உலகயமாக்கல் யுகத்து நவீன வார்ப்புகளே கார்ப்பரேட் முதலாளித்துவம். இந்தியாவின் சேவைத் துறையை குறிவைத் துப்பாயும் இத்தகைய பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் நமது மக்களிடமிருந்து எவ்வாறெல்லாம் பிக்பாக்கெட் அடிக்கின்றன என்பது சுவராசியமானது.‘வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ என்று கூறுவார்கள். வலது கை எடுப்பது இடது கைக்குத் தெரியாமல் வெகு நுட்பமாகக் கொள்ளையடித்து வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
இதில் குறிப்பிடத்தக்கது இன்சூரன்ஸ் துறை. சமீபத்தில் ஒரு அந்நிய நிறுவனமும் ஒரு இந்திய நிறுவனமும் இணைந்து, மக்களை தங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பக்கம் கவர்வதற்காக வெகுஜோரான திட்டத்தை தீட்டி யுள்ளார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் எலிப்பொறிக்குள் மாட்டிய அனுபவமே நமது மக்களுக்கு மிஞ்சுகிறது.கடந்த ஒரு மாத காலமாக பலருடைய செல்பேசிக்கு மிக இனிமையான பெண் குரலில் மென்மையான அழைப்பு வருகிறது. அநேகமாய் உங்களுக்கும் அந்த அழைப்பு வந்திருக்கக் கூடும். இல்லையேல் இனிமேல் வரக்கூடும். குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்களுக்கு முற்றிலும் இலவசமாக லைஃப் டைம் பாலிசி வழங்குகிறோம், அதற்காக ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுக்கப் போகி றோம். அதில் உங்களது செல்பேசியின் அதிர்ஷ்ட எண் விழுந் தால் உங்களுக்கு தெரிவிக்கிறோம்,” என்று மிகவும் கனிவான குரலில் முதல் வலை வீசப்படுகிறது.மேலும், தொலைபேசியில் அழைக்கப்பட்டவருக்கு திருமணம் ஆகியுள்ளதா என்பதும் உறுதிப்படுத்திக் கொள்ளப்படும். “உங்களை அழைத்தவரின் பெயர் நிவேதிதா” (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்று கூறிவிட்டு மிகுந்த நன்றியுணர்வுடன் அழைப்பை முடித்துக் கொள்வார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நடத்தப்படும் இதுபோன்ற கால் சென்டர்களில் இப்படி அழைக்கிற வேலைக்கு என, குரல் தேர்வு (அறிவுத் தேர்வல்ல!) வைத்து வசீகரிக்கும் நவீன மாரிசன்களை தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டியது.மறுநாள் அதே குரல் அதே செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு, “தாங்கள் எங்களுடைய சிறப்புக் குலுக்கலில் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்,” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றனர். “இன்று மாலையே நீங்களும் உங்களது மனைவியும் அலுவலகத்திற்கு வந்து எங்களுடைய இலவச லைஃப் டைம் பாலிசியை பெற்றுக் கொள்ள வாருங்கள்,” என்று மிகுந்த கனிவுடன் - அணுசரணையோடு - அன்போடு அழைக்கிறது அந்தக் குரல்.அழைக்கப்பட்டவர் இன்றைக்கு முடியவில்லை, நாளை வருகிறேன் என்று கூறினால் கூட அந்தக் குரல் மிகுந்த அக்கறையோடு “பரவாயில்லை சார். நான் நாளை மறுபடியும் உங்களை தொடர்பு கொள்கிறேன்,” என்று கனிவோடு கூறி விட்டு முடித்துக் கொள்ளும்.விடாது கருப்பாக, மறுநாள் சூரியன் உதயமானதும், சூரியக் கதிர்களின் வேகத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு, உங்களை மீண்டும் அந்த அலுவலகத்திற்கு வரவேற்கிறது அந்த இனிய குரல். “உங்களுக்கான நேரம் இன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது சார்.
உங்களுக்கு வாய்ப்பான நேரத்தை சொன்னால் அதற்கேற்ப எங்களது நிறுவனத்தில் அந்த பாலிசியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்,” என்று அன்பும் அக்கறையும் குழைத்து அழைக்கப்படுகிறது. நீங்கள் எத்தனை முறை வேண்டாம் என்று ஒதுக்கினால் கூட, அவர்கள் மிக அழகாக உங்களை ஏற்கச் செய்து, மீண்டும், மீண்டும் எந்தவிதமான சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து அழைக்கிறார்கள். குறிப்பாக ஒரு விஷயத்தை மறக்காமல் வலியுறுத்துவார்கள். “இந்த பாலிசியை பெறுவதற்கு தாங்கள் வரும்போது, தங்கள் மனைவியுடன் வரவேண்டும்” என்பதுதான் அவர்களது அன்புக் கட்டளை.
உங்களது இலலறத்தின் மீது அவ்வளவு கரிசனம் - ஈடுபாடு!சரி, ஒருமுறை போய் பார்த்துவிடுவோம் என்ற மனநிலைக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள். மனைவியோடு அந்த நிறுவனத்தின் குளு குளு அலுவலகத்திற்குச் செல்பவருக்கு ஒரு அறிமுக எண் கொடுக்கிறார்கள். அவர்களை யார் தொடர்பு கொண்டது என்ற விவரத்தையும் பதிவு செய்து கொண்டு, இனிய முகத்தோடு வரவேற்று “உங்களுக்கான பாலிசியை தயாரிப்பதற்கும், வழங்குவதற்கும் ஒரு மணி நேரம் ஆகும்,” என்று முன்கூட்டியே கூறிவிடுகிறார்கள்.அதற்கு முன், ஒரு படிவத்தை கொடுத்து நிரப்பித்தருமாறு கேட்கப்படுகிறது. அந்தப் படிவத்தில் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. சொல்லப்போனால் ஒரு நம்மைப் பற்றி ஒரு குட்டி சென்சஸ் எடுத்து விடுகிறார்கள்!
இதுவரை நீங்கள் பாலிசி எடுத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் என்ன காரணம்? தங்கள் முன் நிற்கும் முக்கியமான பணியாக எதை கருதுகிறீர்கள் ? (மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதல், பைக் - கார் வாங்குதல் என ஏதாவது ஒன்றை நிச்சயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக கேள்வியை அமைத்திருக்கிறார்கள்). அது மட்டுமா? உங்களது வருமானம் எவ்வளவு? மாதந்தோறும் நீங்கள் எவ்வளவு சேமிப்பீர்கள்? இப்படிப் பல கேள்விகள்... சுருக்கமாகச் சொன்னால், இதுபோன்ற ஒரு கேள்வித் தாளுக்கு மார்க்கெட்டிங் சர்வே எடுத்தால் ஒரு படிவத்திற்கு குறைந்தது ரூ. 50 வழங்குவார்கள். மேற்படி நிறுவனத்தின் புத்திசாலித் தனம் எந்தவிதமான கட்டணமும் இல்லாமலே தங்களுக்கான சர்வேயை எடுத்துக் கொள்கிறார்கள்.அப்புறம் என்ன?
உங்களைப் போல் வந்திருக்கும் பல ஜோடிகளை அழைத்துக் கொண்டு குளிரூட்டும் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே பிஸ்கட்-டீ வழங்கப்படுகிறது. பின்னர் அந்த நிறுவனத்தின் இலவச பாலிசி திட்டம் குறித்து அறிமுகப் படுத்துகிறார்கள். அது வேறொன்றும் இல்லை; சாதாரணமான ஒரு விபத்து பாலிசி மட்டுமே! ஏதாவது விபத்து ஏற்பட்டு மரண மடைந்தால் ஒரு லட்சம் தருவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அழகான திரையில் - முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட படக்காட்சி போட்டுக் காட்டப்படுகிறது. திட்டங்களை மிக அற்புதமாக விளக்குகிறார்கள். பணம் இல்லாமல் எப்படியெல்லாம் மருத்துவத்திற்கு கஷ்டப்படுகிறார்கள்? கல்விச் செலவிற்கு கஷ்டப்படுகிறார்கள்? திருமணத்திற்கு கஷ்டப்படுகிறார்கள்? -என்று மிகுந்த அக்கறையோடு உணர்த்துகிறார்கள். சேமிப்பின் அருமை தெரியாமல் இவ்வளவு நாள் இருந்து விட்டோமே என்ற தன்னிரக்கத்தை மிக மென்மை யாக, நுட்பமாகப் பெண்ணின் மனதுக்குள் இறக்குகிறார்கள். அப்புறம் என்ன? “உடனே நீங்கள் உங்களுக்குத் தேவையான பாலிசியைத் தேர்ந்தெடுங்கள்,” என்று ஒரு பெரிய வலையை வீசி ஒரே அமுக்கு. குடும்பச் சுமையை சுமக்கும் பெண்கள் மிக எளிதில் உணர்ச்சிவயப்பட்டு இதற்கு இரையாகி விடுவார்கள் என்பது மேற்படி நிறுவனத்தின் கண்டு பிடிப்பு! இதற்காகத்தான் தவறாமல் மனைவியோடு வரச்சொல்லுகிறார்கள்! இப்போது புரிகிறதா கார்ப்பரேட் கரிசனம் என்னவென்று.அப்புறம் என்ன? உங்கள் கையில் அழகானதொரு உறையில் இலவச விபத்து பாலிசி வழங்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு லட்சம் தேவை என்றால் வந்த வழியிலேயே நீங்கள் நடு ரோட் டில் அடிபட்டு இறக்க வேண்டும். இதுதான் கார்ப்பரேட் தர்மம்! நீங்கள் தயாரா?
இதுபோன்ற விபத்து பாலியை எல்.ஐ.சி., ஓரியன்டல் இன்சூ ரன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வழங்குகிறது. அதற்கான செலவு வெறும் ஆண்டுக்கு 65 ரூபாய் மட்டுமே! இத்தகைய சொற்பமான தொகையைக் கொண்ட பாலி சியை அந்த நிறுவனம் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கி னால்கூட அதில் எத்தனை பேர் விபத்தில் மரணமடையப் போகி றார்கள்? எவ்வளவு பேருக்கு ஒரு லட்சம் கிடைக்கப்போகிறது? மறு பக்கம் ஒரு லட்சம் பேரின் மூளைகளைச் சலவை செய்வதன் மூலம் 5000 பேராவது அவர்களது பாலிசிதாரர்களாக மாறுவார் கள் என்பதே அவர்களது புதுக்கணக்கு! உலகமயம் - கார்ப்பரேட் முதலாளித்துவம் எத்தகைய நவீன யுத்திகளையெல்லாம் பயன்படுத்தி மக்களின் செல்வா தாரத்தைச் சூறையாடுகிறது என்பதை இன்னும் விரிவாக அம்பலப்படுத்துக்கு வர வேண்டியுள்ளது.
இதுபோன்று பல தனியார் நிறுவனங்கள் புதுப் புதுத் திட்டங் களை உருவாக்கி தொழிலாளர்களுக்கான பாலிசிகளை வழங்கி மரணம் அடையும் தருவாயில் பட்டை நாமம் சூட்டிய கதைகள் அனுபவித்தவர்களுக்குத் தெரியும்!
இது தொடர்பாக ஏதாவது வழக்குத் தொடர வேண்டும் என்றால், அவர்களது சட்ட விதிகளின் படி மும்பைக்கோ - டெல்லிக்கோ செல்ல வேண்டும். அவ்வளவு தூரத்திற்கு சென்று நமது தொழிலாளி களின் குடும்பத்தாரால் வழக்குத் தொடுக்க முடியுமா? உலக மயம் என்பது மக்கள் மீதான கரிசனம் அல்ல மக்களிடம் இருக்கும் பணத்தின் மீதான கரிசனமே!