

முன்னேற்றப் பாதையில் இந்தியா!... வல்லரசு இந்தியா!... சூப்பர் பவர் இந்தியா!... என்று மதிப்புமிகு அப்துல்கலாம் போன்ற அறிவுஜீவிகளும், ஆட்சியின் உச்சத்தில் உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கும் மன்மோகன் போன்றவர்களும் உரக்க உரைத்தாலும் இந்தியாவைப் பற்றி இமோஜ் - சகிப்பின்மைக்கான மறு அடையாளமாக மாறிவருவதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் மகாராஷ்டிராவில் - ராஜ்தாக்கரேவின் - மகாராஷ்டிர நவநிர்வான் படையினர் வட இந்திய வேலையில்லாத இளை"ர்களிடம் தங்களது வீரவிளையாட்டுக்களை காட்டியுள்ளனர். இரயில்வே தேர்வு எழுத வந்த வட இந்திய இளை"ர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளதோடு. தேர்வு நடைபெற்ற முகாம்களுக்கே அந்த ஹீட்லரிச - நிர்மான்படை உள்ளே புகுந்து தேர்வுத் தாள்களை கிழித்து எரிந்ததோடு - அடையாளம் அறிந்து பீகார் - உத்திரப்பிரதேசம் - டெல்லி - வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்திருந்த வாலிபர்களை அடைத்து உதைத்துள்ளது இந்திய நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மகா அவமானம்.
இது ஏதோ திடீரென்று இன்றைக்கு ஏற்பட்ட சம்பவமா? 80களில் தென்னிந்தியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிட்ட பால்தாக்கரேவின் - சிவசேனா படையினர் கடும் தாக்குதல்களைத் தொடுத்தனர். அப்போது மண்ணின் மைந்தர் கோஷம் என்ற பெயரில் மகாராஷ்டிரம் - மகாராஷ்டிரர்களுக்கே என்றுச் சொல்லி மும்பையில் வேலைப்பார்த்த தமிழ் உயரதிகளின் பட்டியல் தயாரித்து - வெளியிட்டு வெறியைத் தூண்டி தாக்குதல் நடத்தியவர்களின் வழி வந்தவர்கள்தான் இன்றை ராஜ்தாக்கேரவின் நவநிர்மான் படையினர். அவர் தென்னிந்தியர்களைத் தாக்கினார் என்றால் இவர் வட இந்தியர்களைத் தாக்குகிறார்.
இந்த சம்பவத்தை இரயில்வே மந்திரி கடுமையாக கண்டித்துள்ளதோடு - ராஜ்தாக்கரேவை மென்டல் என்று வர்ணித்துள்ளார். பதிலுக்கு நாகரீகமற்றவர் என்று ராஜ்தாக்கரே விளித்துள்ளார் லாலுவைப் பார்த்து. தங்களது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ராஜ்தாக்கரேவின் கட்சி இந்த தேசத்திற்காக இளம் வயதில் தன்னுடைய உயிரை ஈந்த பகத்சிங் முதல் வங்கத்தின் மகா கவி ரவீந்திரநாத் உட்பட பலரது படங்களைப் போட்டுக் கொண்டே இந்த நரவேட்டையாடும் - செயல் சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. கறிக்கடையில் காந்தியின் படம் தொங்குவது போன்று இவர்களது இணையதளத்தில் அந்த மகா மனிதர்களின் படத்தை தங்களது அடையாளத்திற்கு பயன்படுத்துகிறது இந்த பாசிச படை.
பால்தாக்கரே - ராஜ்தாக்கரே என இந்த இனவாத அமைப்புடன் கை கோர்ப்பது யார்? பாரதம் பேசும் - இந்துத்துவவாதிகள்தான் என்பதை மறக்கக்கூடாது. பா.ஜ.க.வின் உற்ற தோழர்கள்தான் இந்த பாசிசவதிகள். இருவரது செயலும் ஒன்றுபட்டிருப்பதால்தான் இவர்கள் கூட்டாளியாக உள்ளனர். நான் ஏன் நாத்திகன் என்று உலகுக்கு உரைத்தவன் பகத்சிங். இந்த சமூகத்தை ஒரு சோசலிச சமூகமாக மாற்ற வேண்டும் என்ற வேட்கைக் கொண்ட பகத்சிங்கின் அடையாளத்தைப் பயன்படுத்தும் இவர்கள்தான் தங்களது இந்து மத அடையாளத்தையும் - மகாராஷ்டிர அடையாளத்திற்குள்ளும் இந்த புரட்சியாளர்களைக் கூட அடைத்திட முயலுகிறார்கள். தமிழகத்தில்கூட தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம. சிங்காரவேலரின் படத்தை பா.ஜ.க. போட்டுக் கொள்வதுதான் சந்தர்ப்பவாதத்தின் உச்சம். பாசிசவாதிகள் தங்களது செயலின் கொடூரத்தை மறைப்பதற்காகத்தான் இந்த புரட்சிவாதிகளை பயன்படுத்த முயலுகின்றனர்.
மேலும் தொடர்ந்து மகாராஷ்டிராவில் அராஜகத்தை நிகழ்த்தும் ராஜ்தாக்கரேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அலறுகிறது காங்கிரஸ் அரசு. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சிக் கட்டில் சொந்தமாக இருந்தால் போதும். யார் வேண்டும் என்றாலும் எதையும் பேசலாம் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர்கள் அல்லவா? அதனால்தான் ராஜ்தாக்கரேவை கைது செய்வதற்கு பயப்படுகிறார்கள்.
இந்திய நாட்டில் உயர்ந்து வரும் வேலையின்மைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய வாலிபர்களை பிரிக்கும் நோக்கம் கொண்ட பாசிஸ்ட்டுகள்தான் வாலிபர்களின் - தேசத்தின் முதல் எதிரிகள்... எனவே இந்த இந்துத்துவ - இனவெறிப்பிடித்த பாசிச கொள்கை வெறியர்களுக்கு எதிராக ஒற்றுமை எனும் கொடிய ஓங்கிப் பிடிப்போம்! இனவாதம் என்பது தேசியவாதம் அல்ல. அதற்குள்ள ஒளிந்துக் கொண்டிருப்பது அப்பட்டமான முதலாளித்துவ சுரண்டல்வாதமே என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.