April 17, 2008

பயங்கரவாதிகள் கொடுக்கும் பயங்கரவாத பட்டம்!

ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. - இ.பொ.க.-மா.லெ.) இந்திய சுதந்திரத்தை எப்படி அணுகுகிறது என்று பார்ப்போம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவை விடுதலை செய்வதற்காக காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - முஸ்லீம் லீக் மற்றும் நவஜவான் பாரத் சபா போன்ற பல்வேறு மிதவாத - தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து போராடி பிரிட்டிஷ் அரசை இந்தியாவிலிருந்து அகற்றியது. இதற்காக எண்ணற்ற இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை இந்திய மண்ணிலும் - அயல்நாட்டிலும் தியாகம் செய்த வரலாறு அனைவருக்கும் தெரியும்! இந்த சுதந்திரப்போராட்ட தியாகிகளின் கனவுகள் தற்போதைய இந்திய அரசில் நிறைவேறாமல் போயிருக்கலாம். இருப்பினும் இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை விரட்டியடித்த பெருமை இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்திய - மகத்தான தியாகங்களை செய்த இந்திய மக்களையேச் சாரும்.

இந்த தியாகங்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி கொச்சைப்படுத்தியுள்ளது ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. குருட்டு கும்பல். மேலும் அவர்களுக்கு குட்டி முதலாளித்துவவாதிகள் என்ற நாமகரணத்தையும் சூட்டியுள்ளது. ம.க.இ.க. திட்டம் கீழ்க்கண்டவாறு கூறுவதைப் பாருங்கள்

“நாட்டுப் பற்று என்னும் உள்ளுணர்வால் உந்தப்பட்ட புரட்சிகர அறிவுத்துறையினரும் குட்டி முதலாளிய இளைஞர்களும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் - அதாவது கொடுங்கோலர்களான ஆங்கிலேயே நிர்வாகிகளைத் தனித்தனியே அழித்தொழிப்பதின் மூலம் - வெறுக்கத்தக்க காலனிய ஆட்சிக்கு முடிவுகட்ட முனைந்தார்கள்.....” மேலும், “...நாட்டு விடுதலைக்குப் பரந்துபட்ட மக்களை அவர்கள் சார்ந்து நிற்கவுமில்லை..” தொடர்ந்து, “....இவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து நமது மக்கள் மதிப்பிட முடியாத படிப்பினைகளைப் பெற்றார்கள்... “

23 வயதில் தூக்குமேடைய ஏறிய பகத்சிங், சுகதேவ், சந்திரசேகர் ஆசாத், இன்னும் உத்தம்சிங், கொடிகாத்த குமரன், கல்பனாதத்.... போன்ற எண்ணற்ற இளைஞர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு உட்பட பல்வேறு அரக்கக்கத்தனத்திற்கு அவர்கள் பாணியிலேயே விடைகொடுக்க முனைந்தனர். இது இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த வீரதீரமிக்க செயல்கள். மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டியடிப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்தனர் நமது தியாகிகள் குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தை ஆரம்பித்து பாசிச ஜப்பான் உதவி உட்பட அனைத்தையும் நாடினார். இதற்காக அவரை பாசிஸ்ட் ஆதரவாளர் என்று முத்திரை குத்த முடியுமா? இந்திய விடுதலைப் போரின் ஈட்டி முனையாக இளைஞர்களின் தியாகம் - இந்திய மக்களை வீறு கொண்டு எழச் செய்தது. இத்தகைய தியாகத்தை இவர்களது நாலாந்தர அரசியல் முடிவை எட்டுவதற்காக பயங்கரவாதம் என்று சித்தரித்து பின்லேடனுக்கு இணையாக காட்சிப்படுத்துவது இவர்களின் சீரழிந்த அரசியல் பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறது.

மேலும் அந்த தியாகப்பூர்வமான இளைஞர்கள் பரந்துப்பட்ட மக்களை சார்ந்து நிற்க வில்லையாம்! இதிலிருந்து நமது மக்கள் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்று முடிக்கிறார்கள். உண்மையில் இவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? நக்சலிசம் பேசும் இந்த திண்ணை வேதாந்திகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்தியா முழுவதும் காட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருப்பதை தவிர வேறு என்ன? மேலும் இவர்களது வெகுஜன அரசியல் நடவடிக்கை என்ன? வெட்டிப்பேச்சும் - வாய்ஜாலமுமே! அடுத்து இணையத்தில் குப்பை கொட்டுவது. நக்சலிசம் இன்றைய தினம் வர்க்கப்போராட்டம் நடத்துகிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான சாதாரண கூலி உழைப்பாளிகளையும் - தலித் மக்களையும் ஆள்காட்டிகள் என்ற பெயரால் கொன்றதைத் தவிர வேறு என்ன கிழித்தது! எத்தனை கிராமத்தை விடுவித்துள்ளது? தமிழகத்தில் எந்த கிராமத்தையாவாது இவர்கள் இந்திய ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து சுகபோக வாழ்க்கையை கொடுத்துள்ளார்களா? இவர்களது பயங்கரவாத செயல்களில் தினந்தோறும் பலியாவது உழைப்பாளிகள்தானே! இந்த ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. கும்பலுக்கும் வெகுஜன மக்களுக்கும் என்ன தொடர்பு! இவர்கள் எப்போதும் இணையத்தில் அடிக்கடி கூறும் வேதம் என்ன தெரியுமா? நாங்கள் எண்ணிக்கையில் நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல என்று சொல்லுவதுதான்! இந்த வேதாந்திகள்தான் கூவுகிறார்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தீரமிக்க இளைஞர்களுக்கு பரந்துபட்ட மக்களுடன் தொடர்பு இல்லையாம்?

தற்போதைய சுதந்திர இந்தியாவைப் பற்றிய இவர்களது கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? இது பெயரளவிற்கான சுதந்திரம் மட்டுமே; அதாவது இன்னும் இந்தியா அரை அடிமை நாடாக இருக்கிறது! பிரிட்டிஷ் இந்தியாவிடம் அடிமைப்பட்டிருந்த நமது நாடு தற்போது நான்கு நாடுகளிடம் அடிமைப்பட்டிருக்கிறதாம்! அதாவது, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா. அதெப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனியை மற்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் பங்கிட்டுக் கொண்டது? மேலும் ரஷ்யாவை இவர்கள் சமூக ஏகாதிபத்தியம் என்று அழைப்பார்கள். தற்போது அந்த சோசலிச சோவியத் யூனியனே இல்லை? ஆனால் இவர்களது திட்டம் அதையே வேதம் ஓதிக் கொண்டிருகிறது. எ°.ஓ.சி. கும்பல் இதனை பக்தி சிரத்தையோடு விமர்சனமின்றி மனப்பாடம் செய்துக் கொண்டு திரிகிறது. மொத்தத்தில் நாம் நான்கு நாட்டு அடிமைகள்! இந்த நான்கு நாட்டு அடிமைத்தளையிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக இவர்கள் ஏந்தக் கூடிய ஆயுதம் என்ன தெரியுமா? புல் - பூண்டுகள்தான்....
அமெரிக்காவுக்கு மட்டும்தான் உண்டா பின்லேடன் போன்றவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் உரிமை? எங்களுக்கு இல்லையா என்று அதற்கு மொத்த உரிமையை குத்தகை எடுத்துக் கொண்டு நமது அளப்பரிய தியாகிகள் மீது பயங்கரவாத முத்திரையை குத்தியுள்ளது ம.க.இ.க. கும்பல்.

விலை உயர்வு! யெச்சூரி எச்சரிக்கை!!


Cartoons: Thanks Webulagam

விலை உயர்வு ஒரு சாதாரண பிரச்சனை அல்ல என்றும், அதனால் ஏற்படும் அனைத்து விதமான சமூக விளைவுகளையும் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார்.
புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
‘‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருந்தபடி விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் தொடங்கி இருக்கிறது. விலைவாசிப் பிரச்சனை என்பது நாட்டு மக்களை மிகவும் பாதித் திருக்கக்கூடிய பிரச்சனை என்பதால்தான், இதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, இது பல்வேறு முனைகளிலும் மக்களைத் தாக்கும் ஒரு பிரச்சனையுமாகும். குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பது, ‘‘ஒளிர்கின்ற” இந்தியா வுக்கும் ‘‘துன்பப்படுகின்ற’’ இந்தியாவுக்கும் இடையில் உள்ள இடைவெளியை மேலும் கடுமையான முறையில் அதிகமாக்கும்.
உதாரணமாக மத்திய அரசு, குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கியிருக்கிறது. இப்போதுள்ள விலைவாசி உயர்வி னால், அந்தக் குழந்தைகளுக் காக அரசு ஒதுக்கியுள்ள ஒதுக் கீடும் உயரப்போவதில்லை. அது அப்படியேதான் இருக்கும். விளைவு, குழந்தைகளுக்கு வாங்கக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் அளவு குறையும். இதனால் அக்குழந்தைகளுக்கு போதிய அளவுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பது குறையும்.
அதேபோன்று இன்றைய தினம் நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் 70 முதல் 80 சதவீதம் வரை போதிய அளவிற்கு உணவு உட்கொள்ள இயலாததால் ரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வினால் அவர்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவர். எதிர்கால இந்தியாவை சுமந்திருக்கும் அவர்கள் இவ்வாறு பாதிக்கப்படு வது, எதிர்கால இந்தியாவையே பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு விலைவாசி உயர்வினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தையும் முழுமையாக நாம் மதிப்பிட்டாக வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வால் மக்கள் அப்பொருள்களை வாங்க முடியாமல் மிகவும் கொடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள் ளனர்.
எனவேதான் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம். சமையல் எண்ணெய் உட்பட 25 அத்தியாவசியப் பொருள்களை ஊக வர்த்தகத் தில் ஈடுபடுத்துவதிலிருந்து தடை விதிக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணிகளில் ஊக வர்த்தக முறையும் ஒன்று என்பதால் இதனைச் செய்திட அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
இரண்டாவதாக, விலைவாசி உயர்வு என்பது உலக அளவில் உள்ள ஒரு பிரச்சனை என்று சொல்லி மத்திய அரசு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. அமெரிக்காவில் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைச் சரிக்கட்டிட அங்கு விலைவாசி உயர்வு செயற்கையாக ஏற்படுத் தப்பட்டிருக்கிறது. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் நஷ்டத்தைச் சரிசெய்வதற்காக அங்கு அத்தியாவசியப் பொருள்களில் ஊக வர்த்தக முறை அமல்படுத் தப்பட்டிருக்கிறது. சர்வதேச நிதி நிறுவனங்கள் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஊக வர்த்தக முறை மூலம் அத்தியா வசியப் பொருள்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. உலக அளவில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
எனவேதான் ஊகவர்த்தக முறையை நம் நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அடுத்து, மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்து வந்த அத்தியாவசிய உணவுப் பொருள்களின் அளவைக் கடுமையாக வெட்டிச் சுருக்கி இருக்கிறது. அதனை சரி செய்து ஏற்கனவே அளித்திட்ட அளவிலேயே உணவுப் பொருள்களை வழங்கிட வேண்டும். குறிப்பாக கேரளா வுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. அதனை வெட்டிச் சுருக்கி இப் போது வெறும் 21 ஆயிரம் டன்னாகக் குறைத்திருக்கிறது. அதே போன்று மேற்கு வங்கத்திற்கும் 2 லட்சம் டன் கோதுமை அனுப்பப்பட்டு வந்தது. இப்போது வெறும் 62 ஆயிரம் டன்னாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. இவற்றைச் சரி செய்து முன்பு அனுப்பிய அள விற்கு அனுப்பிட வேண்டும். பொது விநியோக முறையில் அனைவருக்கும் உணவுப் பொருள்களை வழங்கிட வேண்டும்.
அடுத்து, முந்தைய பாஜக கூட்டணி அரசு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் முக்கிய ஷரத்துக்களை எல் லாம் நீக்கிவிட்டது. இதனால் அந்தச் சட்டத்திற்கு கள்ளச்சந் தைக்காரர்கள் எவரும் இப் போது பயப்படுவது கிடையாது. எனவே அச்சட்டத்தை மீண்டும் முன்பிருந்தது போலவே கடு மையானதாக மாற்ற வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோரைக் கடுமையான முறையில் தண்டிக்கக்கூடிய வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
நான்காவதாக, நாங்கள் தொடர்ந்து சொல்லிவருவது போல், பெட்ரோலியப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டு வரியை மாற்றி அமைத்திட வேண்டும். இதன் மூலம் மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் 90 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள் ளது. அனைத்து மாநிலங்க ளும் தங்களுடைய விற்பனை வரி மூலம் பெற்றுள்ள வருவாய் வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாய் என்பதுடன் இதனை ஒப்பிட்டால் இதன் தன்மை யைப் புரிந்து கொள்ள முடியும். பெட்ரோலியப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டு வரி விதிப்பதனால், அதன் விளைவாக பல் வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாய நிலை உருவாகி விடுகிறது. எனவேதான் இதனை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் குறைத்திட இந்நான்கு நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.