May 31, 2008

புரட்சியாளர்களா? சீர்குலைவாளர்களா?


தமிழகக் காடுகளில் மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் தேடிவரும் நிகழ்வுகள் செய்தி இதழ்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. மாவோயிஸ்ட் எனக்கருதப்படும் நவீன் எனும் இளைஞர் ‘என்கவுண்டரில்’ இறந்த சம்பவம் பல வாதங்களைக் கிளப்பியுள்ளது. குங்குமம் 08.05.2008 தேதியிட்ட இதழில் அருள் எழிலன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதில் சில உண்மைகள் திரித்துக் கூறப்பட்டுள்ளன. நக்சல் சீர்குலைவு வாதத்தின் தோற்றம் 1967ல் அரசியல் அரங்கில் காங்கிரசின் ஏக போகம் தகர்ந்தபொழுது மேற்குவங்கத்தில் ஒரு ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இடம்பெற்றது மட்டுமல்ல; தோழர் ஜோதிபாசு அவர்கள் துணை முதல்வரா கவும் பொறுப்பேற்றார்.இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் 1964ல் திருத்தல்வாதத்தை எதிர்த்து பொதுவுடமை இயக்கத்தினுள் 12 ஆண்டுகளாக நடந்த நீண்டப் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமாவதற்கு காரணமாக அமைந்தது. எனினும் கட்சிக்குள் மீண்டும் ஒரு உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் விளைந்தது. இதனை திணித்தவர்கள் இடதுசீர்குலைவு வாதங்களை முன்வைத்தனர்.

இவர்கள் முன்வைத்த வாதங்களின் சாரம் என்ன?

  • இந்தியா ஒரு அரைக்காலனி நாடு; அரை நிலப்பிரபுத்துவ நாடு.
  • இந்தியாவில் புரட்சிக்கு காலம் கனிந்து விட்டது. மக்கள் புரட்சிக்கு தயாராக உள்ளனர்.
  • கட்சி உடனடியாக ஆயுதமேந்தி போராட வேண்டும்.
  • மக்களை கட்சி திரட்ட வேண்டியதில்லை. நமது வீரசாகசங்களைப் பார்த்து மக்கள் நம் பின் திரளுவார்கள்.
  • வர்க்க எதிரிகளாக உள்ள தனிநபர்களை அழித்தொழித்திட வேண்டும்.

தொழிற்சங்க, விவசாய சங்கப் பணிகள் எல்லாம் தேவையற்றது. ஆழமான விவாதங்களுக்கு பிறகு கட்சி இக்கருத்துக்களை நிராகரித்துவிட்டது. எனினும் சீர்குலைவுவாதிகள் தமது வாதங் களைக் கைவிடவில்லை. கட்சியினுள் பல்வேறு குழப்பங்களையும் கட்டுப்பாடு மீறல்களையும் அரங்கேற்றி வந்தனர்.

இதன் ஒரு கட்டத்தில் தான் நக்சல்பாரி கிராமத்தில் ஆயுதம் தாங்கிய கலகத்தை இவர்கள் தொடங்கினர்.“கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவராக இருந்த சாருவின் (சாருமசும்தார்) குரலை அவ ரது கட்சியே எதிர்பார்க்கவில்லை” என குங்கு மம் கட்டுரையாளர் கூறுகிறார். இது முற்றிலும் தவறான ஒன்று.சாருமசும்தார் கோஷ்டி முன்வைத்த கருத் துக்களை கட்சி ஜனநாயக முறையில் விவாதித் தது மட்டுமல்ல; அது சீர்குலைவு வாதம் எனவும் பொதுவுடைமை இயக்கத்தை தடம்புரள வைத்து விடும் எனவும் உறுதியான முடிவுக்கு வந்தது. எனவே இச்சீர்குலைவு வாதங்கள் கட்சியால் நிராகரிக்கப்பட்டன.இடிமுழக்கமா? சீர்குலைவு முழக்கமா?‘நக்சல்பாரி எழுச்சியை வசந்தத்தின் இடி முழக்கம்’ என வரலாறு பதிவு செய்ததாக குங்குமம் கட்டுரையாளர் கூறுகிறார். வசந்தத்தின் இடி முழக்கமாக அல்ல; மாறாக பொதுவுடமை இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு சீர்குலைவு ஏற்படுத்த முயன்ற நிகழ்வு இது என வரலாறு பதிவு செய்துள்ளது என்பதே உண்மை.ஏனெனில் இவர்கள் வைத்த ஒவ்வொரு கோட்பாடும் தவறான மதிப்பீடு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல கோட்பாடுகளை அவர்களே மாற்றிக்கொண்டுள்ளனர். இந்த தவறான கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் உயிர் இழந்ததும் திசைமாறிப்போனதும் வரலாற்று உண்மை.‘தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கம் எவ் வளவு வேகமாக எழுந்ததோ அதே வேகத்தில் பிளவைச் சந்தித்தது’ என குங்குமம் கட்டுரை யாளர் கூறுகிறார். இது தமிழகத்தில் மட்டுமல்ல பல பகுதிகளில் நக்சல் சீர்குலைவுவாதிகள் பிளவுபட்டுப்போயினர்.

ஒரு செல் இரண்டாகவும் அது நான்காகவும் பல்கிபெருகுவது போல நக்சல் சீர்குலைவு கோஷ்டிகள் பிளவுபடுவதும் பிறகு ஒன்றுபடுவதும் மீண்டும் பிளவுபடுவதும் என முடிவில்லா பரிணாம வளர்ச்சியைக் கண்டனர். 1979-80 காலத்தில் நக்சல் சீர்குலைவு வாதிகள் 35 கோஷ்டிகளாக பிளவுபட்டிருந்தனர்.சிபிஎம் ஊழியர்களைக் கொன்று குவித்தனர்ஒரு பொதுவுடைமை இயக்கம் செம்மை யாக செயல்பட இரு நிபந்தனைகளை தோழர் லெனின் முன்வைக்கிறார். ஒன்று சித்தாந்த ஒற்றுமை. இரண்டு அந்த ஒற்றுமையின் அடிப்படையில் ஸ்தாபன ஒற்றுமை.

இவை இரண்டும் இருந்தால் மட்டுமே இயக்கம் சிறப்பாக செயல்படும். நக்சல் சீர்குலைவுவாதிகளிடையே இவை இரண்டுமே இல்லை. எனவே அவர்கள் பல கோஷ்டிகளாகப் பிரிந்ததில் எவ்வித ஆச்சரிய மும் இல்லை. இந்த கோஷ்டிகளிடையே எவ்வளவு பிளவுகள் இருந்தாலும் ஒரு கருத்தில் மட்டும் ஒற்றுமை இருந்தது. அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதான எதிர்ப்பு என்பதாகும்.நக்சல் சீர்குலைவுவாதிகளுக்கு எதிராக சித்தாந்தக் கோணத்திலிருந்தும், நடைமுறையிலும் சமரசமற்ற எதிர்ப்பை வெளிப்படுத்துவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. எனவே இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கொலைவெறித் தாக்குதலை ஏவிவிடவும் தயங்கியதில்லை.

இந்தியாவில் 1975ல் அவசர நிலை! ஆனால் மேற்குவங்கத்திலோ 1971லிருந்தே அறிவிக்கப் படாத அவசரநிலை! 1971-77 காலகட்டத்தில் மட்டும் 1100 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இதில் நக்சல் சீர்குலைவுவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் கணிசமானவர்கள். காங்கிரஸ் குண்டர்க ளோடு இணைந்து நக்சல் சீர்குலைவுவாதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை கொன்றனர்.

இந்தக் கூட்டணி இன்றுவரை நந்திகிராமத்தில் தொடர்கிறது. 2008ல் இது வரை 19 ஊழியர்களை மாவோயிஸ்ட் சீர் குலைவுவாதிகள் கொன்றுள்ளனர்.உழைப்பாளிகளைக் கொல்லும் மாவோயிஸ்ட்டுகள்இன்றும் நக்சல் சீர்குலைவுவாதிகள் பல கோஷ்டிகளாக உள்ளனர். அவர்களில் மாவோ யிஸ்ட்டுகள் கோஷ்டி இன்றளவும் ‘எதிரியை அழித்தொழிக்கும்’ கோட்பாட்டை கைவிட வில்லை.

எந்த உழைப்பாளி மக்களுக்காக ஆயுதம் ஏந்துவதாக மாவோயிஸ்ட்டுகள் கூறிக்கொள்கின்றனரோ அதே உழைப்பாளிகள் அதுவும் மலைவாழ் மக்கள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ளனர். ‘சல்வா சுடும்’ எனும் அமைப்பை அரசு எந்திரம் ஏற்படுத்தி மலைவாழ் மக்களுக்கு ஆயுதங்கள் தரப்படுகின்றன.

இவர்கள் மாவோயிஸ்டுகளை தாக்குவதும் மாவோயிஸ்டுகள் இவர்களை தாக்கு வதும் ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்றும் நடக்கிறது. மாவோயிஸ்டுகள் திருப்பித் தாக்கும்பொழுது பெண்கள் மற்றும் குழந்தை களைக் கூட விட்டுவைப்பதில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பரம ஏழைகளான மலைவாழ் மக்கள் ஏன் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்துகின்றனர் என் பதை சிந்தித்திட மாவோயிஸ்டுகள் தயாராக இல்லை.நேபாள மாவோயிஸ்டுகள் இந்திய மாவோயிஸ்டுகளை ஆதரித்தவர்கள். அவர்கள் நேபாளத்தின் சூழலை கணக்கில் கொண்டு தமது கோட்பாடுகளில் மாற்றம் கண்டுள்ளனர். ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்திய மாவோயிஸ்டுகள் தமது அடிப்படை நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள். இந்த நியாய மான வேண்டுகோள் இந்திய மாவோயிஸ்டுகளின் காதுகளில் இறங்குமா என்பது கேள்விக் குறியே! ஊடகங்களின் ஆதரவு ஏன்?

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகள் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனை இடதுசாரிப்பாதையில் கொண்டு சென்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயல்கிறது. மக்களின் கோபம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக திரும்புவதைவிட நக்சல்/மாவோயிஸ்ட் சீர்குலைவுவாதிகளுக்கு ஆதரவாக திருப்புவது தமக்கு நல்லது என ஆளும் வர்க்கங்கள் கணக்கு போடுகின்றன.

எனவேதான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பல ஊடகங்கள் பக்கம்பக்கமாக செய்திகள் வெளியிடுகின்றன. பிரம்மாண்டமாக வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டைப் பற்றி எழுதாதவர்கள் மாவோயிஸ்டுகளை சிலாகிக்கின்றனர்.

இந்தியப்புரட்சியின் முன்னேற்றத்தில் இடது சீர்குலைவுவாதத்தை எதிர்த்து போராடியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்துள்ளது. அப்போராட்டத்தில் பல இன்னுயிர்களையும் இழந்துள்ளது. இடது சீர்குலைவு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை இடைவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும், ஏனெனில் இப்போராட்டம் இந்தியப்புரட்சியின் முன்னேற்றத்தோடு பிரிக்கமுடியாத தொடர்பு கொண்டதாகும்.

Thanks: அ.அன்வர் உசேன்

www.theekkathir.in

May 27, 2008

மக்களைத் தாக்க வருகிறது அன்புமணி வைரஸ்!

இன்று வரை இந்திய மக்களின் உயிர்களை காத்து வந்த தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளை - தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான கிண்டியில் உள்ள பி.சி.ஜி. இன்ஸ்டிடியூட், நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், மத்திய பிரதேசம் கசௌலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் தடுப்பூசி மருந்து உற்பத்தியை ஜனவரி 22 முதல் நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த இந்த நிறுவனங்களை மூடுவதற்கு அவர் கூறிய காரணம், உலக சுகாதார அமைப்பின் தரவிதிகளுக்கு உட்பட்டு இந்நிறுவனங்கள் செயல்படவில்லை அதாவது, உலக சுகாதார நிறுவனம் - சிறந்த உற்பத்திக்கான அடிப்படைகள் (ழுடிடின ஆயரேகயஉவரசபே ஞசயஉவஉநள) என்று வகுத்து, அதனை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளது. இந்த அடிப்படையில் இந்நிறுவனங்கள் செயல்படவில்லை; எனவே அவற்றின் உரிமங்களை ரத்து செய்ததோடு, மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு மூட வில்லையென்றால் (என்.ஆர்.ஏ.) தேசிய கட்டுப்பாட்டு ஆணைய அங்கீகாரம் பறிபோய்விடும். இதனால் நம்முடைய நாட்டு மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்று கூறி இந்நிறுவனங்களின் உற்பத்திக்கு பெரிய பூட்டு போட்டுள்ளார் அன்புமணி இராமதாஸ்.

நாடு முழுவதும் இப்பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில், இதனால் இந்திய தேசத்திற்கு வரப்போகும் ஆபத்தை அன்புமணி இராமதாஸ் உணர்ந்திருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொள்ளை நோய்கள் என்று அழைக்கப்படும் பெரிய அம்மை, சின்ன அம்மை, காசநோய், கக்குவான், டெட்டனஸ், டிப்தீரியா போன்றவற்றின் பிடியிலிருந்து குழந்தைகளை காப்பாற்றவே இந்த நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு நூற்றாண்டு காலமாக இந்நிறுவனத்தில் உற்பத்தியான மருந்துகளே தற்போதுள்ள 120 கோடி இந்தியர்களின் உடலில் ஊறியுள்ளது - பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் மூலம் கர்ப்பணி தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை பி.சி.ஜி. தடுப்பூசியும், டி.பி.டி. தடுப்பூசியும் அனைத்து குழந்தைகளுக்கும் - பிறந்தது முதல் ஒன்பது மாதங்கள் வரை இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான ஏழை - எளிய மக்களின் குழந்தைகளின் உயிர்கள் கடும் நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தற்போது, மத்திய சுகாதார அமைச்சர் உலக சுகாதார அமைப்பை காரணம் காட்டி இந்நிறுவனங்களை மூடியுள்ளதால் எழக் கூடிய அபாயங்கள் என்ன? இனிமேல் நாம் தடுப்பூசி மருந்துகளை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும்தான் வாங்கி பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் மருந்து விலை கடுமையாக உயருவதோடு - எதிர்காலத்தில் ஏழை - எளிய மக்கள் இம்மாதிரியான நோய்த் தடுப்பிலிருந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்ற முடியாது சூழலும் எழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. பறவைக் காய்யச்சல், சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் வந்தால் அதனை உடனடியாக சமாளிப்பதற்கு திறனற்ற நிலையியே தற்போது உள்ளோம் என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் இருக்கக்கூடிய திறன்மிக்க மருந்து நிறுவனங்களை மூடி விடுவதால் அந்நிய பிசாசுகள்தான் இந்தியாவில் கோலோச்சும் - காசு உள்ளவனின் உயிர் மட்டுமே பிழைக்கும். ஏழை - எளிய மக்கள் குப்பைகளாய் மடியவேண்டியதுதான்.

இது குறித்தெல்லாம் அன்புமணி இராமதாசிடம் கேள்வி எழுப்பினால் செங்கல்பட்டு அருகில் 400 ஏக்கர் பரப்பளவில் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வேக்சின் பார்க்கை உருவாக்கப்போவதாக கூறுகிறார். இது இன்னும் இரண்டு ஆண்டுகளில் உற்பத்தியைத் துவக்குமாம்! சரி மூடப்பட்ட பாரம்பரிய நிறுவனங்களின் கதை என்ன என்று கேட்டால் அதனை வெறும் பாட்டிலில் மருந்துகளை அடைக்கும் - பாலிட்டிலிங் தொழிலுக்காகவும், ஆராய்ச்சிக் கூடங்களாகவும், வேறு சில மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகவும் மாற்றப்படும் என்று கூறுகிறார்?

அதாவது நூற்றாண்டுகளாக தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் முதிர்ந்த அனுபவம் உள்ள ஊழியர்களின் திறனை கொன்று விட்டு, தனியார்களின் காலடியில் குப்பைகளாய் அவர்களை கொட்டக்கூடிய காரியத்தைத்தான் செய்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

இது குறித்து பல்வேறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் பி. மோகன் மற்றும் பிருந்தா காரத் ஆகியோர் கேள்வி எழுப்பிய போது மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து உருப்படியான பதில் கிடைக்கவில்லை! மேலும் பிருந்தா காரத் இது குறித்து இரண்டு முறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் இரண்டு - மூன்று மாதங்கள் கழிந்த பிறகு கூட அவர் அதற்கான முறையான பதிலை அளிக்கவில்லை என்பதையும் பாராளுமன்றத்திலேயே கூறியுள்ளார்? தேசத்தின் முக்கியமான நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்கும் போது அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டாமா? அல்லது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவர் தனது சந்தேகங்கள் குறித்து கடிதம் எழுதினால் மத்திய அமைச்சர் எதற்காக மவுனம் சாதிக்க வேண்டும்? யாருடைய நலனைக் காப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் செயல்படுகிறார்? மேலும் குறித்து அனைத்து கட்சிகளும் மவுனம் சாதிப்பது வேடிக்கையாகவும், வெட்கக்கேடாகவும் இருக்கிறது.

குறிப்பாக இதற்கு பின்னால் தனியார் மருந்து உற்பத்தி பகாசுர நிறுவனங்களின் கைகள் மறைந்து கிடக்கிறது என்பதுதான் உண்மை. இதற்கு தடுப்பூசி மருந்து நிறுவனங்களின் இயக்குனராக இருந்த டாக்டர் இலங்கேஸ்வரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவருடைய நன்பர் சுந்தரபரிபூரணம் மற்றும் தனியார்களின் கூட்டுச் சதியே இந்த நிறுவனங்களின் மூடலுக்கு காரணம் என்று ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக இந்த பாரம்பரிய மருந்து நிறுவனங்களின் உற்பத்தி முடலுக்குப் பின்னால் இவர்களின் முக்கூட்டுச் சதியும் - பெரும் ஊழலும் ஊறிப்போயுள்ளது. இந்த சுயநலவாதிகளின் கூட்டுச் சதியை முறியடிக்க வேண்டிய பெரும் கடமை இந்திய மக்கள் முன்னுள்ளது.

இதற்கு அவர்களது வாக்கு மூலங்களே சாட்சியாக உள்ளது.

குறிப்பாக டாக்டர் இலங்கேஸ்வரன் சன்டே இந்தியனுக்கு அளித்த பேட்டியை பார்ப்போம். அவரது பேட்டியின் ஒரு சில அம்ங்களை மட்டும் இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும்.

அவரது பேட்டி என்ன வென்று பார்ப்பதற்கு முன் சென்னை, கிண்டி பி.சி.ஜி. இன்ஸ்டிடியூட்டில் டைரக்டராக பொறுப்பேதற்கு முன்னால் ஓட்டை ஸ்கூட்டரும், பழைய பியேட் காரும் வைத்திருந்த இலங்கேஸ்வரன் தற்போது சென்னை சைதாப்பேட்டையில் இரண்டு பெரிய பங்களாக்களுக்கு அதிபதி. அதுமட்டுமின்றி பல்வேறு செங்கல்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இவைகள் எப்படி வந்தது? மேலும் அவரது மனைவி - சுந்தர பரிபூரணத்துடன் கூட்டாளியாக இணைந்து கிரீன் சிக்னல் பயோ பார்மா என்ற நிறுவனத்தை துவங்கி கொள்ளையடித்து வருகின்றனர். மேலும் இந்த இலங்கேஸ்வரன் ஊழியர்களிடம் தரக்குறைவாக நடந்துக் கொள்வது-குறிப்பாக பெண் ஊழியர்களிடம் முறைகேடாக நடப்பது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் யூரின் பிளாடர் கேன்சருக்கு கொடுக்கும் மருந்துகள் காலாவதியாகிப்போன பின்புகூட அதற்கு மறுதேதி லேபிள்களை மாற்றி - ஏமாற்றி வந்துள்ளார். இதுபோன்ற பல அயோக்கியத்தனத்தை செய்து வந்த இலங்கேஸ்வரன் மீது இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அந்த ஊழியர்கள் சுமத்துகிறார்கள். மேலும் சிறந்த விஞ்ஞானிகளை - ஆராய்ச்சியாளர்களை பழிவாங்குவது, இடம் மாற்றம் செய்வது, ஊழியர்களை மிரட்டுவது, நடவடிக்கை எடுப்பது போன்ற தொழிலாளர் விரோத செயல்பாடுகளையும் மேற்கொண்டவர் இந்த அரசு நிறுவனத்தை எப்படி நேர்மையாக செயல்படுத்துவார் என்ற கேள்வியும் எழுகிறது. இப்போது அவரது வாக்கு மூலத்தை பார்ப்போம்!

"உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழுவை கூட்டி வந்ததே தனியார் ஆட்கள்தானே! அர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. அரசு அதிகாரத்துக்கு யார் வந்தாலும், மந்திரியாக யார் வந்தாலும் அதுதான் நடக்கும்.

ஊழியர்கள் செய்த பாவத்தால் பாஸ்டியர் நிறுவனம் உருப்படாது; இந்துஸ்தான் போட்டோ பிலிம் மாதிரி இதுவும் ஒன்றுமில்லாமல் அழிந்து விடும். அக்கிரமக்காரர்களை கடவுள் மன்னிக்க மாட்டார்"

மேற்கண்ட கூற்றுகளே அந்த இயக்குநரின் உள்நோக்கம் என்ன என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதாவது, உலக சுகாதார நிறுவனத்தின் விதிகள் என்று கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்புதான். இதில் தனியார் முதலாளிகளின் கொள்ளைதான் அடிப்படை காரணமாக இருக்கிறது. மேலும் எந்த ஒரு இயக்குநராவது தான் பொறுப்பேற்றுள்ள ஒரு நிறுவனம் உருப்படாது என்று கூறுவாரா? அப்படி கூறக்கூடிய இந்த உருப்படாத சோம்பேறியை இந்திய மக்கள் மன்னிக்கலாமா? இவர்கள் ஊழியர்களின் வாழ்க்கையோடு விளையாட வில்லை 10 கோடி இந்திய குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்?

இந்த இலங்கேஸ்வரன் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளனர். நேரிடியாகவும் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த அயோக்கியன் மீது இதுவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளார். இந்த ஊழல் பேர்வழி மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக அவருக்கு பச்சைக் கொடி காட்டியதன் மூலம் மேலும் வலுவான கொள்ளையை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதற்கு அன்புமணி இராமதாசும் உடந்தையாக இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுவாக எழுந்துள்ளது.

அன்புமணி ராமதாஸ் இது விசயத்தில் கொடுக்கக்கூடிய பேட்டிகளைப் பார்த்தாலே இதில் எந்தவிதமான கொள்கைத் தெளிவும் இல்லாமல் - கொள்ளைத் தெளிவோடு செயல்படும் கூட்டாளிகளின் பங்காளியாக செயல்பட்டுள்ளார் என்பதுதான் தெரிகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசின் பேட்டிகளே இதற்கு சாட்சியாக உள்ளது. அவரது கூற்றையும் பார்ப்போம்.

21.05.2008 ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறுகிறார்.

"சுற்றுலாத்துறையில் வேண்டுமானால் பழைமை வாய்ந்த நிறுவனங்களுக்கு மவுசு இருக்கலாம். சுகாதாரத்துறையில் புதிது புதிதான அறிவியல் மாற்றங்கள்தானே உதவும்!
உலக சுகாதார நிறுவனம் இந்த மூன்று நிறுவனங்களையும் ஆய்வு செய்து, அவற்றின் தயாரிப்புகளை உபயோகப்படுத்துவது ஆபத்தானது என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. வளரும் நாடுகளின் தடுப்பூசி மருந்துகள் தேவையை 80 சதவிகிதம் பூர்த்தி செய்வது நம் நாடுதான். உலக நாடுகளுக்கு தரம் வாய்ந்த தடுப்பூசி மருந்துகளை வழங்கி விட்டு, உங்கள் குழந்தைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவீர்களா? என்று என்னிடம் கேட்டது. மருத்துவத்துறையில் சமாதானத்துக்கு இடமில்லை என்பதால் மூன்று நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்தது. அவற்றின் கட்டமைப்பை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோமே தவிர அவற்றை மூடவில்லை. அங்கிருக்கும் ஒரு தொழிலாளி கூட வேலை இழக்க மாட்டார். "

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ புதிய தத்துவத்தை அன்புமணி ராமதாஸ் உபதேசிப்பதுபோல் தோன்றும், ஆனால் உள்ளுக்குள் அவ்வளவும் விஷம்தான் கலந்திருக்கிறது. சுகாதாரத்துறையில் புதிய அறிவியல் மாற்றங்கள்தான் தேவையாம்! சரிதான் இதை அரசுத்துறையில் செய்வதற்கு யார் தடையாக இருந்தார்கள்? என்பதுதான் நமது கேள்வி! மத்திய சுகாதாரத்துறை இதனை யாரிடம் எதிர்பார்க்கிறார்? யார் இதனை இந்த நிறுவனங்களில் நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறார் என்பது புரியவில்லை? கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த மூன்று நிறுவனத்தையும் அபவிருத்தி செய்வதற்கு என்ன முயற்சி எடுத்தார் என்பதையும் சொல்ல வேண்டுமா இல்லையா? அடுத்து, உலக சுகாதார நிறுவனம் இந்த நிறுவனங்களின் மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தானது என்று கூறியுள்ளதாக கூறியுள்ளார்! அவ்வாறு எங்கு கூறியுள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டாமா? உண்மை என்ன? இந்த மூன்று நிறுவனங்களின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், சீரமைக்க வேண்டும் என்றுதான் சொல்லியுள்ளதாக ஊழியர்கள் அம்பலப்படுத்துகின்றனர். ஆனால், தனது மனசாட்சியின்படி பதவியேற்ற அன்புமணி ராமதாஸ் இந்திய மக்களிடம் பொய்யைச் சொல்கிறார் என்றால் மானசீகமாக அவர் பதவியில் நீடிக்கலாமா என்ற கேள்வியே எழுகிறது. இது குறித்த முழு உண்மைகளை, வெள்ளை அறிக்கையை அவர் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.
எலிகளைக் கொன்ற எமகாதகர்கள்!

குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டில் அபூர்வமான வெள்ளை எலிகள் வளர்க்கப்படுகிறது. இதனை கினிஃபீல் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த எலிகள் மூலம்தான் முதற் கட்டமாக சோதனை செய்யப்பட்டு அந்த மருந்துகளால் ஏற்படும் மாற்றங்களை அறிந்து, சோதனை வெற்றியடைந்த பின்னர் மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த கினிஃபில் எலிகளை வளர்ப்பதற்கும், பக்குவப்படுத்துவதற்கும் குறைந்தது 10 வருடங்கள் ஆகுமாம். அதாவது இந்த எலிகள் குறிப்பிட்ட சீதேஷ்ன நிலையில்தான் வாழும். இந்த எலிகளை குழந்தைகளை விட குழந்தையாக அந்த நிறுவன ஊழியர்கள் பாதுகாத்து வந்தார்கள். திடீரென்று ஒரு நாள் இந்த நிறுவன இயக்குநர் இலங்கேஸ்வரன் தொலைபேசி மூலமாக கட்டளையிட்டு அந்நிறுவனத்தில் உள்ள 544 எலிகளையும் உடனடியாக சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்! இதற்கு ஊழியர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்த எலிகள் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறினால் செத்துவிடும் என்று தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை சட்டை செய்யாத சீனியர் மைக்ரோலஜிட் என்று அழைக்கப்படும் டைரக்டர் இலங்கேஸ்வரன் இது அமைச்சர் அன்புமணியின் கட்டளை எனவே உடனே அனுப்புங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். ஊழியர்களும் மிகப் பத்திரமாக ஏ.சி. வண்டியில் அனுப்பியுள்ளார்கள். ஆனால் நடந்தது என்ன குன்னூரை விட்டு தாண்டியவுடன் அந்த 544 எலிகளும் இறந்து விட்டது. இதில் 240 எலிகள் கர்ப்பமடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஊழியர்கள் இலங்கேஸ்வரனுக்கு தெரிவித்தவுடன் - பரவாயில்லை. அந்த கினிஃபில் துறையையே மூடிவிடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். இதிலிருந்தே இவர்களின் செயல்பாடு இந்த நிறுவனத்தை கறுவறுக்க எப்படியெல்லாம் சதி செய்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.

அதாவது இலங்கேஸ்வரனும் - டாக்டர் அன்புமணி ராமதாசுமே இந்த எலிகளின் மரணத்திற்கு முழு காரணமாக இருந்துள்ளார்கள். இந்த எலிகளின் தன்மைக் குறித்து அறியாத இந்த மாங்கா மடையன் இலங்கேஸ்வரன் எப்படி இந்த நிறுவனங்களுக்கு டைரக்டராக இருக்க முடியும்! திடீரென எலிகளை மாற்றுவதற்கான தேவை என்ன? செத்துப் போன எலிகளைப் போல் மீண்டும் உருவாக்க வேண்டும் என்றால் இன்னும் 10 ஆண்டுகள் ஆகுமே என்ன செய்யப்போகிறார்கள்? இதன் மேல் மத்திய சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்று நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மக்களின் உயிரைக் காப்பதற்கு தங்கள் உயிரை பணம் வைத்த எலிகளை கொன்ற எமகாதகர்களை மன்னிக்கலாமா? எனவே இவர்கள் மக்கள் மக்கள் உயிர்களை எப்படிக் காப்பார்கள்?

அதேபோல் தாய் சீட் (மதர் சீட்) என்று சொல்லக்கூடிய தாய் உயிரியை தனியார் நிறுவனங்களுக்கு திருட்டுத்தனமாக கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் கும்மிடிப்பூண்டில் உள்ள கிரின் சிக்னர் பயோ பார்மா என்ற நிறுவனத்திலிருந்து ரூ. 3.5 கோடிக்கு உயிரி பொருளை விலைக்கு வாங்கி உள்ளார்கள். இந்த உயிரி பொருள் இலவசமாக கிடைக்ககூடிய ஒன்றாம். இப்படி பல்வேறு ஊழல்கள் இதற்கு பின்னால் மறைந்துள்ளன. இது குறித்தெல்லாம் ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகள் விரிவாக எழுதியுள்ளன அன்புமணியும் - டாக்டர் ஐயவும் சாராய சாவுகள் குறித்து கவலைப்படுகிறார்களே ஒழிய மக்களின் எதிர்கால வாழ்க்கைப் பிரச்சினை குறித்த இந்த மருந்து நிலையங்கள் குறித்து கள்ள மவுனம் சாதிப்பது ஏனோ?

இந்தியாவில் செயல்படும் தனியார் தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்காண்டு பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிறுவனங்கள் மூலம் வெளி நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் உள்ள மார்க்கெட்டும் இவர்களுக்கு திறந்து விடப்பட வேண்டும் என்றால், அதற்கு தடையாக இருப்பது மத்திய நிறுவனங்கள் சார்ந்த தடுப்பூசி மருந்து நிறுவனங்களே! எனவேதான் இதன் கழுத்தை முதலில் நெறித்து விட்டார்கள்.

மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் தரத்தை எட்டுவதற்கு இந்த மூன்று நிறுவனங்களுக்கும் வெறும் 50 கோடி ரூபாய் போதும் என்று சொல்லப்படுகிறது. இந்த தொகையை ஒதுக்கி மேம்படுத்துவதற்கு மாறாக அதன் உயிரை கொள்ளை நோய் வந்து அமுக்குவதுபோல் அமுக்குவது யாருடைய நலன் காப்பதற்கு. இதுதான் உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம். மொத்தத்தில் அன்புமணி என்ற வைரஸ் இந்திய மக்களை தாக்கத் துவங்கி விட்டது! நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற பிரச்சினை சீனாவுக்கும் ஏற்பட்டது. ஆனால் சீன அரசு என்ன செய்தது தெரியுமா? எங்கள் நாட்டு மருந்து தரமானது; அதுவே எங்கள் குழந்தைகளுக்கு போதுமானது என்று சொல்லிவிட்டு, அவர்கள் ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டார்கள். சீன மக்களுக்கு அவர்களது மருந்துகளே விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது. அன்புமணியின் பாசம் இந்திய மக்கள் மீதா பன்னாட்டு - உள்நாட்டு முதலாளிகள் மீதா?

அடுத்து, இந்தப் பிரச்சினை எப்போது துவங்கியது. அவர்கள் மன்மோகன் தலைமையிலான அரசு ஆட்சிக்குப் வந்த போதே இப்பிரச்சினை அரசுக்கு தெரியும்! அன்புமணி ராமதாஸ் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் நமது கேள்வி? புதிய நிறுவனத்தை செங்கல்பட்டில் சர்வதேச தரத்துடன் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்து உற்பத்தியை துவக்க முடியும் என்றால், ஏற்கனவே இருக்கும் நிறுவனத்தை மேம்படுத்த ஒரு வருடம் போதாதா? இதுவரை என்ன செய்தார்?

சாராயத்தால் மக்கள் வாழ்வு பறிபோகிறது என்று கதறும் டாக்டர் ஐயா அவர்கள் தடுப்பூசி மருந்துகளால் எதிர்கால சந்ததியே பறிபோகப்போகிறதே என்ன சொல்லப்போகிறார்? தமிழகத்தில் ஒரு கொள்கை! மத்தியில் ஒரு கொள்கையா?
நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊட்டச்சத்து குறைவான உணவை சாப்பிடுகிறார்கள் என்று தமிழோசையில் புள்ளி விவரம் வெளியிடும் பா.ம.க.வைச் சார்ந்த அமைச்சர் அன்புமணி அவர்களே! இதுபோன்ற ஊட்டச்சத்து குறைவானவர்களைத்தான் முதலில் தொற்றுநோய்கள் தங்கள் விருந்தாளிகளாக வந்து தாக்கும் என்பதை அறியாதவரா நீங்கள்! தொற்று நோய் மருந்து உற்பத்தி தனியார் வசம் போனால் ஏழைகளுக்கு எட்டுமா இந்த இலவச மருத்துவ வசதி! இது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பினால் இது வடநாட்டவர் சதி என்று கூறி நீங்கள் திசை திருப்புவதை யாரும் ஏற்க மாட்டார்கள். மாறாக இதன் உண்மை விவரத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதன் மூலமே நீங்கள் சுத்த சுயப்பிரகாசம் என்பதை நம்புவார்கள்! மேலும் இலங்கேஸ்வரன் விவகாரத்தில் இதுவரை நீங்கள் எடுத்த நடவடிக்கை பற்றி எதுவுமே கூறாமல் இருப்பதன் மர்மம் என்னவோ?

இந்தப் பிரச்சினைகள் குறித்து அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும்! இல்லையென்றால் இந்தியாவில் உள்ள குழந்தைகள் - மாணவர்கள் தெருவிலிறங்கி போராடாமல் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது!

May 23, 2008

போற்றுதலுக்குரிய சேவை!


இந்திய நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளில் மிக முக்கியமானது ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். இது இன்றைய வாலிப உள்ளங்களின் கனவு. இந்திய ஆட்சிப் பணியில் தேறியவர்கள் மாவட்ட ஆட்சியராகவும் - வேறு பல முக்கிய அரசுத்துறைகளிலும் உயர் பதவியை வகிக்க முடியும். குறிப்பாக இத்தகைய தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு கடுமையான பயிற்சியும் - வசதி வாய்ப்பும் அத்தியாவசியமானது. குறிப்பாக இத்தகைய தேர்வுகளில் வசதி படைத்தவர்களே பெரும்பாலும் வெற்றி பெறுகின்றனர் என்பதை நாம் அறிவோம். அதிகார வர்க்கத்திற்கு அதிவார வர்க்கத்திலிருந்தே தேர்வு பெறுகின்றனர் என்பதுதான் உண்மை.
இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி அவர்கள் தன்னுடைய சொந்த முயற்சியால் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அகாடமி என்ற பயிற்சி நிறுவனத்தை துவக்கி சேவை செய்து வருகிறார். முதல் முறையாக இந்த ஆண்டு இக்கல்வியகத்தில் படித்த மாணவர்களில் 12 பேர் ஐ.ஏ.எஸ். படிப்பதற்கு தேர்வாகியுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயம். இந்த கல்வியகத்தில் 27 பேர் பயின்றதில் 12 பேர் தேர்ச்சி என்றால் நல்ல முறையிலான ரிசல்ட் என்றே கூறலாம். மேலும் இதில் படித்தவர்கள் யாரும் காசு கொடுத்து படித்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் கிடையாது. சாதாரண ஏழை - எளிய - நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளே இந்த கல்வியகத்தில் பயின்றுள்ளனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு தலித் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே.
இந்த கல்வியகத்தில் பயிலும் மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிப்பதில்லை. மேலும் அவர்களுக்கு உரிய புத்தகம் - தங்குமிடம் - தரமான, சத்தான உணவு வகைகள் கொடுக்கப்படுகிறது. 100 பெட் வசதியுடன் இந்நிறுவனம் நல்ல தரமான கட்டமைப்போடு செயல்படுகிறது. இதில் பயிற்சியளிப்பவர்களில் முக்கியமானவர் முன்னாள் துணை வேந்தர் வ.செ. குழந்தைசாமி என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி இதுபோன்ற முன்னுதரணமான சேவையை சைதை துரைசாமி ஆற்றி வருவது பாராட்டுக்குரியதே. (இவர் அ.இ.அ.தி.மு.க. கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) தன்னுடைய மற்றும் தனது மனகனின் ஐ.ஏ.எஸ். கனவுகள் நிறைவேறாவிட்டாலும் இதுபோன்ற சேவை மூலம் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார். இது குறித்த செய்தி இன்றைய (23.05.2008 டெக்கான் கிரானிக்கல் - சென்னை பதிப்பில் வந்துள்ளது)
தன்னைப் போல் வசதியானவர்கள் இதுபோன்ற சேவைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். நம்முடைய புதுப் பணக்காரர்கள் ஐ.டி. மற்றும் இந்தியாவில் இந்திய அரசின் செலவில் படித்து வெளிநாட்டில் மிக வசதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுகவாசிகள் இதுபோன்ற சேவையில் ஈடுபடுவார்களா?
நர்சரி மற்றும் மெட்ரிக் கல்வி மூலமும் - பொறியியல் கல்லூரிகளை திறப்பதன் மூலம் காசு பார்க்கும் கல்வி வியாபார உலகில் இதுபோன்ற சேவையை மனதார வரவேற்க வேண்டும். கல்வி வெறும் கடைச் சரக்காக மாறிவிட்ட இன்றைய உலகமய யுகத்தில் பெரும்பாலான ஏழை - எளிய மக்களுக்கு தரமான கல்வி கைகூடுமா? என்ற ஏக்கத்திற்கு ஆறுதலான விசயமே இது.
வாழ்த்துக்கள் திரு. சைதை துரைசாமி அவர்களே:!

May 21, 2008

நாசா செல்லும் தலித் மாணவன்!


அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளித்துறையில் பயில்வதற்கான ஜுனியர் ஆய்வாளருக்கான தேர்வில் மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரைச் சேர்ந்த தலித் மாணவன் சீரதன் காம்ளி (வயது 17) வெற்றி பெற்று தேர்வாகியுள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சீதரன் உலகின் மிகவும் அந்தஸ்து பெற்ற அறிவியத்துறையான நாசாவிற்கு செல்வது பாராட்டுக்குரிய அம்சமாகும். இதன் மூலம் இவருக்கு மாதம் 1000 டாலர் உதவித் தொகையாக நாசா வழங்கும். நான்கு வருட காலம் படிப்பிற்கான தொகை 50000 டாலர் செலவாகிறதாம். இதற்காக மகாராஷ்டிர அரசும் - சமூகத்தில் உள்ள பெரியவர்களும் உதவத் தயாராக முன்வந்திருக்கிறார்கள். சீதரன் 2004 ஆம் ஆண்டு பாபா அணு சக்தி கழகத்தின் சார்பில் இளம் சயின்டிஸ்ட் பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தின் அடித்தட்டிலிருந்து இத்தகைய உயர்ந்த இடத்திற்கு செல்லும் இம்மாணவணின் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சீதரன். இந்தியாவில் இன்றைக்கும் ஐ.ஐ.டி. உட்பட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் கோலோச்சுகிறது ஜாதியம். உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளை பல்வேறு வழிகளில் அடைத்து வருகின்றனர். வாய்ப்புக் கிடைத்தால் அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் - ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களும் வானில் பறக்க முடியும். சாதனைகளை படைக்க முடியும் என்பதைத்தான் சீதரனின் தேர்வு உணர்த்துகிறது. தொடரட்டும் இந்த சாதனைப் படிகள்.

May 14, 2008

பிங்க் சிட்டி பயங்கரவாதம்!ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூர் நேற்றைய தினம் பயங்கரவாதிகளின் ஆக்டோபஸ் கரங்களுக்கு இரையானது. இரவு 7.15 மணியளவில் 12 நிமிடங்களுக்குள் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி அப்பாவி மக்கள் 60 பேரின் உயிரை பலிகொண்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புச் செயல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சைக்கிள்களில் அபாயகரமான குண்டுகளைப் பொருத்தி வெடிக்கச் செய்துள்ளனர். இந்த செயலுக்கு பின்னல் எந்த பயங்கரவாத அமைப்பு இருந்தாலும் அதனை கடுமையாக தண்டிக்க வேண்டும். சர்வதேச சமூகம் இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக விழிப்புடன் இருந்து போராட வேண்டிய கட்டத்தில் உள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்கு ஒவ்வொரு முறையும் சாதாரண மக்களை குறிவைத்தே இயக்கப்படுகிறது. மும்பையில் இரயில் குண்டு வெடிப்பின்போதும் இதைத்தான் பார்க்க முடிந்தது. மேலும் இந்தியாவில் வகுப்பு மோதலை தூண்டும் வகையில் இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தி வருகின்றனர். ஆனால் இந்திய மக்கள் பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அடையாளம் கண்டுக் கொண்டதால் அவர்களது செயல் இதுவரை வெற்றிபெறவில்லை. மும்பையாகட்டும் - ஜெய்பூராகட்டும் அனைத்து பகுதி மக்களும் ஒன்றினைந்து இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக கைகோர்த்து நிற்பதை காண முடிகிறது. இத்தகைய ஒற்றுமை அனைத்துவிதமான மதஅடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் கைகோர்க்க வேண்டியுள்ளது.
மேலும் இந்திய உளவுத்துறை இதுபோன்ற பயங்கரவாதிகளின் செயல்களை - நடமாட்டங்களை கண்காணிப்பதில் செயலிழந்த தன்மையில் உள்ளதைத்தான் இக்குண்டு வெடிப்புகள் காட்டுகிறது. நமது போலீசும் - உளவுத்துறையும் எதிர்கட்சிகளின் பேச்சுக்களை எல்லாம் ஒட்டுக் கேட்பதில் உள்ள வல்லமை - இந்த பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்டு பிடிக்காத ஏமாளித்தனத்தை என்னவென்று சொல்வது!
பயங்கரவாதம் மக்களுக்கு எதிரானது அது எத்தகைய கொள்கையைக் கொண்டிருந்தாலும் அது மக்களுக்கு எதிரானதே! எனவே இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக இந்திய மக்கள் மேலும் - மேலும் விழிப்போடு செயலாற்ற வேண்டும். நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சங்பரிவாரத்தின் வெளிப்படையான மதவாத பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் அதே நேரத்தில் மறைமுகமாக செயல்படும் உள்நாட்டு - வெளிநாட்டு இசுலாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வெகுவாக போராட வேண்டும். மதத்தின் பெயரால் மக்களின் உயிர்களை கொல்வது பேதைத்தனமானது.
மேலும் பயங்கரவாதம் என்பது ஜனநாயகத்திற்கே எதிரானது அதைத்தான் நாம் பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் உயிரை பறித்தபோது பார்த்தோம். பயங்கரவாதக் கொள்கை என்பது மனித உயிரைப் பறிக்கும் காட்டுமிராண்டிக் கொள்கையே! இதற்கு எதிராக நமது ஒற்றுமை எனும் ஆயுதத்தை உயர்த்திப் பிடிப்போம்! பயங்கரவாதிகளை வேரறுப்போம்!

May 08, 2008

உத்தப்புரத்தில் பிரகாஷ் காரத்
உத்தப்புரத்தில் உற்சாகப் பெருவெள்ளம்
அவமானச் சின்னம் அகற்றப்பட்டது பிரகாஷ் காரத் பெருமிதம்

உத்தப்புரம் கிராமத்திற்கு மட்டுமல்ல தமிழக வரலாற் றிலும் இன்று ஒரு பொன் னா ளாகும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் பிரகாஷ் காரத் கூறினார். புதனன்று உத்தப்புரம் மக்களிடையே பேசிய அவர் கூறியதாவது:-கடந்த 18 ஆண்டுக ளுக்கும் மேலாக நிறுவப்பட் டிருந்த அவமானச்சின்னம் அகற்றப்பட்டுள்ளது. மக்களை சாதி ரீதியாக பிரித்து வைத் திருந்த, சாதிய ஒடுக்கு முறையின் சின்னமாக விளங் கிய தீண்டாமைக் கொடுமை யின் உச்சமாக காட்சியளித்த சுவரின் ஒரு பகுதி தகர்த்தெறி யப்பட்டுள்ளது. சுவரின் ஒரு பகுதியை தகர்த்து பொதுப்பாதை அமைத்த மாநில அரசையும் இதற்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணி வீரர் களையும் நெஞ்சாரப் பாராட் டுகிறேன்.கட்சியின் மாநில செயற் குழு கூட்டத்தில் பங்கேற் பதற்காக சென்னை வந்திருந்த போது மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்களை பிரித்து ஒதுக்குவ தற்காக கோட்டைச்சுவர் கட் டப்பட்டிருப்பதாக தகவல் தெரி விக்கப்பட்டது. இது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. தீண் டாமைச்சுவரை அகற்றக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவது என்று கட்சி முடிவு செய்தது. அந்த இயக்கத்தில் நானே நேரடியாக வந்து பங்கேற்கிறேன் என்று தெரிவித்தேன். இந்த நிலை யில் தான் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு பொதுப்பாதை திறக்கப்பட்டுள்ளது.நாடு சுதந்திரம் பெற்று 61 ஆண்டுகள் ஆகியும் இன்ன மும் சாதியக்கொடுமையும். ஒடுக்குமுறையும் நீடிப்பது வெட்கப்படத்தக்கது. இன்ன மும் தேசத்தின் பல கிராமங் களில் தீண்டாமை எனும் மனி தத் தன்மையற்ற செயல் நீடிப்பது விடுதலைப்போராட்ட உணர்வுகளுக்கு மாறானது. நாடு விடுதலை பெற்ற பிறகு நமது நாட்டின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது அனைத்துவகையான சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சட்ட விதிகள் உரு வாக்கப்பட்டது. ஆனால் தீண் டாமைக் கொடுமை நீடிக்கிறது.சமூக அநீதிக்கு எதிரான துவக்கமாக இன்றைக்கு உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப் பட்டுள்ளது ஒரு நல்ல துவக்க மாகும். இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.நமது நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய முக்கிய சிற்பியான டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் அனைத்து மக்களுக்கும் அரசி யல் சமத்துவம் மட்டுமின்றி சமூக பொருளாதார சமத் துவமும் உறுதிப்படுத்த வேண் டும் என்று கூறினார். சாதிய ஒடுக்குமுறைக்கு முற்றாக முடிவுகட்டவேண்டுமென்பதே அவரது கனவாகும்.இன்றைக்கு உத்தப்புரத் தில் தீண்டாமைச்சுவர் இடிக் கப்பட்டுள்ள செய்தியை நாட் டின் அனைத்து பகுதிக ளுக்கும் முன்னெடுத்துச் செல் வோம். சாதிய ஒடுக்குமுறை எந்த வகையில் நீடித்தாலும் அதை தகர்த்தெறிவோம்.உத்தப்புரம் கிராமத்தில் திறந்தவெளி சாக்கடை தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இது மூடிய சாக்கடையாக மாற்றப் பட்டு ஊருக்கு வெளியே கொண்டு செல்லப்படவேண்டும்.இங்குள்ள மக்கள் கட வுளை நம்புகிறவர்கள். கட வுள் அனைவருக்கும் பொது வானவர் என்று கூறப்படுகி றது. அதைப்போல கோவில் என்பதும் அனை வருக்கும் பொதுவான ஒன்று தான். தலித் பகுதி மக்களும் கோவிலுக்கு சென்று கட வுளை வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். அதே போன்று இந்த கிராமத் தின் அனைத்து பகுதி மக்க ளுக்கும் அடிப் படை வசதிகள் செய்து தரப் படவேண்டும்.சமுதாயத்தின் ஒரு பகுதி மக்களை ஒடுக்குவதன் மூலம் மற்றொரு பகுதி மக்கள் ஒடுக்குமுறையின்றிவாழ்ந்துவிட முடியாது. அனைத்து பகுதி மக்களும் சமத்துவமாக வாழ வேண்டும். சுவருக்கு அந்தப்பக்கம் உள்ள மக்கள் சுவர் இருப் பதுதான் தங்களுக்கு பாது காப்பானது என்று கருது வார்களேயானால் அந்த தவ றான எண்ணத்தை கைவிட வேண்டும். ஒரு பகுதி மக் களை ஒடுக்குவதில்தான் தங் களது பாதுகாப்பு இருப்பதாக அவர்கள் கருதக்கூடாது.பொருளாதார அடக்கு முறைகளுக்கு எதிராக பாதிக் கப்படும் அனைத்துபகுதி மக்க ளும் தோளோடு தோள் நின்று போராட முன்வரவேண்டும். அதன் மூலம்தான் அனைத் துப்பகுதி மக்களும் முன்னேற முடியும்.மே 6ம் தேதி ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள் ளது. புதிய பாதை திறக்கப்ப ட்டுள்ளது. இது நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. ஜனநாயகமும், சமத்துவமும் நிலவுகிற உத்தப்புரம் அமைய வேண்டும் என வாழ்த்துகி றேன். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக் களை தெரிவித்துக்கொள்கிறேன்.தீண்டாமைக்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு துவக்கம்தான். தேசத் திற்கே அவமானமாக உள்ள இக்கொடுமைக்கு முற்றாக முடிவுகட்டுவோம். இதற்கு உத்வேகம் அளிப்பதாக உத் தப்புரம் அமையட்டும்.இவ்வவாறு காரத் பேசினார்.அவரது ஆங்கில உரையை மத்தியக்குழு உறுப் பினர் உ.ரா.வரதராசன் தமி ழாக்கம் செய்தார்.

எழுச்சி... மகிழ்ச்சி... நெகிழ்ச்சி...!
மதுரை மாவட்டம் பேரை யூர் தாலுகா உத்தப்புரம் கிரா மத்தில் கட்டப்பட்டுள்ள தீண் டாமைச்சுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் (மே-7)புதனன்று பார்வையிட்டார்.தீண்டாமை ஒழிப்பு முன் னணி மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்களில் நடத்திய கள ஆய்வில் பல்வேறு வடிவங் களில் தீண்டாமைக்கொடுமை இருப்பது தெரியவந்தது. உத்தப்புரத்தில் தலித் மக்கள் மற்ற பிரிவினர் வாழும் பகுதிக்கு செல்வதை தடுத்து சுவர் வைக்கப்பட்ட விபரம் வெளி வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தது. கடந்த 29 ஆம் தேதி பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு சுவர் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மே மாதம் 7 ஆம் தேதி உத்தப்புரம் கிராமத்திற்கு வந்து மக்களை சந்திக்க ஏற் பாடு செய்யப்பட்டது.தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் மே 6 அன்று கிராமத்தில் பொதுப் பாதையை மறித்து கட்டப்பட் டிருந்த தீண்டாமைச்சுவரின் ஒரு பகுதியை மாவட்ட நிர் வாகம் அகற்றி அங்கு பாதை யையும் அமைத்தது.இந்நிலையில் மே 7 புதனன்று அகிலஇந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உத்தப்புரம் கிராமத் திற்கு சென்றார். கிராமத்தில் தீண்டாமைச்சுவர் கட்டப்பட் டுள்ள பகுதியையும், பொதுப் பாதை ஏற்படுத்திக்கொடுத் துள்ள பகுதியையும் அவர் பார்வையிட்டார். பின் கொளுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாது அங்கு கூடியிருந்த மக்களிடையே பிரகாஷ்காரத் பேசினார்.பிரகாஷ் காரத்துடன், மாநிலச்செயலாளர் என். வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர் உ.ரா. வரதராசன், மாநில செயற்குழு உறுப்பினர் கள் பி. சம்பத், எம்.என்.எஸ். வெங்கட்டராமன், என். சீனி வாசன், ஏ. லாசர், மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் பொ.மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் என். நன் மாறன், கே. பாலபாரதி, மது ரை புறநகர் மாவட்டச் செய லாளர் வெ. சுந்தரம், மாநகர் மாவட்டச்செயலாளர் இரா. அண்ணாதுரை, விருதுநகர் மாவட்டச்செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், தூத்துக் குடி மாவட்டச்செயலாளர் கனகராஜ், மாநிலக்குழு உறுப் பினர்கள் தே. லெட்சுமணன், இரா. ஜோதிராம், மதுக்கூர் இராமலிங்கம், ச. தமிழ்ச் செல்வன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சுவாமிநாதன், சிபிஎம் மாவட்டத்தலைவர்கள் உடன் சென்றிருந்தனர்.உத்தப்புரம் கிராமத்தின் சார்பில் பி.பொன்னையா, சங் கரலிங்கம், ஊராட்சித்தலை வர் புஷ்பம் ஆகியோர் பிர காஷ்காரத், என்.வரதராஜன், பி.சம்பத் ஆகியோருக்கு சால் வை அணிவித்து கௌரவித் தனர். இறுதியாக கிராமத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், தீண் டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய ஊர் பெரிய வர் பொன்னையா, தலித் மக்கள் உடைகளை சலவை செய்வது, முடி திருத்தம் செய் வது போன்ற விஷயங்களிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படு கிறது. இப்பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற் கும் தலைவர்கள் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.முன்னதாக மதுரை விமான நிலையத்தில் பிரகாஷ் காரத்தை மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

தேசத்தின் கவனத்தை ஈர்த்த வருகை...


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் புதனன்று உத்தப்புரம் கிராமத்திற்கு வருகை தந்தார். அவரது இந்த வருகை மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் கவனத்தை ஈர்த்தது. விமான நிலையத்திலேயே 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். உத்தப்புரம் கிராமத்திற்குச் சென்று தீண்டாமை கோட்டைச் சுவரையும், செவ்வாயன்று அமைக்கப்பட்ட பொதுப்பாதையையும் அவர் பார்வையிட்டார். அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். தேசிய அளவிலான தொலைக்காட்சிகள் இதை நேரடியாக ஒளிபரப்பின. தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் பெருந்திரளான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் பங்கேற்று உடனுக்குடன் செய்தியை ஒளிபரப்பினர்.

May 06, 2008

தகர்ந்தது தீண்டாமைச் சுவர்!


மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள உத்தப்புரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தலித் மக்களை பிரித்து வைத்திருந்த தீண்டாமை சுவர் தமிழகத்திற்கே அவமானச் சின்னமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினையை தமிழக மக்களின் கவனத்திற்கும் - அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்திலும் இது தொடர்பாக பிரச்சினையை எழுப்பியது. மேலும் இத்தகைய அவலத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. நாளைய தினம் சி.பி.எம். பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் மாநில செயலாளர் என். வரதராஜன் உட்பட மாநில - மாவட்டத் தலைவர்கள் உத்தப்புரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை பார்வையிடவும் - அம்பலப்படுத்தவும் திட்டமிட்டிருந்தனர். (நாளைய தினம் இந்நிகழ்ச்சி நடைபெறும்)_ இந்நிலையில் மாநில அரசு இப்பிரச்சினையில் துரிதமாக செயலாற்றி தீண்டாமைச் சுவரை இன்று காலையில் ஒரு பகுதியை தகர்த்தெறிந்துள்ளது.
இன்றைய உலகமய யுகத்திலும் - அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட யுகத்திலும் தீண்டாமை இந்தியா முழுவதும் பல்வேறு வடிவங்களில் வியாபித்துள்ளது. புதுப் புது வடிவம் எடுத்து தாழ்த்தப்பட்ட - உழைக்கும் வர்க்க மக்களை மன ரீதியாகவும் - வாழ்வியல் ரீதியாகவும் ஒடுக்கி வருகிறது. நாடு முழுவதும் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்படும் நிகழ்வுகள் புதுப் புது வடிவத்தில் நாள்தோறும் வந்துக் கொண்டே உள்ளது. மேல் ஜாதியினர் தெருக்களில் நடந்ததற்காக ஆறு வயது சிறுமியை தீக்குண்டத்தில் தள்ளியுள்ளனர் மேல் ஜாதி ஆதிக்க வெறியர்கள். கயர்லான்சி முதல் உத்தப்புரம் வரை இந்தியாவில் நிலவும் தீண்டாமைக் கொடுமையை பல்வேறு வடிவங்களில் உலகிற்கு அம்பலப்படுத்தி வந்தாலும் - ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கமும் இந்த மக்களின் இழிவை போக்குவதற்கோ அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கோ இன்றைக்கு வரை உருப்படியான பணிகளை ஆற்றவில்லை என்பதைதான் இந்த சம்பவங்கள் நிரூபித்து வந்துள்ளது.
நிலச் சீர்திருத்தம் என்ற மகத்தான கடமையை செய்யாமல் இந்த மக்களின் வாழ்வில் விடிவு பிறக்காது. மத்திய - மாநில ஆட்சியாளர்கள் இதை நோக்கி பயணிப்பார்களா? என்பதே நமது கேள்வி? மேலும் தொழில்மயம் என்ற பெயரில் மாநிலத்தில் ஏதோ ஒரு சில இடத்தில் மட்டுமே தொழில் வளத்தை பெருக்குவதில் முதலாளிகளும் - ஆளும் வர்க்கமும் கவனம் செலுத்துகிறது. ஏன் மதுரையில் என்ன தொழில் வளர்ச்சி கண்டுள்ளது? எனவே இந்த தீண்டாமை ஒழிப்பு என்பது நவீன தொழில்கள் வேகமாக வளர்வதையும் பொறுத்துள்ளது. இத்தகைய தொழில் வளர்ச்சி கிராமப்புறங்களில் உள்ள விவசாய பாட்டாளிகளை நிலத்திலிருந்து விடுதலை செய்ய வைக்கும். ஆனால் தற்போது ஆட்சியாளர்களின் கொள்கை அவர்களை கிராமங்களை விட்டே விரட்ட வைக்கும் நிகழ்வாகத்தான் முடிகிறது.
எனவே இதற்கெதிரான ஒன்றுபட்ட போராட்டங்கள் வெடித்தெழ வேண்டும்! இடதுசாரிகள் - ஜனநாயக சக்திகள் - ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுவான கோரிக்கைகளுக்காக ஒன்றுபடுவதன் மூலமும் ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்துக் கொள்வதன் மூலமுமே இதனை சாதிக்க முடியும். இதனை நோக்கி நமது சிந்தனைகளை வளர்த்தெடுப்போம்.
ஒழிக்கப்பட வேண்டியது தீண்டாமை சுவரை மட்டுமல்ல! மனு அதர்ம அடிப்படையிலான சாதிய சமூக அமைப்பையும்தான்! தீண்டாமை சுவரை இடித்துத் தள்ளுவதில் உடன் கடமையாற்றிய தமிழக அரசையும் இந்நேரத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது! தொடர்வோம் தீண்டாமை இடிப்புப் பணியை!


May 02, 2008

கற்பனாவாதத்தை புரட்சியாக கொண்டதே ம.க.இ.க.!

ம.க.இ.க. மறைமுகத் தலைமை CPI-ML [SOC] - இன் கட்சித் திட்டம் குறித்து இதுவரை ஆறு கட்டுரைகளை சந்திப்பில் பதிந்துள்ளேன். எஸ்.ஓ.சி. கட்சித் திட்ட நிர்ணயிப்புகள் குறித்து இதுவரை எழுப்பியுள்ள அடிப்படை கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காத நன்பர்கள் திரும்பத் திரும்ப சி.பி.எம். மீதான அவதூறுகளை கிளப்பி திசை திருப்பவே முனைவதுதான் அபத்தம். மாறாக, அசுரன் மட்டும் பழைய கட்டுரைகளை தோண்டித் துருவி புதிய முலாம் பூசி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இந்தக் கட்டுரையில் அவர்களது இலக்கை அடைவதற்கான யுத்த தந்திரம் குறித்து பார்க்கலாம். இந்திய அரசின் வர்க்கத் தன்மை குறித்த இவர்களது தவறான நிலைபாடுகளே மொத்த தவறுகளுக்கும் அஸ்திவாரமாக திகழ்கிறது. மொத்தத்தில் இந்திய ஆட்சியதிகாரத்தை பிடிப்பதற்காக இவர்கள் காட்டும் பாதை ஹாரிபாட்டர் கதைகளை மிஞ்சக் கூடிய சாகசமாகவே இருக்கிறது.

எஸ்.ஓ.சி. கட்சித் திட்டப் பிரிவு 39 இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

".... முதலில் கிராமப்புறங்களை விடுதலை செய்து இறுதியாக நகர்ப்புறங்களைக் கைப்பற்றுவதற்கான புரட்சிகர ஆயுதப் போராட்டத்தோடு ஒருங்கிணைக்கும். "

பிரிவு 40 இல்... "இந்தியாவின் விடுதலைக்கான பாதை மற்ற எல்லா காலனிய, அரைக்காலனிய - அரை நிலப்பிரபுத்துவ நாடுகளையும் போலவே நீண்டகால மக்கள் யுத்தப் பாதையாகும்... "

பிரிவு 42 இல், "உழவர்களைச் சார்ந்து நிற்பது, கிராமப்புறங்களில் தளப் பிரதேசங்களை நிறுவுவது, நீண்டகால ஆயுதப் போராட்டத்தில் அழுந்தி நிற்பது, கிராமப்புறங்களைப் பயன்படுத்தி நகர்ப்புறங்களைச் சுற்றி வளைத்து இறுதியில் நாடு முழுமையையும் கைப்பற்றுவது; ஆகியவற்றின் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கம வெற்றிகரமான மக்கள் யுத்த்தைத் தொடுக்க முடியும். "

எஸ்.ஓ.சி. போலி நக்சலிசவாதிகள் தாங்களது முதலாளித்துவ புதிய ஜனநாயக புரட்சியை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதை மேற்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதாவது, நான்கு நாட்டு அடிமை இந்தியாவை தூக்கியெறிவதற்காக ஒரு ஆயுதப் புரட்சியை மேற்கொள்ளப் போவதாக கதைக்கிறது இவர்களது கட்சித் திட்டம். அதுவும் கொரில்லாப் போர்முறையில் என்பதுதான் வேடிக்கையானது. எப்படி மேற்கொள்ளப் போகிறார்கள்? முதலில் கிராமப்புறங்களை தங்களது தளப் பிரதேசங்களாக மாற்றுவது பின்னர் படிப்படியாக முன்னேறி நகர்ப்புறங்களை கைப்பற்றுவது இப்படித்தான் இந்தியாவில் புரட்சியை நடத்தப் போகிறார்கள் இந்த எஸ்.ஓ.சி. நக்சல் குழுவினர்.
என்ன? கொக்குத் தலையில் வெண்ணையை வைத்து பிடித்த கதையாகத்தான் இருக்கிறது இவர்களது புரட்சிகர போர்த்தந்திர திட்டம்!

பிரச்சினையின் ஆரம்பமே எங்கே இருக்கிறது என்றால்? இந்தியா இன்னும் முழுமையாக விடுதலை அடையாத நாடு? அது அடுத்தவன் தயவில் அதுவும் நான்கு நாடுகளின் ஆதரவில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எனவே சும்மா ஒரு ஊது ஊதினால் இந்த ஏகாதிபத்திய சக்திகள் பறந்தோடி விடும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர் எஸ்.ஓ.சி. குழுவினர். இந்திய பெரு முதலாளிகள் தலைமையிலான ஆளும் வர்க்கம் மிகவும் பலமானது என்பதை உணர்ந்து கொள்ளாததாலும், அது தன்னுடைய சுயேச்சையான வழியில் செல்லத் தக்கது என்பதை அனுபவத்தின் மூலம் உணராததாலும், தன்னுடைய வளர்ச்சிக்கு அது ஏகாதிபத்தியத்தையும் - நிலப்பிரபுத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் என்ற உண்மையை மறந்ததால் வந்த வினையே இந்த ஹாரிபாட்டர் புரட்சி கதை!

இன்றைக்கு இந்தியாவை துணை வல்லரசு என்று கதைக்கும் இதே எஸ்.ஓ.சி.தான் அடிமை நாடு என்றும் பட்டம் சூட்டுகிறது என்ற உள் முரண்பாட்டை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளோம்.

அதாவது, இந்திய பெரு முதலாளித்துவ அரசின் அரசு எந்திரம் மிக வளுவானது என்பதை எஸ்.ஓ.சி. கும்பல் மறக்கிறது. இந்திய அரசின் இராணுவம் - அரசு கட்டமைப்பு - பொருளாதாரம் இவையனைத்தும் ஒரு வலுவான கண்ணியாக பின்னிப் பிணைந்துள்ளது. இவர்களின் வர்க்க நலனை காப்பதற்காக தற்போதைய அரசு எந்திரம் நன்றாக பயிற்று விக்கப்பட்டுள்ளது. எனவேதான் எஸ்.ஓ.சி. கும்பல் கனா கான்பது போல் ஒரே ஒரு கிராமத்தைக்கூட இன்னும் இவர்களால் கைப்பற்ற முடியவில்லை. தங்களது தளப் பிரதேசங்களாக மாற்ற முடியவில்லை. இவர்களின் தளப் பிரதேசங்களை இந்திய இராணுவத்தைக் கொண்டுக் கூட நசுக்க வேண்டியதில்லை. மாநில போலீசைக் கொண்டே நசுக்கி விடும் என்ற உண்மையைக் கூட உணராத பாலகத்தன்மையோடு இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

சமீபத்திய சட்டீஸ்கர் உதாரணம் என்ன? நக்சலிச வன்முறை அரசியலை முறியடிப்பதற்காக, மாநில அரசு அங்குள்ள பழங்குடியின மக்களைப் பயன்படுத்தி சல்வாஜூடும் என்ற அமைப்பை உருவாக்கி நக்சலிசத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்த வைத்துள்ளது. தற்போது நக்சலிசவாதிகள் இவர்களை தங்களது பிரதான எதிரி வர்க்கம் போல் கருதி சுட்டுக் கொல்வதும் - அவர்களது குடிசைகளுக்கு தீயிடுவதும் வாடிக்கையாகியுள்ளது. அதாவது, எந்த வர்க்கத்திற்கு ஆதரவாக இவர்கள் நிற்கிறார்களே அந்த வர்க்கமே இவர்களுக்கு எதிரியாகவும் திருப்பப்படுகிறது.

இங்கேதான் இவர்களது நடைமுறை தவறுகள் பாடமாக படிகிறது. பெருந்திரளான மக்களை அரசியல் ரீதியாக திரட்டுவதற்கு பதிலாக சிறு குழுக்களை வைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டம் செய்வதால் மாற்றம் வரும் என்பது இந்திய சூழலுக்கு பொருந்துமா? என்பதை இவர்கள் பரிசீலிக்கத் தயாராக இல்லை. தெலுங்கானாவில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியதன் மூலம் கிடைத்த அனுபவங்களின் வாயிலாகவே இன்றைக்கு சி.பி.எம். உட்பட பல்வேறு இடதுசாரி கட்சிகள்? ஏன் இவர்களது வாரிசுகளான லிபரேசன் - செங்கொடியினர் - டெமாக்ரசி போன்றவர்கள் எல்லாம் கூட ஜனநாயக ரீதியாக வெளியிலிருந்து செயல்படுவதற்கு வந்து விட்டார்கள் என்ற உண்மையை உணராமல் பழைய பஞ்சாகத்தை தனது கட்சி அணிகளுக்கு போதித்து வருகிறது எஸ்.ஓ.சி.
1976இல் துவக்கிய எஸ்.ஓ.சி. கடந்த 30 ஆண்டுகளாக எத்தனை கிராமங்களை தனது தளப் பிரதேசங்களாக மாற்றியது? தமிழகத்தில் அதற்கு எத்தனை கிளைகள் உள்ளது? இவர்களது கொரில்லா போர் முறைகள் எல்லாம் வெறும் எழுத்தில் மட்டும் தானா? வெகுஜன தேர்தல் அரசியலை நடைமுறை தந்திரப் போர் முறையின் ஒரு பகுதியாக கொண்டுள்ள சி.பி.எம்.யை விமர்சிக்கும் எஸ்.ஓ.சி. தாங்கள் எழுதி வைத்துள்ள எதனையும் எள் முனையளவு கூட நிறைவேற்ற வில்லை என்பதையாவது உணருமா?

மேலும், தற்போது இந்திய பெரு முதலாளி வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இராணுவ கூட்டு உட்பட பல்வேறு முனைகளில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள முனைகிறது. (இத்தகைய கூட்டினை சி.பி.ஐ.(எம்) தொடர்ந்து எதிர்த்து வருகிறது.) மேலும் ஒடுக்குமுறை கருவியான இராணுவத்தையும் - போலீசையும் நவீனப்படுத்தி வருவதோடு, மக்கள் மீது அவற்றை ஏவுவதற்கும் - போராட்டங்களை ஒடுக்குவதற்கும் பெரும் பலம்பெற்றதாக விளங்குகிறது. இந்நிலையில், தங்களது போர்முறையான கொரில்லா போர்முறை என்பது உயிர்பலிகளை கொண்டதொரு வன்முறை வழியே தவிர புரட்சிகர வழியாகாது! அவ்வாறு மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் முளையிலேயே கிள்ளியெறியும் இந்திய ஆளும் வர்க்கம்! இது ஒரு சில அடர்ந்த காடுகளில் மட்டுமே நடக்கக்கூடிய செயலாக இருக்குமே தவிர மக்கள் மத்தியில் செயலாற்றக்கூடிய புரட்சிகர பணியாக இருக்காது.
இதற்காக இவர்கள் சீனாவில் நடைபெற்ற புரட்சியை உதாரணம் காட்டலாம். ஆனால் நடைமுறையில் சீனாவின் புரட்சி நடைபெற்ற காலமும் - தற்போதைய காலமும் முற்றிலும் வேறுபட்டது. அத்துடன் சீனாவின் புரட்சிகால வர்க்கத் தன்மைக்கும் இந்தியாவின் தற்போதைய வர்க்கத் தன்மைக்கும் முற்றிலும் வேறுபாடு உண்டு என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே புரட்சியை இறக்குமதி செய்ய முடியாது? ஒவ்வொரு நாட்டின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு ஏற்ப வர்க்க சக்திகளை அடையாளம் காண்பதும் - அதற்கேற்ப யுத்த தந்திர மற்றும் நடைமுறை தந்திரங்களை கடைப்பிடிப்பதுமே புரட்சியை வெற்றிகரமாக்கும். ஆனால் எஸ்.ஓ.சி. நடைமுறையில் நிறைவேற்ற நினைப்பது வெறும் கற்பனாவாத புரட்சியே தவிர வேறல்ல.
எஸ்.ஓ.சி. கும்பல் தனது புரட்சிகர வாய்ச் சவடாலை நிறுத்தி விட்டு இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிய தவறான மதிப்பீடுகளிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்ற உள்கட்சி சர்ச்சையிலாவது ஈடுபடலாம் அதுவே இந்த ஓட்டைப் படகை கரையேற்றவாவது வழிவகுக்கும்.