August 03, 2006

உறவுகளின் வேர்!


உறவுகள் மிகப் புனிதமானவை. மனிதகுலம் அறிவு வளர்ச்சிப் பெற்றதிலிருந்து உறவுகள் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்ப வரையறுக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், புராதன காலத்தில் இருந்த மனித உறவுகளுக்கும், தற்போதைய நவீன காலத்தில் இருக்கும் மனித உறவுகளுக்கும் இடையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. சமூக வளர்ச்சிப் போக்கிற்கேற்ப இந்த உறவுகள் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது என்பது வரலாற்று உண்மை. இந்த மாறுதல் உன்னதமான நிலையை நோக்கி பரிணாமடையும்.



உறவுகள் என்பது குறித்து ‘கிரியா தமிழ் பேரகராதி’ இவ்வாறு வர்ணிக்கிறது. “தாய்வழியாகவோ, தந்தை வழியாகவோ அல்லது திருமண உறவுகள் மூலமாகவே ஏற்படுவதே உறவுகள்” எனவே இந்த பொருளில் ‘உறவுகள்’ குறித்து விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் நண்பர்களை உறவாக நம் தமிழ் சமூகத்தில் கருதுவதில்லை. இங்கே இரத்த உறவுகள்தான் பிரதானப்படுத்தப்படுகிறது.



குறிப்பாக, நம் தமிழ் சமூகத்திலும், இந்திய நிலவுடைமை சமூகத்திலும் இரத்த உறவுகள் என்பது 99 சதவீதம் ஜாதிய ரீதியான உறவாகத்தான் இருக்கிறது. அதாவது, இந்த ஜாதிய சமூக அமைப்பை நீடிக்கும் நிலவுடைமை சிந்தனைக் கொண்ட ஒரு உறவாகத்தான் இது அமைந்துள்ளது. அதே சமயம் மேலை நாடுகளில், ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கட்டமைப்பு இல்லை என்பது இங்கே சுட்ட வேண்டியுள்ளது.




சரி! நம்முடைய தமிழ் சமூகத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி, மாமன், கொழுந்தியா, சித்தப்பா, பெரியப்பா என பலவாறு உறவுகள் மலர்கிறது. உண்மையில் இந்த உறவுகள் எதை ஆதாரமாக கொண்டு இயங்குகிறது? அதனுடைய மூல வேர் எது? என்பதுதான் என்னுடைய பிரதான கேள்வி!



நாள்தோறும் செய்தித்தாள்களில் உறவுகள் குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன.




  • சொத்து தகராறு அண்ணனை கொன்ற தம்பி தலைமறைவு!


  • வேலை வாங்கித் தராததால் தந்தை கொலை! மகன் வெறிச் செயல்!!


  • தந்தையின் பிணத்தை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு! பாகப்பிரிவினையில் வஞ்சகம் செய்ததால் மகன் வீட்டைப் பூட்டிச் சென்றார்!


  • கணவனை கொன்ற மனைவி!


  • மனைவியை கொலை செய்த கணவன்!



இவ்வாறு பல கோணங்களில் பல செய்திகளை நீங்களும் படித்திருப்பீர்கள்...



உறவு என்பது மிகவும் மென்மையானது. அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதில்லை. எனவே, உறவு என்பது இடிக்க முடியாத சுவரும் அல்ல! தகர்க்க முடியாத கோட்டையுமல்ல!!



மொத்தத்தில் இந்த உறவுகள் என்பது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது. முறிக்கப்படுகிறது. பல நேரங்களில் இது கொலைகளிலும் சென்று முடிகிறது.



இவ்வாறு எழுதுவதால் பலருக்கு முகம் சுளிப்பு வரலாம். இருப்பினும் உறவுகள் குறித்த ஒரு அலசலை இத்தகைய கோணத்தில் செய்யாமல் இருந்தால், அதில் தவறிழைத்து விடுவோம் என்பதற்காகத்தான் இந்த கோணத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.



புராதன பொதுவுடைமை சமூகம் என்று அழைக்கப்பட்ட மனித குலத்தின் ஆரம்பகால சமூகத்தில் உறவுகளே இருந்ததில்லை. மனிதர்களில் யாரும், யாருக்கும் வித்தியாசமானவர்களில்லை. ஏன் தாய் - மகன் உறவு கூட மலரவில்லை என்பது குறிப்பிடவேண்டியுள்ளது.



பின்னர் இந்த சமூகம் ஆண்டான், அடிமை சமூகமாக மாறியபோது இந்த உறவு முறை அடிமைக்கும், அடிமைகளை ஆளுபவருக்குமான உறவாக மாறியது. இங்கே அடிமைகள் ஒரு சமூகமாகவும், ஆண்டைகள் ஒரு சமூகமாகவும் இருந்தனர். இவர்களுக்கு உள்ள உறவுகளும் அவ்வறே இருந்தன. அப்போது மாமன், மைத்துனி உறவெல்லாம் ஏற்படவில்லை.



இந்த சமூகமும் மாற்றமடைந்து நிலவுடைமை சமூகமாக மாறியபோது, நிலத்தை உடமையாக வைத்து உறவுகள் மலர்ந்தது. அதாவது, தங்களுடைய நிலம் யாருக்கும் அல்லது யாருடைய கைகளுக்கும் சென்று விடக்கூடாது; அந்த குடும்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஆணாதிக்க சமூக உறவு ஏற்படுத்தப்பட்டது. இந்த சமூகத்தில் நிலமே உறவை தீர்மானிக்கும் பிரதான கருவியாக மாறியது. இந்த சமூகத்தில்தான் நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் உறவுகள் மலர்ந்தன. சொத்து கைமாறாமல் இருப்பதற்காகத்தான் இந்த ஜாதிய சங்கிலியும் மனிதர்கள் மீது பூட்டப்பட்டது.




அடுத்து, முதலாளித்துவ சமூகம்: இச்சமூகத்தில் உறவுகள் சுதந்திரமானதாக மாறியது. இந்த முதலாளித்துவ அமைப்பு இந்தியாவில் இன்னமும் முழுமையாக மலரவில்லை. எனவே இங்கே இரண்டும் கெட்டான் உறவுகள்தான் இன்னமும் நீடிக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் ஜாதிகளைக் கடந்த உறவுகள் மலர்ந்திருக்க வேண்டும். ஆனால், மலரவில்லை. அதே போல் இங்கே மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் என்பது, ‘பணத்தை பிரதானமாக’ வைத்துதான். எனவேதான் இந்த சமூகத்தில் உறவுகள் வெறும் பண உறவாய் மாறிப்போய் உள்ளது. பணமில்லாத அடித்தட்டு மக்களிடையே இந்த உறவுகள் காலாவதியாகிப்போய் விட்டது. அல்லது காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் எங்கே பணம் இருக்கிறதோ அங்கேதான் இந்த உறவுகள் நிலைநாட்டப்படுகிறது. பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறான். ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பிகள், சகோதர, சகோதரிகள் என யாராக இருந்தாலும் பணம்தான் பெரும்பகுதி மக்களுக்கு உறவை தீர்மானிக்கும் கருவியாக உள்ளது.




இதைத்தான் காரல் மார்க்ஸ் தன்னுடைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.






“இன்றைய குடும்பம், பூர்ஷ்வா குடும்பம், எதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது? மூலதனத்தை; தனிநபரின் லாபத்தை. இத்தகைய குடும்பம், பூர்ண வளர்ச்சி அடைந்த வடிவத்தில் பூர்ஷ்வாக்கள் மத்தியில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இத்தகைய நிலைமைக்கு அனுபந்தமாக நாம் காண்பதென்ன? பாட்டாளிகள் மத்தியில், அநேகமாக, குடும்பம் இல்லாமலிருப்பதும் வெளிப்படையான விபச்சாரமும்தாம்.”




“பூர்ஷ்வா குடும்பத்தின் அனுபந்தம் மறையும்பொழுது, பூர்ஷ்வா குடும்பம் இயல்பாகவே மறைந்து விடும்; மூலதனம் மறையும் பொழுது இரண்டும் மறைந்து விடும்”



எனவே, நாம் விரும்புகிற புனிதமான உறவுகள் இன்றைக்கு இல்லை என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.




மனித சமூகத்தில் ஒரு மனிதன், இன்னொரு மனிதனை புரிந்து கொண்டு “இயnசு பிரான் கூறுகிறாரே அதுபோல, அதாவது, நீ உன்னைப்போல் பிறரை நேசி” என்ற உறவு உண்மையில் மலர வேண்டும் என்றால், பணத்தை - சுரண்டலை அடிப்படையாக கொண்ட இந்த சமூகத்தை மாற்றியமைப்பதன் மூலம்தான் உண்மையான உறவுகளை நம்முடைய சமூகம் பெற்றிடும். எனவே, இந்த போலி உறவுக்கு முடிவு கட்டுவது என்பது இந்த நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவதோடு பிணைக்கப்பட்டுள்ளது. இந்த கடமையை நிறைவேற்றுவதே, தோழமையான உறவுக்கு உரமூட்டும், உண்மையான உறவுக் கடமையாகும்.

12 comments:

Anonymous said...

Did family vanish in Soviet Union or in Mao's China.Is it dead in Cuba.

சந்திப்பு said...

அனானி இங்கே குடும்ப உறவுகள் எதை அடிப்படையாக வைத்து அமைகிறது என்பது குறித்துதான் விவாதிக்கப்பட்டுள்ளது. குடும்பமே அழிந்து விட்டது; அல்லது இல்லை என்ற பொருளில் அல்ல. ஆதாயப்பூர்வமாக செயல்படும் குடும்ப உறவுகள் - உன்னதமான நிலையினை நோக்கிச் செல்லவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். அத்தகைய உன்னதமான குடும்ப உறவுகள்தான் தாங்கள் குறிப்பிட்டுள்ள சோவித், சீனா, கியூபாவில் நிலவுகிறது. அத்துடன் கூட்டுக் குடும்பம் என்கின்ற உறவுகள் முற்றிலும் மாறி, தனிக்குடும்ப உறவாக மலர்ந்துள்ளது. இந்த உறவு பர°பர புரிதல் மற்றும் நேசத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட வேண்டியது. தங்கள் கருத்துக்கு நன்றிகள்.

கோவி.கண்ணன் said...

//உறவு என்பது மிகவும் மென்மையானது. அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதில்லை. எனவே, உறவு என்பது இடிக்க முடியாத சுவரும் அல்ல! தகர்க்க முடியாத கோட்டையுமல்ல!!//

மிக நல்ல கட்டுரை .. முழுக்கட்டுரைக் கருத்துக்களுக்கும் உடன்படுகிறேன். பாராட்டுக்கள் . போட்டியில் உங்கள் உறவுகளின் வேர் செழிக்க வாழ்த்துகிறேன்

சந்திப்பு said...

நன்றி கோவி. கண்ணன்.

இரா.சுகுமாரன் said...

நீங்கள் இப்போது சொல்வதை

"கல்லானேயானாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லோரும் எதிர் கொண்டழைப்பர் இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்றீந்தெடுத்த தாய் வேண்டாள்"

என்று அவ்வைப் பாட்டி அப்போதே சொல்லி இருக்கிறார்.

//புராதன பொதுவுடைமை சமூகம் என்று அழைக்கப்பட்ட மனித குலத்தின் ஆரம்பகால சமூகத்தில் உறவுகளே இருந்ததில்லை. மனிதர்களில் யாரும், யாருக்கும் வித்தியாசமானவர்களில்லை. ஏன் தாய் - மகன் உறவு கூட மலரவில்லை என்பது குறிப்பிடவேண்டியுள்ளது.//

நீங்கள் குறிப்பிடும் காலத்திற்கு பின் தாய்வழி சமூக அமைப்பு இருந்தது. அதில் தாய் குடும்பத்தலைவராக இருந்தார். அதன் பின் தான் ஆண்டான் அடிமை சமூகம் எல்லாம்.

தந்தை என்று குறிப்பிடும் படி யாரும் இல்லை ஏனெனில் தாய்-மகன், அண்ணன்-தங்கை என வரைமுறையற்ற உறவு அக்காலத்தில் நிலவி வந்தது.

//சரி! நம்முடைய தமிழ் சமூகத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி, மாமன், கொழுந்தியா, சித்தப்பா, பெரியப்பா என பலவாறு உறவுகள் மலர்கிறது. உண்மையில் இந்த உறவுகள் எதை ஆதாரமாக கொண்டு இயங்குகிறது? அதனுடைய மூல வேர் எது? என்பதுதான் என்னுடைய பிரதான கேள்வி!//
//குறிப்பாக, நம் தமிழ் சமூகத்திலும், இந்திய நிலவுடைமை சமூகத்திலும் இரத்த உறவுகள் என்பது 99 சதவீதம் ஜாதிய ரீதியான உறவாகத்தான் இருக்கிறது.//

சாதியம் மட்டும் இல்லாமல் இது சொத்துடைமை சமூகமாக இருப்பதால் உறவுகள் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணமாகிறது.

இவை இல்லாமல் பாதுகாப்பற்ற சமூக அமைப்பாக இருப்பதால் உறவுகள் நிலைத்துள்ளன என்றும் சொல்லலாம் .

சந்திப்பு said...

சுகுமாறன் நன்றி. தங்கள் கருத்துக்களுக்கு மாற்று கருத்தில்லை. இக்கருத்துக்களில் நான் உடன்படுகிறேன். புராதன பொதுவுடைமை சமூகத்தில் தாய்வழி சமூகம்தான் நிலவியது. இருப்பினும் தாயோடு மகனுக்கு உடல் ரீதியான உறவுகள் இருந்தது. அதுவொரு அடையாளம் மட்டுமே.
அடுத்து தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரியே சொத்துடைமை நீடிப்பதற்கு இந்த உறவு முறைகள் பயன்படுகிறது. முதலாளித்துவ உலகில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது சம்பந்தமான தங்கள் கருத்தும் சரியானதே!

Jazeela said...

//மொத்தத்தில் இந்த உறவுகள் என்பது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.// நூறு சதவீதம் உடன்படுகிறேன். பணமிருந்தா தாங்க பாச பந்தமெல்லாம். செல்வமிருந்தாதான் செல்வாக்கும். இது இரண்டும் இருந்தாதான் உறவுகள். நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

சந்திப்பு said...

நன்றி ஜெஸிலா...

அசுரன் said...

நல்ல முயற்சி....

கம்யுனிச சிந்தனையை பரவலாக்கும் முயற்சி...

வரவேற்கிறேன்...

உறவுகள் மலர்வதைப் பற்றிய விசயத்தை, தனிஉடமை பரிணமித்த விதம், அதன் தேவையையொட்டி உறவுகள் கெட்டிப் பட்டது, அதன் ஒரு கிளையாக பெண்ணடிமைத்தனம் உருவாதல், தந்தைவழி சமூகம் உருவாதல் என்று சொல்லியிருந்தால் படிப்பவர்களுக்கு சோசலிச பார்வைக்கு ஒரு அறிமுகமாக இருந்திருக்கும். ஒரு வேளை இந்த கட்டுரையின் வேறூ பகுதியில் இந்த விசயங்களை கையாள திட்டமிட்டிருந்தீர்களா?

வாழ்த்துக்கள்,

ஒரு வேளை தோன்றினால், இன்னோடு விலாவாரியான பின்னூட்டமிடுகிறேன் ;-)

Did you happen to read my Coke article?

http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.html

நன்றி,
அசுரன்

சந்திப்பு said...

நன்றி அசுரன்.

சுருக்கமாக எழுத வேண்டும் என்ற நோக்கில்தான் இவ்வாறு பதியப்பட்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்திற்கு உள்ளே சென்றால் அது மிக நீண்டு விடும் என்பதற்காக ஒரு காண்செப்ட்டை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. தங்களது கருத்துக்கு நன்றிகள்.

Unknown said...

//உறவுகள் என்பது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது. முறிக்கப்படுகிறது.//

சத்யமான வரிகள். உறவுகளை அறிவு கொண்டு அணுகியிருக்கிறீர்கள்.

சந்திப்பு said...

நன்றி Dev