


அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிபுதுப்பட்டு கிராமத்தில் ஒரு சிறுமிக்கும் தவளைக்கும் திருமணம் நடைபெற்றது. ஊர் நலன் கருதியே இந்தத் திருமணத்தை நடத்தி வைத்ததாக அந்த கிராமத்தினர் கூறியிருந்தனர்.
இதற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளம் பெண் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் குஷ்பு பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் நடத்தப்பட்ட திருமணத்தைப் பத்திரிகைகள் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஊர் நன்மைக்காகவும் ஊரில் உள்ளவர்களை நோய் தாக்காமல் இருப்பதற்காகவும் இந்தத் திருமணத்தை நடத்தியதாகக் கூறியிருக்கிறார்கள்.
விஞ்ஞானம் வளர்ந்து சந்திரயான் ராக்கெட்டைப் பறக்க விட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இதுபோன்று ஒரு திருமணம் நடந்திருப்பது மக்கள் இன்னும் மூட நம்பிக்கைகளில் சிக்கியுள்ளதையே காட்டுகிறது. இளம் தலைமுறைப் பெண்கள் பல துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ரஜினியை வைத்து அவர் மகளே படம் எடுக்கிறார். இப்படி எவ்வளவோ வளர்ச்சிகள் ஏற்பட்டாலும் மக்கள் இன்னும் மூடப் பழக்க வழக்கங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற மூடப் பழக்க வழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பெண்கள் போராடினால்தான் சமுதாயத்தில் மாற்றம் வரும்.
Thanks: www.dinamani.com
----------------------------------------------------------------
தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம்
Saturday, 17 January, 2009 12:58 PM
.
விழுப்புரம், ஜன.17: விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிப்புதுப் பாட்டு கிராமத்தில் நேற்று இரவு தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ளது பள்ளிப்புதுப் பட்டு கிராமம். இந்த கிராமத்தில் பழங்காலத்தில் காலரா நோய் பரவியதாகவும், அப்போது சிவன் தவளை உருவும், அம்மன் சிறுமி உருவும் எடுத்து அவர்களுக்கு திருமணம் நடத்தினால் காலரா நோய் குணமாகும் என்றும் மேலும் பரவாமல் இருக்கும் என்றும் கூறியதைத் தொடர்ந்து தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக ஆண்டுதோறும் அந்த கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7.30மணிவரை நடந்தது.
திருமணத்தையொட்டி பள்ளிப்புதுப் பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும், மாமன் முறை குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாராகவும் கருதப்பட்டனர் மாப்பிள்ளைவீட்டார் என்று கூறப்படும் தவளை சார்பில் சீர்வரிசையுடன் மாலை 4 மணிக்கு பெண் பார்க்க ஊர்வலமாக சென்று பெண்ணை பார்த்தனர்.
பெண்ணுக்கு நகை, சீர்வரிசை மற்றும் வரதட்சணை குறித்து பேசினார்கள். இந்த திருமணத்திற்கு பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமுவின் மகள் விக்னேஸ்வரி (வயது 8) திருமணப்பெண்ணாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டார்.
பின்னர் மாப்பிள்ளையான தவளையை தேடும் படலம் நடந்தது. கோவில் குளத்தில் அதிக நேரம் தேடி ஒரு தவளையை பிடித்தனர்.அந்த தவளையை மாப்பிள்ளையாக கருதி மணமேடையில் வைத்தனர்.
பெண்வீட்டார் சிறுமியை மணப்பெண்ணாக அலங்கரித்து தெருக்களில் அழைத்து வரப்பட்டு மண மேடைக்கு கிராம மக்கள் அழைத்து வந்தனர்.
பள்ளிப்புதுப்பட்டு கிராம ஆரம்ப பள்ளி அருகில் அமைக்கப்பட்டு இருந்த மணமேடையில் மணமகன் தவளை, மணமகள் சிறுமி அமரவைக்கப்பட்டனர்.
திருமண முறைப்படி மந்திரங்கள் ஓத கிராம மக்கள் இரவு 7.30மணிக்கு தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்தது. தவளை சார்பில் பூசாரி சிறுமிக்கு தாலி கட்டினார். தாலி கட்டியபிறகு பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தவளைக்கும் பெண்ணுக்கும் இருவீட்டார் சார்பில் மொய்பணம் மற்றும் நகைகள் வரிசை வைக்கப் பட்டன. அப்போது கிராம மக்கள் வரிசைவைத்து நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.
திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை தவளையை மறுபடியும் குளத்தில் விட்டுவிட்டனர். இந்த திருமணம் பற்றி கிராமத்தினர் கூறுகையில் காலம் காலமாக இவ்விதம் திருணம் நடந்துவருகிறது என்றார். மேலும் தவளை திருமணம் நடக்கவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் எந்த விதத்திலாவது தீங்கு ஏற்படும். அவ்வாறு நடக்காமல் இருக்கவும், நோயின்மை ஏற்படவும் இந்த திருமணம் நடத்திவருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
அதோடு மட்டுமல்ல கடும் நோய் உள்ள சிறுமிக்கு இவ்விதம் திருமணம் நடத்தினால் நோய் தீர்ந்து விரைவில் திருமணம் நடக்கும்என்பதும் கிராம மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.