சாராய ஒழிப்புக்காக சத்தமாக குரல் கொடுக்கும் ராமதாஸ்கள், சிகெரெட் புகைப்பது முதல் புகையிலையை புகைப்பது வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு பகைதான். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இவர் பதவியேற்றது முதல் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் கடந்த ஆண்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க "நோய் எதிர்ப்பு" மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை இழுத்து மூடியதும், அதற்கு இவர் உலக சுகாதார மையத்தின் அறிவுரையின் அடிப்படையில் செயல்பட்டதாகவும் மழுப்பிய விஷயங்கள் அனைவரும் அறிந்ததே.
உலகமயத்தின் செல்லப் பிள்ளையாக வலம் வரும் அன்புமணி ராமதாஸ் தனது சுகாதாரத்துறையை முழுமையாக தனியார்மயமாக்குவதற்கு எடுத்த தலையாய முயற்சிதான் அது. இன்று வரை அந்த பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தி துவங்குவதற்கோ, செயல்படுவதற்கு எந்தவிதமான உருப்படியான முயற்சியும் எடுக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் மக்களுக்கு பல்வேறு நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரித்து வந்த அந்த நிறுவனங்கள் மூடப்பட்ட பின்னணியில் பி.சி.ஜீ., போலியோ டிராப்ஸ், டெட்டனஸ் டாக்சைடு, டி.பி.டி. போன்ற தடுப்பூசி மருந்துகளை தனியாரிடம் அதிகமான விலை கொடுத்து வாங்கப்படுகிறது. அப்போதே இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தனியாருக்கு முழுமையாக தாரைவார்ப்பதால் மக்களின் சுகாதாரமும், உடல் நலமும் பாதுகாக்க முடியாது என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத அன்புமணி ராமதாஸ் புகையிலை ஒழிப்பிலும், சாராய ஒழிப்பிலும் கவனம் செலுத்துவதாக கூறி மக்களை திசை திருப்பி வந்தார்.
இந்நிலையில் இன்று, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் தி டெலிகிராப் பத்திரிகை "போலியோ டிராப்ஸ்" மருந்துகள் செயலிழந்த நிலையில் உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கூறியது வேறு யாரும் அல்ல; அன்புமணி ராமதாஸ் கூறினாரே அதே உலக சுகாதார அமைப்புதான் இவ்வாறு கூறியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் போலீயோ டிராப்ஸ் மருந்துகளின் வீரியம் குறைந்துள்ளதாகவும், அதனால் எதிர்பார்க்கும் விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று கூறியுள்ளது. அதாவது, monovalent oral polio vaccine (m-OPV1) என்ற போலியோ வேக்சின்களில் சிலவற்றை சோதனை செய்துள்ளது சர்வதேச போலியோ ஒழிப்பு நடவடிக்கைக்குழு. இவ்வாறு நடைபெற்ற சோதனையில்தான் மேற்கண்ட போலியோ வேக்சின்கள் முற்றிலும் தரம் குறைந்ததாகவும், அதன் வீரியம் செயலிழந்து போயுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து போலீயோ டிராப்ஸ் சொட்டு மருந்துகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளது.
குறிப்பாக மேற்கண்ட மருந்துகளை தயாரித்தது மத்திய அரசால் ஊக்குவிக்கப்படும் தனியார் நிறுவனமான பனோசியா பையோடெக் (Panacea Biotec) என்ற நிறுவனம்தான். அதாவது நூற்றாண்டுகளாக மக்களின் உடல் நலத்தையும், உயிரையும் காப்பாற்றி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் சர்வதேச தரத்திற்கு இல்லை என்ற சொத்தை காரணத்தை கூறி அவற்றுக்கு மூடு விழா நடத்தி விட்டு, தனியாரிடம் அதிக விலைகொடுத்து வாங்கும் மருந்துகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு மேற்கண்ட போலியோ சோதனையோ சாட்சியாக வந்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஏதோ மக்கள் மீது அக்கறையோடு செயல்படுவதுபோலவும், அவர்கள்தான் சரியான விகிதத்தில் அனைத்தையும் தரமாக தயாரிப்பார்கள் என்பது போன்ற கற்பனையை மக்கள் மத்தியில் கட்டவிழித்து விடுபவர்களுக்கு மேற்கண்ட உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை அபாய மணியாக ஒழிக்கத் துவங்கியுள்ளது. அதாவது, போலியோவால் இந்தியாவில் பல லட்சக்கணக்கான குழந்தைகள் ஊனமாவதை தடுப்பதற்காக உலகளவில் போலியோ ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மூன்று முதல் 6 மாதத்திற்கு ஒருமுறை 100 சதவிகித போலியோ ஒழிப்பு நடவடிக்கையில் நமது மத்திய - மாநில அரசுகள் ஈடுபடுகின்றன. இதற்காக ரோடியோ, தொலைக்காட்சி, பத்திரிகை என்ற ஒரு விளம்பர மழையே பொய்விக்கப்பட்டு பேருந்து நிலையிம், இரயில்வே நிலையம், மக்கள் கூடும் பொழுது போக்கு பூங்காக்கள் என்று எல்லா இடத்திலும் போலியோ ஒழிப்புக்காக பல லட்சக்கணக்கான சொட்டு மருந்துகள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதற்காக நமது பொதுநல ஊழியர்களும் மிகுந்த அக்கறையோடு வீடு தேடி குழந்தைகளுக்கு இந்த போலியோ டிராப்ஸை கொடுத்து வந்தனர். நமது முதல்வர் கருணாநிதிகூட போலியோவுக்காக போஸ் கொடுக்காத நாளில்லை.
அப்படியெல்லாம் பாதுகாப்பாக கொடுக்கப்பட்ட போலியோ டிராப்ஸ் எதற்கும் உதாவது என்று கூறினால் நமது சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது? அல்லது இவருக்கு கிழே செயல்படும் கண்காணிப்பு நிறுவனங்கள் தனியாரின் இத்தகைய தயாரிப்புகள் குறித்து எத்தகைய சோதனையும் மேற்கொள்வதில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. மக்கள் உயிரை காப்பதற்காக புகைப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அன்புமணி குழந்தைகளின் உயிரோடு விளையாடலாமா? ஏற்கனவே மத்திய சுகாதார நிறுவனங்கள் மூடப்பட்ட பின்னணியில் பல இடங்களில் போலியோ டிராப்ஸ் போட்ட குழந்தைகள் மரணம் அடைந்ததையொட்டி மக்கள் அந்தப் பக்கமே செல்வதற்கு அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் செய்தி மக்கள் மீது இடியாக விழுந்துள்ளது.
தனியார்துறையே எல்லாவற்றிலும் ஆகச் சிறந்தது என்று மயக்கம் கொண்டிருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் மேற்கண்ட பனோசியா பையோடெக் நிறுவனத்தின் உற்பத்தியை உடனடியாக ரத்து செய்துவிட்டு அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பாரா என்பதே நமது கேள்வி! இல்லை என்னுடைய வீரத்தை வெறும் சிகெரெட் பெட்டியின் அட்டை மீது வெறும் அபாயம் என்று ஸ்டிக்கர் ஒட்டுவதில்தான் காட்டுவேன் என்று கூறப்போகிறாரா?
மத்திய அரசும், பிரதமரும், மாநில அரசகளும் இந்த விசயத்தில் தங்களது எதிர்ப்பை மத்திய சுகாதாரத்துறைக்கு எதிராக உடனடியாக எழுப்ப வேண்டும். இலங்கையில் குழந்தைகள் மடிவதைக் கண்டு கண்ணீர் வடிக்கும் டாக்டர் ராமதாசும், அன்புமணியும் இந்தியாவில் போலீயோ குழந்தைகளை உருவாக்கப் போகிறார்களா? என்ற கேள்வியே மேலிடுகிறது!
நேற்றை தினம் கூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சென்னையில் நடைபெற்ற ரோட்டரி சங்க விழாவில் கலந்து கொண்டு பேசியதைப் பாருங்கள்:
மேற்கண்டவாறு தம்பட்டம் அடிக்கும் அன்புமணிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் இத்தகைய எச்சரிக்கை மணி தெரியாமல் போனதோ? அல்லது மத்திய சுகாதார அமைச்சகம் அவரிடம் இருந்து மறைத்து விட்டதா? இல்லை இதுபற்றியெல்லாம் அவருக்கு கவனம் செலுத்துவதற்கு நேரம் இல்லையா? என்ற கேள்வியே எழுகிறது.
இது தொடர்பான முந்தைய பதிவு