அல்கொய்தா, பின்லேடன், பயங்கரவாதம் ஆகிய சொற்கள் லண்டனையும், வாஷிங்டனையும் மட்டுமின்றி உலக மக்களையே அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளன. பயங்கரவாத பிசாசை ஓட்ட வந்த மந்திரவாதியாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் புனித கூட்டு சேர்ந்து ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் ஏப்பம் விட்டு விட்டன. தற்போது தன்னுடைய சிஷ்யப் பிள்ளை இசுரேலை ஏவி விட்டு பாலஸ்தீனத்தையும், லெபனானையும் சின்னாபின்னமாக்கி வருகின்றனர். அடுத்து ஈரான், சிரியா, வடகொரியா, கியூபா என்று பெரும் பட்டியலை வைத்துள்ளது அமெரிக்கா. ஜார்ஜ் புஷ்தான் இன்றைக்கு உலக ஜனநாயக காவலராக புனிதவேடமிட்டுள்ளார். அமெரிக்கா இன்றைக்கு மட்டுமல்ல அது தோன்றிய நாள் முதலே பூமி பந்திற்கே ஆபத்தை உருவாக்கி வருகிறது. எனவே அமெரிக்காவின் புனித வேடத்தை இந்நாளில் அலச வேண்டியது வரலாற்று கடமையாகிறது.
பயங்கரவாத மந்திரத்தை ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, 60 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகாசாகி மீது அணு குண்டை வீசி 3,50,000 மக்களை கொன்று குவித்த ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அகற்றி விட முடியாது.
ஹிட்லரின் நாஜிப்படைகள் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், ஜப்பானும் போரை முடிவுக்கு கொண்டு வர இசைந்து விட்ட பின்னணியில் 1945 ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, சாதாரண அப்பாவி மக்கள் வசிக்கக்கூடிய ஹிரோஷிமா நகரத்தின் மீது காலை 8.15 மணியளவில் அமெரிக்க விமானப் படையின் “பி-29 விமானம்” சுமந்து வந்த “லிட்டில் பாய்” Little Boy என்று பெயரிடப்பட்ட யுரேனிய அணுகுண்டை நகரத்தின் மையப்பகுதியில் வீசியது. அணுகுண்டு வீசிய சில மணித்துளிகளிலேயே 80,000த்திற்கும் அதிகமான மக்கள் எரிந்து சாம்பலாயினர். பல லட்சக்கணக்கான மக்கள் என்ன நடைபெறுகிறது என்று அறிவதற்கு முன்பே தங்களது தோல்கள் கழண்டு விழுவதையும், கை, கால், முகம் என அனைத்தும் சிதைந்து உருக்குலைந்து போவதைக்கூட உணர முடியாதவர்களாயினர். அணுகுண்டு வீசப்பட்டதால் ஏற்படுத்திய வெப்பம் 5000 டிகிரி செல்ஸியசை விட மிக அதிகம். தொடர்ச்சியாக ஏற்படுத்திய அணுக்கதிர் வீச்சு நகரத்தின் புல், பூண்டுகளையும், காற்று, தண்ணீர் என அனைத்தையும் உருத்தெரியாமல் சிதைத்து விட்டது.
“லிட்டில் பாய்” ஏற்படுத்திய தாக்கத்தில் திருப்தியடையாத அமெரிக்கா மூன்று நாள் கழித்து ஆகஸ்ட் 9 அன்று “பேட் பாய்” Fat Boy (குண்டு பையன்) என்று பெயரிடப்பட்ட புளுட்டோனிய அணுக்குண்டை “நாகாசாகி” நகரின் மீது வீசியது. அங்கும் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட அதே நிலைமை குண்டு வீசப்பட்ட கண்ணிமைக்கும் நேரத்தில் 40,000 பேரை மோட்சத்திற்கு அனுப்பியது அமெரிக்கா.
“ஈராக்கில் பேரழிவு மிக்க ஆயுதங்கள் இல்லாமல் போனாலும், அமெரிக்கா ஈராக் மீது தொடுக்கப்பட்ட போர் நியாயமானதே” என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்ளும் இதே அமெரிக்காதான். ஜப்பான் மீதும் எந்தவிதமான போர்கால நியதிகள் துளியுமின்றி, சாதாரண அப்பாவி மக்கள் வசிக்கக்கூடிய பெரு நகரங்கள் மீது, எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, கோழைத்தனமான தாக்குதலை நடத்தியது.
இது குறித்து அமெரிக்க பல்கலைக் கழகத்தின் நியூக்ளியர் கல்வி மைய இயக்குனர் பீட்டர் குஸ்னிக் கூறும் போது, “அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் இந்த செயல், போர்க்கால குற்றம் மட்டுமல்ல; மனித குலத்திற்கே எதிரான பெருங்குற்றமாகும்” என்று தன்னுடைய மனக் கொதிப்பை வெளிப்படுத்தினார்.
உண்மையில், அமெரிக்காவின் இந்த நீசத்தனமான செயலுக்கு அடிப்படை காரணம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுக்குள் உலகம் இருக்க வேண்டும் என்ற மேலாதிக்க உணர்வு, கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொண்டு பரவுமானால் அணுகுண்டு வீசவும் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கவும் ட்ரூமன் விரும்பினார். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகும் கொரியா, வியட்நாம், பிலிப்பைன்° போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவ முகாமாக்கிட அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய யுத்தத்தை உலகமறியும்; யுத்த சீரழிவுகளில் மாட்டிக் கொண்ட சோவியத் யூனியன் புனர் நிர்மானம் செய்ய மிகவும் சிரமப்பட்டது. பின்னால் உருவான தவறான போக்குகளும் சேர்ந்து சோவியத் பின்னடைவை வேகப்படுத்தி விட்டன.
சோசலிச சோவியத் யூனியனின் பின்னடைவுக்கு பின்னால், இன்றைக்கு தானே நவீன இளவரசன் என வலம் வந்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் இராணுவத் தளங்களை செயல்படுத்திக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஆண்டு இராணுவச் செலவு எவ்வளவுத் தெரியுமா? 455 பில்லியன் டாலர்; இது மட்டுமின்றி ஈராக்கையும் - ஆப்கானி°தானையும் ஒடுக்குவதற்கு தனியாக 82 பில்லியன் டாலர் செலவிடுகிறது. உலகம் முழுவதும் அதனுடைய முதலீடுகளும், பங்கு சந்தை விளையாட்டுக்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ராணுவச் செலவு செய்ய பணத்தை குவிக்கிறது.
தன்னைத் தவிர வேறு யாரும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது, என்பதோடு மின்சார உற்பத்தி போன்றவற்றிற்கு கூட அணு சக்தியை பயன்படுத்துவதை ஆந்தை கண் கொண்டு பார்க்கும் அமெரிக்கா, “புதிய அமெரிக்க நூற்றாண்டு திட்டத்தை”
(PNAC - The Project for the New American Century) விரைந்து செயல்படுத்தி வருகிறது. இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உலக நாடுகளை தன்னுடைய காலுக்கடியில் கொண்டு வருவதே இதன் திட்டம்.
ஏகாதிபத்தியத்தின் மாயவலைகளாக செயல்படும் உலகவங்கி, ஐ.எம்.எப். உலக வர்த்தக ஸ்தாபனம் மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்” என்ற போர்வையில் அரசியல் மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா என பூமிப் பந்து முழுவதும் தனது கழுகுக் கால்களை பரப்பும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகவும், நாடுபிடிக்கும் போர் வெறிக்கு எதிராகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் மக்களை விழிப்புறச் செய்திடுவதே இன்றைய தேவையும், கடமையுமாகும்.
1 comment:
அமெரிக்க சாத்தானின் மூலம் பரவும் உலகளாவிய பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைக்கு நன்றி.
How do we stop US and its allies's Rowdism??
இந்த உலக ரவுடியை கட்டுப்படுத்த்வது மிக முக்கியமான கடமை.இல்லாவிட்டால் எல்லா உழைக்கும் மக்களுக்கும் அழிவுதான்.
இஸ்ஸ்த்
Post a Comment