கடந்த ஒரு மாத காலமாகவே இரயில்கள் சரியான நேரத்திற்கு புறப்படுவதும் இல்லை. வருவதும் இல்லை. மேலும் சிக்னல் என்ற பெயரில் பல மணி நேரம் இரயில்கள் நிறுத்தப்படுவதால் வேலைக்கு செல்லும் ஊழியர்களும். பள்ளி - கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரயில்வே நிர்வாகத்தின் இத்தகைய போக்கை கண்டித்து பயணிகள் தினந்தோறும் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தென்னக இரயில்வே நிர்வாகம் உரிய தீர்வினை மேற்கொள்ளாததால் இன்னும் பிரச்சினை நீடிக்கிறது.
இந்நிலையில் பா.ம.க.வைச் சேர்ந்த மத்திய இரயில்வே இணையமைச்சர் வேலு இன்றைய தினம் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணுவதற்கு மாறாக. பயணிகளை மிரட்டியுள்ளார். இனிமேல் பயணிகள் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் உள்ளது. பா.ம.க. தன்னை ஒரு ஜனநயாக இயக்கம் என்று காண்பித்துக் கொண்டு போராடி வருகிற இந்நேரத்தில் அக்கட்சியை சார்ந்த இரயில்வே அமைச்சர் வேலுவின் பேச்சு அதிகாரவர்க்கத் தொனியில் ஒலிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மாறாக அவர் மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண்பேன் என்று சொல்லியிருந்தால் மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஐ.ஏ.எஸ் போன்ற பதவியில் இருந்தவர்களை அரசியல்வாதிகளாக மாற்றினால் என்ன விளைவு உண்டாகும் என்பதற்கு வேலுவின் பேச்சே சாட்சி! மக்களின் உணர்வுக்கு துளிகூட மதிப்பளிக்காத இந்த அதிகார வர்க்க குரலுக்கு எதிராக வலுவாக கண்டனங்கள் எழவேண்டும்.
பா.ம.க. கடந்த காலத்தில் நடத்திய போராட்டங்களின் வரலாறு வேலுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதா? அல்லது தற்போது ரஜினிக்கு எதிராகவும் விஜயகாந்துக்கு எதிராகவும் நடத்திய போராட்டங்கள் என்ன ஜனநாயகத் தன்மை வாய்ந்ததா? அல்லது குஷ்புவுக்கு எதிராக நடத்திய அராஜக செயல்கள் எத்தனை? இதையெல்லாம் வேலு விமர்சிப்பாரா? மக்கள் போராட்டத்துக்காக வாழ்பவர்கள் அல்ல. வாழ்க்கையே போராட்டமாக மாறும் போது போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. இதையெல்லாம் ஐ.ஏ.எஸ். படிப்பில் வேலுவுக்கு யாரும் கற்றுத் தந்ததில்லை போலும்.
இராமதாஸ் இந்த இரயில் பயணிகள் பிரச்சினைக்கு என்ன சொல்லப் போகிறார்?