நரகாசுர வதம் நடைபெற்று முடிந்துள்ளது சென்னையில். நடத்தியவர்கள் சாட்சாத் தி.மு.க.வினர்தான். மாநில சுயாட்சி, ஜனநாயகத்தின் தூண்கள் என்றெல்லாம் வீரவசனம் பேசியவர்கள் மக்களின் செல்வாக்கை இழந்து செல்லாகாசாகியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் சென்னை திமுகவின் கோட்டையில் சரிபாதி ஓட்டை விழுந்ததை திமுக இன்னும் மறக்கவில்லை. சட்டமன்றத்தை கைப்பற்றிட இலவச தொலைக்காட்சி, நிலம், எரிவாயு அடுப்பு என மலை, மலையாக வாக்குறுதி அளித்த பின்னும், ஏழு கட்சி கூட்டணி அமைத்த பின்னும் முழுமையான மெஜாரிட்டியோடு ஆட்சிக்கு வர முடியவில்லை திமுகவால். இதனையெல்லாம் மனதில் கொண்டுதான் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற புதிய அணுகுமுறையை அரங்கேற்றியிருக்கிறது திமுக தலைமை. உள்ளாட்சியின் அடித்தளமே மக்களின் பங்கேற்புதான். ஜனநாயக மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம் என்று அடுக்கு மொழியில் பேசும் திமுக தலைவரும், தலைமையும் எடுத்து விட்ட துருப்புச் சீட்டுதான் சினிமா காட்சிகளையும் விஞ்சும் அளவிற்கு சுமோக்களில் ரவுடிகளை கத்தி, கட்டை உட்பட ஏற்றிக் கொண்டு வார்டு வாரியாக பூத்துக்களை கைப்பற்றியுள்ளனர். சில பூத்துக்களில் காலை 8.00 மணிக்கெல்லாம் அரங்கேற்றம் முடிந்து விட்டது. திமுக மாநிலத்தில் மக்கள் ஆதரவை இழந்துள்ளது என்பதை உணராமல், இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதன் மூலம் அண்ணா ஆரம்பித்த திராவிட இயக்கம் தனக்கான சவக்குழியை தோண்டிக் கொண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். நரகாசுர வதத்தை திமுக - அதிமுக மீது செய்யுமோ? அல்லது அதிமுக திமுக மீது செய்யுமோ? நமக்குத் தெரியாது. ஆனால் நரகாசுர வதத்தை திராவிட இயக்கத்தின் தொடுத்திட மக்கள் தயாராகி விட்டனர்.
October 16, 2006
Subscribe to:
Posts (Atom)