April 04, 2009

பாரியை புதைத்த ஜெயமோகன்!


இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில், "திரிச்சூர் நாடக விழா" குறித்து எழுதியிருந்தார். அதில் பிரளயனின் “பாரி படுகளம்” நாடகம் நிகழ்த்தப்பட்டது குறித்து கடுமையாக தாக்கியிருந்தார். அப்போதே அது ஒரு நேர்மையான விமர்சனமாக இருக்க முடியாது என்று கருதினேன். இருப்பினும் "பாரி படுகளம்" நாடகத்தை பார்க்காததால் அது குறித்து எதுவும் சொல்ல முடியாமல் இருந்தேன். அதே காலத்தில் வெளியான "விசை" இதழில் எழுத்தாளர் பிரபஞ்சன், இந்நாடகத்தை, "தமிழ் நாடகப் பரப்பில் முக்கிய நாடகம்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஒரே மாதிரியான பார்வையை வெவ்வேறு எழுத்தாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், தற்கால உலகில் உருவாகியுள்ள சிறப்புமிக்க இந்நாடகம் குறித்து ஜெயமோகன் வைத்துள்ள விமர்சனங்களை வெறும் "கழிவு" என்று சுருக்கமாக சொல்லலாம். எழுத்தாளுமை என்பது இலக்கிய உலகையும், மனித குலத்தையும் வாழ்விப்பதற்கான ஆயுதமாகவே கருதுகிறேன். இந்த விதிக்கு அந்நியமாகிவிட்டார் ஜெயமோகன்.
கடந்த வாரம், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்த்தப்பட்ட "பாரி படுகளம்" நாடகத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த பார்வையாளர்களின் கைத்தட்டலும், பாராட்டும் ஜெயமோகனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அவர் காதுகளுக்கு கேட்டிருந்தால் இன்னும் சற்று வயிற்றெறிச்சல் பட்டிருக்கலாம். இந்த நாடக நிகழ்விற்கு பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி, சுதந்திரப் போராட்ட வீரர் என். சங்கரய்யா, நடிகர் நாசர், ஐஐடி பேராசியர் வசந்தா கந்தசாமி. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறித்துதா காந்தி உட்பட பல முக்கிய ஆளுமைகள் கலந்துக் கொண்டனர்.

இப்போது களத்திற்குள் நுழைவோம். பாரி படுகளம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற சம்பங்களை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக இந்த மூவேந்தர்களுக்கு மத்தியில் அறம் பொருந்திய ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தான் பாரி. பாரியின் நாடு பறம்புமலை. இந்த மண்ணில் இயற்கைச் செல்வத்திற்கு எந்த குறையும் இல்லை. இதனாலேயே இச்சிறு நாட்டின் மீதும், இதனை ஆண்டு வந்த பாரி மன்னன் மீதும் ஒரு கண் வைத்திருந்தனர் மூவேந்தர்கள். பாரி பறம்பில் உயிர்கள் அனைத்தும் தம்போலவே நேசிக்கப்படுகின்றன. எந்த உயிர்களுக்கும் யாரும் கெடுதல் ‍ெசய்வதில்லை. ஏன் பறம்பில் உள்ள மரங்களைக் கூட யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவிற்கு மக்கள் இயற்கையை நேசித்தனர். அவற்றோடு ஒன்றி வாழ்ந்தனர். மக்கள் ஒருவருக்கொருவர் அறத்தோடும், திறத்தோடும் வாழ்ந்தனர். பெண்களை பெரிதும் மதித்தனர் பறம்பு மக்கள். பறம்பின் சிற்றரசனான பாரிக்கு அங்கவை, சங்கவை என்று இரு பெண்கள் இருந்தனர். அவர்களும் வில் வித்தை முதல் வாள் வித்தை வரை அனைத்தும் கற்றிருந்தனர்.

பறம்பு மலையை நோக்கி வரும் கலைஞர்களுக்கு பரிசுகளை அள்ளி அள்ளி வழங்கினான் பாரி. முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பார்களே அதுபோல அந்த அளவிற்கு வாரி வழங்கினான். ஏன் பாரியிடம் வந்து உனது நாட்டை கொடுத்துவிடேன் என்றுக் கேட்டால் கூட கொடுத்துவிடுவான் என்று கூறுமளவிற்கு அவனது கொடைத்திறன் இருந்தது.

இப்படிப்பட்ட பறம்பு நாட்டையும், பாரி மன்னரையும் மூவேந்தர்கள் கிஸ்தி கட்டச் சொல்லுகிறார்கள். வியாபாரம் செய்வதற்கு தங்களை அனுமதிக்கச் சொல்லுகிறார்கள், மரங்களை வெட்டிச் செல்வதற்கு கூட அனுமதி கேட்கின்றனர் அந்நிய நாட்டினர். இதனால் கொதித்தெழுகிறான் பாரி மன்னன். மரத்தையா‍? வெட்டச் சொல்லி கேட்கிறீர்கள். முடியாது மரங்கள் எங்களது உயிர்களைப் போல என்று நேசிக்கிறோம் என்று கூறி அவர்களை உடனடியாக வெளியேற்றுகிறான். இப்படியான பாரி மன்னனின் திறமைகள் எட்டுத்திக்கும் பரவுகிறது. இவரது பெருமைகளை புலவர் கபிலர் தனது பாடல்களில் அழகாக வடிக்கிறார். இறுதியில். மூவேந்தர்களும் பறம்பு நாட்டின் மீது போர்தொடுத்து அபகரிக்க திட்டம் போடுகின்றனர். இந்தச் செய்தி பறம்பு மன்னருக்கு தெரியவரும்போது துடித்துப் போகிறான் பாரி. எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற நம்மீதா போர் என்று பொங்குகிறான், உலகத்தில் போரே ‍இருக்கக்கூடாது என்று வலியுறுத்தும் நம் மீதா போர் என்று சினத்துடன் கேட்கிறான். சிறுங்குடி என்றும் பெருங்குடி என்றும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது வெட்கக்கேடானது. இந்த விதியே இவ்வுலகில் இருக்கக்கூடாது என்று சொல்லும் பாரி. நாம் போரை விரும்பவில்லை இருப்பினும் நம் மீது போர் திணிக்கப்பட்டால் எம் மக்களே அதனை சந்திப்பார்கள் என்று கூறுகிறான்.

இதற்கிடையில் பறம்பு மலையை மூன்று புறமும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படை தாக்கத் தொடங்குகிறது. சிற்றரசாக இருந்தாலும் அந்த நாட்டு மக்கள் தமது மண்ணைக் காப்பதற்காக வீரத்துடன் போரிடுகின்றனர். எதிரி நாட்டுப் படைகள் சிதறுகிறது. ஆகா இந்த சிறுகுடிய வெல்வதற்கு நாம் இவ்வளவு படை வீரர்களை இழக்க வேண்டியிருக்கிறதே என்று தங்களுக்குள் புலம்புகின்றனர் மூவேந்தர்கள். அதற்குள் இந்த மூன்று பேருக்கும் பறம்பு மலை வெற்றி கொண்டால் யார் யாருக்கு என்ன வேண்டும் என்று பங்கு போடத் துடிக்கின்றனர். இயற்கை வளம் கொண்ட நாட்டில் எந்த பாகம் தமக்குரியது என்ற சண்டைகள் சர்ச்சைகளாக மாற. சோழ மன்னன் குறுக்கிட்டு முதலீல் பாரியை வெற்றிக் கொள்வோம் பின்னர் பங்கு குறித்து விவாதிக்கலாம் என்று கூறி போரை தீவிரப்படுத்தி பாரி நாட்டை சூறையாடி வெற்றிக் கொள்கின்றனர். இதில் மூவேந்தர்களால் பாரி படுகொலை செய்யப்படுகிறான். படுகொலை செய்யப்பட்டு குற்றுயிரும், குலையுருமாக இருக்கும் பாரியை காண வரும் புலவர் கபிலரிடம் பாரி பேசும் வசனங்கள் நெஞ்சை உருக்குவதாக அமைகிறது. உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும், உலகில் இனிமேல் சிறு நாடு, பெரு நாடு என்ற பேதம் கூடாது, போரில்லா உலகம் வேண்டும் என்று கூறுவதோடு, நாங்கள் என்ன தவறு செய்தோம். எதற்காக இந்தப் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது, எங்கள் மக்கள் ஏன் கொல்லப்பட்டனர் என்ற கேள்விகள் இன்றைக்கு ஏகாதிபத்திய அத்துமீறல்களை கண்முண்னே நிறுத்துவதாக உள்ளது.

காலம்தான் மாறிக்கொண்டே இருக்கிறதே தவிர காட்சிகள் மாறவில்லை. அன்றைக்கு மூவேந்தர்கள் என்றால். இன்றைக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்தியங்கள் ஈராக்கை சூறையாடியதையும், ஆப்கானை நிர்மூலமாக்கியதையும் நினைவுக்கு கொண்டு வருகிறது.

இந்தப் பாரியிடம் வந்து இந்த நாடு தேவை என்று கேட்டிருந்தால் கூட வாரி வழங்கியிருப்பானே என்று ஒரு கட்டத்தில் மூவேந்தர்களிடம் கபிலர் கூறுவதும், உங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்போது எதற்காக இந்தப் போர்? என்று அந்த மூவேந்தர்களை கபிலர் கேட்பார். ஒரே ஒரு காரணம் சொல் என்று சொல்லும் போது. நீங்கள் எல்லாம் தமிழர்கள் - ஒரே தாய் மொழியை பேசுபவர்கள் அப்படியிருக்கும் போது எதற்காக இந்தப் போர் என்று வினவுவார். இருந்தாலும் பறம்பை அபகரிப்பதில் மூவேந்தர்கள் உறுதியாக இருந்தனர்.

இறுதியில் தனது மகள்களான அங்கவையும், சங்கவையும் கபிலரிடத்தில் ஒப்படைத்து விட்டு வீரமரணம் அடைகிறான் பாரி.

இதுதான் "பாரி படுகளத்தில்" கதை கரு. இதில் ஒரு நாடு இன்னொரு நாட்டை உளவு பார்ப்பதும் அதில் அந்துவன் ஜாத்தா போன்ற போர்க்காலத்தில் பிடிக்கப்பட்ட தாயின் வயிற்றில் பிறந்தவன் உளவாளியாக இருப்பதும் சரியானதா? என்ற கேள்வியை எழுப்பி. அவனை கொல்ல உத்தரவிடுவதும். அந்துவன் ஜாத்தாவை அவனது நன்பனே கொல்லுவதும். மன்னர்களின் ஓயாத பொழுது போக்கு நிகழ்ச்சிகளும்... எப்படி அர்த்தமற்றவைகளாக இருந்தன என்பதையெல்லாம் இந்த கதையில் நாடகமாக்கப்பட்டுள்ளது சிறப்பான முறையில்.

தமிழக கல்விச் சூழலில் "பாரி வள்ளல்" என்றும் "முல்லைக்கு தேர் கொடுத்தான்" பாரி என்ற அளவிலே மட்டுமே போதிக்கப்படுகிறது. பாரியின் ஆட்சி குறித்தோ, அவன் மூவேந்தர்களால் படுகொலை செய்யப்பட்டது குறித்தோ எடுத்துரைப்பது இல்லை. இதனாலலேய நமது மாணவர்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் பற்றிய அறிவு மங்கிப்போயுள்ளது. கல்வித்துறை செய்ய வேண்டியதை பிரளயனும், பாண்டிச்சேரி நிகழ்கலை மாணவர்களும் செய்துள்ளது வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே இதனை கூறலாம்.

மொத்தத்தில் கடந்த கால அரசியலை - நிகழ்வை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தும் போது நிகழ்கால நினைவுகள் அப்படியே உயிர்ப்பித்து நிற்பதையும், ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை நாம் பெற வேண்டும் என்ற உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் இந்த நாடகத்தின் மிகச் சிறப்பான வெற்றி என்று கூறலாம். உண்மையிலேயே இந்த கதையை கருவாக்கி, நாடகமாக்கி இயக்கிய பிரளயன் பாராட்டப்பட வேண்டியவர்.

அடுத்து இந்த நாடகத்தில் நடித்தவர்கள் எல்லாம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்கள். எம்.ஏ., பி.எச்.டி., எம்.பில்., படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே இதில் பிரதான நடிகர்கள். இவர்கள் எல்லாம் புரபஷனல் நடிகர்கள் அல்ல. தற்போது இவர்கள் பயிலும் கல்வித் தொடர்பான பயிற்சியின் வெளிப்பாடாகத்தான் இந்த நாடகத்தில் நடித்துள்ளனர். இந்த நடிகர்களில் ஒவ்வொருவரும் ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள், நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதலான சிறப்பு. குறிப்பாக சிங்கள மாணவரும், இலங்கை தமிழ் மாணவரும் சேர்ந்து நடத்திய நாடகமே பாரி படுகளம். பங்களாதேஷ், பாகிஸ்தான், கேரளம், அசாம், வங்காளம் என்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இந்த பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள்தான் இந்த பாரி படுகளம் தமிழ்நாடகத்தை அரங்கேற்றி சாதனைப் படைத்திருக்கிறர்கள். இவர்கள் யாருக்கும் தாய்மொழி தமிழ் அல்ல. தமிழே தெரியாது. இருந்தாலும் இவர்களது ஊக்கமான முயற்சியின் விளைவாக அழகான தமிழ் வசனங்களை சிறப்புடன் எடுத்துரைத்தனர். இப்படி பல சிறப்புககளை உள்ளக்கிய நாடகமே பாரி படுகளம். மொழி தெரியாதவர்களுக்கு, தங்களது கலாச்சாரத்திற்கு அந்நியப்பட்டு அல்லது தெரியாத ஒரு விசயத்தை முதலில் உணர்வுபூர்வமாக அந்த நடிகர்கள் உள்வாங்கிக் கொண்டு நடிப்பது என்பது அபூர்வமான ஒன்று. இத்தகைய சிறப்பு மிக்க நாடகத்தை பற்றிதான் ஜெயமோகன் ஓலம் விட்டிருக்கிறார். இனி அவரது கூற்றுக்களை பரிசீலிப்போம்!

"சிலசமயங்களில் தமிழனாக இருப்பதற்காகவே வெட்கி கூசிச்சுருங்கும் தருணங்கள் நமக்கு உருவாகும். அதில் ஒன்று இந்நாடகத்தை அரங்கில் கண்டது. அபத்தத்தின், கற்றுக்குட்டித்தனத்தின், உச்சமான கேலிக்கூத்து என்று இந்நாடக நிகழ்த்துதலைச் சொல்லவேண்டும். எந்தவித பயிற்சியும் இல்லாத நடிகர்கள் வசனங்களை நினைவு கூர்ந்து நிறுத்தி நிறுத்தி ஒப்பித்தார்கள். செயற்கையாக கைகால்களை ஆட்டினார்கள். சம்பந்தமில்லாமல் விளக்குகள் எங்கோ எரிந்தன. நாடகத்தில் தோன்றிய ஒருவருக்காவது நாடகம், நடிப்பு என்பதைப்பற்றிய அடிப்படை புரிதல் இருப்பதாகத்தோன்றவில்லை. பள்ளிக்குழந்தைகள் போடும் நாடகங்கள் கூட எவ்வளவோ மேல்."

மேற்கண்ட நாடகத்தை பார்த்ததற்காக ஜெயமோகன் தமிழனாக இருப்பதற்கு வெட்கம் அடைகிறாராம்! அத்துடன் இந்த சிறப்பு மிகு நாடகத்தை கற்றுக்குட்டித்தனத்தின் உச்சம் என்று வர்ணிக்கிறார்.

"மீனை கொடுக்காதே மீன் பிடிக்க கற்றுக் கொடு என்பார்கள்" தமிழில். அதாவது ஒருவர் தானே உழைத்து சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் உள்ளடக்கம். அதுபோல ஆரம்பநிலை மாணவர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த செவ்வியல் நாடகத்தில் சில குறைகள் இருந்திருக்கலாம். அதற்காக இந்த நாடகம் எதற்குமே லாயக்கு இல்லை என்று சொல்லுவது விமர்சனமா? விதண்டாவாதமா? வயிற்றெறிச்சலா? மண்ணைப் பிடித்தால்தான் அது பிள்ளையாராகும். ஜெயமோகன் உங்களது வாதம் பிள்ளையார்களையெல்லாம் சிதைத்து மண்ணாக்கத்தான் உதவிடும்.
அடுத்து அவர் கூறுவதை பாருங்கள்.

"அவையில் இருப்பது என் உடம்பில் அமிலத்தை ஊற்றியது போலிருந்தது. அரங்கில் எழுந்த கேலிச்சிரிப்பு , முன்வரிசையில் என்னருகே இருந்த நாடகக்காரர்களின் நக்கல்கள்….எதற்காக இதை கொடுமையைச்செய்கிறார்கள்? நான் பார்க்கும் பிரளயனின் முதல் நாடகம் இது. இந்த அபத்தத்தைத்தான் இவர் இத்தனைகாலமாக செய்துவருகிறாரா? இந்தக்கோராமையை ஒரு சர்வதேச நாடகவிழாவுக்குக் கொண்டுவரக்கூடாது என்ற ஓர் அடிப்படைப்புரிதல்கூடவா இவருக்கு இல்லை? வாழ்நாளில் ஒரு நல்ல நாடகம்கூடவா இவர் பார்த்தது இல்லை?"

முதலில் தமிழனாக இருப்பதற்கு கூசுவதாக கூறியவர். அந்த அவையில் இருந்ததற்காக உடலில் அமிலத்தை ஊற்றியது போல் உணர்ந்துள்ளாராம்! உண்மையான உணர்வாளர்தான் இந்த ஜெயமோகன். அதைவிடக் கொடுமை அடுத்த வரியைப் பாருங்கள் பிரளயனின் முதல் நாடகத்தை மட்டுமே பார்த்த இந்த கோணங்கி. இந்த அபத்தத்தைத்தான் இவ்வளவு நாளா செய்திருக்கிறாரா என்று குத்தலாக வெம்பியிருக்கிறார். ஜெயமோகன் தமிழகத்தில் இன்றைக்கும் நாடகக் கலை அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது என்றால் பிரளயன் போன்ற வீதி நாடகக் கலைஞர்களால்தான் அது சாத்தியப்பட்டுள்ளது. இன்றைக்கும் மக்கள் பாதிக்கும் பிரச்சனைகளை, அன்றாடம் சந்திக்கும் நெருக்கடிகளை வீதி நாடகமாக்கி அவர்களை உணர்வுமிக்க அரசியல் சக்தியாக்கி வருகிறது இத்தகைய வீதி நாடகங்கள். உங்களைப் போன்ற மேல்தட்டு வர்க்கத்திற்கு உப்பரிகையில் உட்கார்ந்துக் கொண்டு கூத்தடிக்கும் நாடகம்தான் நேர்த்தியான நாடகமாகத் தெரியும். தமிழ் மக்கள் எதுவும் தெரியாத மக்கள்‍, ஏன் கல்விகூட எட்டாத எம் மக்களை இந்த வீதிநாடகம்தான் இன்றைக்கும் வசீரிக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. அவர்களையும் பங்‍கேற்பாளராக மாற்றுகிறது. தரையில் கால்படாத ‍ஜெயமோகன், காலை வைத்த உடனேயே ச்சூ ச்சூ மாரி... என்று புலம்பது அர்த்தமுள்ளதாகவே அறிகிறோம்.

ஜெயமோகனின் அடுத்த புலம்பலைப் பாருங்கள், "என்னால் ஆற்றிக் கொள்ளவே முடியவில்லை.ஆருண்மொழியைக் கூப்பிட்டேன் .ஒவ்வொரு நண்பராகக்கூப்பிட்டு அங்கலாய்த்தேன். திருவண்ணாமலை பவா செல்லத் துரையைக் கூப்பிட்டு புலம்பினேன். ”இப்படி கேவலப்படுத்த வேண்டுமா பவா? முற்போக்கு இலக்கியத்திலேயே தமிழில் எத்தனை நல்ல ஆக்கங்கள் வருகின்றன? இவரா தமிழின் பிரதிநிதி?” என்றேன். வசந்தகுமாரிடம் சொன்னேன். ”அப்டித்தான் ஜெயன் , நம்ம நாடகம் அந்த லெச்சணத்திலேதான் இருக்கு. முருபூபதி இன்னும் கேவலமா போடுவார். இப்ப அவர் டெல்லி போயிருக்கார். விடுங்க தமிழனோட தலையெழுத்து"

தமிழ் இலக்கியத்தில் எத்தனையே நல்ல ஆக்கங்கள் வருகின்றனவாம்! இந்த ஆக்கம் சரியில்லையாம் அல்லது தகுதியானது இல்லையாம்! பாருங்கள் அந்த மோதாவியின் மேதாவிலசத்தை. பாரி படுகளத்தின் கதை குறித்தோ அல்லது அந்த கதையின் தகுதியின்மை குறித்தோ எந்தவிதமான ஆரோக்கியமான விமர்சனத்தையும் முன்வைக்கத் தயாரில்லாத ஜெயமோகன் தமிழில் எத்தனையோ சரியான ஆக்கங்கள் வருகிறது என்று போகிற போக்கில் இதனை எருமை மாடுகளைப் போல நெட்டித் தள்ளி விட்டுப் போகிறார்! ஒருவேளை அவரது பார்வையில் ஹரிஹர சங்கரா என்று நாடகம் போட்டிருந்தால் கைகொட்டி, பல்தெரிய ஆஹா... என்று சிரித்திருப்பார். இவரது சனாதன தத்துவப் பார்வைக்கு இந்த கதை பொருந்தவே பொருந்தாதுதான்! அதைவிடக் கொடுமையானது போகிற போக்கில் முருகபூபதி குறித்தும் இடித்துரைத்திருப்பது. ஜெயமோகன் சிந்தனைப்பூர்வமான எழுத்தாளராக அல்லது சீழ்வடியும் சிந்தனையாளரா என்பதை அவரது மேற்கண்ட எழுத்துக்களே சாட்சியமாய் நிற்கிறது.

இறுதியாக அவர் இவ்வாறு முடித்திருக்கிறார். "பிரளயன், தங்களிடம் கைகூப்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழில் எழுதுபவன் என்ற முறையில். உண்மையிலேயே உங்கள் நலன் நாடுபவன் என்ற முறையில். தயவுசெய்து தமிழ்நாட்டைவிட்டு வெளியே போய் நாடகம்போடாதீர்கள். இடதுசாரி அமைப்புகளுக்கும் ஒருவிண்ணப்பம் . தயவுசெய்து இனிமே சிபாரிசுகள் செய்யும்போது வேறு யாரையாவது சொல்லுங்கள்."

அன்றைக்கு ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டியது போல் நவீன துரோணராக மாறி பிரளயனை கைகூப்பி மன்றாடி கேட்டுக் கொள்கிறாராம் இதுபோல நாடகங்களை இயற்றாமல் இருக்கச் சொல்லி. அதாவது, அழகு என்பது வெளியில் இல்லை உள்ளத்தில்தான் இருக்கிறது என்பார்கள். ஒழுகுகிற மூக்கும், மூளி குழந்தைகளும், தலைவாறாத எண்ணைய் வடியும் கருப்பு முகத்துடன் இருக்கும் குழந்தைகள்கூட அதன் தாய்க்கும் அதன் மக்களுக்கும் அழகானதுதான் ஜெமோகன். காக்கை கருப்பாய் இருந்தாலும்கூட அதற்கு அது பொன் குஞ்சுதான். ஜெயமோகனின் விமர்சனம் சுகந்தமானதல்ல, சுரத்தில்லாதது. அன்றைக்கு மூவேந்தர்களால் பாரி அழிக்கப்பட்டான் என்றால் இன்று ஜெயமோகனால் பாரி மீண்டும் புதைக்கப்பட்டுள்ளான்.
ஜெயமோகன் குறித்த முந்தைய கட்டுரை

April 01, 2009

அத்வானியின் புதிய இந்துத்துவா!

பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி ஒவ்வொரு நாளும் ஆர்எஸ்எஸ்-இன் கோலாட்டத்திற்கு குரங்காட்டம் போட்டு வருகிறார். வருண்காந்தியின் முகத்தை காட்டி இந்து வாக்காளர்களை கவர திட்டம் போட்ட பாஜக அவரை கம்பி எண்ண வைத்துவிட்டது.
தற்போது அத்வானி வருண்காந்தி விட்ட இடத்திலிருந்து இந்துத்துவா ரிலேவை தொடங்கி வைத்துள்ளார். ஒரே மாற்றம் இது "புதிய இந்துத்துவா"! பழைய இந்துத்தவா மோடியின் முகத்தை அணிந்துக் கொண்டதால், புதிய இந்துத்துவா காந்தியின் முகத்தை தேடுகிறது. இதுதான் அத்வானியின் புதிய கணக்கு.
நேற்று (மார்ச் 31) புதுதில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அத்வானி, "பல கட்சிகளை எங்கள் பக்கம் ஈர்க்க கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் சொல்லும் ஹிந்துத்துவா என்பது மதம் சார்ந்தது அல்ல, தேசியம் சார்ந்தது." என்று கொள்கை விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் அவர் என்ன வருகிறார் என்று கூர்ந்து நோக்கும் அரசியல் விமர்சகர்களுக்கு ஒரு விசயம் தெளிவாக புரியும். இந்தியாவில் உள்ள பல மதச்சார்பற்ற கட்சிகளுக்கு பாஜகவின் இந்துத்துவா புளித்து விட்டது. அதனால் இந்த தேர்தலில் ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று "டூ" விட்டு விட்டனர். அதைத்தான் மேற்கண்டவாறு அத்வானி இவ்வளவு பவ்வியமாக விளக்கியுள்ளார். அத்துடன் அவர் மேலும் அழுத்தமாக கூறியிருக்கும் விசயம் என்ன என்று பார்த்தால், சங்பரிவாரத்தின் உயிர்நாடியான இந்துத்துவா கொள்கையை நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதுதான் அதன் அர்த்தம்.
சரி, இவர்களின் இந்துத்துவா என்றால் என்ன என்று சங்பரிவார கும்பல்கள் ஒவ்வொருவரும் ஒரு விளக்கத்தை கொடுப்பார்கள். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இந்துத்துவா குறித்து கூறும்போது, "இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை." என்று கூறியிருப்பதி லிருந்தே அது எவ்வளவு உயர்ந்த தத்துவம் என்பதை உணர முடியும்.
உண்மையில் இவர்களது இந்துத்துவா என்பது இவர்களின் தத்துவார்த்த குருவான கோல்வால்கரின் இந்துத்துவாதான்: இந்த கோல்வால்கர் யாருடைய சீடர் தெரியுமா? உலகையே ஆளப் பிறந்த அரிய இனம் என்று கொக்கரித்து யூதர்களை நரவேட்டையாடிய ஹீட்லரின் சீடர். ஹீட்லரிடம் இருந்து கடனாக பெற்ற கொள்கைதான் இந்துத்துவா, அது நாஜீயிசம் என்றால் இது இந்துத்துவாயிசம். அது யூதர்களை வேட்டையாடியது என்றால் இவர்கள் இசுலாமியர்களை வேட்டையாடினார்கள். தற்போது கிறித்துவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடுவார்கள். மொத்தத்தில் நமது பாரம்பரியமான மதச்சார்பற்ற பாரம்பரியத்தையும், சகிப்புத்தன்மையையும், மனிதாபிமானத்தையும் வேட்டையாடுவார்கள். இவர்களது இந்துத்துவாவில் வேற்றுமையில் ஒற்றுமையில்லை. இந்துத்துவா என்ற குடுவைக்குள்தான் எல்லாம் அடக்கம். இந்தச் சிந்தனைக்கு உடன்படாதவர்கள் இந்தியத்திற்கு எதிரானவர்கள் - பாரதீயத்திற்கு எதிரானவர்கள் என்று அழித்தொழிக்கப்படுவர். இதைத்தான் அத்வானி இந்த தேர்தல் காலத்தில்கூட மறக்காமல் தான் ஆர்.எஸ்.எஸ். சீடன்தான் என்று தனது சங்பரிவார கும்பலுக்கு நம்பிக்கையூட்டும் சிக்னல் தருகிறார். இவர் இவ்வாறு உண்மையான சீடனாக இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ். இவரை சீண்டி விடும் அல்லவா? அதுதான் இதுவும் என்று இருக்க முடியாது.
அதே பேட்டியில் அத்வானி கூறுகிறார்: "எங்கள் பக்கம் சிறுபான்மைச் சமூக மக்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் எங்களுடைய அரசியல் எதிரிகள் எங்களுக்குக் குத்தியிருக்கும் முத்திரைதான் ஹிந்துத்துவா." என்று.
அஹா... கோயபல்ஸ் புளுகு என்று கூறுவார்களே அது இதுதான். ஹீந்துத்துவா என்ற வார்த்தையை கண்டுபிடித்ததே நீங்கள்தானே. அதற்கு தத்துவார்த்த முலாம் கொடுத்து கழுவி சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தி வைத்திருப்பதும் நீங்கள்தானே அப்படியிருக்கும் போது ஏதோ எதிர் கட்சிகள் எல்லாம் இவர்களை இந்துத்துவா என்று முத்திரைக்குத்தி விட்டதாக அலறுவது ஏனோ? ஒரே விசயம் இதுதான். இந்துத்துவா என்றால் ஓட்டு கிடைக்காது! அதனால் பழியை எதிர் கட்சிகள் மீது போட்டு தப்பிக்க பார்க்கிறார் எதிர்கால பிரதமர்.
அடுத்து அத்வானி தனது கொள்கைக்கு ஆதரவாக யாரை துணைக்கு அழைக்கிறார் பாருங்கள், "தேசப்பிதா மகாத்மா காந்தி ""ராமராஜ்யம்'' அமைய வேண்டும் என்று விரும்பினார். அது மதம் சார்ந்த அரசு நிர்வாகம் அல்ல. தன்னை ""சனாதன ஹிந்து'' என்றே காந்தி அழைத்துக் கொண்டார்." என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது அத்வானியின் இந்துத்துவம் தற்போது காந்திய வடிவில் புதிய முகத்தை பெற முயற்சிக்கிறது. காந்தியின் ராமராஜ்யமும் - பாஜகவின் இந்துத்துவாவும் ஒன்றா? ஆர்எஸ்எஸ் இதை ஏற்றுக் கொள்கிறதா? பிறகு ஏன் மகாத்மாவை கோட்சே கொன்றான்? ராமராஜ்யம் அமைய வேண்டும் என்று கனவு கண்ட சனாதன இந்து பக்தரும், புல்லுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று கருதும் சாத்வீ போராளியும் ஆன மகாத்மா தனது போராட்டங்களைக் கூட அகிம்சை வழியிலேயே மேற்கொண்டார். இத்தகைய எளிய உடம்மை சுதந்திரப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்த அந்த மாமனிதனின் உடலை சாய்த்தது இந்துத்துவாதானே - வீரசவர்க்கரின் மூளையில் உருவாகி, கோட்சேவின் துப்பாக்கிக்கு இரையாக்கியது உங்களது சங்பரிவார தத்துவமும் - பாசிச வெறித்தனம்தானே!
காந்தியின் ராமராஜ்யத்தில் வன்முறையில்லை; ஆனால் உங்களது இந்துத்துவா தத்துவமே வன்முறைகளை உயிர்ப்பிக்கும் ஆக்டோபஸ்தானே! அதனால்தானே குஜராத்தில் ஒரு மோடியும், கர்நாடகத்தில் ஒரு முத்தலிக்கும், ஒரிசாவில் லட்சுமணானந்த சாமியாரும் என்று இந்தியாவையே ரத்தகளறியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இத்தகைய இரத்தக்கரையை வரலாற்றின் பக்கங்களிலிருந்து யாராலும் அகற்ற முடியாது. அதற்கு பாவமன்னிப்பும் யாராலும் வழங்க முடியாது! எந்த காந்தியின் பிறந்த குஜராத் மண்ணில் அவரையும், அவரது கொள்கைகளையும் குழிதோண்டி புதைத்தீர்களோ அப்போதே இந்தியாவில் காந்தியின் கனவான ராமராஜ்யத்தையும் அல்லவா சேர்த்துப் புதைத்தீர்கள், எரித்தீர்கள். இப்போது அதே காந்தியின் முகத்தை மோடிக்கும் - அத்வானிக்கும் பயன்படுத்த துடிப்பது ஆட்சிக் கட்டிலுக்காகத்தானே ஒழிய இந்த நாட்டிறக்காக அல்ல!
முஸ்லீம்கள் காந்தியை எதிர்த்தாக கூறி தனது நயவஞ்சக பிரச்சாரத்தை அத்வானி திசை திருப்பவும் இந்த நேரத்தில் தவறவில்லை. மகாத்மாவே இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவது எனது இதயத்தைப் பிளப்பது போல் என்று கூறினார். அதற்காகவே ஆர்.எஸ்.எஸ். அவரைக் கொன்றது. பிரிவினையை விரும்பிய ஒரு பிரிவினரின் நம்பிக்கையின்மைக்கு அடிப்படையாக இருந்தது ஆர்.எஸ்.எஸ்.தானே ஒழிய மகாத்மா அல்ல. எனவே வருண்காந்தி இசுலாமியர்களின் தலையை எடுப்பேன் என்று பேசி தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கிறான். இந்தப் பேச்சிற்கும் தற்போது அத்வானி பேசியிருப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. இரண்டும் ஒன்றுதான், அதாவத தேர்தல் காலத்தில் கூட தனது மதவெறி அஜண்டா மூலம் மதவெறியைத் தூண்டி குளிர்காய நினைக்கும் ஓநாய்த்தனத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள். மாறாக சொந்த நாட்டு மக்களை எதிரிகளாக்க முனையும் இந்துத்துவாவுக்கு சாவு மணி அடிக்கத்தான் போகிறார்கள் இந்தத் தேர்தலில்! வாக்காளர்களே உஷார் இந்துத்துவா எச்சரிக்கை. ஜனநாயகம், மதசார்பின்மை காப்போம்!