October 16, 2006

நரகாசுர வதம்

நரகாசுர வதம் நடைபெற்று முடிந்துள்ளது சென்னையில். நடத்தியவர்கள் சாட்சாத் தி.மு.க.வினர்தான். மாநில சுயாட்சி, ஜனநாயகத்தின் தூண்கள் என்றெல்லாம் வீரவசனம் பேசியவர்கள் மக்களின் செல்வாக்கை இழந்து செல்லாகாசாகியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் சென்னை திமுகவின் கோட்டையில் சரிபாதி ஓட்டை விழுந்ததை திமுக இன்னும் மறக்கவில்லை. சட்டமன்றத்தை கைப்பற்றிட இலவச தொலைக்காட்சி, நிலம், எரிவாயு அடுப்பு என மலை, மலையாக வாக்குறுதி அளித்த பின்னும், ஏழு கட்சி கூட்டணி அமைத்த பின்னும் முழுமையான மெஜாரிட்டியோடு ஆட்சிக்கு வர முடியவில்லை திமுகவால். இதனையெல்லாம் மனதில் கொண்டுதான் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற புதிய அணுகுமுறையை அரங்கேற்றியிருக்கிறது திமுக தலைமை. உள்ளாட்சியின் அடித்தளமே மக்களின் பங்கேற்புதான். ஜனநாயக மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம் என்று அடுக்கு மொழியில் பேசும் திமுக தலைவரும், தலைமையும் எடுத்து விட்ட துருப்புச் சீட்டுதான் சினிமா காட்சிகளையும் விஞ்சும் அளவிற்கு சுமோக்களில் ரவுடிகளை கத்தி, கட்டை உட்பட ஏற்றிக் கொண்டு வார்டு வாரியாக பூத்துக்களை கைப்பற்றியுள்ளனர். சில பூத்துக்களில் காலை 8.00 மணிக்கெல்லாம் அரங்கேற்றம் முடிந்து விட்டது. திமுக மாநிலத்தில் மக்கள் ஆதரவை இழந்துள்ளது என்பதை உணராமல், இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதன் மூலம் அண்ணா ஆரம்பித்த திராவிட இயக்கம் தனக்கான சவக்குழியை தோண்டிக் கொண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். நரகாசுர வதத்தை திமுக - அதிமுக மீது செய்யுமோ? அல்லது அதிமுக திமுக மீது செய்யுமோ? நமக்குத் தெரியாது. ஆனால் நரகாசுர வதத்தை திராவிட இயக்கத்தின் தொடுத்திட மக்கள் தயாராகி விட்டனர்.

1 comment:

ஜயராமன் said...

சந்திப்பு அவர்களே,

தருமி அவர்களின் இன்னொரு பதிவில், நான் போட்ட பின்னூட்டம் இதோ.

///

நான் வசிக்கும் மயிலையில் என் வயதான தாய், தந்தையுடன் வாக்களிக்க போனேன்.

என் தெருவின் எதிர்கடைக்காரர் திமுக உழைப்பாளி. அவரே பார்வையாளராக உட்கார்ந்திருந்தார். என்னைப்பார்த்ததும் "சார், உங்க ஓட்டு போட்டாச்சு. லேட்டு நீங்க." என்றார்

நான் மறுத்தேன். ஏன்சார், உங்களுக்கு என்னை தெரியாதா? என் ஓட்டை மற்றவர்கள் எப்படி போட முடியும். உங்கள் முன்னாலேயே?" என்றேன். அவர் நமுட்டுசிரிப்பு சிரித்தார். "நான் இப்பதான் வந்தேன்" என்று சுரத்தில்லாமல் சொன்னார். பொய் என்று புரிந்தது.

சரிதாம்பா. போட்டுட்டு போகட்டும் என்று அவர் தேர்தல் அதிகாரியிடம் சொன்னார்.

தேர்தல் அதிகாரி சம்பிரதாயங்களை முடித்து வாக்குசீட்டு கொடுத்தார்.

சீட்டு மடிக்கப்பட்டு இருந்தது.

இப்பொழுதுதான் கள்ள ஓட்டு எப்படி போடுகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். மடித்த ஓட்டில் ஏற்கனவே சூரியனில் முத்திரை இருந்தது. நானும் அதற்கே குத்தினால் அது சரியான வாக்காக ஆகும். இல்லாவிட்டால், செல்லாத்தாகிவிடும். இதுவே அவர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறாகவே கள்ள ஓட்டு போடப்படுகிறது என்று புரிந்துகொண்டேன்.

நான் சத்தம் போட்டு, மடிக்காத புது வாக்கு சீட்டு கேட்டேன்.

என் எதிர்வீட்டு நண்பர் எடுத்துக்கொடுத்தார்.

ஓட்டுபோட்டு திரும்பினோம்.

திமுகவை தவிர பூத்தில் வேறு யாரும் இல்லை. தேர்தல் அதிகாரி ஏதோ கடனே என்று நின்றுகொண்டிருந்தார். எல்லா நாட்டாமையும் என் எதிர்வீட்டு நண்பர்தாம்.

வெளியே வரும்போது போலீஸ் வாசலில் கும்பலாக நின்றுகொண்டு டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பயல் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

(மேலும் அதிகாரபூர்வ விவரம் வேண்டுமா. என்னை அணுகவும்...)

இதன் பெயர் தேர்தலா!!

கருணாநிதிக்கு வயசாக வயசாக ஏன் இப்படி புத்தி போகிறது? நான் திமுக இவ்வளவு மட்டமாக போகும் என்று கனவிலும் நினைக்கவில்லையே!!

நன்றி

சொன்னவர்: ஜயராமன் | 10/16/2006 05:06:52 PM

தங்கள் பதிவுக்கு நன்றி