு புதிய கட்சியாக காட்டிக் கொள்ள என்னத்தான் பிரயத்தனம் செய்தாலும் அது வழக்கமான முதலாளித்துவ குட்டையில் உழலும் மட்டையாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது இடைக்கால தீர்வுதானேயொழிய நிரந்தர தீர்வு அல்ல. ஆனால் இடஒதுக்கீட்டை வைத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் இடஒதுக்கீட்டை வரப்பிரசாதம் போல சித்தரிப்பதும் அதனை வைத்து ஆடு - புலி ஆட்டம் ஆடுவதும் முதலாளித்துவ கட்சிகளுக்கு கைவந்த கலை.

மண்டல் தன்னுடைய அறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்ட ஒரு விஷயத்தை இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் மூடி மறைக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வினைப் போக்குவதற்கு அடிப்படையில் செய்ய வேண்டியது நிலச்சீர்திருத்தம் என மண்டல் தன்னுடைய அறிக்கையில் மிகவும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். இந்த அடிப்படை கோஷம் குறித்தெல்லாம் சங்பரிவாரத்திற்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவிதமான தெரளிவான சிந்தனையும் இல்லை.

மேலும் நிலச்சீர்திருத்தம் குறித்து மண்டல் கூறும் போது மேற்குவங்கத்திலும். கேரளத்திலும் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை வெகுவாக புகழ்ந்துரைத்துள்ளதோடு அதனை ஒரு முன்னுதாரணமிக்க நடவடிக்கையாக சித்தரிக்கிறார். இடதுசாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் இம்மாநிலங்களில் இதுபோன்ற ஜாதிக் கலவரங்களோ. இடஒதுக்கீட்டு ஓட்டு வேட்டையோ நடைபெறுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

மேலும் இந்திய சமூக அமைப்பு மிகவும் பின்தங்கயி அரை நிலப்பிரபுத்துவ அமைப்பு. இந்த அமைப்பில் நாடு முழுவதும் உடனடியாக நிலச்சீர்திருத்தத்தை மேற்கொள்வதும். அனைத்து மக்களுக்கும் தரமான இலவச அடிப்படை கல்வியை கொடுப்பதும்தான் மிக மிக முக்கியமானது. 2020ல் இந்தியா வல்லரசு என்று புலம்பும் அறிவுஜுவிகள் இந்தியாவில் 50 சதத்திற்கும் மேற்பட்ட மக்கள் கல்லாமையோடு இருப்பது குறித்து எந்தக் கவலையும் தெரிவிப்பதில்லை. அதற்காக உருப்படியான எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இறுதியாக ராஜஸ்தானில் உள்ள பா.ஜ.க. ஆட்சியாளர்கள் இரு சமூகத்திற்கு இடையில் மோதலை உருவாக்கி பிரச்சினையை திசை திருப்புவதை கைவிட்டு இரு சமூகத்து மக்கள் உட்பட குறிப்பாக போராட்டத்தில் குதிதுள்ள குஜ்ஜார் சமூக மக்களின் வாழ்நிலை மேம்பட உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதோடு. 16 உயிர்களை கொன்ற காவல்துறையினர் மீது நிர்வாக தீரியான நடவடிக்கையும். சட்டரீதியான நடவடிக்கையும் உடனடியாக எடுத்திட வேண்டும். வாழ்க்கைக்கான போராட்டம் வாழ்க்கையை பறிக்கும் போராட்டமாக மாற்றிட ஒருபோதும் ஆட்சியாளர்கள் அனுமதிக்க கூடாது.


குறிப்பாக அரசியல் கட்சிகள் மக்களை வெறும் ஓட்டுவங்கியாக கீழிறக்கிப் பார்க்கும் கீழ்த்தரமான நிலையை கைவிட வேண்டும். சமீபத்தில் ஆந்திராவில் சி.பி.எம். அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களையும் திரட்டி அனைவருக்கும் வீடு என்ற கோஷத்தை முன்வைத்து உபரியாக இருக்கும் அரசு நிலங்களை கையகப்படுத்தும் போராட்டத்தை வீராவேசத்தோடு நடத்தி வருகிறது. இத்தகைய போராட்டத்தில் அனைத்துப் பகுதி உழை:ககும் மக்களும் ஜாதி வித்தியாசமின்றி பெருந்திரளாக அணிதிரண்டு வருகின்றனர். இதுபோன்ற போராட்டங்கள் மட்டுமே மக்களின் அரசியல் உணர்வை விழிப்புணர்வு அடையச் செய்திடவும். ஆட்சியாளர்களை ஆட்டம் காணச் செய்திடவும் தேவை இதுபோன்ற போராட்டங்களே!

3 comments:

Anonymous said...

குஜராத் கலவர்த்தின் போது வேண்டுமென்றே தாமதமாக இராணுவத்தை அனுப்பி வைத்த விஷம பா.ஜ.க. இப்போது அவசரம் அவசரமாக மத்திய அரசிடம் போய் பிச்சை கேட்டு நிற்கிறது, வெட்கம் கெட்டவர்கள்

Anonymous said...

//சமீபத்தில் ஆந்திராவில் சி.பி.எம். அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களையும் திரட்டி அனைவருக்கும் வீடு என்ற கோஷத்தை முன்வைத்து உபரியாக இருக்கும் அரசு நிலங்களை கையகப்படுத்தும் போராட்டத்தை வீராவேசத்தோடு நடத்தி வருகிறது//

ஆந்திராவில் அனைவருக்கும் நிலம்.. மேற்கு வங்கத்தில் சலீம் அலிக்கும், டாடாவுக்கும் மட்டும் நிலம்.

பேஷ் பேஷ் ர்ர்ர்ர்ரொம்ப நன்னாருக்கு போங்கோ

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சந்திப்பு அய்யா.. கம்யூனிஸ்டுகள் கால் கழுவ தண்ணி இல்லை என்றால் கூட பாஜகவையும் சங்பரிவாரங்களையும் திட்டுவது சரியல்ல. தேசத்துக்கு நல்லது செய்யும் இயக்கங்களை தேசவிரோத சக்திகள் அச்சுறுத்துவது 2020ல் இந்தியா வல்லரசு என்ற கனவினை அடைய முட்டுக்கட்டை போடும்.