February 07, 2009

இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு

இலங்கையில் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படாமல் புரையோடிப் போயுள்ள தமிழ் மக்கள் வாழ்விலும், அமைதியை இழந்து தவிக்கும் இலங்கை இனவாத நோய்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படுமா என்று இலங்கை மக்களும் - தமிழக மக்களும், இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரச்சனையின் வரலாற்று வேர்களைத் தேடி அலசிக் கொண்டிருப்பது இப்பதிவின் நோக்கமல்ல; இருப்பினும், சில விசயங்களை தொட்டுக் காட்டி தீர்வை தேடுவது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
மகத்தான ரஷ்யப் புரட்சியால் உத்வேகம் பெற்று எழுச்சியடைந்த அடிமைப்பட்ட நாட்டு மக்களின் வீரமிக்க போராட்டங்களால் விடுதலையடைந்த நாடுகளில் குறிப்பிடத்தக்கது இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை.

தனது காலனியாதிக்க நாடுகளில் இருந்து வெளியேறிய ஏகாதிபத்தியம் இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் மதத்தின் பெயராலும், சாதியத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் விஷ விதைகளை புதைத்து விட்டுத்தான் சென்றன. சீனாவில் மாவோ தலைமையில் மகத்தான சோசலிசப் புரட்சி வெற்றியடைந்ததால் அங்குள்ள தேசிய இன முரண்பாடுகள் உட்பட பலவற்றிற்கு மார்க்சிய அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

ஒன்றுபட்ட இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள வற்றாத செல்வங்களை ஒட்டச் சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த நாடுகளில் இருந்த உழைக்கும் வர்க்கத்தை பெரும்பான்மையாக பிரதிநிதித்துவப்படுத்திய சாதியத்தை பாதுகாத்ததோடு, அதனால் எழுந்த எந்தவிமான முரண்பாடுகளுக்கும் தீர்வு காண முற்படாமல் - தனது சுரண்டல் கொள்கைகளுக்கு பாதிப்பு வராமல் மட்டும் பார்த்துக் கொண்டது. இறுதியில் இந்த நாடுகளின் தீராத நோயாக மாறுவதற்கு பதியம் போட்டவர்கள் இவர்களே!

அடுத்து இலங்கையில் ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ வர்க்கம். தன்னாட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் அற்ற நிலப்பிரபுத்துவ மரபுவதிகளாக இருந்ததோடு, ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் சுரண்டப்படும் மலையகத் தமிழர்களின் எழுச்சி பெற்று வந்த போராட்ட பேரலைகளை சந்திப்பதற்கு திராணியற்றதாக இருந்ததோடு. இதனை திசை திருப்பும் வகையில் தமிழ் மற்றும் சிங்கள அடையாளத்தை முன்னிறுத்தி இனவாதத்திற்கு வித்திட்டன.

முதன் முதலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களான அம்மக்களை இலங்கை பிரஜைகளாக ஏற்க முடியாது என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தது. இதற்கடுத்து உயர் கல்வியில் தமிழர்கள் போட்டியிட முடியாதபடி திட்டமிட்டு முடக்கியது என்று அடுக்கடுக்காக தமிழர்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடுத்தது. இலங்கைத் தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக அன்றைக்கு குரல் கொடுத்தது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து சிங்கள - தமிழ் உழைக்கும் மக்களை பெருவாரியாக அணிதிரட்டுவதில் ஏற்பட்ட தொய்வும், தமிழர் பகுதியில் இதற்கு எதிரான உணர்வு ரீதியான எதிர்வினைகள் - சிங்கள இனவெறியர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் என்று புறப்பட்டு அங்குள்ள உழைக்கும் மக்கள் இனவாதத்தின் பிடிக்கு இறையானார்கள

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்களுக்கான பிரதேச உரிமைகள் குறித்த முழக்கங்கள் எழுந்த போது அவற்றுக்கு தீர்வு காணாத பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இலங்கையை விட்டு வெளியேறியபோது இந்தப் பிரச்சனைகளையும் விட்டுச் சென்றது. மேலும் இலங்கையைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற அளவிற்கு ஒரு வெகுஜன இயக்கமாக மலரவில்லை என்ற விமர்சனமும் உண்டு. இப்படியொரு வெகுஜன இயக்கம் அங்கு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் என்றால் அந்த மக்களுக்கு இடையிலான இனவேறுபாடுகள் பெரிய அளவிற்கு மோதலுக்கு உள்ளாவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கும்.

மேற்கண்ட சூழலில் தமிழர்களுக்காக டி.யூ.எல்.எப்., டெலோ, இ.பி.ஆர்.எல்.எப்., எல்.டி.டி.இ., ஈராஸ் என்று விதவிதமான இயக்கங்கள் முளைத்தெழுந்தன. இது இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோபாவேசத்தின் வெளிப்பாடுகளாய் வெளிக்காட்டியது. இருப்பினும் சுதந்திர ஆட்சியாளர்கள் இவற்றுக்கு தீர்வு காணாமல் - இனவெறிக்கு தலைமை தாங்கியது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது. இந்நிலையில் இதற்கான ஒரே தீர்வாக தனி ஈழம் என்ற கோரிக்கை அங்கே முளைத்தெழுந்தது. வட்டுக்கோட்டை மாநாட்டு முழக்கம் பிரிவினை கோஷமாகவும் ஓங்காரம் பெற்றது. அதே சமயம் இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களான ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் மீதான அரசின் தாக்குதல் தொடங்கியபோது அவர்களுக்காக முதலில் குரல் கொடுக்கத் தயங்கினர். இதில் தந்தை செல்வா விழிப்புடன் இருந்து அதனை ஒரு அரசியல் பிரச்சனையாக முன்னுக்கு கொண்டு வந்தார். மொத்தத்தில் ஈழம் என்ற முழக்கம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கான முழக்கமாக அமையவில்லை என்ற விமர்சனம் இங்கே கணக்கில் கொள்ள வேண்டியது.

இரண்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 74 சதவிகிதம் பேர் சிங்கள இனத்தைச் சார்ந்தவர்கள். 18 சதவிகிதம் பேர் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள். சோனகர் மற்றும் பரங்கியர்கள் 8 சதவிகிதம். மேலும் தமிழர்களிலேயே பாரம்பரியத் தமிழர்கள் 11 சதவிகிதமாகவும், மலையகத் தமிழர்கள் 7 சதவிகிதமாகவும், சோனகர் என்ற பிரிவினரும் தமிழ் பேசக்கூடியவர்கள்தான். பிரிந்துக் கிடந்தனர். இதற்குள் தமிழ் பேசும் முஸ்லீம்கள் கணிசமான தொகையினர். அதாவது, தமிழர்களிலேயே பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் பிரச்சனை தீவிரமானது. மேலும் ஈழம் உட்பட மற்ற பகுதியில் உள்ள தமிழர்களின் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த தலித் (தாழ்த்தப்பட்ட) தமிழர்கள் பிரச்சனை தனியானது. மேற்கண்ட முரண்பாடுகளின் ஊடாகத்தான் இனவாதம் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு கலக்கி தனி ஈழம் என்ற முழக்கமாக முன்னுக்கு வந்தது.

இதில் பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது என்பது உண்மையே! இருப்பினும் அது துரோகிகளை அழித்தொழிப்பது என்று நாமகரணம் சூட்டிக் கொண்டு சக போராளி அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களை வேட்டையாட ஆரம்பித்ததோடு, புலிகள் செயல்பட்ட இடங்களில் மற்ற அமைப்புகள் செயல்படுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இத்துடன் புலிகள் இயக்கம் அமிர்தலிங்கம், சபாரத்தினம், உமா மகேஸ்ரன், மாத்தையா, உட்பட பலரையும் வேட்டையாடியது. அத்துடன் பத்மநாபா உட்பட 14 பேர் சென்னையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் புலிகளால். இறுதியாக இந்த புலி பயங்கரவாதம் ராஜீவ் கொலை வரை நீண்டது. தொடர்ச்சியாக தமிழர் அமைப்புகளுக்கும் - தலைவர்களுக்கும் சிங்களா இனவாதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமான பாதிப்பு புலிகளால்தான் ஏற்பட்டது. புலிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கும், தற்போது இலங்கையில் நிலவும் நிலை எப்படியிருக்கிறது என்பதற்கும் ஷேபாசக்தியின் வாக்குமூலங்கள் நமக்கு சாட்சியங்களாய் முன்னிற்கிறது.

தீராநதியில் அவரது பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், "உங்களது இந்தக் கேள்விக்குத் தெளிவான ஒரு பதிலைச் சொல்ல முடியாத நிலையில் இப்போதைக்கு நான் இருக்கிறேன். உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு ஏற்றதான ஒரு சனநாயகச் சூழல் எங்களுக்கு இல்லை. ஈழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளிலும்கூட என் போன்றவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சொல்வதானாலும், எழுதுவதானாலும் கொல்லப்படக்கூடிய ஒரு சூழலில் நாங்கள் வாழ்கிறோம்."
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கமான தீர்வு தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நம்ப வைக்கப்பட்டேன். 80களிலே ஆயுதம் தாங்கிய இயக்கங்களால் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்ள், சாதி ஒழிப்பு இயக்கங்கள் என்று எல்லாவித மாற்று அமைப்புகளுமே மெளனமாக்கப்பட்டன.", "இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் ஆஸ்தான பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே கருத்து தெரிவிக்கலாம் என்ற சூழல்தான் இருக்கிறது". என்று உரைத்திருக்கிறார்.

இலங்கையில் உள்ள நிலையை நாம் இங்கிருந்து விளக்குவதை விட, அங்கிருந்தவர் விளக்குவதே பொருத்தமாக இருக்கும் என்பதாலேயே சோஷபா சக்தியின் அனுபவம் மேலே பதியப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கட்டத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்பது திசை திரும்பி, சிங்கள இனவாதத்திற்கு எதிராக எழுந்த இயக்கம் தமிழ் பேசும் மக்களுக்கான ஜனநாயகத்தையே அழிக்கும் பயங்கரவாதமாக புலிகளால் மாற்றப்பட்டது. அத்துடன் தமிழ் பேசும் இசுலாமியர்களை 48 மணி நேரத்திற்குள் அனைத்து உடமைகளையும் விட்டு விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி விரட்டியடித்த அமைப்புதான் புலிகள். அத்துடன் புலிகள் அமைப்பின் பேச்சாளர் மறைந்த தமிழ்ச்செல்வன் கூறும்போது ஈழம் விடுதலையடைந்த பிறகுதான் இசுலாமியர்கள் தங்களது உரிமை குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இலங்கை பேரினவாதம் குறித்து வாய் திறக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இனவாதிகள் புலிகளின் இத்தகைய இசுலாமிய மற்றும் மலையகத் தமிழகர்களுக்கு எதிரான போக்கை கண்டும் காணமல் போவதேனோ? மேலும் அந்த அமைப்பிலேயே ஜனநாயகம் நிலவுவதற்கான சூழல் இல்லாததைத்தான் பல்வேறு தலைவர்கள் வெளியேறியதுக் கூட காட்டுகிறது.

மேற்கண்ட பின்னணியில் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவுவதற்கு மாறாக, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு இங்கு ஆயுதப் பயிற்சி உட்பட - ஆதரவும் வழங்கியது. அதாவது இந்தப் பிரச்சனையை கொம்பு சீவி விட்டதில் இந்திரா காந்தி உட்பட முன்னாள் - இன்னாள் முதல்வர்களுக்கும் பங்குண்டு. மறுபுறத்தில் அமைதிப்படை என்ற பெயரில் இந்தியா இராணுவத்தை அனுப்பியது போன்ற செயல்கள் இந்திய அரசுக்கு எதிராக கடும் விவாதங்களைக் கிளப்பியது.

இலங்கையிலோ புலிகள் - சிங்கள பேரினவாதி என்று வர்ணிக்கப்பட்ட பிரமேதாசாவோடு கூட்டணி அமைத்து அமைதிப்யைப்படையை வெளியேற்றினர். அதாவது புலிகளின் இனவாதம் என்பது அதிகார வெறியுடன் கட்டமைக்கப்பட்டதாக உருவெடுத்தது.

இப்படியான குழப்பமான நிலையில் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் திருகோண மலையில் தனது கப்பற்படைத் தளத்தை அமைத்தது. தற்போதுகூட அவர்கள் ஏவுகணை தளம் ஒன்றை நிறுவுவதற்கு தொடர்ந்து முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது. இலங்கை அரசு மற்ற நாடுகளுக்கு எதிராக இதுபோன்ற தளம் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வந்தாலும், அமெரிக்கா தொடர்ந்து இலங்கையில் தனது தளத்தை அமைத்திட முயற்சித்து வருகிறது என்ற உண்மை வெளிப்படையானது. அதாவது ஏகாதிபத்தியம் இந்த இன மோதல்களை ஊக்குவித்து வருகின்றது.

புலிகளும் சந்திரிகா மற்றும் நார்வே நாட்டு குழுக்கள் எடுத்து முயற்சிகளை எல்லாம் பலமுறை தூக்கி எறிந்து விட்டு அங்கு தமிழர் பகுதியில் அபலைகளாகவும், அகதிகளாகவும், புலம் பெயர்ந்தவர்களாகவும் மாறிப்போன இலங்கைத் தமிழர்களின் உயிர் மற்றும் வாழ்வைவிட தனது அதிகார வெறி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் இந்தப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு தடையாக இருந்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது இலங்கை இராணுவத்தின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புலிகள் தங்களது பரந்து விரிந்த சாம்ராஜ்ஜீயத்தை இழந்து தற்போது முல்லைத் தீவோடு சுருங்கிப் போயுள்ளதும். அங்கு ஒரு லட்சம் அப்பாவி தமிழ் மக்களை கேடயமாக - பணயமாக முன்வைத்து தாக்குதல் நடத்தி வருவதையும் சர்வதேச அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ராஜபக்சே அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் காட்டி அரசியல் தீர்வை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையாது. எனவே காலம் தாழ்த்தாமல் - ஒன்றுபட்ட இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் உள்ளடக்கிய கிழக்கு - வடக்கு பகுதிகளுக்கான மாநில சுயாட்சியை வழங்கிடவும் இதில் அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுஒன்றுதான் அந்த நாட்டின் அமைதியான வாழ்விற்கு வித்திடும் மாமருந்தாக அமையும். இந்திய அரசு இவ்விசயத்தில் இருநாட்டு நல்லுறவின் அடிப்படையில் சமூகமான தீர்வினை காண்பதற்கு அணுக வேண்டும்.

இப்படிக்கூறும்போதுதான் தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதற்கு லெனின் உட்பட மார்க்சிய ஆசான்களையெல்லாம் அழைக்கின்றனர். எனவே, அவர்களுக்காக நாமும் அந்த ஆசான்களிடம் இருந்தே தீர்வை நோக்கி அலசுவது பொருத்தமாக இருக்கும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மக்கட் தொகை அதில் உள்ள பிரிவினை மற்றும் புவியில் ரீதியாக தமிழர்களின் வாழ்விட அமைப்பு போன்றவற்றையும் - இலங்கையே ஒரு குட்டி நாடு என்பதை மனதில் வைத்து எதிர்காலத்தில் ஒரு குட்டி சாம்ராஜ்யம் அமைந்தால் அதனுடைய பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும் என்பன போன்றவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் புலிகளின் சர்வாதிகார - முதலாளித்துவ அரசு அமைவதற்காக இங்குள்ளவர்கள் சுயநிர்ணய உரிமை என்று அரசியல் பம்மாத்து காட்டுகின்றனர். இத்தகைய கோரிக்கை குறித்து மார்க்சிய ஆசான் லெனின் கூறுவதை இனி பார்ப்போம்!

பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்க் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.(லெ.தொ.நூ.19.429)
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

மேற்கண்ட லெனின் நிர்ணயிப்பு இலங்கைப் பிரச்சனைக்கு மிகப் பொருத்தமானது. நமது மார்க்சிய மனப்பாடவாதிகள் பாராளுமன்றம் எப்போதும் பன்றித் தொழுவம் என்று அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவது போலவே இவ்விசயத்திலும் சுயநிர்ணய உரிமை என்று பிதற்றுவது வேதனையானது. இதனால் இலங்கை மக்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு மாறாக தள்ளிப் போடுவதற்குதான் அது உதவிடும். போகாத ஊருக்கு வழிகாட்டுவது என்று சொல்வார்களே அதுபோல...

மேலும் லெனின் கூறுவதைக் பார்ப்போம்:

தேசிய வாதத்தைப் புனிதமாக்க முயலும் எந்த முயற்சியையும் பாட்டாளி வர்க்கத்தால் ஆதரிக்க முடியாது; இதற்கு மாறாக, தேசிய வேறுபாடுகளைத் துடைத்தெறிய உதவும் ஒவ்வொன்றையும், தேசியத் தடைகளை நீக்கும் ஒவ்வொரு முயற்சியையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கிறது....
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

தமிழ் இன தேசியவாதத்தை கழுவி புனிதப்படுத்தி, முத்துக்குமரனின் மரணத்தின் விளைவால் ஏற்பட்ட அனுதாபங்களை அறுவடை செய்யும் பிணவாத அரசியலுக்கும் சொந்தக்காரர்களாக மாறிட துடிக்கிறார்கள் திரிபுவாத - சந்தர்ப்பவாத தமிழ் இனவாத அரசியல் நடத்துகின்றனர். இதற்கு அடிக்கடி அவர்கள் மார்க்சியத்தையும் துணைக்கு அழைப்பது விந்தையிலும் விந்தைதான்.

மேலும் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் மிக அற்புதமாக கூறுகிறார். இத்தகைய சுயநிர்ணய உரிமை - அதாவது ஒரு தேசத்தில் உள்ள மக்கள் பிரிகிறார்கள் என்றால் அது ஒன்றுபடுவதற்காக - இணைதற்காக என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இது குறித்து லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

நாம் சுதந்திரமாக ஒன்றுபடுவதை விரும்புகிறோம் அதனால்தான் நாம் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். பிரிந்து செல்வதற்கான சுதந்திரமில்லாமல் ஏற்படும் ஒன்றிணைப்பைச் சுதந்திரமானது என்று சொல்ல முடியாது
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்கக் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

இவைகள் எதையும் கணக்கில் எடுக்காமல் கணித சூத்திரம் போல் பிரிவினைவாதம் பேசி இனவாதத்திற்கு நெய் ஊற்றுகிறார்கள் இனவாதிகள்... இலங்கையில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம்தான் தெற்காசிய மக்களின் ஒற்றுமை பாதுகாக்கப்படும் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல்... ஏகாதிபத்திய அரசியலுக்கு இரையாகும் இனவாதப்போக்கு இயலாமைத்தான் காட்டுகிறது.

இறுதியாக லெனின் கூறுகிறார் இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் எப்படிப்பட்ட தீர்வினை முன்னெடுப்பது என்று:

பரந்த பிரதேசத் தன்னாட்சியும் முழுமையான ஜனநாயக சுய நிர்வாகமும் ஆகும். தன்னைத்தானே ஆள்கிற தன்னாட்சிப் பிரதேசங்களின் எல்லைகள் பொருளாதார சமூக நிலைமைகள், மக்கள் தொகையின் தேசிய இயல்பு முதலியவற்றைக் கொண்டு அவ்வட்டார மக்களால் தீர்மானிக்கப்படும்.
பக்கம் 82-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் சுட்டிக்காட்டுவது போல இப்பிரச்சனைக்கு இரு எதிர் எதிரான தீர்வுகள் உள்ளன: பண்பாட்டு - தேசியத் தன்னாட்சி என முதலாளி வர்க்கம் சொல்லும் தீர்வு ஒன்று; பிரதேச மற்றும் வட்டாரத் தன்னாட்சி என்ற பாட்டாளி வர்க்கத் தீர்வு மற்றொன்று.

பண்பாட்டு-தேசியத் தன்னாட்சி என்ற கோட்பாட்டின்படி ஒவ்வொரு தேசிய இனத்தின் உறுப்பினர்களும் ஒரு `தேசியக் கழகத்தை` உருவாக்கிக் கொள்வர். இது கல்வி உள்ளிட்ட அவர்களது சமுக, பண்பாட்டு வாழ்வைக் கட்டுப்படுத்தும். இவ்வகையில் பள்ளிகள் தேசிய இனத்தின் அடிப்படையில் வேறுபடுத்தப்படும்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

அதாவது, பொருளாதார மற்றும் புவியில் ரீதியாகவும் அந்த நாட்டின் உள்ள உட்கட்டமைப்புச் சூழலுக்கு ஏற்பவும் - அறிவியல் ரீதியாக பொருந்துவது மாநில சுயாட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும் கோட்பாடுதான் பொருத்தமானது. இதனை நோக்கி இலங்கை அரசாங்கத்தை அரசியல் ரீதியாக இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை திரட்டிட வேண்டும். இந்த கோரிக்கை முழக்கம் விண்ணில் எழும்நாள்தான் அங்குள்ள மக்களின் விடுதலைக்கான நாளாக மாறும். இத்தகைய நிலை இலங்கையில் எழ வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கக் கோரிக்கைகள் முன்னுக்கு வரவேண்டும் என்றால் பயங்கரவாதப் புலிகள் அரசியல் ரீதியாக முறியடிக்கப்பட்டாக வேண்டும். அவர்களிடம் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கமும் இலங்கைத் தமிழர்களுக்கான மாநில சுயாட்சி உரிமையை வழங்குவதற்கு - அரசியல் தீர்வினை காண்பதற்கு முன்வர வேண்டும். இதுமட்டுமே இலங்கையையும் - தமிழ் மக்களையும் காப்பாற்றும். அதுவரை அதிதீவிர சீர்குலைவு சித்தாந்தவதிகளின் செயலினை லெனின் வார்த்தைகளில் விமர்சிக்க வேண்டும் என்றால் முதலாளிகளின் பின்னால் வால்பிடிக்கும் சுயநிர்ணய உரிமை என்று முழக்கமிடுவது பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை மறுக்கும் மாபெரும் மோசடியாகும்.

புத்தகத்தின் வாயிலாக மார்க்சியம் கற்க முயலும் நமது நண்பர்கள் இனியாவது பூமியில் கால் வைத்து நடப்பார்கள் என்று நம்புவோம்!
கே. செல்வப்பெருமாள்

February 05, 2009

ம.க.இ.க. வினவின் இனவாத பொய்கள்!

ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!
என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளியான கட்டுரையில் உள்ள முரண்பாடுகள் இங்கே விமர்சிக்கப்படுகிறது.
முதல் பொய்: புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன.

ம.க.இ.க. இனவாதிகளே உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு மேற்கண்ட வரிகளே உதாரணமாக திகழ்கிறது. உண்மையை மக்களிடம் மறைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். முதலாளித்துவ கட்சிகள் கூட உங்களிடம் இனிமேல் பிச்சை வாங்க வேண்டும். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இதனை இனஅழிப்பு என்று கோயபல்ஸ் போல பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன? கம்யூனிச வேடம் இப்போதுதான் கலைய ஆரம்பித்துள்ளது. போகப் போக புரியும் தமிழ் மக்களுக்கு இதுஒரு இலங்கை ஆதரவு என்.ஜீ.ஓ. என்று.

இரண்டாவது பொய்: இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன.

தற்போது இலங்கை அரசின் இராணுவம்தான் புலிகளுக்கு எதிராக மோதல் தொடுத்து வருகிறது. அங்குள்ள சிங்கள மக்களுக்கும் - தமிழ் மக்களுக்கும் எந்தவிதமான மோதலும் நடைபெற்றதாக எந்தச் செய்தியும் வராத நிலையில் இப்படி கயிறு திரித்து தமிழ் இனவாத குளிரில் பிழைப்பு நடத்தலாமா? பெரும்பான்மை சிங்கள மக்கள் சோராம் போயிருந்தால் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களும் அல்லவா தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் அங்குள்ள யாழ்பாணத் தமிழர்கள் எல்லாம் ஏன் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று போராட வேண்டும். உண்மையை பேசுங்கள் அய்யா!

மூன்றாவது பொய்: புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.

அங்கே சிங்கள பேரினவாதம் தூண்டப்பட்டது என்றால் இது சிறுபான்மை தமிழ் இனவாதம். அப்படியிருக்கையில் புலிகள் எப்படி சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவை கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது புலிகள் மீதான விமர்சனம் அல்ல. கரிசனம். அதாவத புலிகளை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம். தமிழகத்தில் எழுந்துள்ள இனவாத இரைச்சலில் குளிர் காயும் ஓநாய்த்தனம் என்றுதான் இதனை உரைக்க முடியும்.

நான்காவது பொய்: இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

தமிழ் இனவாதத்தின் அப்பட்டமான - மலிவான - இழிவான குரலின் பிரதிபலிப்பு மேற்கண்ட வரிகள். ம.க.இ.க. சி.பி.ஐ.(எம்-எல்) எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மை முகம் இதுதான். அதாவது, இந்தியாவின் இதர மொழிவாரிய இன மக்கள் குரல் கொடுக்கவில்லை என்று கவலைப்படுவது தெரிகிறது. அதுசரி ஏதோ நீங்கள் இந்தியா முழுவதும் புரட்சியை கொண்டு வந்து கிழிக்கப் போவதாக ஏமாற்றுகிறீர்களே தமிழகத்தை தாண்டி உங்களுக்கு வேற்று மாநிலங்களில் அமைப்பு இருந்தால் அவர்களை வைத்து போராடியிருக்கலாமா? குரல் கொடுக்க வைத்து இருக்கலாமே? ஏதோ லண்டனில் ம.க.இ.க. இருப்பதுபோல் போஸ்டர் வெளியிட்டு பெருமையடிக்கும் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கருநாடக, ஆந்திர உழைக்கும் மக்களைக் கூடவா அணித்திரட்ட முடியவில்லை. அதனால்தான் சொல்கிறோம் உங்களது குழு வெறும் தமிழக அளவில் சீர்குலையை மட்டுமேன முன்னிறுத்தும் குழு என்று. அது மட்டுமா? வெறும் இனவாதக்குழு! இது படிப்படியாக வளர்ந்து சிங்கள இனவாதத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் அளவிற்கு வளர்ந்து விடும். புலிகளுக்கும் உங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. அதனால்தான் உங்களால் மற்ற மாநில மக்களை அணிதிரட்ட முடியலி்லை. புலிகளுக்கு அட்வைஸ் செய்வதற்கு முன்னால் ஒருமுறை உங்கள் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. பாவம் இணையவாதிகளை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. உங்கள்ம முகம் கிழிய ஆரம்பித்துள்ளது.

ஐந்தாவது பொய்: சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.

நீங்கள் வக்காலத்து வாங்கும் புலிகள் பிரேமதாசா அரசாங்கத்தோடு இணைந்து இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்த சுயநிர்ணய உரிமை எங்கே போனது! புலிகள் ஒன்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துக் கொள்ளாதவர்கள் இல்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணம் மிக முக்கியமானது. அதுசரி! தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகளிடம் மாட்டிக் கொண்டுள்ள மக்களை விடுவிப்பது சம்பந்தமாக ஒரு வார்த்தைக்கூட - முனகல்கூட வரமாட்டேங்குதே இது என்ன இலங்கை தமிழ மக்கள் மீது உள்ள பாசமா? அல்லது புலிகள் மீதான கரிசனமா? ம.க.இ.க. செய்யப்போகும் புரட்சி இந்தியாவில் அல்ல என்பது மட்டுமல்ல. செய்ய விரும்புவது இலங்கையில் உள்ள முல்லைத் தீவில் மட்டும்தான் என்பது புரிகிறது.
புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். என்று சொல்லும் ம.க.இ.க. (சி.பி.ஐ.-எம்)எஸ்.ஓ.சி. தலைமை புலிகளை வெறும் புல்லு தின்னும் புலிகளாக நினைப்பது சூப்பர் காமெடி. அதாவது இவர்கள் நோக்கில் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் புலிகளால்தான் முடியும்! மற்ற இலங்கைத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குதான் லாயக்கு! ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க இரயாகரன். இனவாதத்தின் உச்ச கட்டத்தில் ம.க.இ.க.

பொய் ஆறு: தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளில் முக்கியமான கட்சியான தி.மு.க. - அதிமுக - சி.பி.எம். - காங்கிரசு போன்றவைகள் புலிகளை ஆதரிக்கவில்லை. மாறாக அங்கு பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் நிற்கின்றன. ஆனால் தமிழ் இனவாதம் நடத்தும் சிறு கட்சிகள்தான் இந்த வேடத்தை தற்போது ஏற்று நடத்துகிறத. அதில்கூட தாங்கள்தான் புரட்சிகரமான முன்னிணியில் இருப்பதாக பீத்திக் கொள்கிறது ம.க.இ.க. இனவாதமே உன்பெயர்தான் சந்தர்ப்பவாதமா?

பொய் ஏழு: தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை.

உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாக அணுக மாட்டோம் என்ற ஒரே புரட்சிகர சீர்குலைவு அமைப்பின் உன்னத குரல் இதுதான். இதைத்தான் இரயாகரன் கேள்வி கேட்டார் இதுவரை அவருக்கு எந்தவிதமான பதிலையும் வினவு அளிக்கவில்லை. சந்திப்பு கேள்வி எழுப்பினால் ம.க.இ.க. இனவாதிகள் தனிநபர் அவதூறுகளை அள்ளித் தெளித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். கொள்கை குன்றுகளாய் மிளிர்கிறார்கள்.

பொய் எட்டு: இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும்.

இந்தியா கைவிட்டு விட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அதாவது இவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கதான் இலங்கையின் உற்ற நன்பனாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்களோ என்னவோ? பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நட்பாயிருப்பதால் நமக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களை நாம் அறிவோம்! இவர்கள் புரட்சிகரவாதிகள் அல்லவா? அதன் இப்படியெல்லாம் சிந்தித்து - சீர்தூக்கி வர்க்க ஆராய்ச்சி செய்கிறார்கள்....

பொய் ஒன்பது: வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

பரவாயில்லை இந்தியாவில்தான் ஓட்டுக் கட்சிகள் - பாராளுமன்றம் பன்னித் தொழுவம் என்று கூறி ஜனநாயகம் இல்லை என்று மாரடிக்கும் இந்தக் கூட்டம். வெளிநாட்டில் எல்லாம் சோசலிச ஜனநாயகம் நிலவுவதாகவும் அந்தக் கட்சிகள் எல்லாம் இவர்களைப் போலவே வர்க்கத்தை கடந்து நிற்பதாகவும் கூத்தடிப்பது வேடிக்கையானது. இவர்கள் அணிகள் எல்லாம் இதனைப் படித்து விட்டு புல்லரித்துப் போவார்கள்.
இலங்கை பிரச்சனை தொடர்பான சந்திப்பின் நிலைபாடு