சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற கோரமான மோதல் நடைபெற்றபோது கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்த காவல்துறையின் செயல் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.
அதேபோல், நேற்றைய தினம் காவல்துறைக்கும் - வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதல் அதைவிட பன்மடங்கு அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.
தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த தாக்குதல் சம்பவம் மிகக் கோரமாக நடைபெற்றுள்ளது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என அந்த வளாகத்திற்கு உள்ளே கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கி, தங்களது தடியின் வலிமை எப்படிப்பட்டது என்பதை காட்டியுள்ளது காவல்துறை.
சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த கடமைப்பட்ட காவல்துறையே வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டால், சட்டமும் - கட்டுப்பாடும் எதற்கு என்ற கேள்வியே எழுகிறது. நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட சூழலில் யார் தவறு செய்தவர்கள், கலவரம் நிகழ்வதற்கு யார் காரணம்? காவல்துறையே திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியதா? அல்லது கலவரம் நடைபெற வேண்டும் என்பதற்காக யாராவது மறைமுகமாக தூண்டி விட்டார்களா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. எப்படி இருந்தாலும் விசாரணை முடிவை தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த விசாரணைக்குள் இந்த பதிவு புக விரும்பவில்லை. ஆனால் ஒரு உண்மை அடிபட்டவர்களில் 95 சதவிகிதம் வழக்கறிஞர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் அப்பாவிகள் என்பதுதான்.
தமிழக அரசியல் களமே இலங்கைப் பிரச்சனையில் பன்முனைகளில் பிரிந்து நிற்கையில், நமது வழக்கறிஞர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா?. அவ்வாறு இருக்கையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ள நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கையால் அயர்வுற்ற பல வழக்கறிஞர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதியை நிலைநாட்டவேண்டிய நீதித்துறை ஒட்டுமொத்தமாக முடங்கிக்கிடப்பது சரியா? என்ற கேள்வியை தங்களுக்குள்ளேயே எழுப்பாமல் இல்லை. இருந்தாலும் என்ன? உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பதுதானே மனித குலம். இதற்கு அவர்கள் மட்டும் விதிவிலக்கானவர்களா என்ன? ஆனாலும், இந்த (தமிழ்)உணர்ச்சியையை முதலாக வைத்து வியாபாரம் செய்துக் கொண்டு வருகிற அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் வழக்கறிஞர்களும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? தற்போதைய சம்பவத்தின் மூலம் மேலும் சில நாட்கள் நீதிமன்றம் ஓய்வெடுத்துக் கொள்ளலலாம்! ஆனால் நீதிக்காக ஏங்கும் அபலைகளின் கண்ணீர் யாரால் துடைக்கப்படுமோ?
இறுதியாக, காவல்துறையினரின் தடியடியால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தரைத்தளத்திலும், மூன்றாவது மாடியிலும் 60க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவர் மீது விழுந்த அடியும் காவல்துறையின் கண்ணியக்குறைவை பறை சாற்றுவதாகவே இருக்கிறது.
தடியடித் தாக்குதல் என்றால் முட்டிக்கு கீழேதான் தாக்கவேண்டும் என்பதெல்லாம் மரபாகிப் போய் மரத்துப்போயுள்ளது காவல்துறைக்கு. அதனால்தான் அவர்கள் தலையில் தாக்கியுள்ளனர். மண்டை உடையாதவர் களை பார்ப்பதே அபூர்வம் என்பதுபோல்தான் இருந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை கண்ட காட்சிகள்.
ஒரு நடுத்தர வயதுள்ள வழக்கறிஞர் நீதிமன்ற நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தாராம். வெளியில் என்ன நடக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாதாம். தாக்குதல் தொடங்கிய சில மணித்துளிகளில் குவிக்கப்பட்டிருந்த 5000 போலீசும் நீதிமன்றத்தில் உள்ள அத்துனை அறைகளுக்கு உள்ளேயும் - வெளியேயும் சென்று கோர நர்த்தணம் ஆடியுள்ளனர். இதில் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த அந்த அப்பாவி வழக்கறிஞரும் காவல்துறையின் லத்திகளுக்கு இரையாகி மண்டை உடைந்து காணப்பட்டார். "நாங்கள் அப்பாவிகள்? ஏன் இவ்வாறு போலீஸ் நடந்துக் கொண்டது? நாங்கள் என்ன செய்தோம்? என்று மனம் உருக கேள்வி எழுப்பினார்".
இன்னொரு நீதிமன்ற ஊழியர் அவரது அரைக்குள்ளே இருந்தபோது கலவரத் தடுப்பு காவலர்கள் உள்ள நுழைந்ததும், "அய்யா என்னை விட்டு விடுங்கள் என்று காலில் விழுந்துள்ளார்? காவல்துறைக்கு இதயம் இருந்தால்தானே இந்த அபலையின் குரல் கேட்க! விழுந்ததே போதும் என்று மிதித்து துவைத்துள்ளனர்."
இன்னொரு வழக்கறிஞர் தப்பித்தால் போதும் என்று ஓடி ஒரு ரூமிற்குள் ஒளிவதற்கு சென்றபோது, "உன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவோம், எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்று துப்பாக்கி முனையில் மிரட்டி பதம் பார்த்துள்ளனர்.
வேறு சிலர் கும்பலாக நீதிபதிக்கு பக்கத்தில் போய் நிற்கையில், அவர் ஓடாதீர்கள், "இங்கேயே உட்காருங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் உட்கார வந்த வேகத்தில் அவர்களை துவம்சம் செய்து விட்டார்கள் ரியோட் கண்ட்ரோல் போலீசார்".
இன்னொரு சிவப்பான இளம் வழக்கறிஞரை "தோள்பட்டைகள், முதுகு, கழுத்து என்று மேலும் சிவக்க வைத்துத்துள்ளதோடு, காவல்துறையின் கொடிய பூட்ஸ் கால்களால் மதித்துள்ளனர். இதில் அவரது ஒரு கை செயலிழந்து விட்டதாக கூறினார்"
இப்படித்தான் ஒவ்வொருவரது கதையும்... நீண்டுக் கொண்டே இருக்கும்! காவல்துறை இதற்கு மேல் எல்லை மீற முடியாது என்ற அளவிற்கு தங்களது அனைத்து எல்லைகளையும் தாண்டி கொடூர வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது. இத்தகைய வன்முறை ஒரு சுதந்திர சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. ஆட்சியாளர்கள் உணர்வார்களா?
இன்னொரு புறத்தில் டி.வி.யில் கண்ட காட்சிகள் தற்போதைய வழக்கறிஞர்களின் செயல்பாடுகளைக் கண்டு முகம் சுளிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பேட்டை ரவுடிகளிடம் இருந்தும், சமூக விரோதிகளிடம் இருந்தும் பாதிக்கப்படும் மக்களை சட்டத்தின் முன் நிறுத்தி சமூகத்தை காக்க வேண்டிய வழக்கறிஞர்களே பேட்டை வஸ்தாதுகளைப் போல் கல்லெறிவதும், காவல்துறையை சூறையாடுவதும், அங்கிருந்த ஆவணங்களை கொளுத்துவதும், எந்தவிதமான சமூகப் பொறுப்பும் இன்றி - வெறியாட்டம் ஆடுவதும் சட்டம் படித்து விட்டதாலேயே அதற்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதைப் போன்ற தினமணியின் நியாயமான தலையங்கத்தைத்தான் உணர்த்துகிறது. நீதியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் நீதி தவறிய குற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். முட்டை அடிப்பதும் - கல்லெறிவதும் நீதியைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்கள் தங்களது கருப்புச் சட்டைகளை கழற்றி வைத்து விட்டு அதையே தொழிலாகக் கொள்ளலாம். சமூகம் இவர்களது செயலை ஏற்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
மறுபுறத்தில் தேசத்தின் ஜனநாயகத்தையும் - மக்களின் பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்தும் மிக முக்கியமான ஜனநாயகத் தூண்களில் ஒன்றுதான் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் அவர்கள் வழங்கும் நீதிக்காகவே - நியாயத்திற்காகவே தலைவணங்கப்படுபவர்களாக உள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற சம்பவத்திற்கு தலைமை நீதிபதிதான் காரணம் என்று சென்னை மருத்துவமனையில் அடிபட்டவர்களை பார்க்க வந்த நீதிபதிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், முழக்கம் எழுப்பியும், அவர்களை பார்க்க அனுமதிக்காமல் வெளியேற்றிய சம்பவங்களை பார்த்த பொதுமக்களுக்கு நீதிபதிகள் மீதான மரியாயும், வழக்கறிஞர்கள் மீதான மரியாதையும் காற்றில் கரைந்து போனது! வழக்கறிஞர்ளின் இத்தகைய செயலை நாகரீக சமூகம் ஏற்காது!
தமிழகம் எதை நோக்கிச் செல்கிறது? அல்லது எதை நோக்கி செல்ல சதி தீட்டப்படுகிறது என்பதை ஆட்சியாளர்களும் - மக்களும் விழிப்பாய் இருந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டிய நேரமிது.
தமிழகம் எதை நோக்கிச் செல்கிறது? அல்லது எதை நோக்கி செல்ல சதி தீட்டப்படுகிறது என்பதை ஆட்சியாளர்களும் - மக்களும் விழிப்பாய் இருந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டிய நேரமிது.

