September 11, 2007

மாநகர பேருந்து மாசற்ற பேருந்தா?

சென்னை மாநகர பேருந்து ‘மாசற்ற பேருந்து’ என்ற முழக்கத்தோடு வலம் வருகிறது. உண்மையில் ‘மாசற்ற’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பது ‘சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு’ தான் வெளிச்சம்.

இன்று (செப்டம்பர் 11, 2007) 18A பிராட்வே - தாம்பரம், அடுக்கு மாடி பேருந்தில் நிகழ்ந்த சம்பவத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும். காலை 11.05 க்கு பிராட்வேயில் இருந்து மேற்குறிப்பிட்ட பேருந்தில் ஏறினேன். அது அடுக்குமாடி பேருந்தாக இருந்ததால், மேலே சென்று பயணிப்பதில் ஒரு சுகம்தான். மேலே சென்று முன்னிருக்கையில் அமர்ந்தவுடன் கீழே இருபுறமும் ‘சென்னை மாநகரத்தில் அகற்றப்படாத குப்பைகள்’ போல் குவிந்து கிடந்தது.

என்னுடன் பேருந்தில் ஏறிய சகபயணிக்கு இதைப் பார்த்தவுடன் கடும் கோபமாகி விட்டார். அவர் என்னிடம், ‘என்னங்க இது அநியாயமாக இருக்கிறது’ மாசற்ற பேருந்துன்னு சொல்றாங்க இப்படியிருக்கே! என்று வருத்தப்பட்டதோடு நிற்காமல், நடத்துனரிடம் (கண்டக்டர்) சென்று என்னங்க இப்படி ஒரே குப்பையா இருக்கே என்று அவரிடம் கேட்க, அவரோ, பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, இன்றைக்கு கிளீன் பன்னாமல் விட்டுட்டு இருப்பாங்கன்னு ஒரு சமாதானம் சொன்னார்.

அந்த உயரமான, வாட்ட சாட்டமான, தாடி வைத்த பயணி மீண்டும் என்னிடம் வந்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார். நானும், ஆமாங்க இவங்களுக்கு ஒரு சமூக பொறுப்பே இருப்பதில்லை. மக்களைப் பற்றி எந்த கவலையும் இருப்பதில்லை என்று கூறி அவரோடு இணைந்து கொண்டேன். அந்த சக பயணி தன்னுடைய செல்போனை எடுத்து நேராக மாநகர போக்குவரத்து கண்ட்ரோல் ரூமூக்கு போன் செய்து, (வழித்தட எண் 18A, TAD 401, TN-01-N-3134) வண்டி எண் உட்பட அனைத்தையும் சொல்லி வண்டியில் மேல் மாடியில் ஒரே குப்பையாக இருக்கிறது. நானும் இதை ஒருவாரமாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன், இப்படி இருந்தால் நாங்கள் எப்படி பயணம் செய்வது, நீங்கள் வேண்டும் என்றால் சைதாப்பேட்டையில் - விஜிலன்சை அனுப்பி செக்-அப் செய்யுங்கள் என்று கூறினார்.

அதே சமயம் கண்டக்டரையும் மாட்டி விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்குள் இருந்தது. ஐயா கண்டக்டர் சார் உங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லையே! என்று அவரிடமும் கேட்டுக் கொண்டார். மீண்டும் என்னோடு பேச்சுக் கொடுத்தார். இங்க மட்டும் இல்லைங்க, கீழேயேயும் அப்படித்தான் இருக்குது. வண்டிய எடுக்கும் போதே இதெல்லாம் பார்க்க மாட்டாங்களா? என்று அவரது நியாயமான கோபத்தையும், கேள்வியையும் எழுப்பினார் அந்த பயணி. நானும் படிக்க வேண்டிய புத்தகத்தை மூடி வைத்து விட்டு, அவரது நியாயத்திற்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன்.

அந்த பயணி நீங்கள் எங்கே இறங்க வேண்டும் என்று என்னை கேட்டார். நான் எ°.ஐ.இ.டி. என்று கூற, அவரும் அங்கேதான் இறங்க வேண்டும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டோம்! நாளைக்கு நான் இதே பேருந்தில்தான் வருவேன் பார்ப்போம் எப்படி இருக்குது என்று கூறிக் கொண்டே அவர் இறங்கியதோடு, “இது என்னங்க பேசஜ்சர்களை ஏற்றும் வண்டியா? அல்லது குப்பை அள்ளும் வண்டியா?” என அவர் வினவியது மிகப் பொருத்தமாக இருந்தது.

உண்மையில் சம்பந்தப்பட்ட பேருந்தில் கீழ்ப்புறத்திலும் குப்பைகள் மண்டிக் கிடந்ததோடு, நாறிக் கொண்டும் இருந்தது. கொசுக்கள் மற்றும் நோய் பரப்பும் கிருமிகளுக்கு அந்த பேருந்து பயணம் ஒரு சுகமாகவே இருக்கும்! இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் விழிக்குமா? அல்லது தன்னுடைய ‘மாநகர பேருந்து மாசற்ற பேருந்து’ என்ற வாசகத்தையாவது மாற்றிக் கொள்ளுமா?

சென்னை மாநகர பேருந்துகளில் திருவள்ளுவரின் திறக்குறளை சிறிய எழுத்தில் போட்டு விட்டு, ஐயன் வள்ளுவரின் (அதாங்க முதல்வர் கலைஞரின்) குறளை பெரிய படமாக போடுவதில் காட்டும் அக்கறையை குப்பையை அகற்றுவதிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்!

பேருந்தை சுற்றிலும், ஷாம்பு கம்பெனிக்கும், சோப்பு கம்பெனிக்கும் டிஜிட்டல் விளம்பரம் கொடுத்து பேருந்தையே மொத்த விளம்பரத்திற்கு குத்தகை கொடுத்து அதன் அழகை கூட்டிக் கொள்ளும் பேருந்திற்குள் நாறிக் கொண்டிருப்பது மட்டும் ஏனோ தெரியவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு! ஷாம்பு வாசனை அதை மறைத்து விடும் என்ற நம்பிக்கையோ!
மறுபுறத்தில் கலர் கலராய் சொகுசு பேருந்து என்ற பெயரில் கட்டணத்தை உயர்த்தி பகல் கொள்ளையடித்து வரும் தமிழக அரசும் - மாநகர பேருந்தும் தங்களது சேவை குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாதது அவர்களது பொறுப்பற்றத் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.


சமூக பொறுப்புணர்வோடு தன் உணர்வை வெளிப்படுத்திய அந்த சக பயணிக்கு ஜே!

September 07, 2007

மார்ச்சுவரியை நோக்கி சிங்கார சென்னை!

சிங்கார சென்னை நகரம் கடந்த ஒரு மாதமாக நாறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நமது வலைப்பதிவர்கள் விரிவாக பதிவிட்டுள்ளனர். இருப்பினும் அதன் தற்போதைய அவல நிலையை நகைப்புக்கு மட்டுமல்ல உலகமயத்தின் விளைவையும் விளக்குவதாக உள்ளது.

சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சபதமேற்று அதிமுக - திமுக இந்த இருவரும் குப்பையை அள்ளுவதற்கு ஓனிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு காண்ட்டிராக்ட் விட்டதும். தற்போது ஓனிக்சின் காண்ட்டிராக்ட் முடிவுக்கு வந்து. அந்த இடத்தில் நீல் மெட்டல் பனால்கா என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அந்நிறுவனத்தின் துவக்கமே அலங்கோலமாக இருந்தது. மலை மலையாய் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு போதுமான வாகனங்களோ - ஊழியர்களோ அல்லது உரிய திட்டமிட்ட ஏற்பாடோ இல்லாததால் சென்னை நாறிக் கொண்டிருக்கிறது.

சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற கனவை கடந்த சட்டமன்ற தேர்தல் அசைத்து விட்ட காரணத்தால் தற்போதைய குப்பை அரசியல் திமுகவை எங்கே ஓரம் கட்டி விடுமோ என்ற பயத்தில் மாநகராட்சி அவசரம் என்ற பெயரில் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு துரிதமாக குப்பைகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. எஜமான விசுவாசத்தால் பழைய ஓனிக்ஸ் நிறுவனமும் சற்று உதவி செய்தது. இது அடுத்த காண்ட்டிராக்ட்டிற்கு திட்டம் போட்டுதான்.
சிங்கப்பூராக்குவேன் என்றவர்கள் சென்னையை குப்பைக்காடாக்கியதுதான் மிச்சம். சரி. தனியாமயம் குப்பை அகற்றும் தலித் மற்றும் அடித்தட்டு மக்களை நிரந்தர பணியில் இருந்து முதலில் அகற்றியது. பின்னர் அவர்களது வாரிசுகள் ஓனிக்சின் கரங்களில் சிக்கி சின்னபின்னமாகிப் போனதும் தற்போது ஓனிக்சின் ஆயுள் காலம் முடிந்த கையோடு அந்த ஊழியர்களின் வாழ்க்கையும் அமிழ்ந்த போனது. குறைந்த சம்பளம் - நிறைவான உழைப்பு... இருப்பினும் என்ன கிடைத்தது இளமையை இழந்து - நோயோடு பேயாக வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கு மிச்சம்.

தற்போதைய புதிய எஜமான் நீல் மெட்டல் பனால்கா அதே ஊழியர்களை மிக குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த திட்டம் போட்டு வருகிறது. சரி இருக்கட்டும்... தனியார்மயம் ஊழியர்களை மட்டுமா குப்பையாக்கியது சென்னை நகரையும் தானே! மெத்தப் படித்தவர்கள் அனைத்தையும் தனியார்மயமாக வேண்டும் என்று வக்காலத்து வாங்குபவர்கள் கூட முகம் சுளிப்பதைத்தான் இது காட்டுகிறது.

அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? தற்போதைய நீல் மெட்ட்டல் பனால்கா குப்பைகளை அகற்றுவதற்கான குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கு பாங்காக்கிற்கும் - சிங்கப்பூருக்கும் காண்ட்டிராக்ட் விட்டிருக்கிறது. அதன் முலம் தற்போது 1800 குப்பைத் தொட்டிகள் இன்னும் சில நாட்களில் இறக்குமதியாகி விடுமாம். இதில் 1100 குப்பைத் தொட்டிகள் சிங்கப்பூரில் இருந்தும். 700 பாங்காக்கில் இருந்தும் வாங்கப்படுகிறதாம்.

வேடிக்கை என்னத் தெரியுமா? வெளிநாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த குப்பைத் தொட்டிகளை இறக்குவதற்கு இடம் இல்லையாம். அதனால் அவைகள் மகாராஷ்டிரத்திற்கு திருப்பி விடப்பட்டு - அங்கிருந்து வாகனங்கள் மூலம் தரைவழியாக சென்னை வருகிறதாம். தலையை சுற்றி உங்களால் சாப்பிட முடியுமா? சென்னை மாநகராட்சியும் - உலகமயமும் அதை செய்து காட்டுகிறது!

உலகமயம் என்றால் உலகத்தையே சுற்ற வேண்டும் என்னவா? சென்னை நகரில் குப்பை அள்ளுவதற்கு தேவையான குப்பை தொட்டிகளை கூட உருவாக்க லாயக்கற்றவர்களாகி விட்டனர் தமிழக மக்களும் - இந்திய மக்களும்!

ஆட்சியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார்களோ இல்லையோ? சிங்கப்பூரை உலகமயத்தின் மூலம் வாசிங்டன்னாக மாற்றுவார்கள் போலும்.
தனியார்மயத்தின் பல்ளிக்கும் சாட்சியாக சென்னை நகர குப்பை காட்சிகள் உள்ளது. சென்னை நகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்க்கு தார்மீக ரீதியாக சென்னை மாநகராட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். நோயால் பாதிக்கப்படப் போவது கூலி ஜனங்கள்தானே பரவாயில்லை... இது உலகமயத்தின் பரிசு! என்று சொன்னாலும்a சொல்லுவார்கள் இந்த ஊழல் குபேரபுரிகள்.

நோயின் அறிகுறி குப்பை அரசியலில் தெரிந்து விட்டது இப்போதே இதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கவில்லையென்றால்... அப்புறம் இருக்கவே இருக்கிறது... மார்ச்சுவரி...! உலகமயம் என்ற நோயை இப்போதே விரட்டியடிக்கவில்லையென்றால்.... ஆட்கொல்லிக்கு இறையாவதை தவிர்க்க முடியாது!