Showing posts with label மத்திய சிறை. Show all posts
Showing posts with label மத்திய சிறை. Show all posts

February 13, 2009

அட்டாக் பாண்டியனும் - அஞ்சா நெஞ்சனும் மத்திய சிறை அனுபவம்!

பரந்து விரிந்த அந்த மைதானத்தில் கைதிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ சினிமா படங்கள் திரையிடுவது வழக்கம். இங்குள்ள கைதிகள் பிரார்த்தனா போன்ற ஓப்பன் தியேட்டரில் கிடைக்கும் அதே சுகத்தோடுதான் சினிமாவை பார்ப்பார்கள். இந்த கலையரங்கம் கடந்த இரண்டு வருடங்களாக காட்சிகள் இல்லாமல் கலையிழந்து இருந்தது.

அந்த அகண்ட மைதானத்திற்கு மேற்கு பக்கத்தில்தான் அடக்க முறையாத அல்லது கொடுமையான சிறை கைதிகளை அடைப்பதற்கான மிகக் குறுகிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளிலிருந்து காற்று வெளியேறுவதற்கான துவாரங்கள் கூட கிடையாது. இரவு நேரத்தில் பேய் வீடு என்பார்களே அதுபோலத்தான் இருந்திருக்கும். இரண்டரை அடி இரும்பு கதவுகளுடன் பூட்டப்பட்ட மிகச் சிறிய அறைகள்தான் இவைகள்.

உள்ளே இருக்கும் கைதிகளில் யாராவது அடிக்கடி வம்பு செய்து கொண்டிருந்தாலோ அல்லது போலீசாரிடம் ஏடா கூடமாக நடந்துக் கொண்டாலோ இந்த சிறைக்குத்தான் அனுப்புவார்களாம். இந்த சிறையில் இருப்பவர் பக்கத்து அறையில் உள்ள கைதியிடம் கூட பேச முடியாது. அந்த அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு கைதியை ஒரு மாதத்திற்கு அடைத்து வைத்தாலே அவன் சித்தம் கலங்கி பைத்தியக்காரனாக மாறி விடுவானாம்! அனுபவம் வாய்ந்த ஒரு முன்னாள் கைதி சொன்னது. இரண்டு நாள் இருந்தாலே போதும் அவனது மூளை கிறு கிறுக்க ஆரம்பித்து விடும் என்கிறார்கள். அதாவது மனிதனின் மூளை ஒரு நேரம் இருப்பது போல் இருக்காது சார்! என்றார்.

இதுபோன்ற சிறையில்தான் தென்னாப்பிரிக்காவின் விடுதுலை வேந்தர் நெல்சன் மண்டேலா 21 வருடம் கழித்தார் என்றால் அவரது திட உறுதியை என்னவென்று சொல்வது! அவர் மட்டுமா? இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனியா கிராம்சியின் மூளையை 20 ஆண்டுகாலம் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறினாரே! அவர் அடைக்கப்பட்ட சிறை எப்படியிருந்திருக்கும். இத்தாலியில் ஆட்சிக்கு வந்த முசோலினி கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாட ஆரம்பித்தான். அப்போது அந்தோனியா கிராம்சியை நாட்டை விட்டு வெளியேறிவிடும்படி சக தோழர்களும், கமிட்டியும் முடிவு செய்தது. இருந்தாலும் அதனை ஏற்க மறுத்து விட்டார் கிராம்சி. அவர் கூறிய வார்த்தைகள் என்றும் உயிருடன் திகழும். "மூழ்கும் கப்பலில் கடைசியாக வெளியேறுபவன் கேப்டனாக இருக்க வேண்டும்" என்று உறுதிபடக் கூறினார். அப்படிப்பட்ட மகத்தான போராளியைத்தான் இப்படிப்பட்ட கொடூமையான சிறையில் அடைத்தார்கள். அவ்வாறு அடைக்கும் போது, நீதிபதி இப்படித்தான் கூறினார். 20 வருடம் அவரது மூளையை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த கிராம்சி - முதுகு கூன் வளைந்தவர். இந்நிலையில் இந்த தனிமைச் சிறையில் அதிகமான ஒளி பொருந்திய விளக்கு அவர் மீது அடிக்கப்படுமாம். அந்த விளக்கு ஒளியில் அவரது மூளை சூடேறி குழம்பி விடவேண்டும் என்பது பாசிஸ்ட்டுகளின் எண்ணம். பல நேரங்களில் அந்த சிறை கம்பிகளில் முட்டி மோதிக் கொண்டு ரத்தம் வடிவதுகூட உண்டாம். இத்தகைய வலிகளின் ஊடேதான்.
இத்தாலியிலும், உலகத்திலும் மார்க்சியத்தை மேன்மைப்படுத்துவ குறித்தும் - மார்க்சியத்தின் பிரயோகம் குறித்தும் தனது குறிப்புகளை எழுதி வைத்தார். கிட்டத்தட்ட 3000 பக்கங்களைக் கொண்டது. 29 நோட்டுப் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தார். இந்த குறிப்புகள் அவரது மைத்துனியால் எப்படியோ கடத்திக் கொண்டு வரப்பட்டது. இவைதான் "சிறை குறிப்புகள்" prison Notes என்ற பெயரில் பின்னாளில் புகழ் பெற்றது. தொழிலாளி வர்க்கம் புரட்சியை மேற்கொள்வதற்கு முன் முதலில் வெகுஜன மக்களின் உள்ளத்தை புரட்சிக்கு ஆதரவாக வென்றெடுக்க வேண்டும் என்று கூறினார். அத்தகைய மகத்தான வீரன் தன்னுடைய வாழ்நாளை அந்த கொடுமையான சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழித்ததால் நோய்வாய்ப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் இறந்து விட்டார்.

இது மட்டுமா சமீபத்தில் ஈராக்கில் கைது செய்யப்பட்ட வீரர்களை அபு கிரைப் சிறைகளில் நிர்வாணமாக ஆக்கி அவர்களை கொடுமைப்படுத்தியதையெல்லாம் சமீபத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. உலக ஏகாதிபத்தியத்திற்கு தலைமை தாங்கும் அமெரிக்காவின் மனித உரிமைகளின் சாட்சியமாக அபு கிரைப் சிறைகள் இன்றைக்கும் சாட்சியமாக விளங்குகிறது. அபு கிரைப் சித்திரவதை முகாம்கள் ஏகாதிபத்திய சிறைக் கொடுமைகளின் நிகழ்கால சாட்சியமாக விளங்குகிறது என்றால் 172 ஆண்டு கால சென்னை மத்திய சிறைச்சாலையின் அந்த இருட்டு சிறைகளில் எப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்திருக்குமோ? இது குறித்து பழைய கைதிகள் யாராவது உயிருடன் இருந்து வெளிப்படுத்தினால் ஒழிய... அந்த இருட்டிற்குள்ளேயே இருட்டாக மறைந்து போயிருக்கும்.
இறுதியாக இந்த இரண்டு நூற்றாண்டு வரலாற்றில் சென்னை மத்திய சிறையை வரலாற்று பக்கங்களில் இருந்து பிரிக்க முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து - கொடுமையான எமர்ஜென்சி முதல் தற்கால அரசியல் மற்றும் வெகுஜன போராட்டங்களில் களம் கண்டவர்களையும், இந்த சமூகத்தால் உருவாக்கப்பட்ட குற்றவாளிகளிகளின் மனப்பதிவுகளையும் எங்கே தேட முடியும்! அதற்கு சாட்சியமாய் விளங்கிய சென்னை மத்திய சிறைசாலையில் இன்னும் சில நாட்களில் இந்த வரலாற்று சுவட்டை எங்கே விட்டுச் செல்லப் போகிறது? ஆனால் இதற்கு பொறுப்பான காவல்துறையும் - தமிழக அரசும் இந்த வரலாற்று பதிவுகளை மக்கள் மத்தியில் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும் மக்களுக்கு சிறையை திறந்து விட்ட காவல்துறை - அதனை சுத்தப்படுத்த வேண்டும் என்ற அக்கறையற்று கிடப்பது காவல்துறை சிந்தனையில் மண்டியுள்ள அழுக்கைத்தான் வெளிப்படுத்துகிறது.

இறுதியாக குற்றவாளிகள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பது குறித்து வரலாறு என்னை விடுதலைச் செய்யும் நூலில் பிடல் காஸ்ட்டிரோ பாடிஸ்டா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்தப்பட்ட போது எழுப்பிய கேள்விகள் உலகம் முழுவதும் உள்ள சிறைகளிலும் - சமூகத்தின் மூளை முடுக்குகளிலும் மோதிக் கொண்டுதான் இருக்கிறது. அவர் பேசும் போது, மதிப்புக்குரிய நீதிபதி அவர்களே, உங்கள் முன்னாள் நிறுத்தும் அனைவருக்கும் சட்டத்தின் படி தண்டனை கொடுக்கும் கடமையை மட்டுமே செய்து வருகிறீர்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் முன்னாள் நிறுத்தப்பட்டிருக்கும் குற்றவாளிகளைப் பார்த்து நீ எத்தனை நாளாய் பட்டினியாய் கிடக்கிறாய், உனக்கு வீடு உண்டா, வேலை உண்டா, உன் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிடுகிறார்களா? என்று கேள்வி எழுப்பியது உண்டா என்று நீதிமன்றத்தையும், நீதியைப் பார்த்து கேட்ட கேள்விகள் மிகப் பொருத்தமானது. குற்றவாளிகளில் 90 சதவிதிகத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்க்கை ஓட்டத்திற்காக குற்றவாளியாக்கப்பட்டவர்கள். ஒரு புத்தக சாலை திறக்கும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது தெருவுக்கு தெரு போட்டிப் போட்டுக் கொண்டு கோவில்களை உருவாக்கும் சமூகத்தைத்தான் நாம் பெரியாரிய வெளிச்சத்தில் கட்டியமைத்து உள்ளோம். அவர்களின் அறிவுத் தேடலுக்கான நூலகத்தை உருவாக்குவதற்கு நமக்கு நேரம் உண்டா? சிறைச்சாலைகள் மூடப்பட வேண்டும் என்றால் சிந்தனைச் சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். நம்முடைய நிகழ்கால சமூகம் பிரசவித்துக் கொண்டிருப்பது கிராம்சிக்களையும், மண்டேலாக்களையும் அல்ல; அட்டாக் பாண்டியன்களையும், அஞ்சாநெஞ்சர்களையும் அல்லவா தற்போதைய திராவிட கலாச்சாரம் கட்டியெழுப்பி வருகிறது. எனவே மாற்றத்தை விரும்பும் ஜனநாயக - இடதுசாரி சக்திகள்தான் இதனை உருவாக்க முடியும்!...

February 12, 2009

துயரத்தை வெளிப்படுத்தும் சிறை அறைகள்!

முதல் வகுப்பு சிறை அறைகளை தாண்டியவுடன் கல்லூரி வளாகத்தைப்போன்ற சூழல் நம்மை வரவேற்கிறது. பரந்து விரிந்த விளையாட்டுத் திடல் போன்ற மைதானம், சிறையின் வயதிற்கு ஏற்ப ஓங்காரமாய் வளர்ந்திருந்த அரச மரங்களும், வேப்பம் மரங்களும், பாதாம் மரங்களும்... என்று தங்களது இலைகளால் நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது.

இதன் இருபுறங்களிலும் சிறு குற்றங்களுக்காக மொத்தமாய் அடைக்கப்படும் செல்கள் பாடசாலையைப் போல் காட்சியளித்தது. அதற்கு முன்னாள் வெளிநாட்டு கைதிகளுக்கான சிறை அறைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாவது தளங்களில் அமைக்கப்பட்டிருந்த இந்த செல்கள் அனைத்தும் தனிமைச் சிறை அறைகள்தான். வெறும் 8 அடிக்கு 6 அடி இருக்கும். அதற்குள்ளேயே கழிவறையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்னும் ஒரு 172 ஆண்டுகளுக்கு தாங்கும் அளவிற்கு அதன் சிறை கதவுகள் கனமானதாகவும், வலுவானதாகவும் காட்சியளித்தது. இதுபோன்ற வலுவான சிறை அறையில் இருந்துதான் எல்.டி.டி.ஈ. அமைப்பினர் எட்டு பேர் தப்பியிருக்கின்றனர் என்றால் எப்படி முடிந்தது என்ற கேள்விதான் எழுகிறது? இவர்கள் மட்டுமா? ஆட்டோ சங்கர் கூட இப்படித்தான் தப்பினானாம்! இப்படி எண்ணற்ற கதைகளை சுமந்துக் கொண்டு கம்பீரமாய் நிற்கிறது சென்னை மத்திய சிறைச்சாலை. இதன் சுவர்களுக்கு மட்டும் பேசும் திறனிருந்தால் இலக்கியத்திற்கான அத்தனை நோபல் பரிசுகளும் இதற்கே கிடைத்திருக்கும்.
ஒவ்வொரு செல்லும் ஒரு கதையை சொல்லும். ஒரு செல்லில் தனது வாக்குமூலமாக ஒரு கைதி இப்படி எழுதி வைத்து விட்டுச் சென்றான். “எனது வாழ்க்கையில் பாதி இங்கேதான் கழிந்தது” என்று! அவனது மீதிப் பயணம் தற்போது எப்படியிருக்குமே?

சாதி, மத, இன மோதல்கள் எல்லாம் வெளியில் உள்ள சுயநலவாதிகளால் தான் தூண்டி விடப்படுகிறது. ஆனால் சிறைக்குள் எத்தனை கைதிகள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் தரும் அருமருந்தாக மாறி விடுகின்றனர்.உணர்ச்சி வசப்பட்டு குற்றம் இழைத்து விட்டு கொடூரங்களை அனுபவிக்கும் கைதிகளுக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளொளி வழங்கியிருந்தது அவரவர் சார்ந்த கடவுகளே! எல்லாச் சிறை அறைகளிலும் இந்து - மு°லீம் - கிறித்துவர் என்று பாகுபாடின்றி கடவுகள் படம் சங்கமமாயிருந்தன.

ஒரு சிறையில் இசுலாமியர் ஒருவர் தொழுகைக்கு செல்லும் போது சுத்தமாக கால் கழுவிவிட்டு செல்லவும் என்று அழகான தமிழிலும் - உருதுவிலும் எழுதியிருந்தார். அதுவே மசூதியின் மறுவடிவமாக அங்கே காட்சியளித்துக் கொண்டிருந்தது என்றால் வியப்பில்லை!

உலகமயமாக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஓவியர்களின் தூரிகைகளை முறித்திருக்கலாம். ஆனால் இதன் எந்தத் தாக்கமும் சிறை கம்பிகளுக்குள் நடக்கவில்லை என்பதைத்தான் அங்கே ஒவ்வொரு சுவரிலும் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் சாட்சியாய் உயிரூட்டிக் கொண்டிருந்தன. வரைந்த கைதி உயிரோடு இருப்பாரோ? இல்லையோ? அவரது ஓவியம்.... மவுனமாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

திருவள்ளுவர், காந்தி, அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோ°, ஜவஹர்லால் நேரு போன்ற சமூக போராளிகளின் வாழ்கையை சுவரோவியமாய் தீட்டியுள்ளான் அந்த ஓவிய சிறைப்பறவை. வெறும் படங்கள் மட்டுமல்ல! அவர்களது பொன் மொழிகளையும் மறக்காமல் பதித்திருந்தான் அந்த அழகான தூரிகையால்.

இன்னொரு சிறை அறைக்குச் சென்றபோது, “காதலுக்காக இவள் இங்கே சிறைபட்டாள் என்று எழுதப்பட்டிருந்தது.” சுவர் முழுக்க ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி... என்று விதவிதமான அளவுகளில் எழுதப்பட்டிருந்தது. இங்கே சிறைபட்டவர் ஆணா - பெண்ணா என்ற குழப்பம் நீடிக்கத்தான் செய்தது; இருந்தாலும் என்ன உருக்குக்கு நிகரான சிறைச் சுவர்களால்கூட அவனது / அவளது உள்ளத்தில் இருந்த காதலை பிரிக்க முடியவில்லை. சிறைக்குள்ளே அவன் / அவள் இருந்தாலும் காதல் நிச்சயமாக சுகப்படுத்தியே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

4 ஆம் எண் கொண்ட அகன்ற சிறைக்குச் சென்றபோது 1991 ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் 25 பைசா பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது நினைவுக்கு வந்தது. இந்த அநியாய ப° கட்டண உயர்வை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் (டி.ஒய்.எப்.ஐ.) மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. 50 ஆயிரம் பேர் கைதாகியிருந்தனர். வடசென்னையில் குறளகம் எதிரிலும், தென்சென்னையில் அண்ணா சாலையிலும் நடைபெற்ற மறியல் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டனர். நான் உட்பட...
அப்போது அண்ணா சாலையில் நடைபெற்ற மறியலின் போது போலீசாரின் கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலில் பலரின் மண்டை உடைந்தது. எங்களை எல்லாம் சென்னை சென்டிரலில் உள்ள நேரு °டேடியத்தில் கொண்டு போய் வைத்தனர். ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அண்ணா சாலையில் அடிபட்டவர்களை ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லாமல் கைது செய்து நேரு °டேடியத்திற்கு கொண்டு வந்திருந்தனர் இரக்கமற்ற காவல்துறையினர். முதல் முறையாக தடியடியில் ரத்தத்தை பார்த்த எங்களுக்கு ரத்தம் பொங்கும் வகையில் கோபம் கொப்பளித்து. ஒருபுறம் தோழர்கள் பட்ட அடி எங்கள் மீது பட்ட அடியாக துடித்தோம் - நெஞ்சம் வெடித்தது. பின்பு ஒருவழியாக அடிபட்ட தோழர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நானும் என்னுடன் 11 பேர் இந்த மறியலில் கலந்து கொண்டோம். எல்லோரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். அன்றைய தினம் காலையில் மறியலுக்கு செல்லும் வேகத்தில் இயக்கத்திற்கு அப்பாற்பட்ட எங்களது நண்பர்கள் சிலர் வரும் போது கண்ணில் பட்டார்கள் என்பதற்காக அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டோம். இந்த தடியடி களோபரத்தில் அந்த புதிய தோழர்கள் கலங்கித்தான் போனார்கள். எப்படியும் மாலையில் விட்டுவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சூரியன் மறைந்த பின் வீனான கற்பனையானது. நாங்கள் எங்கே சென்றோம் என்று எங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது! இதுபற்றிய அச்சம் ஒருபக்கம். வீட்டில் உள்ளவர்கள் தேடுவார்களே... என்ற ஏக்கம் மறுபுறம்.

பின்னர் எங்களை எழும்பூர் கோர்ட்டுக்கு கொண்டுச் சென்று நீதிபதிகள் முன்னாள் ஆஜர் படுத்தியபின்னர் இரவு 8 மணிக்கு மேல் சென்டிரல் ஜெயிலுக்கு கொண்டுச் சென்றனர்.

அந்த இரவிலும் காவல்துறையினர் கண்ணியமாக கடமையை செய்தனர். பெயர், சாதி, மச்சம் என்று அனைத்தையும் குறித்துக் கொண்டு போர்த்திக் கொள்வதற்கு தூசியும் - அழுக்கும் படிந்த ஒரு போர்வையும், நொறுங்கிப் போன அலுமினியத் தட்டும், ஒரு தம்ளரும் கொடுத்தார்கள். வீட்டில் எங்களுக்காக சாப்பாடு சூடாக தயாரிக் கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அலுமினியத் தட்டுடன் வீர நடைபோட்டுக் கொண்டிருந்தோம்.

இரவு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் ஒருவழியாக தூக்கம் வந்தது. காலையில் சீக்கிரம் எழுந்து என்னப் பன்னப்போறோம் என்ற சோம்பேறித்தனம் அந்த இடத்தையும் விடவில்லை. இருப்பினும் என்ன? சிறையல்லவா? அங்கே ஒரு சி°டம் இருக்கிறது. காலை 06.00 மணிக்குள் சிறையில் அட்டென்டென்° எடுப்பார்கள். ஐந்து ஐந்த பேராக வரிசையாக குத்துக்காலிட்டு உட்கார வேண்டும். வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அப்புறம் செல்லில் இருந்து வெளியில் திறந்த விட்டார்கள். காலை பத்திகை எல்லாம் கிடைக்காது. எங்களைப் பற்றிய செய்தி வந்திருக்குதா என்றுக் கூட பார்க்க முடியாது. அந்த நேரத்தில் செல்போன் எல்லாம் கிடையாது.கிராமப்புற °டைலில் வேப்பம் குச்சியில் பல் துலக்கினோம். பின்னர் எல்லோருக்கும் காலை டிபன் அச்சு சோறுதான். அது என்னமோ பாடையில் கட்டி தூக்கி வருவதுபோல் எடுத்துக் கொண்டு வந்தார்கள். அதன் மேல் போர்த்தப்பட்ட துணி எங்களுக்கு கொடுக்கப்பட்ட போர்வையை விட படு மோசமாக இருந்தது. இருந்தாலும் என்ன? சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்!

இதில் எங்கள் கூட அப்பத்தான் டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததிருந்த நரசிம்மன் என்ற புதிய தோழரும் வந்திருந்தார். அவருக்கு இந்த அச்சு சோற்றை பார்த்ததும் ஒரே எரிச்சல் அதை கையில் வாங்கிய உடன் அப்படியோ தூக்கி அடித்தார் சுவற்றில் அதே அச்சுப்போல சுவரில் ஒட்டிக் கொள்ள, இதைப் பார்த்த பழைய தாதாக்கள் (கைதிகள்) சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் இன்னைக்கு வருவீங்க - நாளைக்கு போயிடுவீங்க எங்களத்தானே இதையெல்லாம் சுத்தம் செய்யச் சொல்லுவானுங்க என்று சொல்லும் போது அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது.

அப்புறம் என்ன? பல குழுக்களாக பிரிந்தோம் சிறைச்சாலை அரசியல் பயிற்சி கூடமாக மாறியது. அத்துடன் சுதந்திரப் போராட்டக் காலத்திலும், பல கம்யூனி°ட்டுகளும் அனுபவித்த சிறைக் கொடுமைகள் பற்றியெல்லாம் படித்த தோழர்கள் சொல்ல எல்லாத்தையும் உள் வாங்கிக் கொண்டோம்.

அப்புறம் என்ன அந்த வேப்ப மரநிழலில் நான் உறங்கி விட அந்த நரசிம்மன் தோழர் அய்யோ எனக்கு வேலையே போய் விடும்; இவன் என்னான்னா கவலையே இல்லாமே தூங்குறானே என்று கொட்டித் தீர்த்தார். புதியவரை நாம் இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டோமே என்ற கவலை என்னை வாட்டியது... இப்போதும்தான்...அந்த நேரத்தில் எங்க ஊரில் இருந்த பிரபல தாதாக்கள் எல்லாம் சிறையில் அடைபட்டிருந்தனர். அவர்கள் அங்கே உலா வந்ததைப் பார்த்தபோதுதான் சிறை அவர்களுக்கு சுகமானது என்று புரிந்தது. சமையல் கூட அவர்களுக்கு தனிதானாம். அவர்களே சமைத்துக் கொள்வார்களாம்! மீன், கறி என எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும். சிறைக்குள் சிகரெட், பீடி மட்டுமல்ல கஞ்சா கூட கிடைக்குமாம்! சிறையின் கொடுமை சமூக விரோதிகளை எப்போதும் அண்டியதே இல்லை; சமூகப் போராளிகளைத்தான் அது கொடுமையாக தண்டித்திருக்கிறது.

இறுதி பதிவு நாளை வெளி வரும்...