May 15, 2009

சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்

இந்திய நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளை கடந்த பின்பும், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள், கொடுமைகள் தொடர்கின்றன. அத்துடன், புதிய, புதிய வடிவங்களில் தீண்டாமை வன் செயல்கள் தலையெடுத்து வருகின்றன. நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் எச்சமாய் தொடர்கின்ற சாதிய வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் இந்தியப் பெரு முதலாளித்துவம் முடிவுக்கு கொண்டுவராமல், அதனை நீரூற்றி பல்வேறு வடிவங்களில் பாதுகாத்து, வளர்த்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சாதி அரசியல் தனது கால்களை ஆழமாய் பதித்துள்ளது - வாக்கு வங்கியின் அட்சயப் பாத்திரமாக சாதி அடையாளம் கருதப்படுகிறது; எனவே, இவற்றை தங்களது சுயலாபத்திற்காக பேணி வளர்த்து வருகின்றனர் முதலாளித்துவ அரசியல் கட்சிகள். மறுபுறத்தில், கடந்த 3000 ஆண்டுகளாக சாதிக் கொடுமைகளை எதிர்த்தப் போராட்டங்கள் வலுவாக நடந்து வருவதையும் பார்க்க முடியும். பௌத்தம் தொடங்கி, ஜோதிபாபூலே, டாக்டர் அம்பேத்கர், நாராயணகுரு, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உட்பட சமூக சீர்திருத்த வாதிகளும், அரசியல் ரீதியாக கம்யூனிஸ்ட்டுகளும் சாதி ஒழிப்பில் தங்களை ஈடுபடுத்தி போராடி வந்திருக்கின்றனர். இருப்பினும் 'சாதி ஒழிப்பு' என்பது சமூகத்திலும், அரசியலிலும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும், அது முதன்மையான அஜண்டாவாக மாறவில்லை. அதேசமயம், சாதியை எவ்வாறு ஒழிப்பது? என்பது குறித்து பல போக்குகளைக் கொண்ட தத்துவார்த்த சிந்தனைகள் இம்மண்ணில் வேர்பிடித்துள்ளன. அது அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மத அடிப்படையிலும் கூட அமைந்துள்ளதை நம்மால் காண முடியும். குறிப்பாக, டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள் இதில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அதேபோல், தென்னகத்தில், சுயமரியாதை - சமதர்ம இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த பெரியாரின் திராவிட இயக்கச் சிந்தனைகள், கேரளத்தில் நாராயணகுரு, அய்யன்காளி போன்றோரின் சிந்தனைகள் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றன.

இப்பின்னணியில், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலரின் 'சாதி ஒழிப்பு' சிந்தனைகள் மிக முக்கியமான குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்துள்ளது. சாதி குறித்து இந்தியாவில் மார்க்சிய அடிப்படையில் ஒரு சரியான புரிதலை முதன் முதலில் ஏற்படுத்தியவர் சிங்காரவேலர். மகாத்மா காந்தி, அயோத்திதாச பண்டிதர், பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற சாதி ஒழிப்பு போராளிகள் செயல்பட்ட அதே காலகட்டத்தில் செயல்பட்ட சிங்காரவேலரின் சிந்தனைகள் 'சாதி ஒழிப்பில்' எவ்வாறு ஒரு அறிவியல் பார்வை கொண்டதாக இருந்தது என்பதும், சாதியம் ஏன் இந்தியாவில் இன்னும் வேறோடிக் கொண்டிருக்கிறது; அதன் இருப்புக்கான காரணம் என்ன? என்பதை மார்க்சியப் பார்வையில் அதனை அணுகுவதோடு, சாதி ஒழிப்புக்காக நாம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? என்பதையும் விஞ்ஞானக் கண்கொண்டு அணுகுவதை உணர முடியும். சீனப் புரட்சி நாயகன் மாவோ 'நூறு பூக்கள் பூக்கட்டும்' என்ற சிந்தனைக்கேற்ப மாற்றுச் சிந்தனையாய், சிவப்பு மலரின் நறுமணம் வீசும் சிந்தனையாய் சிங்காரவேலரின் சிந்தனைகள் மலர்ந்திருப்பதை காணலாம்.

திராவிட இயக்கம் முதற்கொண்டு தலித் இயக்கங்கள் வரை கம்யூனிஸ்ட்டுகள் மீது வைக்கக்கூடிய அவதூறுகளில் ஒன்றுதான், “கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கம் பேசுவார்கள், அவர்களுக்கு வர்ணம் தெரியாது”. அதாவது, “வர்க்க பேதம் பார்க்கும் கம்யூனிஸ்ட்டு களுக்கு சாதிய ஏற்றத்தாழ்வு தெரியாது” என்ற விஷமத்தனமான கருத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி தங்களது தத்துவப் பார்வையை விரித்துரைப்பார்கள். மறுபுறத்தில், கம்யூனிஸ்ட்டு களோ தலித் இயக்கங்களையும், திராவிட இயக்கங்களையும், சாதி ஒழிப்பு அமைப்புகளையும் நேச சக்தியாக அடையாளம் கண்டு, அவர்களோடு இணைந்து இயக்கம் கண்டு சாதி ஒழிப்பு என்கின்ற நிலப்பிரபுத்துவ காலத்திய கொடுமையான ஏற்றத்தாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க களத்தில் நின்று போராடிக் கொண்டிருப் பதை வரலாறு அறியும்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்திய சாதி அமைப்பு குறித்து ஓரிடத்தில் கூறும்போது, “உலகில் முதன் முதலில் சோசலிச புரட்சி நடந்தது ரஷ்யாவில்தான்; ஆனால், இது நடந்திருக்க வேண்டிய நாடு இந்தியா; சாதிய வேறுபாடுகளால் இப்புரட்சி இங்கே நடைபெறவில்லை” என்று கூறுவார்.

மேற்கண்ட கருத்தின் மூலம் சிங்காரவேலர் உணர்த்துவது என்ன? இந்திய புரட்சிக்கு ஒற்றுமையாய் ஒன்றிணைய வேண்டிய தொழிலாளிகள், விவசாயிகள், சிறு விவசாயிகள் வர்க்கம் சாதி ரீதியாக சிதறுண்டு போயிருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் கருவியாக சாதியத்தை முதலாளித்துவம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்திய தொழிலாளிகளின் ஒற்றுமைக்கு முதன்மையான எதிரியாய் சாதி இருக்கிறது என்ற கருத்தைத்தான் அவர் இவ்வாறு எடுத்துரைக்கிறார்.

1925 டிசம்பரில், கான்பூரில் நடைபெற்ற முதலாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு தலைமையேற்ற சிங்காரவேலர், தன்னுடைய தலைமையுரையில் இந்திய சமூகத்தில் நிலவும் கொடுமையான சாதிய சமூக அமைப்பு குறித்து மார்க்சிய பார்வையில் கீழ்க்கண்டவாறு அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்:


“தீண்டாமைப் பிரச்சனையை நாம் ஆராய்வோம். அப்பிரச்சனை குறித்து நம் கட்சியின் நிலை குறித்து என் கருத்தைக் கூறுகிறேன். கம்யூனிசக் கொள்கையைப் பார்க்குமிடத்து தீண்டாமைப் பிரச்சனை முற்றிலும் பொருளாதாரப் பிரச்சனை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகுப்பினர் ஆலயங்களிலும் அல்லது குளங்களிலும் அல்லது தெருக்களிலும் அனுமதிக்கப்படுகிறார்களா என்பது நமது சுயராஜ்ஜியப் போராட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சனையன்று. சுயராஜ்ஜியம் வரும்போது, இச்சமூக, மதத்தகுதியின்மைகள் தாமாகவே வீழ்ச்சியடையும். கம்யூனிஸ்ட்டு களுக்கு ஜாதியோ சமயக் கோட்பாடுகளோ கிடையா. இந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது சிறித்துவர்கள் அவைகளைப் பற்றி எத்தகைய சொந்தக் கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். கோடிக்கணக்கிலுள்ள இவ்விந்திய மக்களின் தீண்டாமைப் பிரச்சனை சிறப்பாகப் பிணைந்துள்ளது. அவர்களது பொருளாதாரச் சார்பு நிலை தீர்க்கப்பட்டவுடனேயே, தீண்டாமை என்ற சமூகக் கறை மறையத்தான் போகிறது. நிலவுடைமையில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வே கோடிக்கணக்கான அடக்கியொடுக்கப்பட்ட இவ்வகுப்பாரின் அடிமைத்தனத்திற்குத் தலையாய காரணமாகும். கோயில்கள், குளங்கள், சாலைகள் இவைகளைப் பயன்படுத்தும் உரிமை பெற்று விட்டாலே சமூகத்தில் இந்த அவல நிலையிலுள்ளவர்கள் வளமார்ந்த சகோதரர்களுக்கு நிகராக உயர முடியாது. தீண்டாமைப்பிரச்சனை என்பதே சிறப்பாக விவசாயப் பிரச்சனையாகும். இந்தப் பொருளாதாரச் சார்புடைமையிலிருந்து விடுபட்டாலொழிய, தீண்டாமையொழித்தலென்ற பேச்சு இழிவானதும் நேர்மையற்றதுமாகும். நம் சகோதரர்களை நேர்மையற்ற, இரக்கமற்ற முறையில் நடத்துவது குறித்துப் பகட்டாக, மாற்றம் வேண்டாதவன் பேசுகிறான். ஆனால் அவர்கள் பட்டினி, கடும் பசியால் துன்புறும் இல்லங்கள் பற்றி குறிப்பிடுவதை விழிப்புடன் தவிர்க்கிறான். சமூக அநீதிகளை எதிர்த்துப் பெரிதும் பேசுகின்ற இந்தியச் சீர்திருத்தக்காரன் நாட்டின் கோடிக்கணக்கான நமது விவசாயத் தொழிலாளர்களைப் பணக்காரர்கள் பொருளாதார இழிநிலை சிறைக்குள் வைத்திருப்பதைப் பற்றி வாளாவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியச் சீர்திருத்தக்காரனின் பணக்கார மனப்பான்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.”
(சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு வாழ்வும் சிந்தனையும், கே. முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியம், பக்கம்385, வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை-18)


மேற்கண்ட உரையில் இந்தியாவில் நிலவும் தீண்டாமைப் பிரச்சனைக்கு அடிப்படை காரணமாக இருப்பது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு நீடிப்பதும், குறிப்பாக நிலமற்ற கூலி அடிமைகளான தாழ்த்தப்பட்ட மக்கள், சொந்தக் காலில் நிற்பதற்கு விவசாய நிலங்கள் கிடைப்பதன் மூலம்தான் உண்மையான விடுதலை அவர்கள் வாழ்வில் கிட்டும். இதர உரிமைகள் எல்லாம் வெறும் பேச்சாகத்தான் இருக்கும் என்று ஆணித்தரமாக தனது வாதத்தை எடுத்துரைத்துள்ளார் சிங்காரவேலர்.


மேலும், இந்தியாவில் நீடித்து நிலைபெற்று புரையோடிப் போயிருக்கும் சாதிய கட்டுமானத்தின் அஸ்திவாரம் எவ்வளவு பலமானது என்பதை மிக எளிமையாக விளக்கியிருப்பார் சிங்காரவேலர். ஒரு கட்டிடத்தை உடைத்தெறிய வேண்டும் என்றால், அதன் அஸ்திவாரம் எவ்வளவு வலுவானது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதனை முதலில் கண்டறிந்தால்தான் சம்மட்டியைக் கொண்டு அந்தக் கட்டிடத்தை சிதைக்கலாமா? புல்டோசரைக் கொண்டு இடிக்கலாமா? அல்லது வெடிவைத்து வேரோடு தகர்க்கலாமா? என்பதை முடிவு செய்ய முடியும்.


“ஆயிரம் வருஷங்களாக ஜாதியில்லாத மகமதியர் நமது நாட்டை ஆண்டும், 200 வருஷமாக ஆங்கிலேயர் நமது நாட்டைக் கைப்பற்றியும், இன்றுவரை ஆண்டுவந்தும், ஜாதியொழியவில்லை. கடந்த 50 வருஷங்களாகச் சீர்திருத்தக்காரர்கள் ஜாதியை ஒழிக்கப் பிரயத்தனப்பட்டுவந்தும், ஜாதிக் கொடுமை குறைந்தபாடில்லை. காங்கிரஸ் சென்ற 10 வருஷமாக, தீண்டாமை ஒழிய வேண்டுமெனத் திட்டங்கள் போட்டும், எல்லாம் வாய்த்திட்டமாகவும், பேப்பர் திட்டமாகவுமே கிடக்கின்றன.”
அத்துடன், “ஜாதியொழியாமைக்கு முக்கியக் காரணம், ஜாதியைப் பாராமுகமாய்ப் பார்த்து வரும் அரசுகளென அறிக.”

(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி-1, பக்கம் 322-323, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


அதாவது, மேற்கண்ட பல்வேறு மத, தத்துவச் சிந்தனைகளைக் கொண்ட ஆட்சியாளர்கள் நீண்டகாலம் ஆட்சி புரிந்து வந்தாலும் ஏன் சாதியைத்தை தகர்க்க முடியவில்லை! நிலப்பிரபுத்துவ சமூகத்தைத் தாங்கிப் பிடித்த ஆட்சியளர்கள், அரசுகள் ஜாதியை ஒழித்திட எந்தவிதமான திட்டமும் இன்றி, நிலப்பிரபுத்துவ சுரண்டலின் காப்பாளர்களாக சேவகம் புரிந்ததுதான் அடிப்படைக் காரணம் என்று சிங்காரவேலர் அறுதியிட்டு தனது வாதத்தை முன்வைக்கிறார்.


தகர்க்க முடியாத எஃகுக் கோட்டையாக சாதியம் மாறியதற்கு சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அரசுகளும், அதற்கு துணை நிற்கும் மனுநீதி போன்ற தத்துவங்களும்தான். இத்தகைய எஃகுக் கோட்டையை தகர்ப்பதற்கான அஸ்திரம் என்ன? என்பது குறித்து சிங்காரவேலர் பின்னர் குறிப்பிடுவதை பார்க்கலாம்.


சாதியம் என்பது இந்தியாவில் மட்டும் தோன்றிய கருத்தியலா? உலகில் வேறு நாடுகளில் சாதியம் தோன்றவில்லையா? இக்கேள்விக்கு ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் சாதிய கட்டமைப்பு நீடித்ததையும் அவைகள் எவ்வாறு ஒழிக்கப்பட்டன என்பது குறித்தும் சிங்காரவேலர் கூறுவதைப் பாருங்கள்:


“ஜப்பான் தேசத்தில் ஒருவித தீண்டாதார் இருந்து வந்தார்கள். அவர்கள் பெயர் அயினோ (Aino). அவர்களும் நமது நாட்டு தீண்டாதாரை நடத்துவதுபோல் நடத்தப்பட்டு வந்தார்கள். அந்நாட்டில் சாமுரெ (Samurai) என்ற உயர்குலத்தோர் நமது நாட்டுப் பிராமணரைப் போல் அவ்வூர் தீண்டாதாரை நடத்தி வந்தனர். 60 வருஷத்திற்கு முந்தி ஜப்பானியருக்கு ஓர் புது உணர்ச்சி வந்ததை முன்னிட்டு சாமுரே அனைவரும் தங்கள் தன்னல வாழ்வை (Exclusivenes) விட்டு அயினோக்களைத் தங்கள் சமூக வாழ்க்கையில் சகல சமத்துவத்துடன் வாழ்ந்துவர அவர்களுடைய பொருளாதாரத் தாழ்வை நீக்க வேண்டிய வசதிகளைவுண்டு பண்ணியதின் காரணமாக இன்று, ஜப்பான் தேசம் வல்லரசுகளில் வொன்றாக மதிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கில நாட்டிலும், ஆங்கில பிரபுக்கள் தங்கள் தேச சாமான்ய ஜனங்களை, பண்டைக் காலத்தில், ஓர் விதமான தீண்டாதாரைப் போல் நடத்தி வந்தார்கள். ஆனால், சில நூற்றாண்டுகளாக செல்வந்தர் கிளர்ச்சியால், பல துறைகளிலும் விலக்கப்பட்டிருந்த சாமான்ய ஜனங்கள் சற்று பொருளாதார பெருக்கைப் பெறவும், ஆங்கில தீண்டாமையொழிந்து சாமான்ய மக்கள், ஏறக்குறைய பல சமத்துவங்களை அனுபவிக்க இடம் கொடுத்தது.
பிரஞ்சு தேசத்திலும், மற்ற உலக முழுமையுமே, பொருளாதார விடுதலையால், பாமர மக்கள் சிற்சில சுதந்திரங்களையு பெற நேர்ந்தது. மனித குலம் சுகமுடன் வாழ வேண்டுமானால், பல கோடிப் பல்லாயிர பாமர மக்களின் பொருளாதார தாழ்வு நீங்க யாவருக்கும் பொருளாதார சமத்துவம் வரவேண்டுமென அறிக. எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்.”

(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 61, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


உலகம் முழுவதிலும் சாதிய சமூக அமைப்பு இந்தியாவில் உள்ளது போல், வெவ்வேறு விதமாக இருந்துதான் வந்திருக்கின்றன. நிலப்பிரபுத்துவ சுரண்டல் அமைப்பின் ஆணி வேராக சாதியம் நிலைபெற்றிருக்கிறது. ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உட்பட்ட நாடுகளில் நடைபெற்ற முதலாளித்துவப் புரட்சி இவற்றிற்கு முடிவு கட்டியுள்ளது. சாதி சமூக அமைப்பு தகர்க்கப்பட்டிருக்கிறது - பொருளாதாரத் தாழ்வே இவற்றிற்கு அடிப்படை காரணியாக இருந்தது என்பதை சிங்காரவேலர் விளக்குகிறார்.


நால்வருண அமைப்பும் வர்க்கச் சிந்தனையும்


சாதியத்தின் ஆணி வேராக இருக்கும் “வர்ணாசிரமத்தை”, “மனு தர்மத்தை” வெறும் சாதிகளின் அடுக்குகளைக் கொண்ட கட்டுமானத்தை கொண்டதாக மட்டுமே பார்க்கும் போக்குதான் பெரும்பாலும் இருக்கிறது. இந்த சாதிய அடுக்கிற்குள் ஒன்றிணைந்து நிற்கக்கூடிய பொருளாதார ஏற்றத்தாழ்வை சமூக சீர்திருத்த சிந்தனையைக் கொண்ட சாதி ஒழிப்பு எதிர்ப்பாளர்கள் பார்க்க மறுப்பதையும் நடைமுறையில் காண முடிகிறது. இது அவர்களது வர்க்கத்தன்மையற்ற சாதி எதிர்ப்பு கொள்கையைத்தான் காட்டுகிறது. இது குறித்து சிங்காரவேலர் கூறும் போது,


“ஜாதியும் பொருளாதார நட்பிலேயே கலந்துள்ளது. நான்கு வருணத்தார்களாகிய பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்குள் ஏற்பட்ட வேற்றுமை பொருளாதாரத்தையொட்டியே ஜனித்திருக்க வேண்டும். எப்படியெனில் கடை வருணத்தாராகிய சூத்திரன் ஏழையாகவே இருந்து வந்திருக்கிறான். இன்றைக்கும் பிராமணர்கள், பெரும்பான்மை சூத்திரர்களைவிட பொருள் பெற்றிருப்பதை பார்க்கலாம். எந்தக் கிராமத்திலும் பிராமணர்கள்தான் செல்வத்திலும், செல்வாக்கிலும் மிகுந்தவர்கள்.
ஆதிவேத காலத்திலும், பிராமண ஜாதியர்கள் செல்வாக்கைப் பெற்றிருந்ததை ரிக் வேத சம்ஹீதைகளில், 'யானை மேல் பொன்னைக் கொண்டு போக வேதியன் பெற்றான்' எனவும் கூறியுள்ளது. மற்ற ஜாதியாலும் அடுத்தாற்போல் செல்வத்தைப் பெற்று இருத்தலால், அந்தந்த வர்ணத்தார் பொருள் படைத்துள்ள ஜாதிப் பதவிகளைப் பெற்றுள்ளார். கடைசியில் நின்ற சூத்திரன் பொருளற்றவனாதலால், கஷ்ட வேலை செய்து பிழைக்க நேரிட்டது. இவனுக்கும் கடையாயுள்ள பஞ்சமனோ (ஐந்தாம் ஜாதியான்) எந்தப் பொருளும் இல்லாத தோஷத்தால் கிராமத்திற்கு அப்புறம் கிடத்தப்பட்டிருக்கிறான்.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 388-389, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


இன்றைய சாதி எதிர்ப்பு ஆதரவாளர்கள் பெரும்பாலோர், சாதி எதிர்ப்பு உணர்வினை வெறும் பிராமண எதிர்ப்பு உணர்வாகவும், மனுநீதிக்கு எதிரான உணர்வாகப் பார்க்கும் சடங்குத்தனமானப் பார்வைதான் மிஞ்சுகிறது. ஆனால், அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வினை, சுரண்டல் மனப்பான்மையினை அம்பலப்படுத்தத் தவறுகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வினை உருவாக்கிய பொருளாதார உடைமைத் தனத்தை காணத்தவறுவது, ஒடுக்கப்பட்ட கடைநிலை மக்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களிடையே வர்க்கத்தன்மையற்ற உணர்ச்சிவயப் பட்ட சாதிப் பார்வைக் கொண்டதாக மாற்றும் போக்கே காணப்படுகிறது.


இதற்கு தமிழகத்தில், பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கத்தை நடத்திய நீதிக்கட்சியை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவர்களது நோக்கம் ஒட்டுமொத்த சாதியையும் ஒழிப்பது அல்ல; மாறாக, பார்ப்பனர்களின் அரசியல் - பொருளாதார செல்வாக்கில் தங்களுக்கு உரிய பங்கை நிலைநாட்டிக் கொள்வது தானே தவிர வேறு ஏதும் இல்லை. இதிலிருந்து மாறுபட்டதன்மை கொண்டது தான் சிங்காரவேலர் மற்றும் பெரியாரால் உருவாக்கிய சுயமரியாதை - சமதர்ம இயக்கம். இன்றைய திராவிட இயக்கங்கள் சுயமரியாதை - சமதமர்ம இயக்க பாரம்பரியத்தை கைகழுவி விட்டு, நீதிகட்சி பாரம்பரியத்தை சுவீகரித்துக் கொண்டதாக மட்டுமே உள்ளது. அதனால்தான் தமிழகத்தில் 40 ஆண்டுகால திராவிட இயக்கத் தலைமையிலான ஆட்சி கோலோச்சியிருந்தாலும் தீண்டாமை தணிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.


சாதி என்பது ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது, ஒன்றைவிட ஒன்று தாழ்ந்தது என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பல அடுக்குகளை உள்ளடக்கியதாகும். இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாக ஒட்டுமொத்த சாதிய சமூகத்தின் சுரண்டல் சுமைகளால் அமுக்கப்பட்டவர்களாக, அழுத்தப்பட்டவர்களக மாற்றப்பட்டுள்ளனர்.


அத்துடன் நிற்காமல், தீண்டாமை பிரச்சனை குறித்து நன்கு ஆராயும் சிங்காரவேலர் வர்க்கத்தன்மையற்ற பகட்டுத்தனமான தீண்டாமை ஒழிப்பு சீர்திருத்தவாதிகளின் சிந்தனை கூர் மழுங்கிப் போயுள்ளது குறித்து கீழ்க்கண்டவாறு நேரிடையாக கேள்வி எழுப்புகிறார்:


“தீண்டாமை, தீண்டாமை என்ற பூச்சாண்டியைக் காட்டிக் கொண்டு, தாழ்த்தப்பட்டிருக்கும் மக்களை அதனால் திருப்தி அடையும்படி ஏமாற்றப்போகின்றார்களா? தீண்டாமை மாத்திரம் நீங்கினால், தீண்டாமையால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு வறுமையும், பிணியும், அறியாமையும் நீங்கிவிடுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 13, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


மேற்கண்ட கேள்வியின் மூலம் தீண்டாமை ஒழிப்பின் அடிப்படை “பொருளாதார உரிமையே” அன்றி வேறொன்றில்லை என்று உறுதியாக நம்புகிறார். இந்த பொருளாதார உரிமையைப் பற்றி பேசாத எந்த தீண்டாமை ஒழிப்புச் சிந்தனையும் போகாத ஊருக்கு வழிகாட்டுவதாகவே இருக்கும்.


சாதியால் பலனடைவது யார்?


மேலும், கடவுள், மதம், சாதி போன்றவைகள் எல்லாம் கற்பனையானவை. இவைகள் அனைத்தும் பொருளற்ற தன்மை கொண்டது என்பதை சிங்காரவேலர் கீழ்க்கண்டவாறு உரைக்கிறார்:


“கடவுள் எனுஞ் சொல், மதமென்ற சொல், ஜாதியbன்ற சொல் முதலிய சொற்கள் கற்பனா சொற்களென அறிதல் வேண்டும். ஆதலின், மனிதன் பேசும் வன்மையால், இவ்வித கற்பனா சொற்களை சிருஷ்டி செய்து கொள்ள, துர்அதிர்ஷ்டம் பெற்றன். மற்ற மிருகாதிகள் பேசுந்திறமையைப் பெறாமையால், கற்பனை செய்ய முடியவில்லை.
ஆதலின் மிருவர்க்கங்கள் யாவும் கடவுள், ஜாதி, மத கற்பனைகள் இல்லாமல், பல கோடி வருஷங்களாக, சுகித்து வாழ்ந்து வருகின்றன. மனினோவெனில், பேசுந்திறமையை நல்வினியோகப்படுத்தி வந்ததோட, கற்பனைகளாலும், புராணக் கட்டுக்கதைகளாலும் தனக்கே தீங்கிழைத்துக் கொள்ள, கடவுளென்ற பதத்தையும், ஜாதி என்ற பதத்தையும், மதமென்ற பதத்தையும் சிருஷ்டித்துக் கொண்டான். இதுதான் இந்த சொற்களின் சரித்திரம்.”
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 58, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


அதாவது, கடவுள், மதம், சாதி போன்றவற்றால் மனிதனுக்கு தீங்குகள் ஏற்பட்டதும், சண்டை சச்சரவுகள் பெருகியதே ஒழிய வேறு நன்மைகள் ஏதும் ஏற்படவில்லை. எனவே இந்த பொருளற்ற சிந்தனைகளை மனிதகுலம் விட்டொழித்து நன்மை செய்ய வேண்டும் என்று அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறார். வேண்டுமானால், சாதியை தூக்கிப் பிடிக்கும் உயர் சாதிக்காரர் களுக்கு வேண்டுமானால் பொருளாதாயம் கிடைக்கலாம்; அதேபோல் மதத்தை வளர்த்து வரும் புரோகிதர்களுக்கும், மத குருமார்களுக்கு வேண்டுமானால் ஆதாயம் கிட்டலாம்; சுரண்டல் பேர்வழிகளுக்கு இது சுகமளிக்கலாம்; ஆனால், இதனைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு எந்தவொரு லாபமும் இல்லை என்று அறிவியல் பூர்வமாக விளக்குகிறார். அத்துடன் மேற்கண்ட சொற்கள் அனைத்தும் “பொருளற்ற” வெறுஞ் சொற்கள் என்றே விளக்குகிறார்.


சாதி, மதம் போன்றவற்றின் தொடர்ந்த நீட்டிப்பிற்கு அடிப்படை காரணிகளில் ஒன்று; “சொந்த வாழ்க்கையில் - இல்வாழ்வில் அதனைக் கடைப்பிடிப்பது” என்று விமர்சித்து அதன் வேரை தொட்டுக் காட்டுகிறார். ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், பூப்பெய்துதல், காதுகுத்துதல்... போன்று பல்வேறு நிகழ்வுகளில் சாதியமும், மதமும் தங்களுக்கு உரிய இடத்தை தக்க வைத்துக் கொள்கிறது. மனிதனின் இல்வாழ்க்கையில் அதனை இல்லாமல் போக்கும் வரை அதன் பிடியில் தளர்ச்சியை ஏற்படுத்திட இயலாது என்பதைத்தான் சிங்காரவேலர் சுட்டிக் காட்டுகிறார்.


காந்தியும் - தீண்டாமை ஒழிப்பும்


மற்றொரு இடத்தில், தீண்டாமை குறித்து பொருளுள்ள ஒரு கேள்வியை சிங்காரவேலர் எழுப்புகிறார். குறிப்பாக மகாத்மா காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை “அரிஜன்” என அழைத்தார். அதாவது, அரியின் ஜனங்கள் - கடவுளின் குழந்தைகள் என அழைத்தார். இருந்தாலும் என்ன மகாத்மா சொல்லிவிட்டதால் தீண்டாமை ஒழிந்து விட்டதா? இல்லையே! அதுமட்டுமா? சுதந்திரப்போராட்டக் காலத்தில் 'சமபந்தி போஜனம்' என்று போடுவார்கள். அதாவது அனைவருக்கும் சமமாக விருந்து படைப்பதைத்தான் இவ்வாறு கூறுகிறார்கள். இருந்தாலும் என்ன தீண்டாமை ஒழிந்து விட்டதா? அல்லது சமபந்தி போஜனத்தில் கலந்து கெண்டவர்கள்தான் அதனை விட்டு விட்டார்களா? இத்தகைய நடவடிக்கைகளில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகளாலேயே சாதியத்தை ஒழித்து விட்டிருக்கலாமே! ஏன் முடியவில்லை? இதைத்தான் சிங்காரவேலர் வானில் பெரும் இடியிடிப்பதுபோல் கேட்கிறார், “தீண்டாதானை தீண்டி விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா?” என்று கேள்வி எழுப்புவதோடு நின்று விடாமல், இவ்வளவு ஆண்டுகளாக இந்தத் தீண்டாமையால் வந்த வறுமையும், ஏழ்மையும் தலித்துக்களை தீண்டுவதால் ஒழிந்து விடுமா என்று கேட்பதில்தான் உண்மையான அர்த்தம் பொதிந்துள்ளது.


எனவே தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய பிரச்சனை என்பது வெறும் தீண்டாமை மட்டுமல்ல; அதனுடன் சேர்ந்துள்ள வறுமையும், ஏழ்மையும்தான் என்று தனது வர்க்கப் பார்வையை 1930களிலேயே சிங்காரவேலர் முன்வைத்துள்ளார். எனவே, தீண்டாமை ஒழிப்பு என்பது அவர்களது வறுமையையும், வாட்டத்தையும் போக்கும் முதல் படியிலிருந்து தொடங்க வேண்டும் என்பதைத்தான் சிங்காரவேலர் அப்படி கூறுகிறார். வர்க்க ஏற்றத்தாழ்வால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் வறிய நிலைக்கு, கடை நிலைக்கு, தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்று மார்க்சிய அணுகுமுறையோடு இப்பிரச்சனையை அணுகுகிறார் சிங்காரவேலர்.


அடுத்து, காந்தியின் சுயராஜ்ய கனவுகள் எல்லாம் முதலாளிகளின் ராஜ்யமாகவே இருக்கும். அது ஏழைகளுக்கும், தலித்துக்களுக்கும் ஒருபோதும் பயன்தராது என்று அன்றைக்கே காந்தியத்தின் வர்க்கத்தன்மை குறித்து அம்பலப்படுத்தினார் சிங்காரவேலர். மேலும், இந்தியாவிற்கான சுதந்திரம் குறித்த பேச்சுவார்த்தைகள் எழுந்தபோது, நடைபெற்ற வட்டமேஜை மாநாடு குறித்தும், அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு இருந்தன என்பனவற்றை சிங்காரவேலர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.


“வட்டமேஜை மாநாட்டில் ஆங்கிலப் பிரதிநிதிகளும், தேசியப் பிரதிநிதிகளும், தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகளும் சேர்ந்து நமது இந்தியத் தேசத்தில் வழங்கவேண்டிய அரசியல் திட்டமொன்றைத் தயாரித்து வருகின்றார்கள். முதலில் அரசியல் பாதுகாப்புகளை யோசித்து (1) சொத்துரிமை, (2) மதசமூக உரிமை, (3) ஜாதி உரிமைகளை அந்தந்தப் பொருளுடையோருக்கும், அந்தந்த ஜாதியாருக்கும் அரசியல் பாதுகாப்பு அளிக்கப்படுமென்று தீர்மானித் திருக்கின்றார்கள். இதன் பொருள் என்னவெனில் சொத்து, மதம், ஜாதி இம்மூன்றும் சமூக ஏற்பாட்டில் (Social System) எந்த மாறுதலும் செய்யப்படாதென்பதே.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 397, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


மேற்கண்ட கருத்தை அம்பலப்படுத்தும் சிங்காரவேலர், அத்துடன் நிற்காமல், வட்டமேஜை மாநாட்டுத் தீர்மானத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மை நிலையிலிருந்து விமர்சிப்பது கீழே பார்ப்போம்:


“6 கோடி பேர் தீண்டப்படாதவர்களென்றும், தாழ்த்தப்பட்டவர்க ளென்றும், ஒடுக்கப்பட்டவர்களென்றும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த 6 கோடி மக்களுக்கு ஒரு செண்டு நிலமாவது தங்களுக் கில்லையாதலால் இவர்களுக்கு எவ்வித சொத்தைப் பாதுகாக்க நமது வட்டமேஜை கூட்டத்தால் சொத்தைப் பாதுகாக்கும் திட்டத்தை முதன்முறையாக அரசியல் திட்டத்தில் செய்ய மனம் வந்தது என்று கேட்கின்றோம்?
சொத்துவொன்றில்லாத ஏழையனாதிகளாகிய 2000 லட்சம் பேருக்கு என்னத்திற்காகச் சொத்து பாதுகாப்பு வேண்டுமெனவும் கேட்கின்றோம். சொத்தில்லாத பஞ்சை, பனாதிகளுக்கு வேறெந்தப் பாதுகாப்பும் செய்யாமல் சொத்து பாதுகாப்பு செய்யத்தான் நமது எம்.சி. ராஜாவும், அம்பேத்கரும் வட்டமேஜைக்குட் புகுந்திருக்கின்றனர்களா என்று கேட்கின்றோம். உணவு இல்லாதவனுக்கு உணவு கிடைக்கப் பாதுகாப்பும், ஆடை இல்லாதவனுக்கு ஆடை கிடைக்கப் பாதுகாப்பும், வீடில்லாதவனுக்குக் வீடு கிடைக்கப் பாதுகாப்பும், ஞானமில்லாத வனுக்குக் கல்வி கிடைக்கப் பாதுகாப்பும், வேலை இல்லாதவனுக்கு வேலை கிடைக்கப் பாதுகாப்பும் செய்வதன்றோ, சமதர்ம ராஜரீக முறையாகும்?
இதை எல்லாம் விட்டு விட்டுச் சொத்து யாதென்றுமில்லாதானுக்குச் சொத்து பாதுகாப்பும், மதமில்லாதவனுக்கு மத பாதுகாப்பும், ஜாதியில்லாதனுக்கு ஜாதி பாதுகாப்பும் செய்ய திட்டம் செய்வதென்றால், இதைவிட பயித்தியக்காரத்தனம் என்ன இருக்கின்றது?”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 398-399, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


மிக எளிமையாக, அதே சமயம் ஆழமாக சிங்காரவேலர் எழுப்பிய கேள்விக்கான விடையின் திசைவழியில் கூட சாதி ஒழிப்பு இயக்க ஆதரவாளர்கள் நகராதது வருத்தத்திற்குரிய விஷயம்தான். சாதிய சமூகம் இன்றைக்கும் இந்தியாவில் உயிர் வாழ்வதற்கு அடிப்படையே, சொத்துரிமை என்பதுதான். கடந்த 3000 ஆண்டுகளாக ஆதிக்கசாதிகளின் கையிலிருந்த அதே நிலைதான் தற்போது வேறு, வேறு வடிவங்களில் தலை தூக்குகிறது. இந்திய சுதந்திரமும், இந்திய அரசியல் சட்டமும் இதில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏன் இன்று வரைக்கும் கல்வி மற்றும் வேலை பெறும் உரிமையைக் கூட அடிப்படை உரிமையாக அரசியல் சட்டத்தில் உத்திரவாதப்படுத்தப்படவில்லை. நிலவு டைமை இன்னும் தகர்க்கப்படவில்லை என்பதோடு மட்டுமல்ல; முதலாளித்துவ நிலச்சீர்திருத்தம் கூட இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசுகள் உள்ள மேற்குவங்கம், கேரளம், திரிபுரா தவிர வேறெங்கும் அமலாக்கப்படவில்லை என்பதே இன்றைய 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் எதார்த்த நிலை. அது மட்டுமல்ல; சாதி மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதத்தையும் இவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். சாதி ஒழிப்பு என்பது இவர்களின் முதன்மையான அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்ல; இதுதான் தீண்டாமை என்ற நோய் இந்தியாவில் நீடிப்பதற்கான அடிப்படை.


இதனை அடிப்படையாகக் கொண்டுதான் சிங்காரவேலர் சாதி ஒழிப்புக்கு மிகவும் அடிப்படையானது எது என்று கீழ்க்கண்டவாறு உரைப்பதை பார்க்கலாம்:


“ஜாதியொழியாமைக்கு முக்கியக் காரணம், ஜாதியை பாராமுகமாய்ப் பார்த்து வரும் அரசுகளென அறிக. ஜாதியை ஆதரிக்கும் அரசுகள் எதுவாயினும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமாய் இருந்தாலும் சரி அல்லது காந்தி சுயராஜ்யமாய் இருந்தாலும் சரி, அல்லது மிதவாதிகளின் டொமீனின் (Dominion) அரசாய் இருந்தாலும் சரி அல்லது ஜஸ்டிஸ் கட்சியின் கான்ஸ் டிடூஷனல் டிமாக்கிரஸியாய் இருந்தாலும் சரி, அல்லது பெசந்தம்மையின் ஹோம்ரூலாய் (Home Rule) இருந்தலாலும் சரி, நமது இந்திய நாட்டை விட்டு ஜாதியொழிப் போவதில்லை.
எப்போது ஜாதி ஒழியுமென்றால், ஜாதியும் மதமும் அற்ற நமது சுயமரியாதையோர் கோரும், சமதர்ம ஆட்சி பாமர மக்களுக்கு ஏற்பட்டால் அப்போதுதான்....”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 323, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


3000 ஆண்டுகளாக சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும், தலித் என்றும் பல்வேறு பெயர்களில் தீண்டப்படாத மக்களாக மாற்றியதோடு, அவர்களை ஏதும் அற்றவர்களாக மாற்றிய இந்த சமூக அமைப்பில் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னும் கூட தலித்துகளுக்கு அதே நிலை நீடிக்கிறது என்றால் இதற்கு யார் காரணம்? இந்தியாவை ஆளும் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பிடியை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டிருப்பதால்தான் இந்திய ஆட்சியாளர்களால் அதிலிருந்து தப்ப முடியவில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்திய சுதந்திரப் போரில் பல லட்சக்கணக் கான மக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் கூட, அந்த மக்கள் வர்க்க ரீதியாக அணித்திரட்டப்படாததன் விளைவாகவும், தங்களுக்கு ஆதரவாக அந்த மக்களை பயன்படுத்திக் கொண்ட காங்கிரசும், முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சக்திகளும் சுதந்திர இந்தியாவிலும் தலித்துக்களையும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களையும் சுரண்டுவதற்கும், தாங்கள் சுரண்டி சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தை மேலும் பெருக்கிக் கொள்வதற்கு வழியுள்ள ஒரு நாடாக இந்தியாவை எப்படி மாற்றுவது என்ற நோக்கத்தில்தான் தற்போதைய இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பாதுகாப்பு அரணாக அவர்களுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


இந்திய அரசியல் சட்டத்தில், “தீண்டாமை ஒரு குற்றம், ஒரு பாவச் செயல்” என்று எழுதி வைத்ததால் மட்டும் தீண்டாமை விட்டதா, இல்லையே? ஒழியாது! மாறாக, அந்த நிலமற்ற, சொத்துக்களற்ற மக்கள் குறைந்தபட்சம் தங்களது வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் அளவிற்கான வாழ்க்கையை உத்திரவாதம் ஏற்படாத வரையில், ஆதிக்க சாதிகளின் அடிமை சேவகர்களாக தலித்துக்கள் இருப்பதிலிருந்து விடுதலையடைப் போவதில்லை. எனவேதான், மார்க்சிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள் சிங்காரவேலர் காலம் தொட்டு இப்பிரச்சனையை வெறும் சாதியப் பிரச்சனையாக மட்டும் அணுகாமல், அதற்குள் ஒளிந்து கொண்டுள்ள வர்க்கப் பிரச்சனைகளையும் கூர்மையாக நோக்கு கின்றனர். வர்க்கப் பிரச்சனையை மறைத்துவிட்டு சாதி ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டும் என்று கனா காண்பவர்கள் உண்மையில் ஆதிக்க சாதிக்கும், சாதி அடிமைத்தளையில் உள்ள மக்களை சுரண்டிக் கொழுக்கும் பெரும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சக்திகளின் மறைமுக காப்பாளர்களாக திகழ்கின்றனர். அத்தகைய மறைமுக சேவையைத்தான் சில சாதி ஒழிப்பு பித்தர்கள் செய்து வருகிறார்கள். அவர்களது நோக்கம் சரியாக இருக்கலாம். பார்வை சரியாக இல்லாவிட்டால், வெறும் பிதற்றலாக முடிவது இயற்கைதானே!


மதமும் ஜாதியும்


தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து பல்வேறு கோணங்களில் ஆராயும் சிங்காரவேலர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதம் ஒன்று இல்லவே இல்லை என்று ஆணித்தரமாக தனது வாதத்தை எடுத்துரைப்பதை கீழே நோக்கலாம்:


“நமது 6 கோடி தாழ்த்தப்பட்டவர்களுக்கு மதம் ஒன்று இருப்பதாகச் சொல்ல முடியாது. அவர்கள் இந்துக்கள் அல்ல. இந்துத் தெய்வங்களை அவர்கள் தொழ முடியாது. இந்து கோயில்களில் நுழைய முடியாது. இந்துக் குளங்களில் அவர்கள் குளிக்க முடியாது. இந்து தெய்வங்களாலும், கோயில்களாலும், குளங்களாலும் ஆதரிப்புவொன்றுமில்லாத தீண்டாதாருக்கு மதபாதுகாப்பு ஏன் வேண்டும்? மதமில்லாதவர்களுக்கு மதபாதுகாப்பினால் என்ன பிரயோசனம்? இந்து தெய்வங்களைத் தொழ முடியாத, இந்து கோயில்களில் நுழைய முடியாத, இந்து குளங்களிலும், கிணறுகளிலும் குளிக்க முடியாத, ஏழு கோடி பஞ்சமர்களுக்குச் சமயப் பாதுகாப்பு என்னத்திற்கு?”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 399, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


இத்துடன் நிற்காமல், தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் வாழும் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கும் சிங்காரவேலர் அவர்களது கோயில் நுழைவு போன்ற கோரிக்கைகள் குறித்தும் எழுப்பும் கேள்விகள் சிந்திக்கத்தக்கது.


“இன்னொரு கூச்சல் பத்திரிகைகளில் எழுகின்றது. கோயிலைத் திறந்து விடுங்கள்; குளங்களைப் பொதுவாக விடுங்கள்; பஞ்சமர்களை வீதிகளில் போக விடுங்கள் என்று காசி முதல் ராமேஸ்வரம் வரை கூக்குரல் போடுகின்றார்கள். இதனால் என்ன லாபம்? என்று கேட்கின்றேன். கோயிலையும், குளங்களையும் பஞ்சமர்களுக்குத் திறந்து விட்டால் அவர்களுக்கு என்னாகும் என்று கேட்கின்றேன்? அவர்கள் வயிறு நிரம்புமா? அவர்கள் குழந்தைகளுக்கு வயிறு நிறையப் பால் கிடைக்குமா? அவர்கள் பெண்களுக்குப் பிரசவ உதவி (Minimum Comforts) கிடைக்குமா? அவர்கள் வாழ்வுக்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் (ஆiniஅரஅ ஊடிஅகடிசவள) என்ன ஏற்படுமெனவும் கேட்கின்றேன்?
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பஞ்சமர்களுக்குக் கோயிலைத் திறந்து விடுவதும், குளங்களைத் திறந்து விடுவதும், பஞ்சமர்களுக்கு உயிரை விடுகின்றேன் என்று சொல்வதும் நமது 5 கோடி ஏழை பஞ்சமர்களை இனியும் மூட பக்தியிலும், மூட நம்பிக்கையிலும், தரித்திரத்திலும், அறியாமையிலும் தாழ்வடைந்து கிடந்து உழலச் செய்யும் தந்திரமென அறிக.”

(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 399, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


இதேபோல், இன்னொரு இடத்தில் தலித்துக்கள் இந்து மதத்தை விட்டு விலகி வேற்று மதத்திற்கு மாறினால் அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்ற வாதத்தில் உள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது, “ஒரு மூடத்தனத்தில் இருந்து இன்னொரு மூடத்தனத்திற்கு மாறுவதால் என்ன பயன் என்று” வினா எழுப்பும் சிங்காரவேலர், ஒரு மதத்தைச் சேர்ந்த சுரண்டலாளரின் அடிமை என்பதிலிருந்து இன்னொரு மதத்தின் புதிய அடிமையாக மாறுவதைத் தவிர வேறு என்ன ஏற்படப் போகிறது என்று கேள்வி எழுப்புகிறார்.


காந்தியின் உண்ணாவிதம்


அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தலித்துக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதே கோரிக்கை சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுந்தபோதுதான், மகாத்மா காந்தி அவர்கள், எரவடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித்துக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி ஒதுக்குவது என்பது அவர்களை இந்துக்களில் இருந்து பிரித்துச் செல்வது என்று காந்தி கருதினார்.


இத்தகைய கோரிக்கை குறித்து அன்றைக்கே சிங்காரவேலர் மார்க்சிய அடிப்படையில் இதனை அணுகி காந்தியின் உண்ணாவிரதம் ஒரு தற்கொலை முயற்சி - சிறு பிள்ளைத்தனமானது என்று இடித்துரைத்துள்ளார். அதாவது? தலித்துக்களுக்கு கூடுதல் தொகுதிகள் தந்து விடுவதால் ஒன்றும் யாரும் குறைந்து விடப்போவ தில்லை என்று சொல்வதோடு, இவ்வளவு நாட்கள் நீங்கள் எல்லாம் அமைச்சர் மற்றும் இதர பொறுப்புகளில் இருந்து எதைச் செய்தீர்கள் அவர்களுக்காக என்று கேள்வி எழுப்புவதோடு, அந்த கோரிக்கைக்கு வலுவான ஆதரவாளராக அன்றைக்கு திகழ்ந்தவர் சிங்காரவேலர்.


தொழிலாளி வர்க்கத்திற்கு பொருத்திய இதே விஷயத்தை சிங்காரவேலர் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஹெஜிமனி (Hegemony) எவ்வாறு இந்தியாவில் உள்ளது என்பதை வெகுச் சிறப்பாக அம்பலப்படுத்துகிறார்.


“ஜாதியும், மதமும் சொத்துரிமையும், முதலாளிகள் தங்கள் செல்வத்தையும் செருக்கையும், ஆதிக்கத்தையும், உரிமையையும், காப்பதற்குக் கட்டிக்கொண்டிருக்கும், கோட்டை மதில்கள் என அறியவேண்டும். இவ்வாயில்கள் திறந்து இருக்கும்வரை சமதர்மம் நிலையாதெனவும் அறிதல் வேண்டும்.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14 )


இப்படி பல்வேறு கோணங்களில் சாதியின் பிடிமானம் எவ்வாறு உள்ளது? அதனை எதிர் கொள்பவர்கள் வைக்கும் வாதங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த சிங்காரவேலர் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் மார்க்சியப் பார்வையில் வழிகாட்டியுள்ளார். இது என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. அதனை அவரது எழுத்துக்கள் மூலமே கீழே பார்க்கலாம்.


சாதியை ஒழிப்பதற்கு அரசியல் தீர்வுதான் அடிப்படையானது என்பதை வலியுறுத்தும் சிங்காரவேலர், அத்துடன் நிற்காமல் மக்களிடையே ஒரு மெய்ஞான உணர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார். மெய்ஞான உணர்ச்சி என்றால், சமூகத்தைப் பற்றியும், மனித உடலியல் மற்றும் இயற்கை சார்ந்த விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும் என்பதோடு, குழந்தைகளிடத்தில் இத்தகைய அறிவியல் பார்வையை போதிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுவதோடு சோசலிச சமூகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உண்மையான விடுதலை கைகூடும் என்று வலியுறுத்தி அதனை செயலாக்கம் செய்திட வேண்டும் என்று உரைக்கிறார்.


“ஜாதி வேற்றுமையொழிய வேண்டுமானாலும், ஜாதிக் கொடுமை களால் தீண்டாமை, பொது ஸ்தாபனங்களில் நுழையாமை, ஜாதிக் கட்சி மற்றும் பல வகையான கொடுமையுள்ள கட்டுதிட்டங்களை ஒழிக்குமாறு சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும். இதனடுவில் பாமர மக்களுக்கு மெய்ஞானம் உண்டாகும்படிப் பல நூல்களை இந்தப் பாஷைகளில் இயற்றியும், சினிமா மூலமாகவும், ஆகாய தொனிகள் மூலமாகவும், பாமர மக்கள் வாழும் கிராமங்களில் உலக உற்பத்தி, ஜீவ உற்பத்தி, பிரபஞ்ச உற்பத்தி, வான சாஸ்திரம், பூகோள சாஸ்திரம், பூர்வ மனித சாஸ்திரம், வைத்திய நூல் முதலிய சிறந்த ஞானங்களைக் கொண்டு மூடப்பக்தி ஜாதிபக்தி, மதபக்தி ஒழியுமாறு முயற்சித்தல் வேண்டும்.”
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 49-50, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


மற்றொரு இடத்தில் சிங்காரவேலர் கூறுகிறார், இந்த ஜாதி வித்தியாசங்களையும், மத வித்தியாசங்களையும், பொருளாதார வித்தியாசங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால் தொழிலாளிகள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துக் கொள்ளும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமையவேண்டும். சாதி, மத, கடவுள் நம்பிக்கைகளற்ற ஆட்சி நிலைக்கும்போதுதான் இவற்றை சமூக்திலிருந்து ஒழிப்பதற்கான முதற்படியில் காலடியெடுத்து வைக்க முடியும் என்று.


“உண்மை சுதந்திரம் பெற வேண்டுமாயின் பொது ஜன சுயராஜ்யம் நிலைக்கப் பாடுபட வேண்டும். இந்த சுயராஜ்யத்தில் பொது மக்களின் வறுமையும், தரித்திரமும் முதலில் வொழியுமாறு சமூகத் திட்டங்கள் செய்ய வேண்டும். மக்கள் கற்பனைகளும் ஜாதி வேற்றுமைகளும் இந்திய சமூக வாழ்விலிருந்து பற்றவே யொழிதல் வேண்டும்.”


என்று வலியுறுத்தி அரசியல் ரீதியாக சோசலிச சமூகத்தில்தான் இந்த ஜாதிய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று வலியுறுத்தும் சிங்காரவேலர் இதற்காக தீர்மானமுள்ள வேலைகளை (பாசிட்டிவ் ஒர்க்) செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


சிங்காரவேலர் சுட்டிய வழியில் சாதி ஒழிப்பு இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் களத்தில் ஓரணியாய் - வர்க்க ரீதியாக அணித்திரள்வதும், சாதியொழிப்பு போராட்டங்களை பொருளதார கோரிக்கைகளோடு ஒன்றிணைப்பதும், சுரண்டல் வேர்களை அம்பலப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் அரசியல்-பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி தீண்டாமைக்கு தீ வைக்க முடியும். இதற்கு, சிங்காரவேலர் சுட்டிக்காட்டிய தீர்மானமுள்ள வேலையை நோக்கியதாக நமது பயணங்கள் அமையட்டும்!

கே. செல்வப்பெருமாள்

May 04, 2009

கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு! கருணாநிதியின் புளுகு 2 நாளைக்கு!


"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு" என்பது தமிழ் சொல்வழக்கு. அதுபோல ஆளும் திமுக அரசு எதைத் தின்றாவது பித்தம் தெளிய வேண்டும் என்பது போல், எதைச் செய்தாவது தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தில்லு முல்லுகளை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் மூன்று முன்னர் மாநகர பேருந்துகளின் கட்டம் குறைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறய திமுக மீது அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக உள்ளங்களும் கடுமையாக கண்டித்தன. தமிழக தேர்தல் கமிஷனும் இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்று தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இது குறித்து புகார் செய்தது.
மறுபுறத்தில் இது குறித்து கருணாநிதியும், கே.என். நேருவும் ஆளுக்கு ஆள் மாறி, மாறி "நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை" என்று லாலி பாடியதோடு 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த நடைமுறையைத்தான் கடைப்பிடிக்கிறோம் என்று அபாண்டமான பொய்யை சுமத்தினார்கள்.
மறுபுறத்தில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் இது குறித்து வலுவான கண்டனத்தை தெரிவித்ததோடு, இவ்வளவு நாள் ஏற்றிய கட்டணங்களை திமுகவினர் கொள்ளையடிப்பதற்கும், பொய் கணக்கு எழுதி அந்தப் பணத்தை சுருட்டிக் கொள்வதற்கும் செய்யப்பட்ட சதி வேலை என்பதை அம்பலப்படுத்தினார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் மே தினக் கூட்டத்தில் சென்னையில் உரையாற்றியபோது, சென்னை மாநகரத்தில் மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு நாளைய வருமானம் 1.75 கோடி என்றும், தற்போது கட்டணம் குறைக்கப்பட்ட பின்னர் அது 1.25 கோடி மட்டுமே வருமானமாக உள்ளது என்று கூறியதோடு சென்னை மாநகரத்தில் மட்டும் நாள்ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்படுவதாக அம்பலப்படுத்தினார்.
இதன் மீது மத்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளரை அழைத்து விசாரித்தது. தற்போது இன்று காலை முதல் திடீரென்று ஏற்கனவே இருந்த அதே நிலைக்கு பேருந்து கட்டணங்கள் உயர்ந்து விட்டது. டீலக்ஸ் பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்றும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய் என்றும், எம். சர்வீசில் குறைந்தபட்ச கட்டணம் 2.50 ரூபாய் என்றும் மாறிவிட்டது. நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை என்று வசனம் பேசியவர்கள் தற்போது முகத்தில் கரியை பூசிக் கொண்டுள்ளனர். இது யாரை ஏமாற்றுவதற்காக இந்த நடவடிக்கை. அதுவும் போக்குவரத்து மந்திரி நேரு கூறும்போது, பேருந்துகளை தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அதிகப்படுத்தி பயன்படுத்தினோம் என்று வினோதமான விளக்கம் கூறினார். அது சரி தற்போது ஏன் அதைச் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் வெள்ளை கலர் போர்டு பேருந்துகளையாவது அதிகமாக இயக்கலாமே! ஏன் முடியவில்லை. கொள்ளைக்காரன் புத்தி கொள்ளையடிக்கத்தான் போகும் என்பதுபோல தமிழக அரசு மறைமுகாக பிக்பாக்கெட் அடிக்கத் துணிந்து விட்டது. மக்கள் உங்கள் முகத்தில் கரியை பூச காத்திருக்கிறார்கள்.
கால் முளைத்து, சிறகு முளைத்து பறக்கும் பேருந்து கட்டணம் தமிழக அரசின் சாதனைகளிலேயே தலயாய சாதனைதான்! யாருமே ஏற்றாமலேயே தானாக ஏறிக் கொள்ளும் அதிசயம் தமிழகத்தில் மட்டும்தான் - அதுவும் கருணாநிதி ஆட்சியில் மட்டும்தான் நடக்கக்கூடியது.

May 01, 2009

மே தின வாழ்த்துக்களும்! நாம் சந்திக்கும் நெருக்கடிகளும்!!

உலகம் 123வது மே தினத்தை சிறப்போடு கொண்டாடி வருகிறது. மே தினம் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாள். எட்டு மணி நேரத்தை பெற்றெடுத்த வீரத் திருநாள். 1886-இல் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தில் உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தால் பெற்றெடுத்ததே எட்டு மணி நேர வேலை. உழைக்கும் வர்க்கம் தனது உயிர் வாழ்தலுக்காக முதலாளித்துவத்துடன் ஓயாது, ஒழிச்சலின்றி போராட வேண்டியிருக்கிறது. அன்று மட்டுமல்ல; இன்றும்தான். முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டும் வரை இந்தப் போராட்டத்திற்கு ஓய்வே கிடையாது!

உலகம் இன்றைக்கு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்று பிரச்சாரப்படுத்தப்படுகிறது. இது ஏதோ, திடீரென்று யாருக்கும் தெரியாமல் ஏற்பட்டதுபோல் ஊடகங்களின் வழியாக ஊடுருவுகிறது. யாரால் தோற்றுவிக்கப்பட்டது இந்த நெருக்கடி? இதனால் பாதிக்கப்படப்போவது யார்? என்ற கேள்விகள்தான் மக்கள் மனதில் முட்டி மோதவேண்டியவை. ஆனால், மக்களின் மனங்களில் எல்லாம் ‘பொருளாதார நெருக்கடி’ என்று கண்ணீரை கசிய வைத்து விட்டது முதலாளித்துவம்.

உலக ‘நிதி மூலதனத்தை’ தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள, பன்னாட்டு பெரு முதலாளிகளும், ஏகாதிபத்திய சுரண்டல் சக்திகளும், பணத்தை வைத்து பணத்தை பெருக்க வைத்தன. பணங்கள் அனைத்தும் பணம் காய்க்கும் மரங்களாக மாறின அவர்களுக்கு, பணம குட்டிப்போடும் அபூர்வ எந்திரமாக மாறியது முதலாளிகளுக்கு; அதாவது, பணத்தை உற்பத்தி மூலதனமாக மாற்றுவதற்கு பதிலாக, பணத்தையே பெருக்க வைக்கும் கலையை கற்றதன் விளைவே இன்றைய நெருக்கடி.

உதாரணமாக, 10 ரூபாய் மட்டுமே விலை மதிப்பு கொண்ட பென்சில் ஒன்றை 100 ரூபாய் மதிப்புக் கொண்டதாக மாற்றினர். இந்த பணம் பெருக்கும் மந்திர சூதாட்டம் நடைபெற்றது பங்கு வர்த்தகத்தில், 10 ரூபாய் பொருளின் மதிப்பு ஒவ்வொரு நாளும் செங்குத்தாக உயர்ந்துக் கொண்டே சென்று அது 100 ரூபாயை எட்டியதும்; பணத்தை வைத்து பணத்தை பெருக்கிய பங்கு வர்த்தக சூதாடிகளான - காளைகளும், கரடிகளும் தாங்கள் பெற்ற கொள்ளை லாபத்தை மாயமாய் வேறு ஒரு தொழிலில் திருப்பும்போது திடீரென்று பென்சிலின் உண்மை விலையான ரூ. 10-லிருந்து ரூ. மூன்றுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும் பென்சிலின் மீது 100 ரூபாய் மூலதனம் இட்டவரின் பணம் திடீரென மயமாய் 97 ரூபாய் காணாமல் போய்விடும். இது எங்கே போனது? யாருக்கு போனது? என்பதுதான் கேள்வி! இப்படித்தான் பெரும் நிறுவனங்களும், பன்னாட்டு வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பணத்தை வைத்து சூதாட ஆரம்பித்து மதிப்பிழந்த மண்ணுக்கு கூட விண்ணை விலைக்கு வாங்கும் அளவுக்கு உயர்த்தி பின்னர் அதை அப்படியே தொப்பென்று போட்டு விட்டன. இப்படி ஏற்பட்டதுதான் இந்த முதலாளிய நெருக்கடி. அதாவது, இதனை உருவாக்கியது சொத்தாசை பெற்ற முதலாளிகள். இதில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடமில்லை! எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான்.


அமெரிக்காவில் இப்படித்தான் வங்கிகள் ஏராளமானவர்களுக்கு வீடு வாங்குவதற்கு கடன் கொடுக்கிறோம். அதற்கு நீங்கள் எந்த டாக்குமெண்டும் காட்ட வேண்டாம்! ஏன் எங்களுக்கு அதனை திருப்பி அடைக்க வழியிருக்கிறதா? என்று கூட நாங்கள் பார்க்க மாட்டோம் என்று ஆசை வார்த்தைகள் காட்டி. கடனை தலையில் கட்டி, அந்த வீட்டையும் பங்கு மார்க்கெட்டில் ஏலம் விட்டு பணத்தை பெருக்கி... பெருக்கி... ஊதி... ஊதி.... ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறியதுதான் இந்த நெருக்கடி. தற்போது பணம் கொடுத்த வங்கிகள் திவாலாகி விட்டது. 10 கோடி ரூபாய் விற்ற வீடுகள் இன்றைக்கு ஒரு லட்சத்திற்கு விலை போகிறது என்றார் பாருங்கள்! பணத்தின் விளையாட்டை! தற்போது இந்த ஒரு லட்சம் கொடுத்து வீடு வாங்குவதற்கு கூட அமெரிக்காவில் ஆள் இல்லையாம்! அதாவது அவர்கள் உருவாக்கிய நெருக்கடி சூறைக்காற்றாய் அவர்களை பூமராங் போன்று தாக்குவதோடு உழைக்கும் மக்களையும், அப்பாவிகளையும் வீதிக்கு தள்ளி விட்டது.

இதனால் என்னென்ன விளைவுகள் தற்போது ஏற்பட்டுள்ளன?
உலகின் கோடீஸ்வர நாடான அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு 17,000 வேலைகள் காலியாகின்றன. அதாவது, 17,000 பேர் வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். வேலை பார்த்த நிறுவனங்களிலிருந்து கழுத்தை பிடித்து தள்ளுகிறார்கள். இந்த எண்ணிக்கை டிசம்பர் 2008லிருந்து துவங்கி கடந்த 5 மாதங்களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் வேலையிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு 800 பேர் வேலையிழப்பதாக பத்திரிகையாளர் பி. சாய்நாத் கூறுகிறார்.

அமெரிக்காவில் தொடங்கிய இந்த வேலை பறிப்பு நடவடிக்கை - அதாவது முதலாளிகளின் சிக்கன நடவடிக்கை என்றாலே அது தொழிலாளிகளின் கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டுவது என்று அர்த்தம். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 7,72,000 பேர் வேலையிழந்துள்ளனர் அமெரிக்காவில். உலகிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா மாறிக் கொண்டிருக்கிறது. 7.2 சதவிகிதம் வேலையின்மை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. உண்மையில் இது 15 சதவிகிதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியால் அனைத்து தொழில்களும் ஆட்டம் கண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் இதன் தாக்கம் எந்த அளவிற்கும் குறையாத வகையில் சுனாமி அலைகளைப் போல் தாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் ஐ.டி. துறையில் மட்டும் இரண்டு லட்சம் வேலைகள் பறிபோயுள்ளனர். மேலும் ஒரு லட்சம் பேர் வரும் ஆண்டுகளில் வேலையிழப்பர் என்று கூறப்படுகிறது. இது தவிர, டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் என்று பெருந்தொழில்கள் எல்லாம் இன்றைக்கு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இதன் பக்க விளைவாக 5 பேர் முதல் 100 பேரை வரை செய்யும் சிறு தொழில்கள் எல்லாம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தியில்லாமல் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இது தவிர பல இடங்களில் கடுமையான சம்பளவெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை! ஓ.டி., இன்சென்டிவ் என்று வேலைபார்த்த அசோக் லேலண்ட் தொழிலாளர்களின் வருமானம் 20,000த்திற்கும் குறையாமல் இருந்தது. இன்றைக்கு அவர்களின் வருமானம் 5,000த்திற்கு சென்று விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைச் சூழலுக்கு பழக்கப்பட்டு விட்ட தொழிலாளர்கள். தற்போதைய பண நெருக்கடியால் குடும்பத்தில் நிம்மதியிழந்து தவிப்பது பெரும் கதையாக மாறிக்கொண்டுள்ளது. இவைகள் ஒருபுறம் என்றால், சென்னை - ஸ்ரீ பெரும்புத்தூரில் உள்ள ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலளிகள் தங்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை வேண்டிய இரண்டு - மூன்று ஆண்டுகளாக களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். விளைவு என்ன? சங்கம் வைக்க உரிமையில்லை என்று நிர்வாகம் மறுக்கிறது. இதனால் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் பந்தாடப்படுகின்றனர். பழிவாங்கப்படுகின்றனர். 65 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது நிர்வாகம். 34 பேரை இடைநீக்கம் செய்துள்ளனர். 7 பேரை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது. 1500 கேஷூவல் தொழிலாளிகளை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போது சங்கம் வைக்கும் உரிமை வேண்டி கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளிக்கு ஆதரவாக சிஐடியூ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நின்று போராடி வருகிறது. அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நேரடியாக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, இதற்காக நாடு தழுவிய முறையில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை ஓயாமல் ஒளிபரப்பிய ஊடகங்கள் பாதிக்கப்படும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக சில நிமிடங்கள் கூட ஒளிபரப்ப முன்வருவதில்லை என்பதிலிருந்தே இவர்களின் வர்க்கத்தன்மையை அறிய முடியும்! முர்டோக் போன்றவர்களின் முரட்டுக்கரங்கள்தான் ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றன. இதற்கு இந்திய ஊடகங்களும் எந்தவிதத்திலும் சளைக்காதவர்கள் அல்ல.


எனவே, இந்த மே தினம் என்பது சவால்கள் மிகுந்த மே தினமாக நம்முன் நிற்கிறது. முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டது கரையோர அப்பாவி மீனவர்கள் என்பதுபோல் தொழிலாளிகளும், உழைக்கும் மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் மன்மோகனாமிக்ஸ், சிதம்பர நடனம் மற்றும் அத்வானி வகையறாக்களை இந்த தேர்தலில் தோல்வியடைச் செய்வது இந்த மே தினக் கடமையாக நம் முன் நிற்கிறது. மாற்று அரசு ஒன்று மத்தியில் ஆட்சியமைப்பதன் மூலமே இந்த நெருக்கடியிலிருந்து சிக்கித் தவிக்கும் மக்கள் மூச்சு விடுவதற்கான ஆரோக்கியமான காற்று சுவாசிப்பதற்கு கிடைக்கும்! மே தின சபதமேற்போம்! பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கொள்கை ஏஜண்டுகளான காங்கிரஸ் - பாஜகவை வீழ்த்துவோம்! மூன்றாவது மாற்றை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவோம்!