தமிழக அரசின் பண்பாட்டு மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை ஏற்பாட்டின் கீழ் சென்னை முழுவதும் மூன்று பேருந்துகளில் வலம் வரும் கிராமிய கலைஞர்கள் சென்னை தெருக்களை கலக்கோ கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மார்கழி கச்சேரிகளை மட்டுமே பார்த்துப் பார்த்து சலிப்புற்ற அரங்கங்கள் தற்போது நடைபெறும் ‘சென்னை சங்கமத்தில்’ அதிரும் வேட்டுக்களாய் புறப்படும் இசையில் துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கலைவானர் அரங்கம், மியூசிக் அகாடமி, தியாகராயர் ஹால், தி. நகர் - நடேசன் பூங்கா, கே.கே. நகர் - சிவன் பூங்கா, மயிலை மாடவீதி, பெசன்ட் நகர் கடற்கரை, இராயபுரம் - ராபின்சன் பூங்கா, கோட்டூர்புரம் பூங்கா, நாகே°வரராவ் பூங்கா - மயிலாப்பூர், அண்ணாநகர் - டவர் பார்க் என்று சென்னை முழுவதுமே மாலை நேரங்களில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ணப் பூக்களாய் கிராமிய கலைஞர்களின் கலைத் திறனால் புதுப்பொலிவு கண்டுள்ளது.
நேரம் 5.45 ஆகியும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவில்லை. கலைஞர்களின் தயாரிப்புகள் மிக ஜரூராய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்குள் நான் அழைத்த நன்பர்கள் வராததால், அவர்களை மீண்டும் எ°.எம்.எ°. மூலம் தொல்லை கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக மூன்று பேர் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தனர்.
நண்பர் ஹரி என்னைப் போலவே மிக வேகமாக நிகழ்ச்சியைக் காண ஆவலாக வந்தவர். அங்கே வேக, வேகமாக நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தவர்கள் சென்ற திசையில் அவரும் நடக்க ஆரம்பித்து விட்டார். ஐய்யோ என்னப்பா நிகழ்ச்சியை பார்க்க இவ்வளவு வேகமாக போறாங்களே என்ற ஐய்யத்தோடு... அப்புறம்தான் தெரிந்தது அந்த டியூப்லைட்டுக்கு அவர்கள் நடை பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று.
எப்படியோ நாங்கள் மேடைக்கு வெகு முன்னால் அமர்ந்து கொண்டோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொன்னரசு கனகராஜ் வருவதற்கு தாமதமாகியது. இருப்பினும் ஒருவழியாக, கோவில்பட்டி ஐயம்மாள் வல்லுப்பாட்டோடு நிகழ்ச்சி ஆரம்பமானது... அவங்களுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 20 நிமிடம்தான்... அப்பாடா இங்கேயாவது 20 நிமிடம் கொடுத்தாங்களே என்ற தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தார்.
அவருடைய வல்லின் வலைகளைப் போல், அவரது அவரது கையில் இருந்த கோல் ஏதோ ஏ.ஆர். ரகுமான் டிரம்ஸ் வாசிப்பதுபோல் சுழன்று சுழன்று வில்லினை கொஞ்சிச் சென்றது அற்புதமாக இருந்தது. அவரது கதை “கம்ம இராமாயணத்தை’ மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது. குழந்தை பிறந்ததும், கல்வி பயில சென்றதோடு.... அவரது நிகழ்ச்சி முடித்துக் கொள்ள வைக்கப்பட்டது!
ஆஹா! என்ன அற்புதமான வில்லிசை இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறதே! என்ற ஏக்கம்தான் நம் மனதை வாட்டியது. பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய வில்லிசை குறித்து பயிற்சியளித்தால் வில்லிசைக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இருப்பினும் இவைகளை நவீன வடிவத்தோடு பயன்படுத்திடவும்,
கலைமாமணி தேன்மொழியின் நையாண்டி மேளம். இதனை நையாண்டி மேளம் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்றுத் தெரியவில்லை! நான் பார்த்துக் கொண்டிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வில் இப்படித்தான் பிரதிபலித்தது. ‘பரதத்திற்கு சவாலாக’ வேகத்தோடு, விவேகமாக, சாகசம் புரியும் நோக்கத்தில் அமைந்ததுபோலவும், பரதத்தை நையாண்டி செய்வதுபோலவும்தான் தெரிந்தது. தேன்மொழியின் ஆட்டத்தால் ராபின்சன் பூங்காவே புதுப் பெலிவு பெற்றது. நிகழ்ச்சியை பார்க்க வந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு - தேன்மொழியின் சாகசம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. கலசத்தை வைத்துக் கொண்டு அவர் ஆடிய ஆட்டமும், துளிகூட முகத்தில் சோர்வோ அல்லது அளுப்போ இல்லாமல் 30 நிமிடத்திற்கும் மேல் ஜெலித்துக் கொண்டிருந்தார். இதுபோன்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை அனைத்து கல்லூரிகள் தோறும் கொண்டுச் சென்றிட வேண்டும். நவீன நடனம் எல்லாம் இதன் முன் தூள் தூளாகியதை பார்க்க முடிந்தது.
தேன்மொழியின் ஆட்டத்தை சுவைத்த நொடிகளிலேயே, கலைமாமணி விநாயகத்தின் காவடியாட்டம் வந்து விட்டது. ஆய்யோ! விநாயகத்தின் தலையில் பூமிப்பந்து சூழலுவது போல் காவடி சுற்றி சுற்றி வந்தது. அவர் சொல்லுவதையெல்லாம் அந்த காவடி கேட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காவடியை தோளில் இருந்து, தலைக்கு ஜம்ப் செய்ய வைக்கும் போது என்னா....... பேலன்°... ஆட்டம் என்றால் இதுவல்லவா என்று மெய் சிலிர்க்க வைத்தது. சென்னையில் அம்மா பிறந்த நாளுக்கு பால் குடமும், சிந்து காவடியும் தூக்கிக் தூக்கி பார்த்த மக்களுக்கு விநாயகத்தின் காவடி சிந்தனையை கிறங்க வைத்தது. இத்தகைய அரிய கலைகளையெல்லாம் சினிமாவில் புகுத்திடவேண்டும். கலைகளுக்கு உள்ளோ போட்டியைப் போல் நம் ஹீரோக்களை பயன்படுத்தினால், இத்தகைய கலைககள் புதிய எல்லைகளைத் தொடும்...
அடுத்து வந்தது, மதுரை - அலங்கா நல்லூர் வேலுவின் பறையாட்டம்... பறை என்றாலே இங்கே ஏதோ சாவு மேளமாக பார்த்துப் பழகியவர்களுக்கு அது போர் முரசும் கொட்டும், திருமண சடங்கு முதல் பூப்பெய்துதல் வரை அனைத்துக்கும் வாழ்வின் அங்கம் என்பதை உணர்த்தினார் வேலு. வேலு குழுவினரின் உற்சாகமான ஆட்டத்தை எந்த படத்திலும் காட்சியாக வைக்க முடியாத அளவிற்கு அவர்களது உற்சாகம் பொங்கியது. கிட்டத்தட்ட 30 மணி நேரத்திற்கும் மேல் ஏதோ ஒரு இலட்சம் வெடியை வைத்தார் போன்று விதவிதமான அடிகளை அடித்து இராயபுரத்தையே அதிர வைத்து விட்டார்கள் வேலு குழுவினர்.
அதேபோல், மயிலாட்டமும், குயிலாட்டமும், குதிரையாட்டமும் குழந்தைகளை குஷிப்படுத்தியது. அடுத்து வந்தது நாயட்டம்... இது இறக்குமதி கலை! இதை ஏன் இதற்குள் நுழைத்தார்கள் என்றுத் தெரியவில்லை! நாயாட்டம் பார்ப்பதற்கு நல்லாயிருந்தாலும், அதன் கலாச்சாரம் மேலை நாட்டுத் தன்iயோடுதான் இருந்தது. ஏன்? நான் புனர்தலைக்கூட பட்டும் படாமல் காண்பித்தார்கள்... இதுபோன்ற கலைகள் இந்த மண்ணிற்கு வேண்டவே வேண்டாம் அதற்குத்தான் இருக்கிறதே டிஸ்கொத்தோ.... கொட்டம்போடும் கொழுப்பேறிய கும்பலுக்கு வேண்டும் என்றால் இது தேவைப்படலாம்.
நம் மரபு என்று சொல்லும் போதே! அது கிருஷ்ணரும், இராமரும் இல்லையல்லவா! காளியாத்த - மாரியாத்தா - முன்னிகன்னியம்மன்.... எனவே, காளியாட்டமும் இல்லாமல் இல்லை. இரண்டு காளிகளின் நடனம் கலையுணர்வோடு - சிலிர்ப்பூட்டும்படியாக இருந்தது. கொடுமைக்கு எதிரான காளியின் நடனமாக இது சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து வந்தது லைட் மியூசிக்.. இதை ஏன் சேர்த்தார்கள் என்பதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கே வெளிச்சம்! தெருவெல்லாம் இந்த லைட் மியூசிக் போட்டுப் போட்டே அதுதான் நம் கலை என்பதுபோல் மாற்றி விட்ட இந்த சூழலில், கிராமிய கலையோடு இதை சேர்த்ததன் மூலம் இதனுடைய வாழ்நாளை இன்னும் கூட்டி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்!
இறுதியாக சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தினாலும் வடசென்னைக்கு ஒரு விதமாகவும், தி. நகர், மயிலாப்பூர் போன்ற இடங்களுக்கு வேறு ஒருவிதமாகவும் இந்த நிகழ்ச்சிகள் அமைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தி. நகரில் நாதஸ்வரம், வோக்கல், தேவாரம் திருப்புகழ், குழந்தைகள் கதை நேரம், கதை கேளு பாப்பா போன்ற மிக லைட்டான நிகழ்ச்சிகளை மட்டுமே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கே மண்ணின் மனம் கமழும் கலைகள் வருவதற்கு தடையே போட்டுள்ளார்கள் என்பது அந்த நிகழ்ச்சி நிரலை பார்த்தாலே புரிகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கனிமொழி இதற்கு எப்படி இறையானார் என்பது அவருக்கே வெளிச்சம்.
அத்தோடு, பெசன்ட் நகரில் இதைவிட பெரிய கூத்தே நடந்துள்ளது. ரெயின்போ பிரிட்ஜ், ராக் மியூசிக், கார்த்திக் ஹார்ட் பீட்ஸ், ராக் பேன்ட் இந்த கலைகள் எல்லாம் எந்த காலத்தில் தமிழ் கலையானது! மொத்தத்தில் சென்னை சங்கமத்தின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அதன் ஆரம்ப செயல்பாடு மண்ணின் மனம் கமழும் கலைகளை உயிர்ப்பதாக இல்லை! இது ஏதோ சென்னை வாசிகளை இன்னொரு வகையில் சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.
சென்னை சங்கமம் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் வைத்திருக்கும் பின்னணி பேனர்கள் செயற்கையாகவே டிஜிட்டல் பேனரில் அமைக்கப்பட்டுள்ளது. ஏன் நம்முடைய ஓவியக் கல்லூரி மாணவர்களை பயன்படுத்தியிருந்தால், அவர்களது கைவண்ணமும் வெளியில் வந்திருக்குமே! கலைஞருக்கு இதுவெல்லாம் தெரியாமல் போனதா! அல்லது தெரியப்படுத்தாமல் போனார்களா?
வடசென்னையும் - தென் சென்னையும் கலை - கலாச்சாரத்தில் இரண்டு எதிர் எதிர் புலன்கள் போல் செயல்படுகிறது.